1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

This entry is part 11 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
  1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
  2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
  3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
  4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
  5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
  6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
  7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
  8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
  9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
  10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
  11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

1952-ம் ஆண்டு தேர்தலிலிருந்து 1967-ம் ஆண்டு தேர்தல்வரை மத்தியிலும் ஒரு சில விதி விலக்குகள் தவிர மாநிலங்களிலும் காங்கிரசின் ஏகபோக ஆட்சியே நீடித்தது. 1967 தேர்தல் நடந்து தமிழகம், மேற்குவங்கம் உட்பட எட்டு மாநிலங்களில் காங்கிரசு அல்லாத அமைச்சரவைகள்- பெரும்பாலும் கூட்டணி அரசாங்கங்களாக – அமைக்கப்பட்டன.

By Prince

அதன் பின்னர் ‘ஆயாராம் கயாராம்’ அரசியல்தான் மத்தியிலும் மாநிலங்களிலும் வழக்கமாக போனது. கட்சித்தாவல்களும், புதிய கட்சிகள் அமைப்பதும், இணைவதும், கூட்டணிகள் மாறுவதும், அமைச்சரவைகள் உருள்வதும், உருவாவதும் அரங்கேறின.
1977 தேர்தலில் மத்திய அரசிலும் உண்மையில் பல கட்சிகளின் கூட்டணி (ஜனதா என்ற பெயரில்) அரசாங்கம் நிறுவப்பட்டது. மாநிலங்களில் பல கட்சி ஆட்சிகள் ஏற்பட்டன. 1979-ல் அது சிதறியபோது சரண்சிங் தலைமையில் மற்றொரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் அதுவும் கவிழ்ந்தது.

1980-ல் நடந்த ஏழாவது நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தலுக்குப்பின் நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை அரசியலில் ஒரு தற்காலிக ஸ்திரத்தன்மை ஏற்பட்டது. இருப்பினும், தேர்தல் முடியும்வரை இதுவரை கண்டிராத அளவு அரசியல் ஸ்திரமின்மையும், நாடாளுமன்ற அராஜகமும் தலைவிரித்தாடின.

1989-க்குப் பிறகு 2014 வரையில் நாடாளுமன்ற பெரும்பான்மை இல்லாத கட்சிகளே பிற கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. பல்வேறு மாநில, குட்டி முதலாளித்துவ கட்சிகள் பேரம் படிவதற்கேற்ப கூட்டணியில் சேர்வதும் விலகுவதுமாக செயல்பட்டன.

ஏற்கனவே கூறியபடி ஆளும் வர்க்கங்கள் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்குள்ளே நிலவும் முரண்பாடுகள் – மோதல்கள், தேர்தல் அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு எந்திரத்தின் சன்மானங்களைப் பகிர்ந்து கொள்ளவும் போட்டியிட்டது – ஆகியவற்றால் அரசியல் விசுவாசங்களைப் பேரம் பேசுவது நடந்தது.

  • ஏற்றத் தாழ்வான வளர்ச்சியுடைய நமது நாட்டில் பல்வேறு தேசிய இனம், சாதி, மற்றும் மத அடிப்படையில் மக்கள் பிரிந்திருப்பது, பல்வேறு முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கட்சிகள் தோன்றி அவை மாநில சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மற்றும் இடம் பெற்றுத் தங்களது நலன்களுக்காகப் போராடுவது ஆகியவை தொடர்ந்து நீடிப்பதால் நாடாளுமன்ற அராஜகம் தவிர்க்க முடியாததாகிறது.
  • பல்வேறு ஆளும் வர்க்கப் பிரிவினரும் தங்களது நலன்களுக்காகவும், அரசு எந்திரத்தின் சன்மானங்களுக்காகவும் அரசியல் கட்சிகளில் தங்களது ஆதரவு கும்பல்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். குறிப்பிட்ட கட்சியில் இருப்பதன் மூலம் தமது தேவைகளைச் சாதிக்க முடியாது என்று கருதும் போது தங்களது கும்பலை வெளியேற்றச் செய்கின்றனர். அவர்கள் இன்னொரு கட்சிக்குத் தாவுகின்றனர். அல்லது தனிக்கட்சி தொடங்குகின்றனர். இவ்வாறு கட்சிகள் உடைகின்றன; புதுக்கட்சிகள் உருவாகின்றன.
  • அத்துடன் அரசியல் கட்சிகளின் தலைமையில் உள்ள நபர்கள், குறிப்பாக அரசியலையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகள் குறிப்பிட்ட கட்சியில் இருப்பதால் கிடைக்கும் (அமைச்சர், கவர்னர் பதவி, பல்வேறு வாரிய, கமிட்டி தலைமைகள் அல்லது பதவிகள், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கப் பிரிவினருக்கு சலுகைகள்) அரசு எந்திரத்தின் சன்மானங்கள் போதுமானதாக இல்லாதபோது அல்லது கிடைக்காதபோது அக்கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக் கட்சியில் சேர்வதன் மூலம் அடைய விரும்புகின்றனர். அல்லது புதுக்கட்சிகளைத் தொடங்கி அதைப் பயன்படுத்தி அரசுச் சன்மானங்களை அடைய முயலுகின்றனர்.
  • தங்களது நலன்களை சாதித்துக் கொள்ள விரும்பும் ஆளும் வர்க்கப் பிரிவினரும் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு மாற்றுக் கட்சிகளை உடைப்பற்கு இரகசிய சதிவேலைகள், லஞ்ச ஊழல்கள், உருட்டி மிரட்டுவது – ‘பிளாக் மெயில்’, வேண்டாத கட்சி ஆட்சியில் இருக்கும்போது உற்பத்தியில் அராஜகம் செய்வது, அதிகாரிகளைப் பயன்படுத்தி சீர்குலைவு செய்வது, தன்னெழுச்சியான அல்லது புதிய போராட்டங்களைத் தூண்டுவது, திருப்பி விடுவது போன்றவற்றைச் செய்கின்றனர். அவர்களுக்குள் இருக்கின்ற போட்டியும் முரண்பாடும் தீவிரமடையத் தீவிரமடைய கட்சி தாவல்களும், கட்சி உடைப்புகளும், புதிய கட்சிகள், கூட்டணிகள் உருவாவதும் உடைவதும், மந்திரி சபைகள் கவிழ்வதும் உருவாவதும் மாறிமாறி நடக்கும்.

கார்ட்டூன் – அசீம் திரிவேதி

நமது நாடு பல்வேறு தேசிய இனங்கள், மதப்பிரிவு, சாதிப்பிரிவு மக்களைக் கொண்டுள்ளது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சியுடையது. எனவே பல்வேறு பிராந்திய, சாதி, மத இனக்கட்சிகளும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளும் நிறைய இருக்கின்றன. அவை ஆங்காங்கே தங்களுக்கென்று ஒரு குறைந்தபட்ச செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் சில இடங்களைப் பிடித்துக் கொண்டு தங்கள் சொந்த நலன்களுக்காக அரசு எந்திரத்தின் சன்மானங்களுக்காகவும் மற்றும் தாங்கள் சார்ந்து நிற்கும் பிரிவு, மக்கள் பிரிவினருக்கான சலுகைகளுக்காகவும் போட்டி இடுகின்றன. இவ்வாறு பல்வேறு தேர்தல் அரசியல் கட்சிகளும் தங்களது வர்க்க, சாதி, மத, தேசிய இன நலன்களையும் தனிநபர் மற்றும் கும்பல்களின் நலன்களையும் சாதித்துக் கொள்ளவும் அரசு எந்திரத்தின் சன்மானங்களை முழுமையாகவோ பகுதியாகவோ பெறவும் போராடுவது – அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளும் போட்டியும் தீவிரமடைவதைப் பொறுத்து உக்கிரம் பெறுகிறது.

ஆட்சிக் கவிழ்ப்புகள், கட்சித் தாவல்கள், அமைச்சரவைகள் உருவாவது, புதிய கட்சிகள் உருவாவது தொடர்ந்து பெரிய அளவில் நடைபெற்று நாடாளுமன்ற அராஜகத்தின் உச்சகட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன.

1950-ம் ஆண்டுகளிலிருந்து வேகமாகப் பெருகி வந்த இந்திய அரசினுடைய நிர்வாக எந்திரம் இன்று பூதாகரமானதாக வளர்ந்து நிற்கின்றது. இந்திய இராணுவம், குறிப்பாக இந்திய-சீனப் போருக்குப் பின் இரண்டு, மூன்று மடங்கு பெருக்கப்பட்டு அண்டை நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு விரிவாக்கம் நடத்தும் எந்திரமாக வளர்க்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க போன்ற எந்த ஒரு பாசிச கும்பலும், அல்லது மோடி போன்ற தனிநபரும் கூட அரசியல் அதிகாரத்தை தம் கையில் ஏந்தி சுழற்றுமளவிற்கு அதிகார வர்க்க – இராணுவ எந்திரம் சமுதாயத்துக்கு மேல் அந்நியமானதாக, ஒட்டுண்ணியாக வளர்ந்து நிற்கிறது.

மேலும், குறிப்பாக 1969 காங்கிரசு பிளவுக்கு முன்னும், பின்னும் எழுந்த தன்னெழுச்சியான பரந்துபட்ட மக்களது போராட்டங்கள், குறிப்பாகச் சொல்வதானால் நக்சல்பாரி பேரெழுச்சியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நடந்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள், இரயில்வே தொழிலாளர் போராட்டங்கள் ஆகியவற்றை எதிர்கொண்ட இந்தியப் பிற்போக்கு அரசு அவற்றை ஒடுக்கவும் பல்வேறு விதமான அடக்குமுறைக் கருவிகளையும் அமைப்புகளையும் உருவாக்கின. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீசு, அஸ்ஸாம் ரைபிள்ஸ், தொழிற் பாதுகாப்புப் படை போன்ற துணை இராணுவப் படைகள் பெருமளவில் பெருக்கப்பட்டன. அவற்றை அமைதி காக்கும் படை என்றும் மக்களின் அன்றாட வாழ்வில் அவற்றின் தலையீடு நியாயமானதென்று மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறி எல்லா இடங்களிலும் பிரித்து நிறுத்தவும் செய்கின்றனர்.

நாளும் ஊதிப்பெருத்து வரும் இந்த அதிகார வர்க்க – இராணுவ அமைப்பு மக்கள்மீது தொடர்ந்து சுமைகளை ஏற்றி மேலும்மேலும் அதிக சதவிகித வருவாயை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, வளர்ச்சிப் பணிகள் என்று சொல்லிக் கொள்ளப்படும் அரைகுறை சீர்திருத்தச் சலுகைகள் கூட வெட்டப்படுகின்றன. உற்பத்தித்துறையில் இருந்து சுரண்டப்பட்டு கசக்கிப் பிழிந்து சக்கையாகத் தூக்கியெறியப்படும் மக்களிடமிருந்து அவர்களது உயிர் ஓம்புதலுக்கான எஞ்சிய வருவாயைக் கூட பல வரிகள் மூலம் உறிஞ்சிக் கொழுக்கும் இரண்டாவது சுரண்டல் அமைப்பாக அரசு எந்திரம் மாறி இருக்கின்றது.
அதிகார வர்க்கம், இராணுவம் மற்றும் போலீசு போன்ற அரசு எந்திரத்துக்கு அளிக்கப்படும் பயிற்சியோ மக்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதும், ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்வது என்பதும்தான். மக்கள் மத்தியிலிருந்து பிரிக்கப்பட்டு ஒதுக்குப்புறங்களில் சகலவசதிகளுமிக்க குடியிருப்புகளில் எல்லா சலுகைகளையும் இவை பெற்றுள்ளன; பரந்துபட்ட மக்களை, ‘நாகரீகமற்ற, கட்டுப்பாடற்ற அராஜக கும்பலாகவும் இழிபிறவிகளாகவும்’ கருதி நடத்தும்படி திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றனர். அவர்களது குழந்தைகளே கூட மக்களை நாகரீகமற்ற மிருகங்களாக, கேவலமான பிறவிகளாகப் பாவிக்கும்படியான கல்வியும், பயிற்சியும், நாகரீகமுமே பெறுகின்றனர். இவ்வாறு அரசு எந்திரம் மக்கள் விரோதமானதாக, தனிவகை ஜாதி அல்லது வர்க்கமாக வளர்க்கப்படுகிறது.

ஆளும் வர்க்கங்கள் சமுதாய வேலைப்பிரிவினை காரணமாக பிரித்தொதுக்கப்பட்ட அதிகார வர்க்கம் மற்றும் இராணுவம், அதன் காரணகர்த்தாக்களே விரும்பாத அளவு ஒரு தனிவகை ஜாதி அல்லது வர்க்கமாக வளர்க்கப்படுகிறது. அரசு எந்திரம் மேலும் பெருகி, இன்று நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தனது கால்களை நீட்டியிருக்கிறது. போலீசு, இராணுவம், பெரும்பகுதி அதிகார வர்க்கம் – ஆகியவை எவ்வித பயனுள்ள உற்பத்திப் பணிகளிலும் ஈடுபடாது வெறுமனே தின்று கொழுத்து வருவதால், மொத்த சமுதாயத்துக்கே வேண்டாத சதைப்பிண்டமாக வளர்ந்து வருகிறது. நாடு முழுவதும் ஒரு வலைப்பின்னலைப் போன்று, ஒரு பாசி படர்ந்து சமூகத்தின் அனைத்து உறுப்புகளையும் நெறித்துத் திணறடிக்கும் கோடிக்கால் பூதமாக மாறி இருக்கிறது. அதிகார வர்க்க – இராணுவ அமைப்பு எப்போதுமே சமுதாயத்தின் போக்குகளையும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கங்களின் நலன்களையே கூட தனது சொந்த நலன்களுக்கானதாக மட்டுமே கருதுகின்றது; அதன் விளைவாக, அது மொத்த சமுதாயத் தேவைகளையும் அறவே புறக்கணிக்கிறது. அதிகார வர்க்க – இராணுவ எந்திரத்தின் செயல்பாடுகளும், பரிமாணங்களும் விரிவடைய விரிவடைய இப்போக்குகள் அனைத்தையும் தழுவியதாக மாறுகின்றன.

புரட்சி

இந்த அதிகார வர்க்க – இராணுவ அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதைத் தவிர நமது நாட்டையும் உழைக்கும் மக்களையும் விடுவிப்பதற்கான மையமான, அடிப்படையான, சாராம்சமான பிரதானப் பணி வேறெதுவுமில்லை.

அரசியல் நிலைமை நிலையற்று போய் விடும் போது, அதாவது நாடாளுமன்ற பிரமையை பயன்படுத்தி இனிமேலும் மக்களை அடக்கி ஆள முடியாதபோது, நாட்டில் போராட்டங்கள் வெடித்துப் பெருகிக் கொண்டிருக்கும் போது, அதிகாரவர்க்க – இராணுவ சர்வாதிகாரமாக அரசு உருமாறுகிறது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க போன்ற எந்த ஒரு பாசிச கும்பலும், அல்லது மோடி போன்ற தனிநபரும் கூட அரசியல் அதிகாரத்தை தம் கையில் ஏந்தி சுழற்றுமளவிற்கு அதிகார வர்க்க – இராணுவ எந்திரம் சமுதாயத்துக்கு மேல் அந்நியமானதாக, ஒட்டுண்ணியாக வளர்ந்து நிற்கிறது.

  • கடைக்கோடி விபச்சாரத் தன்மை கொண்டதாகவும்,
  • விபச்சாரமே புகழுக்குரியதாகவும், செயற்கையான போலி பாவனைகளே வாழ்க்கையாகவும்,
  • மேல்தட்டு வர்க்கங்களுக்கே உரிய மோசமான தார்மீகமின்மையும், ஆடம்பரக் கவர்ச்சிக்கும் கீழ்த்தரமான உணர்வுகளுக்கும் பிறப்பிடமாகவும்,
  • ஒரு சில கேடுகெட்ட சூதாடிகள், கயவர்கள் அரசின் கஜானாக்களை கொள்ளையிடுவதற்கான உரிமம் வழங்குவதாகவும், அரசின் தேசிய,
  • அந்நியக் கடன்களுக்கான உலைவாயாகவும் மாறியிருக்கும்

இந்த அதிகார வர்க்க – இராணுவ அரசு எந்திரத்தை அடித்து நொறுக்கித் தூக்கி எறிவதைத் தவிர நமது நாட்டையும் உழைக்கும் மக்களையும் விடுவிப்பதற்கான மையமான, அடிப்படையான, சாராம்சமான பிரதானப் பணி வேறெதுவுமில்லை.

(நிறைந்தது)

Series Navigation<< தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-11/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தூசான் முதல் யமஹா வரை: உரிமை பறிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி!

ஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம்...

ஐ.டி – இந்தியாவின் மிகப்பெரிய காண்டிராக்ட் உழைப்புத் துறை!

வெளிப்படைத்தன்மை இல்லாத அறிவியலுக்கு எதிரான அப்ரைசல் ரேட்டிங், வரம்பற்ற வேலை நேரம், தனித்தனியான ஊதிய விகிதங்கள், வேலை அழுத்தம் என்று ஊழியர்களை உடல் ரீதியிலும், உளரீதியிலும் வதைக்கும்...

Close