இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது

This entry is part 3 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

காலனிய எஜமானர்கள்

ங்கிலேய காலனிய ஆட்சி, இந்திய சமூகத்தை சீர்குலைத்து,  பொருளாதார உயிரோட்டத்தை உறிஞ்சி, மிகப் பெரும்பான்மையான மக்களை பொருளாதார முன்னேற்றத்திலிருந்து விலக்கி வைத்தது. ஆனால், பெரும்பான்மை விவசாயிகள், தொழிலாளர்களை கொள்ளை அடிப்பதற்கும் ஒடுக்குவதற்கும் கோட்டு சூட்டு போட்ட ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமான அரசு அதிகாரிகள் கூட்டத்தையும், அவர்கள் மூலம் நடத்தப்படும் காலனிய ஆட்சிக்கு திரை போட்டு மூடுவதற்கான தேர்தல்களில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் கூட்டத்தையும் உருவாக்கியது. அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் மேல் மட்டத்திலிருந்து கிராம அளவு வரையில் படிநிலையாக உருவாக்கப்பட்டனர்.

19-ம் நூற்றாண்டிலிருந்து இந்திய சமுதாயத்தின் அரசியல் மற்றும் சமுதாயக் கட்டுமானத்தில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய ஆங்கிலேயக் கல்வி முறை இந்தியாவில் புகுத்தப்பட்டது.  இது அடுத்த 100 ஆண்டுகளில் அவர்கள் உருவாக்கி விட்டுப் போன பல கட்சி ஆட்சிமுறைக்கும், காங்கிரஸ் முதலான தேசிய இயக்கத்துக்கும், துரோகத்தனமான தலைவர்களைக் கொடுத்தது.

அதைப் பற்றி அவர்களே கூறியது என்ன? “இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களான, உணர்வாலும் கருத்தாலும், தார்மீக உணர்வாலும் சிந்தனைப் போக்குகளாலும் ஆங்கிலேயர்களான நபர்களைக் கொண்ட ஒரு வர்க்கத்தை” உருவாக்கினர்.

19-ம் நூற்றாண்டின் முதல்பாதி வரை இராணுவம், சிவில் துறை உயர் பதவிகளில் சுதேச மக்களை திட்டமிட்டே ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால்,  முதல் இந்திய சுதந்திரப் போருக்குப் பின்  புதிய தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புதிய வர்க்கத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள். அதாவது,  வருவாய்த் துறை, சட்டம்-ஒழுங்கு, போலீசு, நீதித் துறைகளில் ஆங்கிலேயர்களின் மேற்பார்வையில் ஏற்கனவே இருந்த நிலவுடைமை அமைப்புகளைச் சார்ந்து நிற்பது இனியும் போதாது என்பதை காலனிய ஆட்சியாளர்கள் உணர்ந்தனர்.  முழுமையான நவீன பாணியில், முதலாளித்துவ முறையிலான காலனிய அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக இவற்றை வளர்ப்பதற்கான அவசியத்தை உணர்ந்தனர். அதற்கான அரசியல் – கோட்பாடு ரீதியிலான தயாரிப்புகளைச் செய்திருந்தனர்.

“இந்தியப் பேரரசை இழந்தால் இங்கிலாந்து அழிந்துவிடும், எனவே அதனைக் காப்பாற்ற முயல்கிறோம். அந்த முயற்சியில் நமது நிதிநிலை அழிவை நெருங்குகிறது” என்று கூறினர்.  அதாவது, இந்தியாவை நேரடியாக ஆள்வதும்,  நேரடி ஆட்சியை விட்டுச் சென்ற பிறகும் தமது நலன்களை உறுதி செய்வதும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ஏனென்றால், உலகின் எல்லா காலனிய, அரைக்காலனிய நாடுகளிலும் முக்கியமானதாகவும், அன்னிய மூலதனத்திற்கு தேவையான ஆலை உற்பத்தியில் முன்னோடியாகவும் இந்தியா விளங்கியது. அதற்கேற்றவாறு உலகின் எல்லா காலனி நாடுகளையும் விட, மிகவும் நவீனமான, திறன்வாய்ந்த, வளர்ச்சியடைந்த, மத்தியத்துவப்படுத்தப்பட்ட முதலாளித்துவ முறையிலான காலனிய அரசைக் கட்டியமைத்தனர், காலனிய ஆட்சியாளர்கள்.

முதலாளித்துவ முறையிலான நிர்வாக அதிகார வர்க்கத்தையும், இராணுவம், போலீசு, நீதித்துறை, சிறை போன்ற வன்முறை எந்திரங்களையும், அதற்கே உரித்தான முறையில் மேலிருந்து கீழ்வரை கிரமமான (hierarchial) வேலைப்பிரிவினை உடையதாகவும், மிகவும் நவீனமயமான, நிபுணத்துவமும், திறனும் வாய்ந்த, திட்டமிட்டு நெறிப்படுத்தப்பட்ட, மத்தியப்படுத்தப்பட்டதாகவும் கட்டியமைக்கப்பட்டது, இந்தியக் காலனிய அரசு.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்காலத்தில்

 • ஆங்கிலேய அதிகாரிகளைக் கொண்ட அரசாங்கமும், ஆங்கிலேய நாடாளுமன்றமுமே அரசியல் சட்டமியற்றும் உரிமை பெற்றிருந்தன.
 • ஆங்கிலேய அதிகாரிகளின் கீழ் சுதேசி இராணுவம், அதை கண்காணித்து கட்டுப்படுத்த தனி ஆங்கிலேய இராணுவம்
 • ஆங்கிலேய நீதிபதிகள், ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட ஆங்கிலேய நீதிமுறை, சட்டம்
 • ஆங்கிலேய அதிகாரிகளின் கீழ் சிறை மற்றும் சிவில் நிர்வாக உயர் பதவிகள்
 • ஆங்கிலேயர்களின் பிடியில் ஆங்கிலேயக் கல்வி, கலாச்சாரம்

என அனைத்தும் ஆங்கிலேயமயமானதாக, பெருமளவு வரம்புக்குட்பட்டு இருந்தன.

காலனிய ஒடுக்குமுறை

முதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின், மற்றொரு மாபெரும் எழுச்சிக்கு வாய்ப்பு இல்லாமல் உறுதி செய்ய  பின்வரும் மாற்றங்களை புகுத்தினர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.

 • இந்தியக் காலனிய அரசின் இராணுவத்தில் சுதேசி வீரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் விகிதாச்சாரம் கவனமாகப் பராமரிக்கப்பட்டது;
 • இந்தியர்கள் நிர்வாகத்தின் உயர்பதவிகளுக்குக் கீழேயும், கொள்கை-முடிவுகள் எடுக்கும் அரசு நிறுவனங்களுக்கு வெளியேயும் வைக்கப்பட்டார்கள்.
 • இந்திய இராணுவத்தை, காலனிய சமுதாயத்தின் சமுதாயப்படிவத்துக்கு பொருந்தும்படி ஜாதி, மத, பிராந்திய மற்றும் தேசியஇன அடிப்படையில் பிரித்து மறுஒழுங்கமைப்பு செய்தனர்.
 • இரு உலகப் போர்களில் ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளுக்காக அந்நிய மண்ணில் போரிட இந்தியக் காலனிய இராணுவத்தைப் பெருக்கினர்.
 • ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களது அடிவருடிகளும் இன்னும்கூட பெருமையாகப் பீற்றிக் கொள்ளும் இந்திய சிவில் சர்வீஸ் துறையினர்தான், காலனிய அரசினுடைய அதிகாரத்தின் மேல் தட்டாகவும், ஆங்கிலேயே நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும் அமைந்தனர்; மிகக்கவனமாக பொறுக்கியெடுக்கப்பட்டு, மிகக் கேந்திரமான உயர்பதவிகளில் பொறுப்பேற்றிருந்தனர்.
 • இந்திய சிவில் துறை என்னும் அதிகாரவர்க்க தலைமைப்பிரிவில் ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவாகவே தொடங்கிய இந்தியர்கள், அதிகார மாற்றத்தின்போது ஆயிரக்கணக்கில் உயர்ந்ததோடு, அரசின் அதிகார வர்க்கத்துக்கு வாரிசுரிமை அளித்தார்கள்.
 • இதுதவிர, ஆங்கிலேய அதிகாரிகளின்கீழ் பல பத்தாயிரக்கணக்கான இந்திய அதிகார வர்க்கத்தினரை ஆங்கிலேய பாணியில் பயிற்றுவித்து காலனிய அரசின் நிர்வாகத்துறைகளை பல்கிப் பெருக்கினர்.

இந்திய துணைக்கண்டத்தை ஆங்கிலேய இந்தியா என்று 3-ல் 2 பகுதியையும், மற்ற பகுதிகளை 532 சுதேச மன்னர்களின் சமஸ்தானங்களாகவும் பிரித்து அரசியல் நிர்வாகம் செலுத்தினர், ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள். சுதேச மன்னர்களின் பெயர்களில் அங்கும் ஆங்கிலேய பிரதிநிதிகளே அனைத்து அதிகாரங்களையும் செலுத்தினர்.

ஆங்கிலேய-இந்தியப் பகுதி பதினொரு மாநிலங்களாகவும், அவை நிர்வாக மாவட்டங்கள், வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டன. கேந்திரமான நிர்வாகப் பிரிவான ஒவ்வொரு மாவட்டமும் இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் சர்வவல்லமை பொருந்திய காட்டாட்சியின் கீழ் இருந்தன.

இந்திய காலனிய ஆட்சியின் பதவிகளை சன்மானங்களாகக் கருதி பங்கு போட்டுக் கொள்வதற்கான போட்டி ஆங்கிலேயர்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்தியர்கள் மத்தியிலும் நிலவியது. இலஞ்ச-ஊழல், வகுப்புவாத அடிப்படையிலான கேடுகெட்ட இப்பதவிகளைப் பெறுவதையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதையும் நடுத்தர மற்றும் மேல்தட்டு அரசியல்வாதிகள் துரோகமாகக் கருதவில்லை.

உண்மையில் காலனிய அரசின் செல்வங்களை, அந்தஸ்துகளை, பட்டம் பதவிகளை பெறுவதற்கே சில அரசியல் இயக்கங்களும் நடத்தி ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் ரோமானிய கொள்கைக்கு நன்றிக்கடன் ஆற்றியவர்களும் உண்டு.

பிரித்தாளும் கொள்கை

தமது காலனிய ஆட்சியை நியாயப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் பல வாதங்களை முன் வைத்தனர்; பல உத்திகளை கையாண்டனர்.

இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது, தாமே முன்னேறிய நாகரிகம் அறிந்தவர்கள், ஆளத்தகுதியுடையவர் என்றனர்.

பாலஸ்தீனத்தில் அரேபியர்களுக்கு எதிராக யூதர்களையும், மலேசியாவில் மலேசியர்களுக்கு எதிராக சீனர்களையும், இலங்கையில் சிங்களர்களுக்கெதிராக தமிழர்களையும் மோதவிட்டு கையாண்ட பிரித்தாளும் கொள்கையையே இந்தியாவிலும் பின்பற்றினர்.

ஏகாதிபத்தியவாதிகளின் பிரித்தாளும் கொள்கையும், சூழ்ச்சிகளும் ஓரளவுக்கு பலனளிக்கவே செய்திருக்கின்றன. வகுப்புவாத அமைப்புகள் வலுப்பெற்று தேசிய விடுதலை இயக்கத்தைப் பிளவுபடுத்தி சீர்குலைத்தன.

முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களையும், பார்ப்பனர்களுக்கெதிராக பார்ப்பனரல்லாத மேல்சாதியினரையும், நாகர்களுக்கு எதிராக அஸ்ஸாமியர்களையும் மோதவிட்டு அதாவது ஒரு தேசிய இனம், ஜாதி, பழங்குடியினருக்கு அல்லது மதத்தினருக்கெதிராக, மற்றொன்றை மோதவிட்டு ஜாதி, மதம், இனம், பழங்குடிப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட எல்லாவற்றுக்கும் மேலான, நியாயபூர்வமான, சட்டபூர்வமான பொது அரசு அதிகாரம் செலுத்துவதற்கு உரிமை கொண்டாடினார்கள். ஆங்கிலேயர்கள்தான் உலகிலேயே சட்ட ஒழுங்குநெறி பிறழாதவர்களாம்.

இதை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு வகுப்புவாரி முன்னுரிமையைப் புகுத்தினர்.

காலனி ஆட்சியாளர்களின் இந்த பிரித்தாளும் கொள்கை இறுதியில், இந்திய துணைக்கண்டத்தில் பாகிஸ்தான், இந்தியா என்று இரு பகைமையான நாடுகளைத் தோற்றுவித்தது. இன்றும் மதவெறி, தேசிவெறி மூலம் மக்கள் இயக்கங்களைப் பிளவுபடுத்தி சீர்குலைத்துத் திசைதிருப்பும் போக்குகள் நிலைகொண்டுள்ளன.

இந்தப் பித்தலாட்டங்கள் எல்லாம் பொங்கி எழும் விடுதலை இயக்கத்தினால் தூள்தூளானபோது, இந்தியர்களை சுயாட்சிக்குப் பயிற்றுவிப்பதாகக் கூறி இரட்டை ஆட்சிமுறை, இந்தியர்களுக்கு ஆட்சியில் பிரதிநிதித்துவம் என்று தமது சுரண்டல் ஆட்சிக்கு திரை போட்டு மூடினார்கள். உலகப் போர்களின் போது இந்தியாவைக் காப்பது என்ற பெயரில் பொது அதிகாரம் செலுத்த அதிகாரபூர்வ, சட்டபூர்வ நியாயவுரிமை கொண்டாடினர்.

அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகளின் காலனிய அரசு அவசரச் சட்டங்கள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பலாத்கார எந்திரம் ஆகியவற்றால் ஆயுதபாணியாக்கப்பட்டிருந்தது. மற்றொருபுறம் காலனிய அரசு மற்றும் அரசாங்கத்தில் வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலான முன்னுரிமை மற்றும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

கிராமப்புறங்களில் பழைய முறையிலான சட்டபூர்வமான, பொது அதிகார நியாயவுரிமையை நிலவுடைமை   ஆதிக்க வர்க்கத்தினர் இழந்தாலும் பழைய சாதிய உறவுகள் நீடித்தன. மேலும், வர்க்கப் போராட்டங்களில் பரந்துபட்ட மக்கள் அமைப்பு ரீதியாக திரண்டு தமது உரிமைகளை நிலைநாட்டாததால், உள்ளூர் சாதி சமூக அடிப்படையிலான அதிகார அமைப்புகள் நீடிக்கவே செய்தன. இந்த அதிகாரத்தாலும், பொருளாதார பலத்தாலும் காலனிய அரசிலும் அரசாங்கத்திலும் பெரு நிலவுடைமையாளர்களும், ஆதிக்க சாதியினரும் முன்னுரிமையும், பிரதிநிதித்துவமும் பெற்றனர்.

(தொடரும்)

தொகுப்பு : பகத்

Series Navigation<< காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்

மூலதனத்தை எதிர்க்கும் போது உழைப்பு யாரை எதிர்க்கிறது' என்ற கேள்விக்கான விடை கூறுவது எப்போதுமே கடினமாகவே இருந்திருக்கிறது. இது இப்போது இன்னும் சிக்கலாக மாறியிருக்கிறது. நாம் 'மூலதனம்'...

வாட்ஸ்ஆப் குழுவில் அடாவடி செய்பவர்களை எப்படி கையாள்வது? – ஒரு அனுபவம்

நான் பேசுவதற்கு முன்னும் பலரும் அவரது அரசியல் மொக்கையையும், அறுவையையும் கண்டித்த பிறகும், நிராகரித்த பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தனது மேலிடத்து தொடர்புகள் மூலம்,...

Close