ஒரகடத்தில் யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் மாரத்தான் போராட்டம்

ந்தியாவில் முதன் முறையாக யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த மாரத்தான் தொழிற்சங்க போராட்டம் ஒரகடத்தில் நடந்து வருகிறது. பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த காசிராஜன், சரவணன் ஆகியோர் 28-10-2018 ஞாயிற்றுக் கிழமை ஒரகடம் சென்று தொழிலாளர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக காசிராஜன் எழுதிய ஒரு செய்தித்தொகுப்பு கீழே!

1. இந்தியாவில் வாகன உற்பத்தி தொடர்பாக முதலாளித்துவ தரப்பு தெரிவிக்கும் தகவல்

வாகன தயாரிப்பு துறையில் 14.5 சதவீதம் வளர்ச்சி

“இந்தியாவின் வாகன துறை, நடப்பு நிதியாண்டில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது,” என, மத்திய அரசின் கனரக தொழில்துறையின், தேசிய வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி உட்கட்டமைப்பு திட்டத் துறையின் தலைமை செயல் அதிகாரி, நீதி சர்கார் தெரிவித்தார்.

“உலக அளவில் வாகன விற்பனையில் இந்தியா, நான்காவது மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகனத் துறை 7.1 சதவீதத்துடன் மிக முக்கிய பங்களிப்பு வழங்குகிறது.

மேலும், நடப்பு நிதியாண்டில் வாகனத் துறையின் வளர்ச்சி, 14.5 சதவீதமாக உள்ளது. ஏப்., முதல் ஆக., வரையிலான காலகட்டத்தில் வாகன உற்பத்தி 1.37 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1.19 கோடியாக இருந்தது. இதில், பயணியர் வாகன உற்பத்தி, 9.81 சதவீதம் வளர்ச்சியும், வணிக ரீதியிலான வாகன வளர்ச்சி 41.6 சதவீதமாகவும் உள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை, 44.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி, 11.50 சதவீதமாகவும், வாகன ஏற்றுமதி 26.96 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

சர்வதேச அளவில் உள்ள முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. மத்திய அரசின் வாகன தொலை நோக்குத் திட்டம் – 2026ன் படி, உலக அளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியா இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில், 12 சதவீத பங்களிப்பு வழங்குவது, கூடுதலாக, 6.5 கோடி வேவலைவாய்ப்பு உருவாக்குவது ஆகியவையாகும்.”

மேலும், இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 13% ஏற்றுமதியாகிறது.

நிறுவனம் ஏற்றுமதி எண்ணிக்கை (ஏப்ரல் – ஜூலை 2018)
பஜாஜ் ஆட்டோ

5,66,977

டி.வி.எஸ்

2,19,217

எச்.எம்.எஸ்.ஐ

1,54,294

யமஹா

91,965

ஹீரோ

62,866

சுசுகி

23,480

ராயல் என்ஃபீல்ட்

7,698

 

இவ்வாறு இந்திய அரசும் முதலாளிகளும் நீண்ட கால திட்டம் தீட்டும் வாகன உற்பத்தித் துறையில்தான் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருகிறார்கள்.

2. தொழிலாளர்களின் கோரிக்கை

அக்டோபர் 28 2018 : யமஹா ராயல் என்ஃபீல்டு தொழிலாளர் போராட்டம் ஒரு மாதத்தை கடந்து உறுதியாக நடந்து கொண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டம் என்பது ஒரு மாரத்தான் ஓட்டம் .

இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கை வெற்றியடைய வேண்டும். முதலாளிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதாகவே இருக்கின்றன.

தொழிற்சங்கங்கள் அமைக்கவே கூடாது என்று ஒரு நிறுவனம் தொழிற்சங்க உரிமையை மறுத்தால் அந்த நிறுவனம் தொழிலாளர் சட்டங்களை எப்படி மதிக்கிறது என்று உழைக்கும் மக்களுக்கு தெரிய வேண்டும்.

ஆண்டுக்கு ரூ 700 சம்பளம் உயர்த்தப்படுவதே பெரிய விசயம் என்கிறார்கள் தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளியின் சம்பளம் குறைந்தபட்சம் 12,500; அதிகபட்சம் 18,000. ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் சம்பளமோ 8,000 – லிருந்து 10,000க்குள்தான்.

 • சம்பள உயர்வு கோரி போராடுவது சட்டவிரோதமா?
 • மூன்று வருடமாக பணியாற்றி வருபவர்கள் பணி நிரந்தரம் கேட்பது அநியாயமா? தங்களை நிரந்தர தொழிலாளர்களாக பணியமர்த்த சொல்வதற்கு போராடுவது சட்டவிரோதமா?

3. கொள்ளை லாபம் ஈட்டும் கார்ப்பரேட்டுகள்

தயாரிக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ 20,000-ல் இருந்து ரூ 30,000 வரை லாபம் எடுக்கிறது கார்ப்பரேட் நிறுவனம் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

 • உற்பத்திச் செலவு ரூ 25,000-லிருந்து ரூ 30,000. நுகர்வோருக்கு விற்பனைக்கு கொடுக்கும்போது ரூ 65,000
 • உற்பத்திச் செலவு ரூ 15,000-லிருந்து ரூ 20,000. நுகர்வோருக்கு விற்பனைக்கு கொடுக்கும்போது ரூ 45,000

உற்பத்தியாகும் ஒவ்வொரு வாகனத்துக்கும் ரூ 20,000 லாபம் ஈட்டும் முதலாளித்துவ வர்க்கம் ரூ 12,000 முதல் ரூ 18,000 வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதை கொச்சைப்படுத்துகிறது.

தொழிலாளர்கள் கேட்பது நியாயமான சம்பளம். ரூ 12,000-ரூ 18,000 அதிகப்படியான சம்பளமா? புதிதாக வேலைக்கு சேரும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் இதை விடக் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்படுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம், நுகர்வோருக்கு உற்பத்திச் செலவை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலை. இவ்வாறு நுகர்வோரும் பாதிக்கப்படுகின்றனர் ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒன்று வாகனங்களின் விலையை குறைக்க வேண்டும் அல்லது தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்.

ஒரு சிறு விழுக்காடு முதலாளிகள், புரோக்கர்கள், பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபத்தை எடுத்துக்கொண்டு தொழிலாளர்களையும், நுகர்வோரையும் ஏமாற்றுகின்றனர்.

4. தொழிலாளர் போராட்டத்தை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்

ஆனால், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்து, நியாயமான சம்பளம் கொடுக்கும்படி போராடும் போது அதை புறம் தள்ளுவது அலட்சியப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது, போராட்டத்தை, போராடும் நோக்கத்தை கொச்சைப்படுத்தி பணத்திற்கு ஆசைப்படும் உழைப்பாளர்கள் என்று முத்திரை குத்துவது ஆளும் வர்க்கத்தின் நோக்கமாக உள்ளது.

ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகள் மற்றும் உதிரிக் கட்சிகள் அவற்றை சார்ந்த ஊடகங்கள் இந்தியாவில் முதன்முறையாக மூன்று நிறுவன தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து நடத்தும் போராட்டத்தை முன்மாதிரி போராட்டமாக முன்மொழிய வேண்டும்.

5. அனுபவமற்ற ஊழியர்கள் மூலம் தரமில்லாத உற்பத்தி – முதலாளிகளின் பொறுப்பின்மை

தற்போது ஆலையை, அனுபவமிக்க நிரந்தர ஊழியர்கள் இல்லாமல், நிறைவான பயிற்சின்றி காண்ட்ராக்ட் தொழிலாளர்களால் அவரசரகதியில் வேலைகளை நடத்தும்போது தரமில்லாத பொருட்கள் (YAMAHA BIKE) வெளிவருகிறது. இத்தகைய தரமின்றி உற்பத்தியாகும் யமஹா வண்டிகளால் ஏற்படும் அபாயங்களை பற்றி மேலாளர்களுக்கு எடுத்துரைத்தும் அதை பற்றி கவலைப்படாமல் தரமில்லாத பொருட்களை நுகர்வோருக்கு திணிக்கும் நோக்கம் ஏன்?

யமஹா நிர்வாகமே? ராயல் என்ஃபீல்டு நிறுவனமே?

 • உங்களின் லாபவெறி பெரிதா? நுகர்வோரின் பாதுகாப்பு பெரிதா?
 • தரமில்லாத பொருளை நுகர்வோர் பயன்படுத்தும்போது உயிருக்கு ஆபத்தான செயலில் மக்களை தள்ளுவது கார்ப்பரேட் நிர்வாகமும், அதன் லாபவெறியும், எதேச்சதிகார போக்கும்

உற்பத்திக் கோளாறுகள் கொண்ட வாகனங்களை சந்தைக்கு வெளிக்கொண்டு வந்து நுகர்வோரை விபத்து ஏற்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது குறித்து நாங்கள் கவலை அடைகிறோம். இந்த போராட்டம் முடியும் வரை தொழிலாளர்களின் கோரிக்கைகளை கார்ப்பரேட் நிர்வாகம் ஏற்கும் வரை யமஹா, ராயல் என்ஃபீல்டு வாகனங்களை புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ஐ.டி ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

6. தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு

“எனக்கு உங்களுடைய அன்பு தேவையில்லை. காரணம், அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கத்தாருடைய துன்பங்களையும் துயரங்களையும் நிலை நிறுத்த அல்ல, ஆனால் ஆளும் வர்க்கத்தாருடைய மீத மிச்சங்கூட இல்லாத ஒரு புதிய சமுதாய அமைப்பைப் படைக்கவே நான் விரும்புகிறேன். அழகும் நிறைவும் கொண்ட ஒரு வாழ்வை சுவர்க்கத்திலன்று, இந்த மாநிலத்திலேயே நிர்மாணிப்பதற்காவே நான் பணிபுரிகிறேன். எல்லாவிதமான அடக்கல், ஒடுக்கல், அடிமைத்தனங்களையும், சுரண்டல் சூறையாட்டங்களையும் இந்தப் பூமண்டலத்திலிருந்து துடைத்து எறிந்துவிட்டு, மனிதனுடைய சிறந்த இன்பத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத பெளதிகச் சூழ்நிலைகளையும், சாதனங்களையும் படைக்கவே நான் போராடுகிறேன். மனிதத் தன்மையின் மாண்புகளைக் காலடியில் தள்ளி மிதித்துத் துவைக்கும் எல்லா பிற்போக்குத் தீமைகளுக்கும் எதிரிடையான இந்த அறப்போரில் எனது பொருள்முதல்வாதமும், எனது நாத்திகவாதமும் மாபெரும் சக்தியையும், உணர்ச்சிப் பெருக்கையும் ஊட்டுகின்றன. நான் ஒரு நாத்திகன், காரணம், நான் மனிதனை நேசிக்கிறேன்.”

– நான் ஒரு நாத்திகன் என்ற நூலில் தொழிற்சங்கத் தலைவர் ஜீவா

தொழிற்சங்க போராட்டங்களின் வரலாறு கொண்டது தாம்பரம், காஞ்சிபுரம் பகுதி. இங்கு வர்க்கப் போராட்டங்கள் காலம் காலமாக தொடர்கின்றன. இன்றளவில் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உழைகும் மக்களுக்கு எண்ணத்திலும் செயலிலும் ரத்தத்தில் கலந்து போராடும் வர்க்க உணர்வு நிறைந்துள்ளது.

நாளை அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு இந்தப் போராட்டம் ஒரு விதை. இந்த மாதிரி ஒரு விதைதான் 1920-களில் சென்னை பின்னி மில் போராட்டத்திலும் நடந்தது. அது சரித்திரமாகவும் மாறியது…

இந்தப் போராட்டமும் சரித்திரப் புத்தகத்தில் இடம் பெறும்.
#boycottyamaha
#boycottroyalenfield

– காசிராஜன், துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய “ஐ.டி ஊழியர்கள் வாழ்க்கை – ஜாலியா, பிரச்சனைகளா?” என்ற நூலை வாங்கி படிக்கவும்.

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/historic-oragadam-workers-struggle/

2 comments

  • Vasuki on October 30, 2018 at 6:23 pm
  • Reply

  NDLF should organise a protest in front of yamaha corporate office.To support Yamaha employee we should print pamphlet and distribute.what is happening in oragadam many not aware.

  • kasirajan on November 1, 2018 at 12:48 am
  • Reply

  In tamilnadu, We heard of 8200+ IT suicides in last 6 years .

  Now Manufacturing industry ?

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பி.ஈ, இப்போது எம்.பி.ஏ – பல தனியார் கல்லூரிகள் எதற்கும் லாயக்கில்லை

"இந்த வருடம், பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட 1.47 லட்சம் மாணவர்களுக்கு முக்கியமான பிரிவுகளில் ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 46% (68,735) இடங்கள்...

செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன...

Close