சரக்கு மற்றும் சேவை வரி : தங்க பிஸ்கட்டுக்கு 3% வரி! திங்கிற பிஸ்கட்டுக்கு 18% வரி!

பார்ப்பன பாசிச பா.ஜ.க –ஆர்.எஸ்.எஸ் கும்பல் மூன்றாண்டு ஆட்சியை மே-14 அன்று நிறைவு செய்திருக்கிறது. இந்த மூன்றாண்டுகளில் இந்துமத வெறியர்களது அகண்ட பாரத திட்டத்தையும், இந்தியாவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு அடகு வைக்கின்ற தரகு சேவையையும் ஒரு சேர நிறைவேற்றுதில், மோடிக்கு சற்றும் சளைக்காதவர்களாக மோடியின் அமைச்சரவை சகாக்கள் செயல்பட்டு வருகின்றனர். தங்களது கார்ப்பரேட் சேவையை மூடிமறைக்க, இந்துமதவெறி பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டை முன்னேற்றுவதற்கானது என்கிற பிரச்சாரம் ஓயாமல் நடத்தப்படுகிறது. அரசின் துரோகங்களை எதிர்ப்பவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி முடக்குகின்ற உத்தியைக் கையாளுகின்றனர். ஆர்.எஸ்.எஸ் வழிநடத்தும் சிந்தனைக்குழாம்கள் ஒட்டுமொத்த ஊடகத்தையும் காவி-கார்ப்பரேட் செய்திப் பிரிவாக மாற்றியுள்ளன.

கார்ப்பரேட் சேவையின் உச்சமாக ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி – GST) என்கிற பெயரில் புதிய வரிக்கொள்கையை அமல்படுத்தப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. “ஒரே தேசம் ஒரே வரி” என்ற முழக்கத்தோடு அறிமுகமாகின்ற இந்த புதிய வரிக்கொள்கையானது மாநில அரசுகளது வரி வருவாய் முற்றிலும் பறிக்கப்பட்டு, மத்திய அரசையே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளுகிறது. மற்றொருபுறத்தில், நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களையும் கூடுதல் வரியைப் போட்டு அவர்களது வருவாயைப் பறிக்கின்ற வழிப்பறிக் கொள்ளையே.
ஒரு பொருளானது உற்பத்தியாகி, ஒரே கட்டத்தில் நுகர்வோரை சென்றடைவதில்லை. மொத்த கொள்முதல் துவங்கி சில்லரை வணிகம் வரை பல கட்டங்களைத் தாண்டி வருகிறது. இனிமேல் விற்பனைக்கு போகின்ற ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியே வரிகட்ட வேண்டும். வணிகர்கள், தாங்கள் வரி செலுத்தியது குறித்து மாதத்துக்கு மூன்று முறை அரசுக்கு அறிக்க்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அபாரதம் கட்ட வேண்டும். எந்த பொருளை வாங்கிச் சென்றாலும், வாங்குபவரிடமும் வரிகட்டிய ரசீது இருக்க வேண்டும். இவையெல்லாம் வரி கட்டுவதற்கான நெருக்கடிகளில் ஒருசில மட்டுமே. அதே போல வரி வசூல் மூலம் வருவாய் ஈட்டுவது என்கிற மாநில அரசுகளது உரிமையும் பறிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் அடிமையாக்கியுள்ளது.

கெடுபிடி செய்து கொள்ளையிடப்படும் வரியின் அளவும் ஒரே மாதிரி இல்லை. 5, 12, 18, 28 சதவிகிதம் என்று நான்கு வரிவிதிப்புக் கட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பொருட்களுக்கு என்னென்ன சதவிகிதத்தில் வரி என்பது பட்டியல் போடப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்புப் பட்டியலைப் பார்த்தாலே மோடி அரசின் மக்கள் விரேதப்போக்கு தெளிவாக தெரிந்துவிடும். உதாரணமாக, தங்க பிஸ்கட்டுக்கு 3% வரி விதிக்கப்பட்டுள்ளது. பாக்கெட் குடிநீருக்கு 12% வரி போடப்பட்டுள்ளது. பள்ளிக்கூட பைகள், சோப்பு, எண்ணெய், பற்பசை, பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்கள் 18% வரிப்பட்டியலில் உள்ளன. குக்கர், ஸ்டவ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு, சிமெண்ட போன்றவற்றுக்கு 28% வரிவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த வரிவிதிப்பிலிருந்து உணவுப் பொருட்களுக்கு விலக்களிக்கப்பட்டிருப்பதாக சொன்னாலும் உணவுத் தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அரிசிக்கு வரி இல்லை. ஆனால் அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் இட்லியை விற்கும் ஓட்டலுக்கு 18% வரி போடப்பட்டுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிவிகிதம் அதிகரிப்பதால் பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, கூடுதல் நேரம் உழைப்பது அல்லது அரைவயிற்றுப் பசியோடு மடிவது என்பதைத் தவிர வேறெந்த வழியும் இல்லை.

இது அப்பட்டமான கொள்ளை அல்லவா? இவ்வாறு கொள்ளையிடப்படும் வரிப்பணமானது முதலாளிகளது தேவைக்காகவே செலவிடப்படுகிறது. மக்களிடம் வரிக்கொள்ளை நடத்துகின்ற அரசு, முதலாளிகளுக்கு மானியங்கள், வரிச்சலுகைகளை வாரி இறைக்கிறது. இந்த அரசு காவிகளது அரசு மட்டுமல்ல; கார்ப்பரேட் முதலாளிகளது அரசுதான் என்பது நிரூபணமாகவில்லையா? பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது ‘வரிகொடா’ இயக்கம் நடந்தது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் திரும்ப வேண்டும்!

– தலையங்கம்

புதிய தொழிலாளி, ஜூன் 2017

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/goods-and-services-tax-puthiya-thozhilali-editorial/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை

“உற்பத்தியை" அளப்பதாக கூறிக் கொண்டாலும், ஜி.டி.பியும், வர்த்தக புள்ளிவிபரங்களும் சந்தையில் நடக்கும் பரிமாற்றங்களையே அளக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றமும், சொத்துடமை பத்திர பரிமாற்றங்களும்...

தொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்

நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை அக்டோபர் 28 , 2017 அன்று நடைபெறும். இடம் : பெரும்பாக்கம் நேரம் : மாலை 4 மணி முதல்...

Close