உலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை

This entry is part 5 of 7 in the series ஜி.டி.பி மாயை

5.

கூலி மட்டுமல்ல

அமெரிக்காவில் பல பத்தாண்டுகளாக தொழிலாளர் ஊதியங்கள் தேக்க நிலையில் இருந்த நிலையில், சீனாவில் ஊதியங்கள் அதிகரித்து வந்தாலும், இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் இன்னும் பெரிதாகவே உள்ளது. சீனாவின் தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தரவுகளை ஆதாரமாகக் கொண்ட ஒரு ஆய்வின்படி, 2009-ல் இந்த வேறுபாடு வாங்குதிறன் சமநிலையின் அடிப்படையில் சுமார் 16-க்கு 1 என்ற வீதத்திலும், சந்தை செலாவணி வீதத்தின் அடிப்படையில் 37-ல் 1 ஆகவும் இருந்தது. அயலக பணி உற்பத்தி முறையை பயன்படுத்துவது பற்றி முடிவு செய்வதற்கு அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய நாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முக்கியமான காரணியாக இருக்கிறது28

சீனாவின் வெவ்வேறு பகுதிகளுக்கிடையேயும், புலம்பெயர், உள்ளூர் தொழிலாளர்களுக்கிடையேயும், பொதுத்துறை, தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் கூலி பெருமளவு வேறுபடுகிறது. இவையும் இன்னும் பிற திரித்தல்களும் ஒப்பிடுதலை சிரமமானதாக்குகின்றன, எனவே இங்கு கொடுத்துள்ள விகிதங்களை ஒரு பொதுவான நிலைமையை சுட்டுவதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், லாபவெறி பிடித்த மேற்கத்திய நிறுவனங்களை ஈர்ப்பது அதீத குறை கூலிகள் மட்டுமல்ல. தொழிலாளர்களை விருப்பப்படி பயன்படுத்த முடிவதும் அவர்களை கடுமையாக வேலை வாங்க முடிவதும் அவர்களை ஈர்க்கின்றன. பரவலாக மேற்கோள் காட்டப்படும் நியூயார்க் டைம்ஸ் ஆய்வில் சார்லஸ் துகிகும் கெய்த் பிராத்ஷரும் இது தொடர்பாக ஒரு தெளிவான சித்திரத்தை வழங்குகின்றனர்:

“கடைசி நிமிடத்தில் ஐ-ஃபோனின் திரையை மறுவடிவமைப்பு செய்தது, ஆப்பிள். அதற்கேற்ப ஐஃபோனுக்கான பொருத்தும் உற்பத்தி நிகழ்முறை மாற்றியமைக்கப்பட்டது. புதிய திரைகள் நள்ளிரவில் ஆலைக்கு வந்து சேர்ந்தன. நிறுவனத்திற்கு உள்ளேயே அமைந்திருந்த தங்கும் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த 8,000 தொழிலாளர்கள் உடனடியாக எழுப்பப்பட்டனர். ஒரு மேற்பார்வையாளர் உடனடியாக எழுப்பினார். ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு பிஸ்கட்டும் ஒரு கோப்பை தேநீரும் வழங்கப்பட்டது. அவர்கள் பணி மேசைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். அரை மணி நேரத்துக்குள் கண்ணாடி திரைகளை அவற்றுக்காக வனையப்பட்ட சட்டகத்துக்குள் பொருத்தும் வேலைக்கான 12 மணி நேர ஷிஃப்ட் ஆரம்பித்தது. 96 மணி நேரங்களுக்குள் அந்த ஆலை ஒரு நாளைக்கு 10,000 ஐ-ஃபோன்களை தயாரிக்க ஆரம்பித்திருந்தது.”29

மூன்றாம் உலக நாடுகளில் வழங்கப்படும் குறை கூலிகள், அந்நாடுகளின் குறை உற்பத்தித் திறனை பிரதிபலிக்கின்றன என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால், அந்நாடுகளில் தொழிலாளிகள் விருப்பப்படி பயன்படுத்தப்படுவதும், அவர்களிடம் கறக்கப்படும் தீவிர உழைப்பும் இந்தக் கருத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. ஊதிய வேறுபாடுகளுடன், பணிச்சூழல், பணி நேரம், உழைப்பு தீவிரம் போன்ற அம்சங்களையும் “சமூக ஊதிய”த்தின் போதாமையையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது சீனா, வங்கதேசம், மெக்சிகோ போன்ற நாடுகளில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிலவும் உழைப்புச் சுரண்டலை விட அதிக வீதத்தில் உழைப்புச் சுரண்டப்படுகிறது என்பது மறுக்க முடியாததாக உள்ளது. வேறு விதமாகச் சொல்வதென்றால் ஏகாதிபத்திய நாடுகளின் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது சீன, வங்கதேச, மெக்சிகோ தொழிலாளர்கள் தாம் உருவாக்கும் மதிப்பில் ஒரு சிறுபகுதியை மட்டுமே ஊதியமாக பெறுகின்றனர்.

பகுதி இரண்டு : ஜி.டி.பி மாயை

மேலே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்று சர்வதேச பண்டங்கள் ஒவ்வொன்றையும் பொறுத்தவரை, கைக்கருவி உற்பத்தியாளர் (ஆப்பிள்), நுகர்பொருள் சில்லறை விற்பனை கார்ப்பரேட் (H&M), காஃபி கடைகள் (ஸ்டார்பக்ஸ்) ஆகிய மூன்று மேற்கத்திய கார்ப்பரேட்டுகளும் தமது பொருள் உற்பத்திக்கான அனைத்து அம்சங்களையும் அல்லது பெரும்பாலானவற்றை அயலக பணியாக செய்கின்றனர். உற்பத்தி நிறுவனங்களுடன் கைக்கெட்டும் தூரத்திலான ஒப்பந்த உறவை பராமரிக்கின்றனர். எனவே பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடனும், விவசாயிகளுடனும் இந்த பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி உறவு இல்லை.

இதற்கு மாறாக, இந்த கார்ப்பரேட்டுகள் அன்னிய நேரடி முதலீடு மூலம் சொந்த உற்பத்தி நிறுவனங்களை அமைத்திருந்தால் விஷயம் வேறாக இருந்திருக்கும். உலகமயமாக்கப்பட்ட மூலதனம்/உழைப்பு உறவின் அந்த வடிவத்தில், தேசங்கடந்த கார்ப்பரேட்டுகளின் துணை நிறுவனங்களிடமிருந்து தாய் நிறுவனத்துக்கு – லாபம் அனுப்பப்படுவது ஓரளவு வெளிப்படையாக தெரிகிறது. அது, நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்படும் லாபமாக புள்ளிவிபரங்களில் பதிவாகின்றது.

இதற்கு மாறாக, கைக்கெட்டும் தூரத்திலான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அவர்களது ஏகாதிபத்திய வாடிக்கையாளர்களுக்கு லாபம் கடத்தப்படுவது எந்த தரவுகளிலும் பதிவாவது இல்லை. எனவே, பொருளாதாரவியல் தரவுகளின்படியும், முதலாளித்துவ பொருளாதாரவியல் கோட்பாட்டின்படியும், குறைகூலி நாடுகளில் செயல்படும் ஃபாக்ஸ்கானும் எண்ணற்ற பிற “கைக்கெட்டும் உறவிலான” நிறுவனங்களும் வேலைக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்கள், மேற்கத்திய சந்தைகளுக்காக குறைந்த விலை இடைநிலை பொருட்களையும், நுகர்வு பண்டங்களையும் உற்பத்தி செய்தாலும், அவர்கள் டெல் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான விற்பனைக் கட்டமைப்பை உருவாக்கி சில்லறை விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் லாபத்தில் எந்த பங்களிப்பும் செய்வதில்லை.

பூமியின் மூன்று பரிமாண மேற்பரப்பை மெர்காடர் பதிப்பாக இரண்டு பரிமாண வரைபடத்தில் உருமாற்றும் போது, துருவப்பகுதிகளின் அகலம் விரிக்கப்பட்டு, பூமத்திய ரேகை பகுதிகள் சுருக்கப்படுவது எல்லோருக்கும் பரவலாக தெரிந்த ஒன்று. ஜி.டி.பி தொடர்பாகவும், சர்வதேச வர்த்தகம் தொடர்பாகவும் பயன்பாட்டில் உள்ள தரவுகள் இதே மாதிரியான விளைவை ஏற்படுத்துகின்றன. உலகத்தின் மதிப்பு உருவாக்கத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பங்களிப்பை குறைத்துக் காட்டி, ஏகாதிபத்திய நாடுகளின் பங்களிப்பை மிகைப்படுத்திக் காட்டுகின்றன.

இது எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன், “உற்பத்தியை” அளப்பதாக கூறிக் கொண்டாலும், ஜி.டி.பியும், வர்த்தக புள்ளிவிபரங்களும் சந்தையில் நடக்கும் பரிமாற்றங்களையே அளக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றமும், சொத்துடமை பத்திர பரிமாற்றங்களும் நடக்கும் சந்தைகளில் எதுவும் உற்பத்தியாவதில்லை. உற்பத்தி வேறு இடத்தில் உயரமான சுவர்களுக்குப் பின்னால், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் உற்பத்தி நிகழ்முறைகளில் நடக்கிறது. மதிப்புகள் உற்பத்தி நிகழ்முறைகளில் உருவாக்கப்பட்டு, சந்தைகளில் சுவீகரிக்கப்படுகின்றன.

சரக்குகள் விற்கப்படும்போது பெறப்படும் இறுதி விலைகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு, அதிலிருந்து தனித்த ஒரு மதிப்பு அவற்றுக்கு உள்ளது. ஆனால், இந்த மதிப்புகள், “சுற்றோட்டத்தில் சுவீகரிக்கப்படுவது மட்டுமின்றி அதிலிருந்தே உருவாவது போலத் தோன்றுகிறது” – இந்தத் தோற்றமயக்கம், பொருளாதாரவியல் தரவுகளை விளக்குவதற்கான அங்கீகரிக்கப்பட்ட முறையின் பிறழ்வாதத்துக்கு வழிவகுக்கிறது, மதிப்பை விலையுடன் குழப்பிக் கொள்வதுதான் அது. 30

இந்த விஷயத்துக்கு விரைவில் திரும்பி வருவோம். ஜி.டி.பி, வர்த்தகம் தொடர்பான தரவுகளை பயன்படுத்தாமல் உலகப் பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்வது சாத்தியமற்றது என்பதை மட்டும் இங்கு குறிப்பிடுவது அவசியம். ஆனால், இந்தத் தரவுகளை விமர்சனமின்றி ஒவ்வொரு முறை மேற்கோள் காட்டும் போதும், அவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதியசெவ்வியல் பொருளாதாரவியலின் மையமான பிறழ்வு கோட்பாடுகளுக்கு நாம் இடம் கொடுக்கிறோம். உலகப் பொருளாதாரத்தை ஆய்வு செய்யும்போது நாம் இந்தத் தரவுகளை பிறழ்வுநீக்கம் செய்ய வேண்டும், அதைவிட, அவற்றை விளக்குவதற்கு பயன்படுத்தும் கோட்பாடுகளை பிறழ்வுநீக்கம் செய்ய வேண்டும்.

(தொடரும் …)

From : Value Added versus Value Capture by John Smith

Courtesy : Monthly Review

The GDP Illusion

John Smith

Value Added versus Value Capture

by John Smith

John Smith teaches political economy, human rights, and genocide studies at Kingston University in London. His forthcoming book on imperialism and globalization will be published by Monthly Review Press.

The GDP Illusion

Series Navigation<< “லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-5-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் ஐ.டி ஊழியர்கள்

ஐ.டி துறையைச் சேர்ந்தவர்களும் அதில் கைகோர்த்துள்ளனர். ஐ.டி துறையில் இயங்கிவரும் தொழிற்சங்கங்களும், பல்வேறு நண்பர்கள் குழுக்களும் இணைந்து இன்றைக்கு (28-05-2018) மாலை 5 மணிக்கு அனைத்து ஐடி...

அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது

அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது என்கிறது ஒரு ஆய்வு. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அனைவரும் தத்தமது கருத்துக்களை வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்ற...

Close