- கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
- காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
- இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
- காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
- காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
- காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
- காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
- இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
- தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
- 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்
நாடாளுமன்ற ஆட்சிமுறையில் பிரதிநிதித்துவ அமைப்புகளில் பெரும்பான்மை பெறும் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளோ, அரசு எந்திரத்தின் கட்டமைவைப் பாதிக்காது அதன் சாராம்சத்தை ஏற்றுக்கொண்டு ஆளும் வர்க்கங்களின் அரசியல் சித்தாந்தத்தை அங்கீகரிக்கும் சமரசக் கட்சிகளோ (சி.பி.எம், தி.மு.க முதலான கட்சிகள்), தனித்தனியாகவோ, கூட்டாகவோ, அரசாங்கம் அமைக்கும் உரிமையைப் பெறுகின்றன (நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லாதபோது வேறு ஏதாவது ஒருமுறையில் அரசாங்கம் இயக்கப்படுகிறது).

நெருக்கடி நிலை காலத்தின் போது அரசு எந்திரம் முழுவதும் நீதித்துறை உட்பட இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சி, கட்டுப்பாட்டில் இருந்தது.
எனவே, அரசாங்கம் என்பது நேரடியாக உடனடி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளது, அதன் மூலம் குறுகிய காலத்துக்கு மேலாதிக்கம் செலுத்தும் ஒரு பிரிவு ஆளும் வர்க்கத்தை முழுமையாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உதாரணமாக, மோடி ஆட்சி அதானி போன்ற முதலாளிகளை அதிகமாகவும், அம்பானி தரப்பினரை குறைவாகவும் சார்ந்திருக்கலாம். மன்மோகன் சிங் ஆட்சி அம்பானி, மாறன் குழும முதலாளிகளுக்கு சாதகமாகவும், குஜராத்தி முதலாளிகளுக்கு கடுப்பேற்றும்படியும் நடந்து கொண்டிருக்கலாம்.
ஆனால், அரசு என்பது அரசாங்கத்திலிருந்து தனித்து, சுயேச்சையானதாக அதன் வடிவமைப்பிலும், தன்மையிலுமே ஆளும் வர்க்கங்கள் முழுமைக்குமானதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அரசு எந்திரத்தில் நாம் ஏற்கனவே பார்த்த ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகள், குரூப் II, III என்று வரிசையாக நியமிக்கப்படும் மத்திய மாநில அரசு அதிகாரிகள், போலீஸ், ராணுவ கட்டமைப்பு, உச்ச நீதிமன்றம் முதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் வரையிலான நீதித்துறை ஆகியவையும் அடங்கும். இந்தப் பிரிவினர் யாரும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவோ, மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்பவர்களாகவோ இருப்பதில்லை. மாறாக, மக்களை அடக்கி கட்டுப்படுத்தி வைப்பதற்கு நயமான அல்லது அடாவடியான முறைகளை பயன்படுத்தும் அமைப்பாக இருக்கின்றனர்.
நெருக்கடியான காலங்களில் அரசு எந்திரமும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் நேரடியான கட்டுப்பாட்டில் வரலாம். விதிவிலக்காக ஒரு குழு அல்லது தனி நபரின் கட்டுப்பாட்டில் வரலாம். உதராணமாக, நெருக்கடி நிலை காலத்தின் போது அரசு எந்திரம் முழுவதும் நீதித்துறை உட்பட இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சி, கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், இறுதியில் பார்க்கப் போனால் நிலவும் உற்பத்திமுறையையும் அதற்குப் பொருத்தமான மேல்கட்டுமானத்தையும், அதனால் சேவை செய்யப்படும் ஆளும் வர்க்க நலன்களையும் பாதுகாப்பதே அதன் பணி என்ற வகையில் ஆளும் வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசின் சாராம்சம் மாறிவிடுவதில்லை.

1967ல் மேற்கு வங்கத்தில் இடது சாரி கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க தொடங்கி பல்வேறு தேர்தல்களில் ஆளும் வர்க்க திட்டத்தை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட்டன.
அரசின் நிர்வாக அமைப்பின் தலைமை உறுப்பாகவும், சட்டமியற்றும் அமைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கும் அரசாங்கம் உண்மையில் ஆளும் வர்க்கங்களுக்கும், அரசுக்கும் இடையிலான ஊடகமாகவும், அதிகாரப் பங்கீட்டிற்குமான அமைப்பாகவும் மட்டுமே இருக்கிறது. சுரண்டப்படும் – ஒடுக்கப்படும் மக்களின் ஊடகமாகவோ, அதிகாரப் பங்கீடு செய்யும் அமைப்பாகவோ அரசாங்கம் இந்த சமுதாயப் பொருளாதார அரசியல் அமைப்பில் ஒரு போதும் இயங்க முடியாது. எனவே, தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்களின் நலன்களுக்கான நடவடிக்கைகளை எடுத்து விடுவோம் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகள் அனைத்தும், இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டுமென்றே மறைத்து மக்களை மோசடி செய்கின்றனர்.
புரட்சிகர மக்களது அரசியல் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் கட்சிகளும் அமைப்புகளும் இவ்வாறு இந்த உண்மையை உணராது அல்லது மறைத்து விட்டு அரசாங்கம் அமைக்க அல்லது அதில் பங்கேற்க முயற்சிக்கின்றன. அத்தகைய முயற்சிகளை சில காரணங்களால் ஆளும் வர்க்கங்களும், அரசு எந்திரமும் அனுமதிக்கலாம். உதராணமாக, 1967ல் மேற்கு வங்கத்தில் இடது சாரி கூட்டணி, தமிழகத்தில் தி.மு.க தொடங்கி பல்வேறு தேர்தல்களில் ஆளும் வர்க்க திட்டத்தை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட்டன. இத்தகைய ஆட்சி பரந்தபட்ட மக்களின் போராட்ட இயக்கங்களையும், அமைப்புகளையும் (இந்தி எதிர்ப்புப் போராட்டம், விவசாயிகள் கிளர்ச்சி போன்றவை) அரசு அமைப்பின் அங்கமாக நிறுவனமயமாக்கும், அதன்மூலம் தம் வர்க்க நலன்களை பாதுகாக்கும், மக்களது புரட்சிகர உணர்வுகளுக்கு வடிகால் வெட்டும் நடவடிக்கையாக மட்டுமே அமைகிறது.

ஆளும் வர்க்க நலன்களுக்கு விரோதமான அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் பிற சட்டமியற்றும் அமைப்புகளிலும் பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கும் சூழ்நிலைகள் தோன்றினால், அவை ஏதாவது ஒரு சாக்குப் போக்குக் கூறி கலைக்கப்படும்.
இது, இத்தகைய சொல்லிக் கொள்ளப்படும் புரட்சிகர கட்சிகள் ஆளும் வர்க்க அரசில் ஒரு அங்கமாகவும், அக்கட்சிகளின் நாடாளுமன்றப் பிரிவுகளும், மந்திரிசபைகளும் அரசியல் கட்டமைவில் ஒரு அங்கமாகவும் மாறுவதையே காட்டுகின்றது.
முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ, திரிபுவாத சமரசக் கட்சிகள் உண்மையில் ஆளும் வர்க்கங்களின் மேற்கண்ட நோக்கங்களை ஈடேற்றுவதற்கான சமுதாய அரசியல் அடிப்படைகளாகவே விளங்குகின்றன. அடிப்படையில் ஆளும் வர்க்க நலன்களுக்கு விரோதமான அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் பிற சட்டமியற்றும் அமைப்புகளிலும் பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கும் சூழ்நிலைகள் தோன்றினால், அவை ஏதாவது ஒரு சாக்குப் போக்குக் கூறி கலைக்கப்படும். உதாரணமாக, 1956-ல் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கலைக்கப்பட்டதை குறிப்பிடலாம். அல்லது, அந்த பிரதிநிதித்துவ அமைப்புகளே பலாத்காரமாகத் தூக்கியெறியப்படும்.
இதற்கு உறுதி கூறும் வகையிலேயே நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையில் அரசாங்கம் அமைக்கும் முறை வகுக்கப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சிகள் பிரதிநிதித்துவ சபைகளில் பெரும்பான்மை பெற்றிருந்தால் மட்டுமே அரசாங்கம் அமைக்கப்படும் உரிமை வழங்கப்படும் என்பது இதுவரை ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதிக்காமல் இருப்பதால் மரபாகக் கூடப் பின்பற்றப்படுகிறது.
உண்மையில், அரசாங்கம் பிரதிநிதித்துவ சபையில் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை; நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற குழுவின் தலைவர் ஆளுநரால் அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறார். அவர் தனது விருப்பப்படி அமைச்சர்களை நியமித்து ஆட்சி செய்கிறார்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட அரசாங்கம் சட்டமியற்ற மட்டுமே பிரதிநிதித்துவ சபையின் பெரும்பான்மையைப் பெற வேண்டியுள்ளது. அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம், நம்பிக்கை தீர்மானம் போன்ற நடவடிக்கை மூலம் அவையின் ஆதரவை காட்ட வேண்டியிருக்கிறது.
எனவே, சிறுபான்மை ஆளும் வர்க்க நலன்களுக்கான அரசாங்கங்களும் சில சமயங்களில் அமைவது உண்டு. நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாமலேயே 1979-ல் சரண்சிங் அரசாங்கம், 1990-ல் சந்திரசேகர் அரசாங்கம், 1990-களுக்குப் பிறகு ஆட்சி செய்த நரசிம்மராவ் அரசாங்கம், தேவ கவுடா அரசாங்கம், ஐ.கே குஜ்ரால் அரசாங்கம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இடது சாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு நடத்தப்பட்ட அரசாங்கம் என்று பல்வேறு உதாரணங்கள் இதற்கு உள்ளன. 2006 முதல் 2011 வரை சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையை பெறாமலேயே தி.மு.க ஆட்சி நடத்தியதையும் குறிப்பிடலாம்.
பிரதிநிதித்துவ சபையின் மூலமாக அல்லாது, நேரடியாக சட்டமியற்றும் அதிகாரத்தையும் அரசு நிர்வாக அமைப்பு பெற்றுள்ளது. 6 மாதம் வரை செல்லுபடியாகும் அவசர சட்டங்களை பிறப்பிக்கும் அதிகாரத்தை மோடி அரசு பரவலாக பயன்படுத்தி வருவதை நாம் கடந்த 5 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.
-
அமல்நடத்துவதோ, நிராகரிப்பதோ, காலாவதியாக்குவதோ அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத, சர்வவல்லமை பொருந்திய வன்முறைக் கருவியாகிய அரசு எந்திரமே
எல்லாவற்றிற்கும் மேலாக சட்டமியற்றும் உரிமை யாரிடமிருந்தாலும், இறுதியாகப் பார்க்கப் போனால், அமல்நடத்துவதோ, நிராகரிப்பதோ, காலாவதியாக்குவதோ அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட, தேர்ந்தெடுக்கப்படாத, சர்வவல்லமை பொருந்திய வன்முறைக் கருவியாகிய அரசு எந்திரமே. அதுவே உச்சமட்ட அதிகாரத்தை யதார்த்தமாகக் கொண்டுள்ளது.
- உண்மையில், பிரதிநிதித்துவ சபையை வழிநடத்திச் செல்வதும் அதற்காக தேர்தல் நடத்துவதுமே கூட அதிகார வர்க்க – இராணுவ அரசு எந்திரம்தான்.எனவே ஆளப்படும் வர்க்கங்கள் மட்டுமல்ல; ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான அரசியல் நெருக்கடியின்போது கூட அரசு எந்திரமே பிரதான பாத்திரமாற்றுகின்றது.
- நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையில் கூட்டாகவோ, தனியாகவோ, ஆளும் வர்க்க மற்றும் சமரசக் கட்சிகள் ஆட்சி அமைக்கின்றன. அக்கட்சியின் தலைவர்கள் தனியாகவோ (ஒரு கட்சி ஆட்சியில்) கூட்டாகவோ கொள்கை முடிவுகள் எடுக்கிறார்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் திரைமறைவு கூட்டுபேரத்தின் அடிப்படையில் ஆளும் வர்க்கங்களின் பல்வேறு பிரிவுகள்-குழுக்களின் செல்வாக்குக்கு ஆளாகும் இத்தலைவர்களின் முடிவுகளை வெறுமனே அங்கீகரிக்கும் அமைப்பாகவே பிரதிநிதித்துவ அமைப்புகள் இருக்கின்றன.
- இன்றைய அரசு பல்வேறு துறைகளிலும் தனது செயல்பாடுகளை விரிவாக்கிக் கொண்டுள்ளதால், எண்ணிறந்த தனிச்சிறப்பு மற்றும் நுட்பங்களைக் கோரும் பிரச்சனைகள் பிரதிநிதித்துவ சபையின்முன் வருகின்றன. அரசியலைத் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் இந்தப் பிரச்சனைகளில் தெளிவில்லாத பிரதிநிதிகள் மீது உண்மையில் அதிகாரவர்க்கம் ஏறிச் சவாரி செய்கிறது. நாடாளுமன்றக் கமிஷன்கள் (கமிஷன்களுக்குப் பேர் போனது இந்திய அரசு) கூடப் பிரச்சனையைத் தீர்ப்பதில்லை. கமிஷன் உறுப்பினர்களுக்கே பரிசீலனைக்கு வரும் பல பிரச்சனைகளும் முற்றும் முழுதான புரியாத புதிராக இருக்கின்றன.
நடைமுறையில் இதன் விளைவு என்னவென்றால், ஒரு சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் சட்டங்களையும், தீர்மானங்களையும் அரசு எந்திரத்தின் இணைப்புக் கண்ணிகளான ஆளும் வர்க்க நிறுவனங்களே உண்மையில் முடிவு செய்கின்றன. - தேசியப் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த பிரச்சனைகளில் மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசின் பல நடவடிக்கைகள் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து மறைக்கப்படுகின்றன.
இதன்மூலம், ஆளும் வர்க்கங்களும், ஏகாதிபத்தியங்களும் அரசு எந்திரத்தைத் தராதரமின்றி பயன்படுத்திக் கொள்ளவும் மக்கள் மீது கபடத்தனமான மோசடி செய்யவும் எல்லா வாய்ப்பு வசதிகளையும் பெற்றிருக்கின்றன.

ஆளும் வர்க்கங்களின் பல்வேறு பிரிவுகளும் கும்பல்களும் தமது பலத்திற்கேற்ப அரசியல் அதிகாரத்தைப் பங்கீடு செய்து கொள்ளவும் சமரசம் செய்து கொள்ளவுமான ஒரு அரங்கமாக நாடாளுமன்ற ஆட்சிமுறை இருக்கிறது
இவ்வளவு வரம்புகளுக்குட்பட்டிருப்பினும், ஆளப்படும் வர்க்கங்கள் தமது நலன்களுக்காக பயன்படுத்த முடியாததாக இருப்பினும், நாடாளுமன்ற ஆட்சி முறையைப் போலியானதாக மட்டும் கருத முடியாது. ஆளும் வர்க்கங்களுக்கே இரு அடிப்படைக் காரணங்களால் இது அவசியமாக இருக்கின்றது.
- ஒருபுறம், ஆளும் வர்க்கங்களின் பல்வேறு பிரிவுகளும் கும்பல்களும் தமது பலத்திற்கேற்ப அரசியல் அதிகாரத்தைப் பங்கீடு செய்து கொள்ளவும் சமரசம் செய்து கொள்ளவுமான ஒரு அரங்கமாக நாடாளுமன்ற ஆட்சிமுறை இருக்கிறது. ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு பல்வேறு காரணங்களால் முற்றி வருவதன் காரணமாக, இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. நாடாளுமன்ற ஆட்சிமுறையில் நெருக்கடி முற்றும் பொழுது கொள்கை முடிவுகள், பேரங்கள் திரைமறைவில் நடக்கின்றன.
இருப்பினும் நாடாளுமன்ற ஆட்சிமுறையையே முற்றிலும் அகற்றுவதானது, ஆளும் வர்க்கங்களின் ஒன்று அல்லது மற்றொரு பிரிவு அல்லது கும்பல் மட்டும் அரசு எந்திரத்துடன் இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கங்களுக்குள்ளாகவே தனது அந்தஸ்துக்கும் மீறிய செல்வாக்கைப் பெற வாய்ப்பேற்படுத்தும்.
எனவே, ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் நாடாளுமன்ற ஆட்சிமுறையே ஏதாவது ஒரு விதத்தில் நீட்டிக்கவே விரும்புகின்றனர். அதுவுமல்லாமல், எல்லாவற்றுக்கும் மேலாக இருந்து அதிகாரம் செலுத்தவும் ஓரளவு சுயேச்சை நிலையையும் (இது ஆளும் வர்க்கத் தன்மையை இழக்கச் செய்வது இல்லை) கொள்கை முடிவுகள் எடுப்பதில் தீர்மானகரமான பாத்திரமாற்றவும் விரும்பும் அரசியல் மற்றும் அதிகாரவர்க்க மேட்டுக்குடியினர் மீது ஆளும் வர்க்கங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வரம்பிடும் முக்கியமான வடிவங்களில் ஒன்று, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையாகும். - மற்றொருபுறம், ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசு எந்திரம் தமது அதிகாரத்துக்கான தார்மீக, சட்டபூர்வ, அதிகாரபூர்வ நியாயவுரிமை பெறவும், பரந்துபட்ட மக்களின் இயக்கங்களையும், அமைப்புகளையும் நிறுவனமயமாக்க மிகச்சிறந்த செய்முறையாகவும், ஊடகமாகவும் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருக்கிறது. ஆளும் வர்க்கங்களுக்கு மிகவும் அவசியமான சமூக அடிப்படையைத் தரவும் பரந்துபட்ட மக்களிடையே மாயையூட்டவும் உதவுகின்றன மிகச்சிறந்த வடிவம் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை தவிர, வேறெதுவுமில்லை.
நாடாளுமன்ற ஆட்சிமுறையை விலக்குவதோ, அல்லது அதன்மீதான நம்பிக்கையை இழக்க விடுவதோ ஆளப்படும் வர்க்கங்கள் சமரசக் கட்சிகள் மற்றும் சக்திகளை மட்டுமின்றி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவையும் கூட தங்களது நலன்களுக்காக சமாதானமற்ற வேறு வழிகளை மேற்கொள்ளும்படி நிர்ப்பந்தித்து அரசியல் போக்கிலேயே மாறுதலை ஏற்படுத்திவிடும். எனவேதான், ஆளும் வர்க்கங்கள், குறிப்பாக அதன் மேல்தட்டுப் பிரிவினர் முற்றிலும் தங்குதடையின்றி சாதகமாக இல்லையென்றாலும் நாடாளுமன்ற ஆட்சிமுறையை நீட்டிக்க விரும்புகின்றனர்.
ஆனால், ஆளும் வர்க்கங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், அதன் உள்முரண்பாடுகள் காரணமாகவும், பரந்துபட்ட மக்களின் புரட்சியினால் நாடாளுமன்ற ஆட்சிமுறை மட்டுமல்ல, அதை உள்ளடக்கியிருக்கும் அரசு எந்திரமே தூக்கியெறியப்படும்.