கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்

This entry is part 1 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்
 • ன்றைய மாவட்ட கலெக்டர் என்ற பதவியும் அதன் அதிகாரங்களும் எப்போது தோன்றின என்று தெரியுமா?
 • காலனிய காலத்து ICS க்கும் 1947-க்குப் பிந்தைய IAS-க்கும் என்னென்ன வித்தியாசம் தெரியுமா?
 • நமது இன்றைய கல்வி முறையும், சட்டங்களும், நீதித் துறையும் எப்போது, எப்படி உருவாக்கப்பட்டன என்று தெரியுமா?
 • 1939 தேர்தல்களில் வெற்றி பெற்று பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைத்த காங்கிரசுக்கும், 1952 தேர்தல்களில் வெற்றி பெற்று மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சிக்கும் என்ன வேறுபாடு?
 • 1948-ல் இந்திய இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தது, காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்காக போரிட்ட எந்த தேசிய விடுதலைப் போராளி?

இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் விடையை இந்திய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டின் மூலமாக தேடலாம்.

1. கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் காலனிய கொள்ளை ஆட்சியின் தொடக்கம்

கிழக்கிந்திய கம்பெனியின் காலனிய ஆட்சி

மது நாட்டின் இன்றைய தேர்தல் அரசியல், அதிகார படியமைவு, நீதித்துறை, போலீஸ், ராணுவம் அடங்கிய அரசுக் கட்டமைப்பின் வரலாறு ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் இந்த நாட்டை அடிமையாக்கிய கட்டத்தில் தொடங்குகிறது.

 • இந்தியாவின் தற்போதைய அரசு, இந்திய சமுதாயத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் பழைய மன்னராட்சியை அடித்து நொறுக்கி தூக்கியெறிந்து விட்டு, அதனிடத்தில் தோன்றிய மத்தியத்துவப்படுத்தப்பட்ட அதிகார வர்க்க – இராணுவத்தைக் கொண்ட முதலாளித்துவ அரசுமல்ல;
 • காலனிய அரசு எந்திரத்தை தேசிய விடுதலைப் புரட்சியின் மூலம் அடித்து நொறுக்கித் தூக்கியெறிந்து, அதனிடத்தில் நிறுவப்பட்ட அதிகார வர்க்க – இராணுவத்தைக் கொண்ட தேசிய முதலாளித்துவ அரசுமல்ல.

மாறாக,

 • பிற ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளுடன் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி நடத்திய நாடு பிடிக்கும் போர்களிலும்,
 • அதில் ஒரு அங்கமாக சுதேச அரசுகளுக்கு இடையிலான மோதல்களில் ஆதரித்தும் எதிர்த்தும் நடத்திய போர்களிலும்,
 • நாட்டுப் பற்றுமிக்க சுதேச அரசர்களின் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களிலும்,
 • பர்மா, ஆப்கான் போன்ற அண்டை நாடுகளைக் கைப்பற்ற நடத்திய நாடு பிடிக்கும் போர்களிலும்,
 • இந்திய மக்களை அடக்கி ஒடுக்கிக் கொள்ளையிடவும், அவற்றைப் பாதுகாக்கவும்
 • அவற்றுக்கெதிராக எழுச்சியுறும் இந்திய விடுதலை இயக்கங்களை ஒடுக்கவும்

உருவாக்கி வளர்க்கப்பட்ட அரசாகும். அதாவது, இன்றைய இந்தியாவின் அரசு, மத்தியத்துவப்படுத்தப்பட்ட பல தேசிய இன, ஆங்கிலேய காலனியாதிக்க ஏகாதிபத்திய அரசின் ஒரு அங்கமாகவே தோன்றி வளர்ந்ததாகும்.

இந்தியாவை ஆங்கிலேய பங்குதாரர்களுக்காக கொள்ளையிட்ட  கிழக்கிந்திய கம்பெனி

லண்டனில் உள்ள கிழக்கிந்திய கம்பெனி இல்லம்

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வெவ்வேறு ஆங்கிலேயே வாணிபக் கழகங்கள் இந்தியாவுடன் வாணிப-வர்த்தக உறவு கொண்டிருந்தாலும், அவை அனைத்தும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்தியாவில் காலனிய ஆட்சியை நிறுவிய, இந்திய வாணிபத்தில் ஏகபோக உரிமை கொண்டாடிய ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியாக ஒன்றுபட்டன.

இந்திய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, இலஞ்ச-ஊழல்கள், கொள்ளை மற்றும் ஒட்டுண்ணித்தனத்திற்கு ஊற்றுமூலமாக விளங்கிய கிழக்கிந்திய கம்பெனியே உண்மையில் இலஞ்ச ஊழலில், மோசடித் தனத்தில் பிறந்ததாகும்.

 • இங்கிலாந்தின் அரச குடும்பத்திற்கும், அரசியல்வாதிகளுக்கும் பல பத்தாயிரம் பவுன்களை இலஞ்சமாகக் கொட்டி கம்பெனியின் அங்கீகாரத்தையும், இந்தியாவை ஆளும் ஏகபோக உரிமையையும் பெற்றது.
 • இந்த நேரடியான இலஞ்சங்களைத் தவிர மிகக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து அரசை வசீகரிப்பதன் மூலமும், எதிராளிக் கம்பெனிகளின் டைரக்டர்களை விலைக்கு வாங்குவதன் மூலமும் போட்டிக் கம்பெனிகள் கவிழ்க்கப்பட்டன.
 • இலஞ்சம் கொடுத்துப் பெற்ற அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக, அதன் ஏகபோக உரிமை காலாவதியான போதெல்லாம் மீண்டும் மீண்டும் இலஞ்சமும் புதிய சன்மானங்களை வழங்கியும், புதிய கடன்களைக் கொடுக்க முன்வந்துமே அது தனது உரிமைச் சாசனத்தை புதுப்பித்துக் கொண்டது.

கிழக்கிந்தியக் கம்பெனியில் 100 பவுனுக்குக் குறையாமல் மூலதனமிட்டுள்ள வாக்குரிமை பெற்றோரால், 2000 பவுனுக்கு மேல் மூலதனமிட்டிருப்பவர்களிடையே இருந்து ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் குழு, ஆங்கிலேயப் பண மூட்டைகளின் கிளை ஸ்தாபனமே. ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசின் உறுப்பினர்களாக இருந்து எல்லையற்ற ஏகபோக அதிகாரம் செலுத்தினர்.

கிழக்கிந்திய கம்பெனியை கட்டுப்படுத்தியது யார்?

அமெரிக்க சுதந்திரப் போர்

கிழக்கிந்திய கம்பெனியில் பங்கு கோரியும், 1776 அமெரிக்க சுதந்திர பிரகடனத்தைத் தொடர்நது  வட அமெரிக்க  காலனிய அதிகாரத்தை இழந்ததால் புதிய காலனியப் பேரரசின் தேவை எழுந்ததை ஒட்டியும், கம்பெனியின் நிதி விவகார நெருக்கடிகள் காரணமாகவும், கம்பெனியின் ஆட்சிக் குழுவின் ஏகபோக அதிகாரத்தில் தலையிட்டு ஆங்கிலேயப் பேரரசும் நாடாளுமன்றமும் பெயரளவிலான கட்டுப்பாட்டை தோற்றுவித்தன.

கம்பெனியின் ஆட்சிக் குழு மற்றும் முதலாளிகளின் நேரடி ஆட்சி அதிகாரத்தை அறவே ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியை ஆங்கிலேயப் பிரபுக்களும் அரசரும் முறியடித்தனர். அதன் விளைவாக அம்முயற்சியில் ஈடுபட்ட அமைச்சரவையைக் கவிழ்த்தனர்; கம்பெனியின் ஆட்சி உரிமையின் மீது பெயரளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தனர்.

அதாவது, ஆங்கிலேய அரசரால் நியமிக்கப்பட்ட கௌரவக் குழுவான பிரிவி கவுன்சில் அல்லது ஆணைக்குழு என்னும் அமைச்சரவையிலிருந்து ஒருவரைத் தலைவராகக் கொண்ட, மேற்பார்வையிடும் அறுவர் மேலாதிக்கக் குழுவிடம் கம்பெனியின் ஆதிபத்திய பிரதேசங்களது நிர்வாகத்தையும், இராணுவத்தையும், வரித்துறைகளையும் பற்றிய அனைத்து நடவடிக்கைகளையும், பிரச்சினைகளையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் உரிமை ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு முன்னும் பின்னும், கிழக்கிந்திய கம்பெனி காலனியாதிக்க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும், கைப்பற்றியதை இங்கிலாந்தின் பிரபுக்கள் மற்றும் மேட்டுக் குடியினர் ஆட்சிப் பொறுப்பேற்காமல் எத்துணை அதிகாரத்தைப் பெறமுடியுமோ அத்துணையையும் சுவீகரித்துக் கொள்வதற்காக, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ஆதிபத்திய உரிமை சாசனத்தை புதுப்பித்துக் கொண்டது.

இங்கிலாந்தோ உள்நாட்டில் நிலப்பிரபுக்கள் மற்றும் பணமூட்டைகளின் அரசியல் ஏகபோகத்தை உடைத்தெறிந்து தொழில் முதலாளிகள் ஆதிக்கம் பெறுவதற்கான, சீர்திருத்தத்துக்கான போராட்டங்களிலும், ஐரோப்பாவில் பிரான்சுக்கெதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தது. எனவே, உண்மையில் 19-ம் நூற்றாண்டின் மத்தியகாலம் வரை, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் குழுவின் எல்லையற்ற ஆட்சி அதிகாரமே இந்தியாவில் நீடித்தது.

ஏற்கனவே இருந்த பிரிவி கவுன்சில் அல்லது ஆணைக்குழு என்னும் மன்னர் நியமனம் பெற்ற மேலாதிக்கக் குழுவின் மேற்பார்வையின் கீழான கம்பெனியின் ஆட்சிக்குழுவின் எல்லையற்ற ஏகபோக அதிகாரத்தில், ஆங்கிலேயப் பேரரசு தனக்கே உரித்தான இரட்டை ஆட்சிமுறையைக் கொண்டு வந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் மீது ஆங்கிலேய பேரரசு அதிகாரம் செலுத்திய முறை

ஆங்கிலேய ஆட்சியாளர்கள்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி கொள்ளையிடும் பொருட்டு இந்தியாவைக் கைப்பற்றியதிலிருந்து துவங்கி டச்சு, பிரெஞ்சு தேசங்களின் வியாபாரிகளோடு நடத்திய போட்டி, தேசங்களுக்கிடையிலான போட்டியாக மாறிய போது, ஆங்கிலேய அரசாங்கம் கம்பெனியின் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. அப்பொழுது இந்தியாவின் மீதான இரட்டை ஆட்சி உண்மையாகவோ அல்லது பெயரளவிலோ தோன்றிற்று. கம்பெனியோடு ஒரு சமரச உடன்படிக்கை செய்து கொண்டு ஆணைக் குழுவின் மேற்பார்வைக்கு அதை உட்படுத்தி, இந்த ஆணைக்குழுவை அமைச்சரவையோடு சேர்த்ததன் மூலம் சூழ்நிலைகளிலிருந்து தோன்றிய இரட்டை அரசாங்கத்தை ஆங்கிலேய அரசு பெயரளவிலும், உண்மையிலும் நிறுவி முறைப்படுத்தியது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் விவகாரங்களில் பெரும் மாறுதல்களைக் கொண்டு வந்தது. வியாபார நடவடிக்கைகளை தடுத்து வியாபார ஸ்தாபனம் என்ற நிலையைக் கலைத்தது. ஆணைக்குழுவை பலப்படுத்தி கம்பெனியின் அரசியல் அந்தஸ்தை பறித்தது. கிழக்கிந்தியக் கம்பெனி தனது ஏஜெண்டுகளான சுதேச அரசர்களை எப்படி நடத்திற்றோ அவ்வாறு, முடியாட்சியின் தர்மகர்த்தாக்களாக அதுவே நடத்தப்பட்டது.

ஒருபுறம், இந்தியா சம்பந்தமான அல்லது அரசாங்கம் சம்பந்தமான உத்தரவுகளையோ, ஆணைகளையோ, அதிகாரபூர்வமான கடிதங்களையோ, கடிதத்தின் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதையோ ஆணைக் குழுவின் அனுமதி இல்லாமல் அனுப்பக் கூடாது என்று கம்பெனியின் ஆட்சிக் குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டது. மற்றொருபுறம், இவை அனைத்தும் பற்றிய எல்லா நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடவும், உத்தரவிடவும் கட்டுப்பாடு விதிக்கவும் ஆணைக்குழு அதிகாரம் பெற்றதோடு, ஆட்சிக் குழுவால் நியமிக்கப்படும் இரகசியக் குழு ஒன்றின் மூலம் ஆட்சிக் குழுவுக்கோ, கம்பெனிக்கோ தெரியாமல் இராணுவ-அரசியல் சம்பந்தப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றவும் உரிமையும் பெற்றது.

இந்த இரட்டை ஆட்சி மூலம், ஒரு புறம் ஆணைக் குழுவும் அதன் தலைவரும் பொறுப்பே இல்லாத ஆட்சிக் குழுவின் பெயரால் எந்த அரசியல்-இராணுவ நடவடிக்கைகளையும் எடுக்கலாம்; உண்மையில் நாசத்தை விளைவித்த பல போர்களை நடத்தினர்;

மற்றொருபுறம் ஆட்சிக்குழு, ஆணைக்குழுவுடன் ஒப்பிடுகையில் அதைவிட நிரந்தரத் தன்மை வாய்ந்தது என்பதால் நிர்வாகத் துறையில் தாங்களாகவே முன்முயற்சி எடுப்பதாகவும், பாரம்பரியமான விதிகள் இருப்பினும் நடைமுறை விவரங்களை அறிந்திருப்பதாலும், உண்மையான அதிகாரத்தை பெற்றிருக்கவும் செய்தனர். இந்தியாவின் கவர்னர் ஜெனரல் உட்பட உயர்ந்த அதிகாரிகளை நியமிக்கவும், விலக்கவும் எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்தனர். குறைந்த சம்பளம் பெற்றவர்களாக இருப்பினும், இந்தியாவின் மேல்தட்டிலுள்ள நிர்வாகிகள் அனைவரையும் நியமிப்பதை தனிச்சொத்துரிமையாக ஆட்சிக்குழு பெற்றிருந்ததன் மூலம், பல பத்தாயிரக்கணக்கான பவுன்களை கொள்ளையிட்டதோடு ஆட்சி அதிகாரமும் பெற்றிருந்தது.

“ஆட்சிக் குழுவின் மேற்பார்வையில் ஆணைக்குழுவின் தலைவர் இந்தியாவை சர்வநாசத்தை விளைவிக்கும் போர்களில் ஈடுபடுத்தினார்; அதே சமயத்தில் ஆணைக்குழுவின் போர்வையில் ஆட்சிக் குழுவினர் இந்திய நிர்வாகத்தை இலஞ்ச-ஊழலுக்கு இலக்காக்கினார்கள்” (மார்க்ஸ்)

இத்தாறுமாறான இரட்டை அரசாங்க அமைப்பின்கீழ் மூன்றாவது சக்தியாக, ஆணைக்குழு மற்றும் ஆட்சிக்குழு இரண்டையும் காட்டிலும் அதிகசக்தி பெற்ற, பொறுப்பற்ற, பொதுமக்களின் அபிப்பிராயத்திலிருந்து மறைக்கப்பட்ட, பொதுமக்கள் மேற்பார்வைக்கு எதிரிடையாக, கண்காணிப்பாக இருந்த, இந்திய அவையிலிருந்து ஏராளமான பொறுப்பற்ற காரியதரிசிகளும், எழுத்தர்களும், கண்காணிப்பாளர்களும் அடங்கிய நிரந்தரமான, பொறுப்பற்ற அதிகார வர்க்கமே இந்தியாவில் உண்மையான ஆட்சிக் குழுவாகவும், உள்துறை அரசாங்கமாகவும் இருந்தது. பல இலட்சம் பவுன்களை ஆண்டுக்கு ஆண்டு தின்று கொழுக்கும் அதிகார வர்க்கம்தான், இந்தியாவை உண்மையில் ஆண்டு அதன் நிர்வாகத்தைத் திணறடித்தது; நிரந்தரமாக மோசடி செய்வதற்கு முக்கிய நிபந்தனையாக அதன் மோசடிகளை நிரந்தரமாக்கியது.

(தொடரும்)

தொகுப்பு : பகத்

Series Navigationகாலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புதிய தொழிலாளி – டிசம்பர் 2016 பி.டி.எஃப்

ஜெயா சாவு: தமிழகத்தை கைப்பற்றத் துடிக்கும் பா.ஜ.க! வாய்பிளந்து நிற்கும் ஓநாய், மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளை!, செத்தவரெல்லாம் உத்தமரல்ல!, சமையல் தொழிலாளர்கள் மற்றும் பல...

பண நெருக்கடி கையை கடிக்கிறதா? காரணங்கள் ரகசியமில்லை

பொதுவாக பணப் புழக்கம் குறைவாக இருப்பதாகவும், உங்களுக்கு வரும் வருமானம் சுருங்கியிருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு காரணம் தேவையான அளவு பணத்தை வெளியிடாத மோடி அரசின்...

Close