நவம்பர் மாதம் சென்னையில் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா நடந்தது. அதில் பேசிய தோழர் பாலன் முதலாளி தொழிலாளி என்று சமூகம் இரண்டு வர்க்கமாக பிளவுண்டதிலிருந்து உலகத் தொழிலாளிகளின் போராட்டங்கள் என்ன மாதிரியான உரிமைகளை நிலைநாட்டியது என்றும் அதன் தாக்கம் இந்தியாவில் எவ்வாறு இருந்தது என்றும் பேசினார்.
1917 ரஷ்ய சோசலிச புரட்சிக்கு பிறகு விழித்தெழுந்த இந்திய தொழிலாளிகள் உலகத் தொழிலாளிகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டனர். இந்தியாவில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமை அதன்பிறகே கிடைத்தது. மேலும் உலக முதலாளிகள் கேள்வியற்ற வகையில் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்ட ரஷ்யாவின் சோசலிச அரசு தடையாக இருந்தது என்றால் நம்புவீர்களா?
ஆம், 1917 ரஷ்ய புரட்சிக்கு பிறகு ரஷ்யாவில் உழைக்கும் மக்களுக்கு இருந்த அதிகாரம் ஒரு புதிய வாழ்க்கைத் தரத்தை உருவாக்கியது. புதிய உலகத்தை படைத்தது எனலாம். அது உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை தனது துயரத்திலிருந்து மீள வழிகாட்டியது. அதன் காரணமாக தவிர்க்க முடியாமல் முதலாளிகள் சில மக்கள் நல திட்டங்களை அறிவிக்க வேண்டியதாகியது.
அந்தச் சூழலில் இந்தியாவில் நடந்த தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக 40 தொழிலாளர் நல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதுநாள்வரை சிதறுண்டு கிடந்த தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டனர். அன்றைக்கு தொழிலாளர்களது எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் இன்றைய நிலையைவிட குறைவாகவே இருந்தது. இன்றைக்கு விவசாயம், சிறு குறு தொழில்கள் அழிக்கப்பட்டு தொழிலாளிகளது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைய நமது நாட்டின் அரசியல் நிலமை என்ன? மக்களின் வாழ்க்கைத்தரம் என்ன? என்பதையும் தோழர் பாலன் விளக்கினார்.
மாருதி கார் தொழிற்சாலையில் 85% காண்டிராக்ட் தொழிலாளிகள், அரசு நிறுவனங்களிலேயே 50% காண்டிராக்ட் தொழிலாளிகள். ஆசிரியர்கள், நீதிபதிகள், டைப்பிஸ்டுகள், ஐடி ஊழியர்கள் என எங்கு திரும்பினாலும் காண்டிராக்ட் மயம். இது தொழிலாளிகளது கடந்தகால போராட்டங்களது காரணமாக கிடைத்த பல உரிமைகளை பறித்துள்ளது. ஒரே வேலை செய்பவராயினும் நிரந்தரத் தொழிலாளிக்கு ஒரு சம்பளம், காண்டிராக்ட் தொழிலாளிக்கு ஒரு சம்பளம். நிரந்தர தொழிலாளிகள் கோரிக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கப்படும். காண்டிராக்ட் தொழிலாளிகளது கோரிக்கை இல்லை மூச்சு சத்தம் கேட்டால்கூட வேலை பறிக்கப்பட்டு தெருவில் வீசப்படுவார்.
தொழிலாளிகளது உரிமை பறிக்கப்படுவதால் என்ன ஆகிறது என்பதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு நேரத்தில் பெட்ரோல் டீசல் விலை ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டாலே போராட்டங்கள் நடக்கும். இன்றோ ஒட்டு மொத்தமாக அரசு நிர்வாகம் எல்லாம் ஊழல் படிந்து ஆள தகுதியற்றிருந்தாலும் ஒன்றும் செய்யமுடியவில்லையே ஏன்?
இந்த கேள்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், தொழிலாளிகள் சங்கமாக திரண்டு அரசியல் கோரிக்கைகளை முன் வைத்து போராடாததும் ஒரு காரணம்.
1980-ம் ஆண்டு நமது நாட்டில் அமைப்புசார் துறைகளில் தொழிலாளிகள் மொத்த தொழிலாளர்களில் 20%, 1990-களில் இதுவே 15% ஆனது. இன்றைக்கு இது வெறும் 3% தான்.

போக்குவரத்து தொழிலாளிகளது போராட்டம் நடந்தது. அதன் மூலம் தங்களது எதிர்ப்பை தொழிலாளிகள் காட்ட முடிந்தது. அரசு குறைந்தபட்சம் இறங்கிவர வேண்டியிருந்தது.
தற்போது போக்குவரத்து தொழிலாளிகளது போராட்டம் நடந்தது. அதன் மூலம் தங்களது எதிர்ப்பை தொழிலாளிகள் காட்ட முடிந்தது. அரசு குறைந்தபட்சம் இறங்கிவர வேண்டியிருந்தது.
மும்பை போன்ற நகரங்களில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால் கடும் போராட்டம் நடப்பதை பார்த்திருப்போம். அங்கு லோக்கல் ரயில் பயணிகள் சங்கம் வைத்து தமது நலனுக்காக போராடுகிறார்கள்.
ஒரே இடத்தில் குவிந்தும், அமைப்பாகவும் வேலை செய்யும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உரிமைகளை பெற்றுள்ள தொழிலாளிகள் தான் இன்றைய சமூக நிலைமைகளுக்கு தீர்வை நோக்கி பெரும்பான்மை மக்களை வழிநடத்தும் வாய்ப்புக்களை பெற்றவர்கள், அதற்கான அறிவை பெறக் கூடியவர்கள். தொழிலாளிகளை பின் தொடர்ந்து விவசாயிகள், சிறு குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து சமூக மாற்றத்தை சாதிக்க முடியும்.
என்ன தான் நாம் நமது எதிர்ப்பை இணையதள, சமூக ஊடகங்களில் பதிவு செய்தாலும் அவை எதுவும் நிலைமையை பெரிதாக மாறற்றிவிடப் போவதில்லை. ஆகவே உழைப்பாளர்கள் அனைவரும் தத்தமது துறைகளில் இருக்கும் சங்கமாக இணைந்து பணியாற்றுவது அவசியமாகியிருக்கிறது.
ஏற்கனவே சங்கமாக இருக்கும் தொழிலாளிகளே!
சங்கம் என்பது நமது சுயநலத்திற்காக போராடி பெறப்பட்டதல்ல, நாட்டுமக்களது நலனும் அதில் அடங்கியுள்ளது. நாமும் வெறும் மூன்று சதவீதமாக சிறுபான்மையாக இருப்பதால் நமது கோரிக்கைகளை சமூகத்தின் நலனோடு இணைத்து பொதுமக்கள் மத்தியில் பணியாற்ற வேண்டும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளே, “நீதித்துறையை காப்பாற்றுங்கள்” என்று மக்கள் முன்தான் வந்தார்கள். நமக்குமட்டும் வேறு ஏதும் போக்கிடம் உள்ளதா என்ன?
சங்கங்களின் தலைமைகள் என்ன செய்கின்றன, என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. அந்தத் தலைமைகள் தொழிலாளிகளை ஊழல்படுத்துவதும், அரசியலற்றவர்களாக்குவதும் என்று பல அயோக்கியத்தனங்களைச் செய்து வருகின்றன. போக்குவரத்து தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபோது சங்கம் தொழிலாளிகளை திரட்டி மக்களிடம் சென்று குறைந்தபட்சம் பிரச்சாரமாவது செய்திருக்கலாம். மிகத் தாமதமாக ஓரிரு பகுதிகளில் மட்டும் செய்துள்ளனர். இறுதியில் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமலேயே அரசின் காலில் விழுந்து நீதிமன்றத்தில் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

சங்கமாக திரண்டும், திரளவும் வாய்ப்புள்ள தொழிலாளி வர்க்கம் உறுதியான, சமூக அக்கறையுள்ள, புரட்சிகர தலைமையால் வழிகாட்டப்பட்டு தம் முன் இருக்கும் மகத்தான பணியை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் தொழிலாளர் போராட்டத்தை காரணமாகச் சொல்லி அரசு பேருந்து கட்டணத்தை ஏற்றியதை எதிர்த்து போராட மறுத்தனர். விலையேற்றம் மக்களுக்கு எவ்வளவு சுமையை ஏற்றியது என்பது நாம் அறிந்ததுதான் ஆனாலும் வலுவான எதிர்ப்பை தெரிவிக்க முடியவில்லை. ஆங்காங்கு சில எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும் அவை அரசுக்கு சித்தெறும்பு கடித்த வலியைக்கூட தந்திருக்காது.
சங்கமாக திரண்டும், திரளவும் வாய்ப்புள்ள தொழிலாளி வர்க்கம் உறுதியான, சமூக அக்கறையுள்ள, புரட்சிகர தலைமையால் வழிகாட்டப்பட்டு தம் முன் இருக்கும் மகத்தான பணியை நிறைவேற்ற வேண்டும்.
இதைச் செய்யாமல் நமக்கும் விடிவில்லை, நாம் ஆசையாக தூக்கி கொஞ்சி மகிழும் நமது சந்ததியினருக்கும் வாழ்க்கையில்லை.
– பிரவீன்