ரியல் எஸ்டேட்டில் பணக்காரர் ஆக முயற்சிப்பது – முட்டாள்தனமா, ஏமாற்று வேலையா?

ரியல் எஸ்டேட் அலையில் கோடீஸ்வரர்கள் ஆன முந்தைய தலைமுறையினர் பற்றி பல கதைகள் உலவுகின்றன. 40, 50 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிப் போட்ட நிலத்தை அல்லது வீட்டை சில பத்தாண்டுகளுக்கு பின்பு பல மடங்கு அதிக விலைக்கு விற்று பணக்காரர் ஆன உறவினர் அல்லது நட்பு வட்டம் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், இன்றைக்கு நிலைமை வேறாயிருக்கிறது. குடியிருக்க வீடு வாங்கிய பிறகு, முதலீடாக இன்னொரு வீடு அல்லது நிலத்தை வாங்கிப் போட்டு, அதற்கான மாத கடன் தவணையை கட்டத் திணறிக் கொண்டிருக்கும் பலர் உள்ளனர். அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் விலை பேச்சளவில் பல கோடி ரூபாய்களை எட்டுகிறது, ஆனால், அதை வாங்குவதற்கு ஆளில்லை. யாரையாவது தேடிப் பிடித்து வாடகைக்கு விட்டாலும் கொடுத்த விலைக்கு 1% கூட ஆண்டு வாடகை வருமானமாகக் கிடைப்பதில்லை. என்ன இப்படி சிக்கிக் கொண்டோமே என்று குழம்பிக் கொண்டிருந்தாலும், உண்மையை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

இதைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

ரியல் எஸ்டேட் (நிலம் அல்லது வீடு) விலை எப்படி ஏறுகிறது? ஒரு சில வழிகள் உள்ளன.

vadra-robert-621x414

ராபர்ட் வதேரா (நாடு தழுவிய ரியல் எஸ்டேட் கொள்ளை கும்பல்களுக்கு ஒரு முன்னணி உதாரணம்)

முதலாவதாக, நிலப்பயன்பாட்டு பிரிவை விவசாயம் அல்லது புறம்போக்கு நிலம் என்பதிலிருந்து குடியிருப்பு அல்லது வணிக பயன்பாட்டுக்கு மாற்றுவது. இந்தியாவைப் பொறுத்தவரை அதிகார வட்டத் தொடர்புகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், அவர்களது பினாமிகளும் இத்தகைய மாற்றத்தை செய்து முடிக்கின்றனர். ஹரியானாவில் ரியல் எஸ்டேட் முதலைகளுடன் சேர்ந்து இது போன்ற தில்லுமுல்லுகளில் ஈடுபட்ட சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நாடெங்கிலும் மாநில தலைநகர்களிலும், தாலுகா அளவு பதிவு அலுவலகங்களிலும் சட்ட ரீதியாகவும் சட்ட விரோதமாகவும் செயல்படும் ஆயிரக்கணக்கான ரியல் எஸ்டேட் ரவுடிகளுக்கெல்லாம் ஒரு முன்னணி உதாரணம்.

famer-suicide-bihar

ரியல் எஸ்டேட் ஊதிப் பெருக்கமும், விவசாயிகளின் துயரமும்

இத்தகைய வகைப்பாடு மாற்றத்தின் மூலம் ராபர்ட் வதேரோ போன்றவர்களும், யூனிடெக், டி.எல்.எஃப் போன்ற கார்ப்பரேட்டுகளும், பிற ரியல் எஸ்டேட் முதலைகளும் நிலத்துக்கு சொந்தக்காரர்களான விவசாயிகளையும், அதிக விலை கொடுத்து வாங்குபவர்களையும் ஏமாற்றி பணத்தை குவிக்கின்றனர். இதன் பலன் அப்பாவி நடுத்தர வர்க்க வாடிக்கையாளருக்குக் கிடைக்கப் போவதில்லை.

இரண்டாவதாக, நிலத்தில் கட்டிடம் கட்டுவது, நிலத்தை பண்படுத்துவது, ஆழ்குழாய் கிணறு தோண்டுவது, பாதை போடுவது போன்ற பலனளிக்கும் பணிகளை செய்வதன் மூலம் கூடுதல் விலைக்கு விற்க முடியும். இந்த கூடுதல் விலையானது இந்தப் பணிகளுக்காக செலவிட்ட பணத்தை திரும்பப் பெறுவதாகவும், இந்த வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களுக்குக் கொடுக்காத ஊதியத்தை லாபமாக பெறுவதாகவும் இருக்கும். அதற்கு மேல் எதையும் சம்பாதிக்க முடியாது.

மூன்றாவதாக, ரியல் எஸ்டேட் சொத்து அமைந்துள்ள பகுதி வளர்ச்சியடைந்து பெருமளவு மக்கள் அங்கு குடியேறுவது நடக்கும் போது அதன் விலை அதிகரிக்கலாம். நான்காவதாக, நாட்டின் வளர்ச்சியும், விலைவாசி உயர்வும் நிலத்தின் விலையை அதிகரிக்கச் செய்யலாம்.

இந்த இரண்டுக்குமே ரியல் எஸ்டேட்டை சொந்தமாக வைத்திருக்கும் தனிநபரோ, நிறுவனமோ எந்த பங்களிப்பும் செய்வதில்லை. இது குறிப்பிட்ட பகுதி அல்லது நகரம் அல்லது ஒட்டு மொத்த நாட்டையும் சேர்ந்த மக்களின் கூட்டு உழைப்பால் நடப்பது. அரசு திட்டமிட்டோ, திட்டமிடாமலோ, ஒரு பகுதி பொருளாதார ரீதியாக வளர்வது அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் விலையை ஏற்றி விடலாம்.

urban-poor

ஏழைகளுக்கு வீடுகளா, மல்டிபிளெக்ஸ் மூலம் லாப வேட்டையா?

அதிகபட்ச சமூக நலன் ஏற்பட வேண்டுமானால், அந்தப் பகுதிக்கு மிக அதிகமாக தேவைபடும் பயனுக்கு அந்தச் சொத்து விடப்பட வேண்டும். மாறாக, முடிந்த அளவு அதிக விலை கிடைக்கும் வகையில் பணக்காரருக்கு அந்தச் சொத்து விற்கப்படுமானால் அவர் அதிலிருந்து லாபம் ஈட்டுவதற்காக ஒரு மல்டிபிளெக்ஸ் கட்டலாம். ஆனால், சமூகத்தின் தேவை அந்தப் பகுதி மக்களுக்கான குறைந்த விலை வீட்டு வசதியாக இருக்கும். எனவே, தன் வசம் வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் சொத்தை அதிகபட்ச விலைக்கு விற்பதன் மூலம் அந்த நபர் மக்கள் நலனுக்கும் நகரத்தின் வளர்ச்சிக்கும் நேரடியாக ஊறு விளைவிப்பவராகிறார். எனவே, பகுதி வளர்ச்சி நிகழ்முறையை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் சொத்தின் மூலமாக பணம் ஈட்டுவது சமூக நலனை அபகரிப்பதற்கு சமமானதே ஆகும்.

நாட்டின் பொதுவான வளர்ச்சியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட்டை ஒரு கருவியாக வைத்து தனது பணத்தை பெருக்கிக் கொள்வதும் அதே போன்று மற்றவர்களின் உழைப்பின் பலனை ஏமாற்றி பெறுவதாகும். அதில் நாட்டுப் பற்று எதுவும் இல்லை. எல்லைப் புறத்தை காவல் புரியும் படைவீரர்களுக்கு எத்தனை வாழ்த்துச் செய்திகள் அனுப்பினாலும் நாட்டு மக்களுக்கு இழைக்கும் இந்த துரோகத்துக்கு ஈடு ஆகாது.

Excited friends gambling at craps table in casino

சூதாட்ட விடுதியா, கிரிக்கெட் பந்தயமா, ரியல் எஸ்டேட் சொத்தா!

ஐந்தாவதாகவும் கடைசியாகவும், ரியல் எஸ்டேட் துறையில் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஊக வணிக, சூதாட்ட விலை ஏற்றத்தின் மூலம் வாங்கிய விலையை விட அதிக விலைக்கு விற்க முடியலாம். அதாவது, A ரூ 1 லட்சத்துக்கு B-டம் விற்கிறார். B ரூ 2 லட்சத்துக்கு C-டம் விற்கிறார், C ரூ 5 லட்சத்துக்கு D-ன் தலையில் கட்டுகிறார். இப்போது A அல்லது வேறு யாராவது அந்தச் சொத்தை வாங்கி விரும்பினால் ரூ 10 லட்சம் கொடுக்க வேண்டியிருக்கலாம். இப்படி பணத்தை பெருக்குவதற்கும் சூதாட்ட விடுதியில் அல்லது கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டி சூதாடுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

எனவே, ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கிப் போட்டு, மேலே சொன்ன காரணங்களில் ஒன்று மூலமாகவோ அல்லது அனைத்தும் இணைந்தோ ஏற்படும் விலை உயர்வின் மூலம் தனது பணத்தை பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், ஒட்டு மொத்த சமூகத்தைப் பொறுத்தவரை புதிதாக எந்த மதிப்பும் படைக்கப்படுவதில்லை. கட்டிடம் கட்டுவது, ஒரு பகுதியின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அனைத்தும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வியர்வையினால் (உடல் உழைப்பும் மூளை உழைப்பும்) உருவாக்கப்படுகிறது. இதை ஒட்டிய ரியல் எஸ்டேட் விலை உயர்வு என்பது இந்த உழைப்பினால் உருவாக்கப்படும் மதிப்பின் ஒரு பகுதியை நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபர் கைப்பற்றுவதே ஆகும். அதாவது, மாஃபியா கும்பல்கள் பிறரிடம் மிரட்டி பணம் பெறுவதற்கு ஒப்பானது.

stuck-with-apartment

சொத்து விலை ஏறும் என எதிர்பார்ப்பில்?

எனவே, நிலம் அல்லது வீடு வாங்கி அதன் விலை அதிகரிப்பதற்காக காத்திருந்து விற்று பணம் சம்பாதிப்பதில் எந்த பெருமையும், மகிழ்ச்சியும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட நபர், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் அல்லது நிலச் சூதாட்டத்தில் பணத்தை கோட்டை விடும் ஏமாளியாகவோஅல்லது, பிறரின் கடின உழைப்பையும், முயற்சியையும் உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணியாகவோதான் இருக்க முடியும்.

எகனாமிக் டைம்சில் வெளியான கட்டுரை ஒன்றை முன்வைத்து எழுதப்பட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/getting-rich-through-real-estate-foolhardy-or-swindling-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வளாக வேலைவாய்ப்பு : கார்ப்பரேட் – கல்லூரிகள் கூட்டுக்கொள்ளை

பல வருடங்களாக மாணவர்களின் பணத்தை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலத்தையே கொள்ளை அடித்து வந்திருக்கிறது, இந்த தனியார் கல்லூரி மற்றும் கார்பரேட் நிறுவன கூட்டு. இதனை எதிர்கொள்வதற்கு உண்ணாவிரத...

போராடாமல் எஸ்கேப் ஆகிறவர்களின் 12 சாக்குகள்

கே: எனக்கு ஏற்கனவே போதுமான அளவு சம்பளமும் பென்சனும் (GPF) உள்ளது. நான் ஏன் வர வேண்டும்? ப : நீங்கள் இன்று வாங்கும் சம்பளமும் பென்சனும்...

Close