சேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்

TN will see 8 more greenfield projects, not just Salem-Chennai Highway

ஸ்டீராய்ட் ஏற்றப்பட்ட வளர்ச்சி – மேலும் 8 பசுமைவயல் சாலைகள்.

சேலம்-சென்னை 8 வழிச் சாலைக்கு விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வரும் இந்த சமயத்தில் மாநில மற்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறைகளில் உள்ள சிலரின் தகவல்களின் படி தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் மேலும் 8 பசுமைவயல் (புத்தம் புதிய) சாலைகள் திட்டமிடப் பட்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் அணைத்தும் மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகின்றன. இதன் படி தமிழ்நாட்டில் மொத்தம் 570 கிமி நீளமுள்ள புதிய சாலைகள் திட்டமிடப் பட்டிருக்கின்றன. நாட்டில் மற்ற பாகங்களின் திட்டங்களுடன் சேர்த்து, இவற்றிற்கான நிதியாக ரூ 43,000 கோடி கடந்த பிப்ரவரியில் ஒதுக்கப்பட்டுள்ளது.

“இந்த 8 திட்டங்கள் ஒவ்வொன்றும் சேலம்-சென்னை 8 வழிச் சாலையினால் ஏற்படும் அதேபோன்ற சமூக மற்றும் சுற்றுப்புற விளைவுகளை ஏற்படுத்தும்” என்று மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெயர் குறிப்பிட விரும்பாத பொறியியலாளர் ஒருவர் கூறுகிறார். “கடந்த பிப்ரவரி 23-ம் தேதி நிதின் கட்கரி உட்பட பல மத்திய அமைச்சர்களை தமிழக முதல்வர் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, இந்த 9 திட்டங்களுக்கான ஒப்புதல் கொடுக்கப் பட்டன” என்கிறார் அவர்.

வரவிருக்கும் திட்டங்களின் பட்டியல்

  • சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலை
  • கரூர்-கோவை சாலை
  • மேலூர்-திருப்பத்தூர்-புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலை
  • கும்பகோணம்-சீர்காழி சாலை,
  • மகாபலிபுரம்-பாண்டிச்சேரி சாலை
  • ஒட்டன்சத்திரம்-கமலாபுரம் கிளைச்சாலை (திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம்-பொள்ளாச்சி பகுதி)
  • மதுரை-தனுஸ்கோடி (பரமக்குடி-ராமநாதபுரம் பகுதியில் 4 வழிச்சாலை, ராமநாதபுரம்-தனுஸ்கோடி பகுதியில் தளமிடப்பட்ட ஒரங்களைக் கொண்ட 2 வழிச்சாலை, பாம்பனில் கூடுதல் பாலம்)
  • சென்னை-சித்தூர் சாலை (பகுதியளவுக்கு பசுமைவயல் சாலை) மற்றும்
  • ஒசூர் சுற்றுவட்டச் சாலை (பெங்களூருவின் வெளிப்புற சுற்றுவட்ட கட்டணச்சாலையின் ஒரு பகுதி).

இந்த சாலைகளுக்கான வரையறைக்கோடுகள் மேற்கூறப்பட்ட அமைச்சர்களின் சந்திப்பில் வெளியிடப்பட்டு கொள்கையளவிலான ஒப்புதல் பெற்றுள்ளன.

“சென்னை-சித்தூர் மற்றும் மதுரை-தனுஸ்கோடி சாலைகளுக்கு ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பசுமைவயல் சாலைகள் பெரும்பாலும் 4 வழிகளை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் பயணிக்கப் போகும் வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய ஆய்வுகள் மற்றும் முன்கணிப்பின் படி இது மாறலாம். இது முடிந்த பிறகு நாங்கள் திட்டப் பணிகளை ஏலத்திற்கு விடுவோம்” என்று சென்னையில் திட்ட அமலாக்கத்தில் இருக்கும் மேலாளர் ஜீ. அதிபதி கூறுகிறார்.

மதுரை-தனுஸ்கோடி சாலை திட்டத்தின் மேலாளர் எஸ் பாஸ்கரன் ‘மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட சாலை மட்டுமே முற்றிலும் புதியது. மீதி இருப்பதெல்லாம் சாலை அகலப்படுத்தல் மட்டுமே. இதற்கு எந்த எதிர்ப்பையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. விரிவான திட்டம் ஒரு மாதத்தில் தயாராகும்” என்கிறார்.

நாங்கள் பலமுறை முயற்சித்தும், இந்த 9 திட்டங்களில் 6 ஐ கையாளும் சென்னையின் பிராந்திய அதிகாரி பவன் குமார் எங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

மற்ற திட்டங்கள் பல்வேறு அறிக்கைகள் தயாரிப்பு நிலைகளில் உள்ளன. சிலவற்றிற்காக நிலம் கையகப் படுத்தும் வேலை துவங்கியிருக்கிறது. “பிப்ரவரியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 9 திட்டங்களில் ஒன்றாக இல்லாவிட்டாலும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலைக்கான நிலம் கையகப் படுத்தலும் கடந்த 8 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் பசுமைவயல் சாலைதான்” என்கிறார் பொறியியலாளர். “தற்போதைக்கு போதுமான வாகன பயன்பாடு இல்லாததால் சில திட்டங்கள் தேவையற்றது என்று தோன்றினாலும், இந்த வாகன எண்ணிக்கை அதிகமாகத் தான் செய்யும். இந்தத் திட்டங்கள் முடியும் தருவாயில் அதற்கு இணையாக வாகன எண்ணிக்கையும் அதிகரித்திருக்கும்” என்று இந்த திட்டங்களை அவர் நியாயப் படுத்துகிறார்.

மேலூருக்கும் தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட பகுதி 131.8 கி.மீ நீளம் கொண்டதாக இருக்கும். இது தற்போதைய சாலையின் நீளத்தை விட 20 கிமீ தான் குறைவு. இந்த 4 வழிச்சாலையின் மொத்த செலவு ரூ 1,919 கோடி. மேலூருக்கும் திருப்பத்தூருக்கும் இடைப்பட்ட பகுதி முற்றிலும் பசுமைவயல் சாலையாகும். மீதி பகுதியில் தற்போதைய சாலை அகலப் படுத்தப்படும். பசுமைவயல் சாலைக்காக 60 மீ அகல நிலம் கையகப்படுத்தப்படும். தற்போது கையகப்படுத்தப் படவேண்டிய நிலத்தின் அளவைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாய நிலங்களை மலிவாக கையகப் படுத்தலாமாம்

“தற்போதைய சாலைகளை ஒட்டிய நிலங்களில் பெரும்பாலும் கட்டிடங்கள் இருக்கும் என்பதால் அவற்றை விட விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்துவது மிகவும் மலிவு” என்று நெடுஞ்சாலை துறையின் கிருஷ்ணகிரி திட்ட அமலாக்கப் பகுதி துணை பொது மேலாளர் டிவி நாராயணா என்ற விவசாய நிலங்களை கையகப் படுத்தலை நியாயப்படுத்துகிறார். சாலைப் பாதுகாப்பு அம்சங்களை புதிய சாலைகளில் அமல்படுத்துவது எளிது என்று இன்னுமொரு காரணத்தைக் கூறுகிறார். ஒசூர்-தர்மபுரி பகுதியில் தற்போதைய மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்துவதற்கான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் இவர்.

“எல்லோருக்கும் தெரிந்த உளுந்தூர்பேட்டை வழி சாலையை அகலப் படுத்த வேண்டுமென்றால், சுமார் 40,000 கட்டிடங்களை இடிக்க வேண்டியிருக்கும். பசுமைவயல் சாலையினால் குறைந்த பட்ச கட்டிடங்களே சேதமாகும். சொல்லப் போனால், சேலம் மாவட்டத்தில், ஜருகுமலைக் காட்டையும், நகரப்புற குடியிருப்புகளையும் தவிர்ப்பதற்காக நாங்கள் 2 கிமீ நீள குடைவுப் பாதையை உருவாக்க இருக்கிறோம்” என்று பவன் குமார் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில்கூ றியிருக்கிறார்.

எனினும் இவர்கள் கூறுவதைப் போல விவசாய நிலங்களை கைப்பற்றுவது அவ்வளவு செலவு குறைவானது அல்ல என்பது இந்த திட்டங்களை எதிர்ப்பவர்களின் மற்றும் செயல்பாட்டாளர்களின் கருத்து.

இதற்கிடையில் சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலைத் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள் தொடர்ந்து கைது செய்யப் பட்டு வருகிறார்கள். அவர்களில் தற்போது 63 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். போராட்டங்களை எதிர்கொள்வதால் திட்டத்திற்கான நிலத்தேவையை 2,700 ஹெக்டரிலிருந்து 1,900 ஹெக்டேர் ஆக குறைத்திருக்கிறார்கள்.

“மத்திய மாநில அரசுகள் கான்கிரீட் மட்டுமே வளர்ச்சி என்று நினைக்கின்றன. பசுமைச்சூழலோ, விவசாயிகளின் வாழ்வோ அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இந்த புதிய திட்டங்களைப் பற்றி இது வரை நாங்கள் கேள்விப்படவில்லை ஆனால், அவை அறிவிக்கப்டும் போது பாதிப்புகளை எதிர்த்து நாங்கள் போராடுவோம்” என்று கூறுகிறார் சேலம்-சென்னை 8 வழி விரைவுச்சாலையை எதிர்க்கும் விவசாயிகளின் கூட்டமைப்பின் முதன்மை ஒருங்கினைப்பாளர்.

Courtesy : The News Minute

செய்தியை தழுவி தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் – நேசன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/growth-in-steroids-8-more-greenfield-projects-not-just-salem-chennai-highway-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
காவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி – போஸ்டர்

மூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”

மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்" நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம் “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்" என்பதுதான்.

Close