காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?

This entry is part 2 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

மது லாபத்தை அதிகப்படுத்துவதற்காக போர்கள் மூலம் புதிய பிரதேசங்களை பிடிக்கவும், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வரி வசூல் கொள்ளை அடிக்கவும், இவற்றை எதிர்த்து கேட்கும் மக்களை ஒடுக்குவதற்கும் தேவையான அரசுக் கட்டமைப்பை மட்டுமே கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கி பராமரித்து வந்திருக்கிறது.

ஊழல் நிரம்பிய காலனிய ஆட்சியாளர்கள்

விவசாயத்துக்குத் தேவையான நீர்நிலைகளை பராமரிப்பது, உள்நாட்டு தொழில்களை ஊக்குவிப்பது போன்ற அடிப்படையான விஷயங்களை புறக்கணித்து இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளியது, கம்பெனி ஆட்சி.  அதன் விளைவாக தனது வரி வசூல் வருமானம் பாதிக்கப்படுகிறது என்ற நிலைமை வரும் போது மட்டுமே குறைந்த பட்சமாக இவை பற்றி சிந்திக்கத் தொடங்கியது.

கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களுக்கு ஆண்டு தோறும் அனுப்பும் லாப ஈவுத் தொகை ஒரு புறம் இருக்க, அந்தக் கணக்கில் சேராமல் கம்பெனியின் ஊழியர்களாக இந்தியாவுக்கு வந்து கலெக்டர்களாகவும், நீதிபதிகளாகவும் பணி புரிந்த ஆங்கிலேயர்கள் லஞ்ச ஊழல் மூலம் பெரும் செல்வத்தை குவித்தனர். ஒரு சில ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய பிறகு பெரும் கோடீஸ்வரர்களாக சொந்த நாடு திரும்பிய ஆங்கிலேய அதிகாரிகள் பலர்.

இந்த காலனிய கொள்ளையின் விளைவு என்ன?

 • 1700-ம் ஆண்டில் உலக மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்கு 23.1% ஆகவும், இந்தியாவின் பங்கு 22.6% ஆகவும் இருந்தது, இந்த இரண்டு நாடுகளின் மொத்த பங்கு 45.7%.
 • 1820-ம் ஆண்டில் இது சீனா 32.14%, இந்தியா 15.7% என மாறியிருந்தது. (மொத்தம் 47.84%). இந்தக் கட்டத்தில் இந்தியா ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையிடப்பட்டு வந்தது என்பதையும், சீனாவின் மீதான காலனி ஆதிக்கம் இன்னும் தொடங்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
 • 1890-ல் இந்தியா, சீனா இரண்டு நாடுகளுமே காலனிய ஆட்சியாளர்களால் கொடூரமாக சுரண்டப்பட்டு வந்த கால கட்டத்தில் சீனா 13.2%, இந்தியா 11.0% என வீழ்ச்சியடைந்தது (மொத்தம் 24.2%).
 • 1952-ல் நேரடி காலனி ஆட்சி ஒழித்துக் கட்டப்பட்ட போது சீனா 5.2%, இந்தியா 3.8% என்ற சுருங்கி போயிருந்தது (மொத்தம் 9%).

ஒப்பீட்டளவில் ஐரோப்பிய நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி வேகமாக வளர்ந்ததை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3-ல் 1 பங்கை கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் இவ்வாறு வறுமையில் தள்ளப்பட்டது ஐரோப்பிய காலனிய கொள்ளையின் விளைவுதான் என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும், இந்த காலனிய கொள்ளையின் மூலமாகத்தான் ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சியும் சாத்தியமாக்கப்பட்டது என்பதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இந்த காலனிய கொள்ளைக்காக கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் நேரடி ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் உருவாக்கிய நிர்வாகக் கட்டமைப்பு இப்போது என்ன ஆனது? 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த கொள்ளைக்கான தண்டனை என்ன? அவர்களிடமிருந்து என்ன நிவாரணம் பெறப்பட்டது?

2016-ல் உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 2.99% ஆகவும், சீனாவின் பங்கு 15.1% ஆகவும் உள்ளது. இந்திய துரைகளின் 60 ஆண்டுகால ஆட்சி ஆங்கிலேய துரைகளின் கீழான காலனிய பொருளாதார நிலைமையை எந்த விதத்திலும் மாற்றி விடவில்லை என்று தெரிகிறது.

காலனிய கொள்ளைக்கான நிவாரணம் எதையும் பெறாமலேயே, 1757 முதல் உருவாக்கப்பட்ட அதிகார கட்டமைப்பு, நீதி முறை, போலீசு, இராணுவம் ஆகியவற்றை அப்படியே வைத்துக் கொண்டு இப்போது நடைபெறும் ஆட்சியை எப்படி பார்ப்பது? அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள், அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள், நீதித்துறையில் நீதி கிடைக்க மாட்டேன் என்கிறது, போலீசு மக்களை தாக்குகிறது என்றால், இதற்கான அடிப்படை இந்த கட்டமைப்பின் மரபணுவிலேயே இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2. கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு

17-ம் நூற்றாண்டில் இந்தியாவுடன் வணிக மற்றும் வர்த்தகத் தொடர்பு கொண்ட அனைத்து ஐரோப்பியக் கம்பெனிகளிலும் மிக முக்கியமானதாக விளங்கிய, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆரம்பத்தில் வணிகம் மற்றும் வர்த்தகத்தில் மட்டுமே அக்கறையுடையதாக செயல்பட்டது. பின்னர் தமது தரகர்களுக்கு ஆலைகளை அமைக்கவும், தமது சரக்குகளுக்கு இருப்பிடங்களை ஏற்படுத்தவும் முயன்றது; அவற்றைப் பாதுகாக்க பல கோட்டைகளைக் கட்டியது.

கடனுக்குத் தவணையாகவும், வட்டியாகவும், இலாபமாகவும் கிட்டத்தட்ட 14 சதவீதத்தை இங்கிலாந்துக்கு அனுப்பியது. இராணுவம் மட்டும் 3-ல் 2 பங்கை ஏப்பமிட்டது. இவை தவிர கணக்கில் வராமல் கம்பெனியும் அதன் அதிகாரிகளும் கொள்ளை அடித்தது கோடி கோடியாகும்.

ஆனால், இந்தியாவில் தனது நலனை நிரந்தரமாகப் பாதுகாக்கவும், மற்ற ஐரோப்பிய கம்பெனிகளுடன் போட்டியிடுவதற்காகவும் படிப்படியாக அரசியல்-இராணுவ நடவடிக்கைகளி்ல் ஈடுபட்டது. இந்தியாவில் ஓர் அரசை அமைக்க வேண்டும் என்றும், அதன் வரிவசூலைத் தன் வருமான வகைகளில் ஒன்றாகக் கொள்ள வேண்டும் என்றும் 1687-இலேயே கம்பெனி கருதியது.

கம்பெனியின் இயக்குநர்கள் சென்னையிலுள்ள அதன் முக்கியப் பிரதிநிதிக்கு எழுதிய கடிதத்தில் “ஒரு கட்டுக் கோப்பான சிவில் மற்றும் இராணுவ அதிகாரத்தை நிறுவி இரண்டையும் பராமரிக்கத் தேவைப்படும் வருமானத்தை உறுதிப்படுத்த வேண்டும். நீண்ட காலத்துக்கு ஆங்கிலேயர் ஆதிக்கத்தை உறுதி செய்வதற்கான அடித்தளமாக இது இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தனர். (ஆர்.சி மஜூம்தாரும் மற்றவர்களும் எழுதிய “இந்தியாவின் நவீனகால வரலாறு” என்ற நூல்).

19-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் பெரும்பகுதி ஆங்கிலேயே-இந்தியப் பேரரசின் நேரடி காலனியாதிக்கத்தின் கீழ் வந்தது. எஞ்சிய பகுதிகள் சுதேசி சமஸ்தானங்கள் என்ற பெயரில் பல வகைகளில் ஆங்கிலேய மேலாதிக்கத்துக்கு உட்பட்டவையாய் இருந்தன.

1857 வரை, ஆங்கிலேய – இந்தியப் பகுதி அனைத்தையும் கட்டுப்படுத்துபவராக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் குழு நியமிக்கும் கவர்னர் ஜெனரலும், அது மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர்களும், அவை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்களும் அதிகாரம் செலுத்தினர்.

சுதேச சமஸ்தானங்களை பொறுத்தவரையில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியின் நேரடி மேற்பார்வையின் கீழ், பெயரளவுக்கு சுதேச அரசர்கள் ஆண்டனர்.

ஆரம்பத்தில் வரிவசூலிப்பதற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே நிலவி வந்த நிர்வாகமுறைகளிலேயே தமது நலன்களுக்கு தேவையான சில மாறுதல்களைச் செய்து கொண்டனர்.
குறிப்பாக, ஹேஸ்டிங்சும், காரன்வாலிசும் 18-ம் நூற்றாண்டின் இறுதியில் சில நிர்வாக முறைகளைக் கொண்டு வந்தனர். ஆனால், அவை பழைய முறைகளையே காலனியாதிக்கவாதிகளின் நலன்களுக்கேற்றவாறு சீர்திருத்துவதாகவும் மேற்பார்வையிடுவதாகவும் இருந்தன.

கிழக்கிந்தியக் கம்பெனியின் கணக்குப்படியே இந்திய வருமானத்தில் 2.5 சதவீதமே பொதுத்துறைப் பணிக்குச் செலவிடப்பட்டது. மற்றவை அனைத்தும் கிழக்கிந்தியக் கம்பெனியும் அதன் அரசு எந்திரமுமே விழுங்கின. கடனுக்குத் தவணையாகவும், வட்டியாகவும், இலாபமாகவும் கிட்டத்தட்ட 14 சதவீதத்தை இங்கிலாந்துக்கு அனுப்பியது. இராணுவம் மட்டும் 3-ல் 2 பங்கை ஏப்பமிட்டது.

இவை தவிர கணக்கில் வராமல் கம்பெனியும் அதன் அதிகாரிகளும் கொள்ளை அடித்தது கோடி கோடியாகும்.

வருவாய்த்துறை, போலீசு, நிர்வாகம்

 • விவசாயத்துக்குத் தேவையான நீர்நிலைகளை பராமரிப்பது, உள்நாட்டு தொழில்களை ஊக்குவிப்பது போன்ற அடிப்படையான விஷயங்களை புறக்கணித்து இந்திய பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளியது, கம்பெனி ஆட்சி.

  நிலவுடைமை உறவுகளில் ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகளைத் திணித்து, வரி வசூலிக்கும் முறையில் மாவட்டக் கலெக்டர்களை மேலதிகாரிகளாகவும், கீழே, ஜமீன்தார்கள், தாலுக்தார்கள், சவுத்ரிகளையும் நியமித்தனர்.

 • மாவட்டக் கலெக்டர்களாகவும், நிர்வாக நீதிபதிகளாகவும் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளின் மேற்பார்வையில்தான், ஆரம்பத்தில், ஜமீன்தார், தாலுக்தார், சவுத்ரிகள் இன்னும் பிற நிலஉடைமையாளர்களிடம் சட்டம்-ஒழுங்கு மற்றும் போலீசு நிர்வாகத்தை ஒப்படைத்தனர்.
 • ஆங்கிலேயே போலீசு மேலதிகாரிகளைக் கொண்ட போலீசு நிலையங்களை (தானாக்களை) கட்டுமாறு நிலவுடைமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
 • ஆங்கிலேய போலீசு மேலதிகாரிகளும், நிலவுடைமையாளர்களும் நீதி-நிர்வாகத்தையும் முறைகேடாக கையிலெடுத்து இலஞ்ச-ஊழலில் மூழ்கித் திளைத்தனர்.
 • பின்னர், மாவட்டக் கலெக்டர்களின் கீழ் ஆங்கிலேய மேலதிகாரிகள், தரோகாக்கள் என்னும் கீழதிகாரிகள், பர்சண்டாசுகள் என்னும் போலீசுக் காரர்கள், அதன்கீழ் கிராமத் தோட்டி, தலையாரி – என்ற அமைப்பை நிறுவி நிலவுடைமையாளர்களை சட்டம் – ஒழுங்கு, போலீசு நிர்வாகத்திலிருந்து பிரித்தனர்.
 • போலீசு என்னும் தனிவகைப் படையை 19-ம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவினர். அப்பொழுதுதான் முதன்முறையாக ‘ஒருமுறையான போலீசுப் படையை தனிவகையினதாக, சுயதேவை பூர்த்தியுடைய அமைப்பாக’க் கட்டி அமைத்தனர். அதுவரை வரிவசூலிக்கும் நிர்வாகத்தின் தொங்குசதையாக சட்டம்-ஒழுங்கு, போலீசு, நிர்வாகம் இருந்தது. வரி வசூலிக்கும் அதிகாரிகள், ஒரு கடமையாகவே சட்டம்-ஒழுங்கு, போலீசை நிர்வகிப்பதாக இருந்தது.

சட்டங்கள், நீதித்துறை

தமது லாபத்தை அதிகப்படுத்துவதற்காக போர்கள் மூலம் புதிய பிரதேசங்களை பிடிக்கவும், ஏற்கனவே தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வரி வசூல் கொள்ளை அடிக்கவும், இவற்றை எதிர்த்து கேட்கும் மக்களை ஒடுக்குவதற்கும் தேவையான அரசுக் கட்டமைப்பை மட்டுமே கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கி பராமரித்து வந்திருக்கிறது.

ஏற்கனவே நிலவி வந்த இந்து மற்றும் முஸ்லீம் மதச் சட்டத்திற்கு உட்பட்ட நீதி – நிர்வாகத் துறையிலேயே, குறிப்பாக மொகலாயர்களின் சாதர் நிஸாமத் அதாலத் என்னும் உயர் கிரிமினல் நீதிமன்றம், சாதர் திவானி அதாலத் என்னும் உயர் சிவில் நீதிமன்றம், நிசாம் அதாலத், திவானி அதாலத், ஃபவுஜ்தாரி எனும் – முறையே மாவட்ட, வட்ட நீதிமன்றங்களும் அதன்கீழ் நிலவுடைமையாளர்களி்ன பஞ்சாயத்து முறைகளும் நீடித்தன. அவற்றை மேற்பார்வையிட ஆங்கிலேய மேலாளர்களை மட்டும் நியமித்தனர்.

இந்து-முஸ்லீம் சமயச் சட்டங்களுக்கு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்திய பேரரரசு நேரடி ஆட்சிமுறையை மேற்கொள்ளும்வரை முறையான சட்டங்கள் நிறைவேற்றப்படவேயில்லை.

மாவட்டங்களைப் பொறுத்தவரை மாவட்ட கலெக்டர்களே சிவில் நீதிபதிகளாகவும், சட்ட-ஒழுங்கு நிர்வாக அதிகாரிகளாகவும், வரி வசூலிக்கும் அதிகாரிகளாகவும் இருந்தனர்.

கிராமங்களைப் பொறுத்தவரை மணியக்காரர்களே சட்டம்-ஒழுங்கு குற்றங்களைக் கவனிக்கும் போது போலீசு அதிகாரிகளாகவும், சிறு வழக்குகளை விசாரிக்கும் போது நீதித்துறை அதிகாரிகளாகவும், அரசாங்க அதிகாரிகளுக்கு உதவும் போது வருவாய்த்துறை அதிகாரிகளாகவும், பொது நிர்வாகப் பணிகளைச் செய்யும் நிர்வாக அதிகாரிகளாகவும் இருந்தனர்.

இராணுவம்

இத்துடன் காலனியாதிக்கவாதிகள் நாடு பிடிக்கும் போர்களை நடத்தவும், தமது நலன்களைக் கட்டிக் காக்கவும் ஆங்கிலேய அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட 2 இலட்சம் சுதேசி இராணுவ வீரர்களையும், அவர்களைக் கண்காணிக்க 40,000 ஆங்கிலேயர்களையும் கொண்ட இரு படைகளைக் கொண்டிருந்தன.

ஆங்கிலேயே இராணுவ அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட, இந்தியாவின் செலவில் பராமரிக்கப்பட்ட சுதேசி இராணுவத்தைக் கொண்டே நாடு பிடிக்கும் போர்களை நடத்தினார்கள்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்ளையிடும் வருவாய் போதாத போது, எஞ்சியிருந்த சுதேசி அரசுகளை தாக்கிக் கைப்பற்றவும், பர்மா போன்ற அண்டை பிரதேசங்களைக் கைப்பற்றவும் நடத்திய போர்களின் மூலமாக இந்த இராணுவம் பெருகியது. இந்தியாவில் கிடைத்த வருமானத்தில் 3-ல் 2 பகுதி இராணுவத்திற்காக செலவிடப்பட்டது.

இனி தமது பிரதேசத்தை விரிவாக்க வேண்டியதில்லை, அதை பாதுகாக்கத்தான் வேண்டியிருந்தது என்ற நிலை வந்தபோது, சிப்பாய்களாக இருந்தவர்களை போலீஸ்காரர்களாக மாற்றி இந்திய மக்கள் இதுவரையிலும் பெற்றிராத ஒரு பொதுவான எதிர்ப்பு மையத்தை முதல் தடவையாக உருவாக்கிற்று.

(தொடரும்)

தொகுப்பு : பகத்

Series Navigation<< கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
புதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்: ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்! இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்! சுயசார்பு இந்தியா:...

Jamsetji Tata
தொடக்கம் முதலே முதலாளித்துவம் மனிதகுல விரோதியே – அமிதவ் கோஷ்

"பிரபலமான யேல் பல்கலைக் கழகமும், இன்றைய சிங்கப்பூரும் , ஹாங்காங்கும் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தவிர்த்து செழித்து வளர்ந்திருக்கவே முடியாது."

Close