இந்திய ஜனநாயகம் பெருமையுடன் படைத்து வழங்கும் இந்துத்துவ பாசிசம் – அருந்ததி ராய்

ந்தப் பதிவு 2002 குஜராத் படுகொலைகளை ஒட்டி அருந்ததி ராய் எழுதிய “Democracy : Who is she when she is at home? (ஜனநாயகம் : அவள் வீட்டுக்குள் யாராக இருக்கிறாள்?)” என்ற ஆங்கிலக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியின் மொழிபெயர்ப்பு.

இந்துத்துவ அமைப்புகளின் அரசியல் கட்சியான பா.ஜ.க மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றி ஒட்டு மொத்த அரசமைப்பையும், சமூகத்தையும் பாசிச மயமாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலுக்கு இது இன்னும் பொருத்தமாக உள்ளது.

பாசிசம் இந்தியாவில் உறுதியாக கால் பதித்துவிட்டது. அதை 2002-ம் ஆண்டின் இளவேனில் காலத்திலிருந்து குறித்துக் கொள்ளலாம். உலக அளவில் இதற்கான ஏற்புடைய சூழலை ஏற்படுத்தியதற்காக அமெரிக்க அதிபரின் [சின்ன ஜார்ஜ் புஷ்] மீதும் பயங்கரவாதத்திற்கு எதிரானதாக அவர் உருவாக்கியிருக்கும் அனைத்துநாட்டு கூட்டணியின் மீதும் பழி போடலாம் என்றாலும் பல ஆண்டுகளாக நம்மிடையே பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் பாசிசம் நொதித்து வந்திருக்கின்றது என்பதற்கு மற்றவர்களை பொறுப்பாக்க முடியாது.

India - Pakistan border

இந்திய-பாகிஸ்தான் பகை ஒவ்வொரு முறை சூடேற்றப்படும் போதும் அதை ஒத்த பகைமை உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கட்டியமைக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒவ்வொரு போர்முழக்கத்தின் போதும் நம்மை நாமே தாக்கிக் கொள்கிறோம்.

அது போக்ரானில் 1998 ல் அணுஆயுத சோதனையின் போது மெல்ல எட்டிப் பார்த்தது. அப்போதிருந்து, ரத்தவெறிபிடித்த தேசவெறி அப்பட்டமாக ஏற்புடைய அரசியலாகிவிட்டது. ‘அமைதிக்கான ஆயுதங்கள்’ [அணு ஆயுதங்கள்] இந்தியாவையும் பாகிஸ்தானையும் மிரட்டல்-எதிர் மிரட்டல், அதட்டல்-எதிர்அதட்டல் என்று ஒரு அபாயச் சுழலில் சிக்க வைத்திருக்கின்றன. ஒரு போருக்கும் [கார்கில்] நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளுக்கும் பிறகு, இப்பொழுது, பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆயுதப் படையினர் எல்லையில் மூக்கும் மூக்கும் முட்டிக்கொள்ளும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளனர்; அணுஆயுதப்போர் மூழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக காட்டப்படும் கண்மூடித்தனமான போர்வெறி எதிரொலித்து நம்மையே தாக்கி நம்மிடையே இந்து முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையின் மிச்சமீதத்தையும் அறுத்து எறிகிறது. கடவுளின் சேனையைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பொது வெளியை உடனடியாக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அவர்களை அவ்வாறு செய்ய நாமும் அனுமதித்தோம்.

இந்திய-பாகிஸ்தான் பகை ஒவ்வொரு முறை சூடேற்றப்படும் போதும் அதை ஒத்த பகைமை உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் கட்டியமைக்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒவ்வொரு போர்முழக்கத்தின் போதும் நம்மை நாமே தாக்கிக் கொள்கிறோம். நமது வாழ்க்கை முறையையும், நமது வண்ணமிகு, வேற்றுமை நிறைந்த பழமையான நாகரிகத்தையம், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை வேறுபடுத்தும் எல்லாவற்றையும் காயப்படுத்திக் கொள்கிறோம். வரவர இந்திய தேசியம் என்பது இந்து தேசியம் என்று பொருள்பட ஆரம்பித்துவிட்டது. இந்த தேசியம் தன்னைப் பற்றிய மதிப்பினால் வரையறுக்கப்படாமல் மற்றதைப் பற்றிய வெறுப்பினால் வரையறுக்கப்படுகிறது. இப்போதைக்கு மற்றது என்பது பாகிஸ்தான் மட்டும் அல்ல முஸ்லீம்களும் கூட. தேசியம் என்பது பாசிசத்துடன் எவ்வளவு எளிதாக நகமும் சதையுமாக இணைகிறது என்பதைப் பார்க்கும் போது மனம் கலவரமாகிறது. தேசம் என்பது என்ன, அது யாருக்குச் சொந்தம் என்பதை பாசிஸ்ட்கள் வரையறுப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது. அதேசமயம் தேசியமானது சோசலிச, முதலாளித்துவ, பாசிச வடிவங்களில் 20-ம் நூற்றாண்டின் கிட்டத்தட்ட அனைத்து இனப்படுகொலைகளுக்கும் காரணமாக இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. தேசியம் என்று பிரச்சனையில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

The incipient, creeping fascism

உள்ளார்ந்து, படிப்படியாக ஊடுருவி வரும் பாசிசம்

சமீபத்தில் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசத்தை அடையாளமாக்கிக் கொள்வதை விடுத்து, பழமையான நாகரிகத்தின் மக்கள் என்று நம்மை கருதிக்கொள்ளக்கூடாதா? எல்லைகளை ரோந்து வந்து கொண்டிருப்பதை விடுத்து இந்த நாட்டை நேசிக்கக் கற்றுக் கொள்ளக் கூடாதா? சங்க பரிவாரத்திற்கு நாகரிகம் என்பதைப் பற்றி எந்த புரிதலும் இல்லை. நாம் யார், நாம் யார் என்ற நமது புரிதல், நாம் யாராக இருக்கவிரும்புகிறோம் என்பது பற்றிய நமது கனவுகள் ஆகியவற்றை வரம்பிட, குறைக்க, வரையறுக்க, வெட்டிக்குறைக்க மற்றும் சிறுமைப்படுத்த சங்க பரிவாரம் முயல்கிறது.

அவர்களுக்கு எப்படிப்பட்ட இந்தியா வேண்டும்? கை-காலற்ற, தலையற்ற, ஆன்மாஅற்ற, சிதைக்கப்பட்ட இதயத்தில் ஆழமாக கொடி சொருகப்பட்டு கசாப்புக்கடை கத்தியின் கீழ் ரத்தம் பெருகக் கிடக்கும் முண்டமாகவா? நாம் அப்படி நடக்க அனுமதிக்கலாமா? அல்லது ஏற்கனவே அதை நடக்க விட்டுவிட்டோமா?

கடந்த சில ஆண்டுகளில் உள்ளார்ந்து, படிப்படியாக ஊடுருவி வரும் பாசிசத்தை நமது மக்களாட்சி அமைப்புகளே பேணி வளர்த்து வந்திருக்கின்றன. நாடாளுமன்றம், ஊடகங்கள், காவல் துறை, அதிகாரத்துறை, பொதுமக்கள் என்று எல்லோரும் அதனுடன் சரசமாடினார்கள். மதச்சார்பற்றவர்கள் கூட அதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்துவதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள். உசசநீதிமன்றமாகவே இருந்தாலும், எந்த ஒரு நிறுவனத்தின் கட்டற்ற உரிமையையும் பொறுப்பற்ற அதிகாரத்தையும் ஆதரிக்கும் ஒவ்வொரு முறையும் நாம் பாசிசத்தை நோக்கி நகர்கிறோம். இந்த ஆரம்ப அறிகுறிகளை பெரும்பாலோர் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

ஆச்சரியப்படும் விதமாக தேசிய ஊடகங்கள் கடந்த வாரங்களில் நடந்தவற்றிற்கு தைரியமாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. பா.ஜ.க உடன் விளிம்பு வரை பயணித்த சகபயணிகளில் பலர் குஜராத் என்ற அதளபாதாளத்தை எட்டிப்பார்த்து உண்மையிலேயே கலக்கமடைகிறார்கள். அவர்கள் எவ்வளவு தீவிரமாக எவ்வளவு காலம் போராடுவார்கள் என்பது கேள்விக்குறி. இந்தப் போராட்டம் வரப்போகும் கிரிக்கெட் போட்டிக்கான பிரச்சாரத்தைப் போன்று இருக்கப்போவதில்லை. மேலும், ஊடகங்களுக்கு தேவைப்படும் காட்சிப்படுத்துவதற்கான கண்கவரும் ரத்தக்களரியும் இருக்கப்போவதில்லை.

பாசிசம் என்பது அரசு அதிகாரத்தின் ஒவ்வொரு உறுப்பும் நின்று நிதானமாக ஊடுருவப்படுவதாகும். அது படிப்படியாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கவனத்தைக் கவராத அன்றாட அநீதிகளாகவும் இருக்கிறது. அதை எதிர்த்துப் போராடுவது என்பது மக்களின் மனங்களையும் இதயங்களையும் வெல்வதாகும். அதை எதிர்த்துப் போராடுவது என்பது ஆர்.எஸ்.எஸ் சாகாக்களை, மதரசாக்களை தடைசெய்யச் சொல்வதல்ல. அவை கெட்டவை என்று தாமாகவே கைவிடப்படும் சூழலை உருவாக்குவதற்காக வேலைசெய்வதாகும்.

Modi Bhakts

மூளைச்சலவை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தக் கொடுரத்தை மேலும் தீவிரப்படுத்த தம்மை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்

பொது நிறுவனங்களை கழுகுக் கண்ணுடன் கண்காணிப்பதும், அவற்றிடமிருந்து கணக்கு கேட்பதுமாகும். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு உன்மையிலேயே நலிந்தவர்களின் முனகல்களை கேட்பதாகும். கொத்தடிமையாக்கம், திருமண வாழ்வில் வண்புனர்ச்சி, மாற்றுப் பாலின ஈர்ப்பு, பெண்களுக்கு குறைந்த கூலி, யுரேனிய கழிவுகள் கொட்டப்படுதல், நீடிக்க முடியாத கனிமவளச்சுரண்டல், நெசவாளர்களின் விவசாயிகளின் துயரம் போன்றவற்றிற்காக குரல் கொடுக்கும் நாடுமுழுவதுமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்களின் கோரிக்கைகளுக்கு தளம் அமைத்துக் கொடுப்பதுமாகும். வாழிடத்திலிருந்து துரத்தப்படுவதற்கும், நிலப் பறிப்புக்கும் எதிராகவும் விடாப்பிடியாக தினம்தோறும் கொடுமைப்படுத்தும் கொடூரமான வறுமைக்கெதிராகவும் போராடுவதாகும். ஊடக பத்திகளிலும், தொலைக்காட்சியின் முக்கிய நேர விவாதங்களிலும் மக்களின் கவனத்தை முக்கியமான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பும் விதத்தில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் அவர்களின் கீழ்த்தரமான ஆர்வங்களுக்கும் கேளிக்கூத்துகளுக்கும் இடம் கிடைக்காவண்ணம் பார்த்துக் கொள்வதுமாகும்.

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் குஜராத்தில் நடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கும் போது, மூளைச்சலவை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்தக் கொடுரத்தை மேலும் தீவிரப்படுத்த தம்மை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களைச் சுற்றிப் பாருங்கள். அவர்கள் சிறு பூங்காக்களிலும், பெரிய மைதானங்களிலும், காலியான இடங்களிலும், கிராம பொது நிலங்களிலும், ஆர்.எஸ்.எஸ் காவிக் கொடியேற்றி அணிவகுப்பதைக் காணலாம். திடீரென்று அவர்கள் எங்கெங்கும் இருக்கிறார்கள். வயது வந்த மனிதர்கள் காக்கி அரைக்கால் சட்டையுடன் அணிவகுத்து நடக்கிறார்கள். எதை நோக்கி? எதற்காக?

அவர்கள் வரலாற்றை கற்றுக் கொள்ள அக்கறை காட்டுவதில்லை என்பதால் பாசிசம் சிறிது காலம் செழித்து வளர்நது பின் தனது உள்ளார்ந்த முட்டாள் தனத்தினால் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்பது பற்றி அவர்களுக்கு அறிவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பாசிசம் தன்னைத்தானே அழித்துக் கொண்ட பிறகும், அணுகுண்டு தாக்குதலில் கதிரியக்கத்தின் பின்விளைவுகளைப் போல விடாப்பிடியாக பல தலைமுறைகளை ஊனப்படுத்தும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.

இந்த அளவிலான கோபமும் வெறியும் அடக்கப்பட முடியாது, வெளிப்படையான நிந்தனையினாலும் கண்டனத்தினாலும் தணியும் என்று எதிர்பாக்கமுடியாது. சகோதரத்துவம் மற்றும் அன்பு பற்றிய கீதங்கள் அருமையானவைதான், ஆனால் அவை மட்டும் போதாது.

வரலாற்று அனுபவப்படி, தேசியம் மாயையாகிப் போனதென்ற உணர்வினால் பாசிச இயக்கங்கள் ஊட்டம் பெறுகின்றன. சுதந்திரப் போராட்டத்திற்கு ஊட்டமளித்த கனவுகள் சில்லரை காசுகளைப் போல விரையமாக்கட்டதன் விளைவாக இந்தியாவில் பாசிசம் வேர் பிடித்தது.

நாட்டிற்கு கிடைத்த விடுதலையே காந்தி மரரொட்டி என்று அழைத்த, பிரிவினையின் போது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் இரத்தக் கறை படிந்த, பெயரளவிற்கான சுதந்திரம் தான். அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரஸ்பர வெறுப்பும் அவநம்பிக்கையும் இந்திரா காந்தியால் வழிநடத்தப்பட்ட அரசியல்வாதிகளால் அதிகமாக்கப்படவும், ஆறாத ரணமாக பராமரிக்கப்படவும் உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆதாயங்களுக்காக நமது மதசார்பற்ற நாடாளுமன்ற மக்களாட்சியின் மஞ்ஞையை குடைந்து தோண்டினார்கள்; கரையான்கள் துளைப்பதைப் போல நமது மதசார்பற்ற அடிப்படையை துளைத்து அதைத் தகர்ந்து விழத் தயாராக இருக்கும் வெற்றுக்கூடாக்கினார்கள். பாராளுமன்ற மக்களாட்சியின் முதுகெலும்பாக இருக்கும் கண்காணிப்புகளையும் சமப்படுத்தல்களையும் அதாவது அரசியலமைப்பு சட்டத்தையும், பாராளுமன்றத்தையும், நீதி மன்றங்களையும் ஒன்றிணைக்கும் அமைப்பின் அஸ்திவாரத்தை இவர்களின் துளைப்புகள் பலவீனப்படுத்தியிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகளின் மீது பழி போடுவதும் அவர்களிடத்திலிருந்து இல்லாத நியாய உணர்வை எதிர்பார்ப்பதும் வீண்வேலை.

தூண்டி விடப்படும் மதப் பிரிவினைகள்

தொடர்ந்து தங்கள் தலைவர்களையே நிந்தித்து கொள்ளும் மக்கள் பரிதாபத்திற்குரியவர்களே. தலைவர்கள் நம்மை ஏமாற்றியிருந்தால் அவர்களை நாம் அவ்வாறு செய்ய விட்டதனால் தான். தலைவர்கள் எப்படி மக்களுக்கு தவறிழைத்து விட்டார்களோ அதே போல் மக்களும் தலைவர்களுக்கு தவறிழைத்து விட்டார்கள் என்று வாதிடலாம். நமது பாராளுமன்ற மக்களாட்சியில் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அமைந்த அபாயகரமான அடிப்படையான குறை இருக்கிறது என்பதை நாம் ஒத்துக் கொண்டாக வேண்டும். அது தான் குஜராத்தில் நடந்ததைப் போன்ற ஒரு நாசகரத்தை உருவாக்குகிறது. தீ எங்கும் பரவி இருக்கிறது. பிரச்சனையின் அடிப்படைக்கு பதில் கூறவும் அமைப்பு ரீதியான தீர்வை கண்டறியவும் வேண்டும்.

ஆனால் அரசியல்வாதிகள் மதவேறுபாட்டை பயன்படுத்திக் கொண்டது மட்டுமே இந்தியாவில் பாசிசம் தோன்றியதற்கான ஒரே காரணமில்லை.

கடந்த 50 வருடங்களாக, சாதாரண குடிமக்களின் எளிய தேவைகளான மனிதமாண்புடன் கூடிய பாதுகாப்பான வாழ்க்கை, கொடூரவறுமையிலிருந்து விடுதலை ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு மக்களாட்சி நிறுவனமும் உன்மையான சமூக நீதி என்ற பிரச்சனையில் பொறுப்பில்லாமலும், எளிய மக்கள் அணுக முடியாமலும், அக்கறையின்றியும், கையாலாகாமலும் இருந்திருக்கின்றன. நிலச் சீர்திருத்தம், பொதுக் கல்வி, பொது மருத்துவம், இயற்கை வளங்களின் சம பங்கீடு, கல்வி வேலையிடங்களில் பங்கீடு போன்ற சமூக மாற்றத்திற்கான ஒவ்வொரு யுத்தியும் அதிகாரத்தின் உயிர்நிலையை கைப்பற்றிக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் சாதிகளாலும் வர்க்கங்களினாலும் தந்திரமாக, தொடர்ச்சியாக தடமாற்றப்பட்டு பயனற்ற ஒன்றாக மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் தற்போது முதலாளித்துவ உலகமயமாக்கம் இன்னும் பெரும்பகுதி நிலப்பிரபுத்துவ சமூகமாகவே இருக்கும் நமது மக்கள் மீது தங்கு தடையில்லாமல் சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன்மூலம் இந்த சிக்கலான படிநிலைகளைக் கொண்ட சமூகம் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் துண்டாடப்பட்டுவருகிறது.

மக்களிடம் உண்மையான மனத்தாங்கல் இருக்கிறது. பாசிஸ்ட்கள் இதை உருவாக்கவில்லை. ஆனால், அதை கைப்பற்றி, தலைகீழாக்கி, அதிலிருந்து ஒரு அருவருக்கத்தக்க போலியான பெருமையை அவர்கள் படைத்திருக்கிறார்கள்; குறைந்தபட்ச பொது அடையாளமான மதத்தை வைத்து மக்களை ஒரு இயக்கமாக்கியிருக்கிறார்கள். தமது வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை இழந்த மக்கள், தங்கள் வாழிடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் இழந்த சமூகங்கள் தாங்கள் பெருமைப்பட ஏதோ இருக்கிறது என்று எண்ண வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெருமை அவர்கள் முயற்சியால் சாதித்ததல்ல, தங்கள் சொந்த சாதனை என்று பெருமை பாராட்டிக் கொள்ளத்தக்கதல்ல, ஆனால் அது தற்செயலாக யாராக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியது; இன்னும் துல்லியமாக சொல்லப் போனால், அவர்கள் யாராக இல்லை என்பதைப் பற்றியது. இந்தப் போலியான வெற்றுப் பெருமை, போராட்ட கோபமாக பொங்கி எதிரிகள் என்று கற்பிக்கப்பட்டு தங்கள் எதிரில் நிறுத்தப்படுபவர்கள் மீது பாய்கிறது.

Displaced Peoples

தமது வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை இழந்த மக்கள்

சமூகத்தின் ஆக ஏழைப்பிரிவான தலித்துகள் மத்தியிலிருந்தும் பழங்குடி மக்கள் மத்தியிலிருந்தும் திரட்டிய நபர்களை வைத்தே சமூகத்தின் அடுத்த நலிந்தபிரிவின் வாக்குரிமையை பறிக்கவும், ஒதுக்கி வைக்கவும், தீர்த்துக்கட்டவுமான திட்டத்துக்கு வேறு எப்படி விளக்கம் சொல்ல முடியும்? குஜராத்தில் ஆதிக்கசாதிகளால் ஆயிரக்கணக்கான வருடங்களாக வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு கழிவையும் விட கேவலமாக நடத்தப்பட்ட தலித் மக்கள், தங்களை ஒடுக்கியவர்களுடனேயே கைகோர்த்து தங்களை விட சிறிது மேம்பட்டு இருப்பவர்கள் மேல் பாய்ந்தததை வேறு எப்படி விளக்க முடியும்? அவர்கள் வெறும் கூலி அடிமைகளா? அல்லது வாடகை கொலைகாரர்களா? அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களின் சொந்த செயல்களுக்கான பொறுப்பிலிருந்து அவர்களை விடுவிப்பதும் சரியா? அல்லது எனது மூளைதான் மழுங்கிவிட்டதா?

ஒரு வேளை, ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் உன்மையான எதிரிகள் பலமாகவும் எட்டாத தூரத்திலும் இருப்பதால் தங்களை விட சிறிது குறைவாக ஒடுக்கப்பட்டவர்களின் மீது தங்கள் கோபத்தை காட்டுவது பொதுவான ஒரு போக்கோ என்னவோ! அவர்களின் சொந்தத் தலைவர்கள் அவர்களிடமிருந்து தங்களை பிரித்துக் கொண்டு, அந்த மக்களை அத்துவானக் காட்டில் கைவிட்டு விட்டு, அதிகார சக்திகளுடன் விருந்துகளில் களித்திருப்பதும், அந்த மக்களை இந்து வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுவதாக வாக்களித்திருப்பதும் இதற்கு காரணமாக இருக்குமோ? (ரோமானிய பெருமையை மீட்டமைப்பது, ஜெர்மானிய இனத்தை சுத்திகரிப்பது, இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்குவது என்பன போன்ற பாசிசத்தின் முந்தையை தோல்வித்திட்டங்களைப் போல சர்வதேச இந்து சாம்ராஜ்யத்தை தோற்றுவிப்பதற்கான முதற்படி கைவிடப்பட்ட ஆடுககளை மீண்டும் இந்து வட்டத்துக்குள் கொண்டு வருவதுதான் போலும்).

இந்தியாவில் பதின்மூன்று கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்து பாசிஸ்ட்கள் அவர்களை நியாயமான இரைகளாகவே பார்க்கின்றனர். ‘உள்நாட்டுப் போரில்’ அவர்கள் அழித்தொழிக்கப்படும் போது உலகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் என்று மோடி, பால் தாக்கரே போன்றவர்கள் நினைக்கிறார்களா? ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின்படி ஐக்கிய ஐரோப்பாவும் மற்ற பல நாடுகளும் குஜராத்தில் நடந்ததை கடுமையாக கண்டித்து அதை நாஜி ஆட்சி என்று கூறியிருக்கின்றன. அவற்றுக்கு இந்திய அரசின் எச்சரிக்கை விடும் விதத்திலான பதில், ‘அந்நியர்கள் இந்திய ஊடகங்களை பயன்படுத்தி இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் (காஷ்மீரில் நடப்பதைப் போன்ற மனதைச் சில்லிட வைக்கும் தினசரி நிகழ்வுகளை சொல்கிறார்களா?) தலையிடக்கூடாது’ என்பதுதான்.

Modi and Bal Thackeray

மோடி, பால் தாக்கரே போன்ற நபர்கள்

அடுத்து என்ன? ஊடகத் தணிக்கையா? இணையத்தை முடக்குவதா? சர்வதேச தொலைபேசி அழைப்புகளை வெட்டுவதா? தவறான தீவிரவாதிகளை கொன்றுவிட்டு மரபணு சோதனையில் மோசடி செய்வதா? அரச பயங்கரவாதத்தைப் போல வேறொரு பயங்கரவாம் ஏதுமில்லை.

ஆனால் அவர்களை யார் எதிர்கொள்வது? இவர்களின் பாசிச கொடூரங்கள் ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கண்டனங்களால் மட்டுப்படுத்தப்படலாம். இதுவரை பீகாரின் லாலு யாதவ் மட்டுமே இதில் உண்மையான அக்கறை காட்டியுள்ளார். அவர் “எந்தத் தாயின் மகன் இது இந்து நாடு என்று சொன்னது. அவனை இங்கே அனுப்பு, அவன் நெஞ்சைப் பிளந்து விடுகிறேன்” என்றார்.

துரதிர்ஷ்டவசமாக இதற்கு உடனடித்தீர்வு எதுவுமில்லை. பாசிசத்தைக் கண்டு கொதிப்பவர்கள் அவர்களின் கொதிப்புக்கு இணையான அளவில் சமூகநீதிக்காக ஒரு உறுதியான கடப்பாட்டை காட்டாவிட்டால் ஒழிய பாசிசம் விரட்டியடிக்கப்படாது

நாம் நமது துவக்கத் தடைகளிலிருந்து விடுபடுவதற்கு தயாரா? பல லட்சங்களில் வீதியில் திரள்வது மட்டுமல்ல, வேலையிடங்களில், பள்ளிகளில், நமது வீடுகளில், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு தெரிவுகளிலும், அணி திரள்வதற்கு தயாரா?

அல்லது இன்னும் தயாரில்லையா…

இல்லையென்றால், வருடங்கள் பல கடந்த பின், உலகமே நியாயமாகவே நம்மை விலக்கி வைத்தபின், ஹிட்லரின் ஜெர்மனியில் சாதாரண குடிமக்களைப் போல, நாமும் நமது சக மனிதர்களின் பார்வையிலிருக்கும் அருவருப்பை அடையாளம் கண்டுகொள்ள கற்றுக் கொள்வோம். எதைச் செய்தோமோ, எதைச் செய்யாமல் விட்டோமோ, எதை நடக்கவிட்டோமோ அதன் அவமானத்தினால் நாமும் நாம் சொந்தக் குழந்தைகளின் கண்களை எதிர்நோக்க முடியாமல் இருப்போம்.

இதுதான் நாம். இது தான் இந்தியா. இந்தக் கும்மிருட்டைக் கடக்க வானுலகம்தான் ஒளி காட்டவேண்டும்.

தமிழ் மொழிபெயர்ப்பு : நேசன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/hindutva-fascism-proudly-presented-by-the-worlds-largest-democracy-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அதிகரிக்கும் கொரோனா மரணங்களும்: மத்திய-மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையும்!

                                       ...

70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்

"மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய...

Close