காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்

This entry is part 5 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

நவீன இந்திய அரசின் வரலாறு – 5

முதல் இந்திய சுதந்திரப் போருக்குப்பின் குவிக்கப்பட்ட ஆங்கிலேய நிர்வாக எந்திரத்துக்கான செலவும், வடமேற்கு எல்லையில் கோமாளித்தனமான போர், பர்மாவுடனான போர் என இராணுவ சாகசச் செலவுகளும் ஊதிப் பெருகின. விலைவாசி உயர்வு படிப்படியாக அதிகரிக்க அதிகாரவர்க்க எந்திரம் கூடுதலான நிர்வாகச் செலவுகளைக் கோரியது.

1885 - முதல் இந்திய தேசிய காங்கிரஸ்

1885 – முதல் இந்திய தேசிய காங்கிரஸ் (உள்ளூர், கிராம மட்டத்திலிருந்து மாநில, மத்திய மட்டம் வரை தரகு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் அடங்கிய ஆங்கிலேய ஏகாதிபத்திய அடிவருடிகளின் அரசியல் கூடாரமாக வளர்ந்தது காங்கிரசு கட்சி.)

ஏற்கனவே, நிலவரி, உப்பு, அபினி போன்றவற்றின் மீதான வரிகள், பத்திரவரிகள் என்று எல்லா வாய்ப்புகளையும் அதிகபட்ச அளவு சுரண்டிய பிறகும் போதாமல் வருவாயைப் பெருக்க வேண்டியிருந்தது. அவற்றை சமாளிப்பதற்காக மாநில அரசுகளுக்கு கூடுதலான சுயாட்சி, குறிப்பாக வரவு-செலவுத் துறைகளில் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில நிர்வாகம் கீழ்மட்டங்களை நெருக்கிப் பிடிப்பது தொடங்கியது.

இதன் பொருள், வருவாய்த்துறையின் கீழ்மட்டக் கிளைகளை உள்ளூர் நிலவுடைமையாளர்களின் சேற்றிலிருந்து விடுவித்து மத்திய செயலகம் என்னும் புதைகுழியிடம் ஒப்படைப்பதாகியது. பிறகு, மேலிருந்து தொடங்கி கீழ்மட்டம் வரை உள்ளூர் மட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் பதில், பயிற்றுவிக்கப்பட்ட மாநிலக் கட்டுப்பாட்டின் பிடியிலுள்ள வருவாய்த் துறை துறை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதிகாரமயமாக்கும் இந்தப் போக்கு 19-ம் நூற்றாண்டில் பல துணைக் கலெக்டர்களை நியமிப்பதிலிருந்து தொடங்கி, மாநில வருவாய்த் சேர்ந்த பல தாசில்தார்களை நியமிப்பதாக மாறியது. உள்ளூர் நிலவுடைமையாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிராம அதிகாரிகளின் அதிகாரத்திலும் ஊடுருவியது; அவர்கள் விருப்பம் போல நிதியை கிராமத்துக்குள்ளேயே செலவு செய்வதைத் தடுத்ததோடு, அவர்களுக்கு கீழ் வேலையாட்களைக் குறைத்தது. கீழ்மட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுமுறைகளை அறிமுகப்படுத்தி, விரும்பினால் அவர்களை பணி நீக்கம் செய்யும் அதிகாரத்தை மேலதிகாரிகள் பெற்றனர்.

போலீசிலும், நீதித்துறையிலும், பிற அரசு துறைகளிலும் இம்மாதிரியான சீர்திருத்தங்கள் மூலம் நிர்வாகம் மத்தியத்துவப்படுத்தப்பட்டது. அரசினுடைய செயல்பாடுகளின் பரிமாணத்தை இது அதிகரித்தது. இதன் விளைவாக, ஆங்கிலேய அரசு தனது சொந்த ஒட்டுண்ணித்தனம் வாய்ந்த உறுப்புகள் மீது கூடுதலான கட்டுப்பாட்டை செலுத்தியதோடு, கிராம மட்டம் வரை உள்ளூர் விவகாரங்களில் தலையிடவும் செய்தது. இவ்வாறு மையப்படுத்தப்பட்ட நவீன முதலாளித்துவ அரசுக்கான தன்மைகளைப் பெறத் துவங்கியது.

இதைத் தொடர்ந்து உள்ளூர் ஆட்சியமைப்புகள் மூலம் பல்வேறு புள்ளிவிபரங்களை மத்திய அரசுக்கு சேகரிப்பது துவங்கியது; தொழில், பயிரிடுதல், விவசாயம், நீர்ப்பாசனம், கூட்டுறவு சங்கங்கள், தொழிற்சாலைகள், கூட்டுக் கம்பெனிகள் பற்றி புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் தேவையான புதிய மாறுதல்களுக்கும், வரி விதிப்புக்கும் திட்டமிடுதல் செய்யப்பட்டது.

காங்கிரசு கூட்டத்தில் உரையாற்றும் பாலகங்காதர திலகர்

1907 – காங்கிரசு கூட்டத்தில் உரையாற்றும் பாலகங்காதர திலகர் (காங்கிரஸ் பிரதானமாக இந்துக்களின் அமைப்பாக – இந்து மதத்தைத் திரும்ப நிலைநாட்டுவதே தேசிய உணர்வென்று கூறி பல மாநிலங்களில் செயல்பட்டது )

விவசாயம், தொழிற்சாலை, மீன்பிடித்தல், புள்ளிவிபரம், பொதுப்பணித்துறை ஆகியவற்றின் செயலகங்களும், வனத்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்று நிர்வாகத் துறைகளும் உருவாக்கப்பட்டன. அவற்றுடன் அதிகார வர்க்கத்தின் எண்ணிக்கை பெருகியது.

மத்திய, மாநிலத் தலைநகர்களுக்கு வெளியே மாவட்டங்களிலும் இந்தியர்களைக் கொண்ட அதிகாரகள் அல்லாத வாரியங்களும், ஆட்சி மன்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. அவை வனத்துறை, போலீசு, நீர்ப்பாசனம், மராமத்து, சுங்கம், வருமான வரி போன்ற துறைகளில் அரசு நிர்வாகத்துக்கு ஆலோசனை கூறவும் அரசின் திட்டங்களை அமல்படுத்தவதில் ஒத்துழைப்பு வழங்கவும் செய்தன.

இவ்வாறு உள்ளூராட்சி அதிகார அமைப்புகளில் காலனிய ஆட்சியின் சமூக அடிப்படைகளான நிலவுடைமையாளர்கள், லேவாதேவிக்காரர்கள், பெருவியாபாரிகளை பங்கேற்க வைத்து பயிற்றுவிப்பதன் மூலம் தமது நலன்களுக்கான நிரந்தர அடிவருடிகளை உருவாக்கியது, ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு. அரசு ஊதியம் பெறும் அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்க அடிவருடிகளும் அக்கம் பக்கமாக இருந்து முடிவுகளை எடுப்பதும், செயல்படுவதும் காலனிய அரசுக்கு ஆட்சியதிகார நியாயவுரிமை வழங்குவதாக இருந்தது.

இந்தியச் சமுதாயத்தின் மீது பெருமளவு தாக்கத்தையும், ஊடுருவலையும் இவை ஏற்படுத்தின. அதற்கு முன்பு முன்பெல்லாம் கிராமப்புறங்களுக்கு வருவாய்த்துறை அல்லது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருடத்துக்கு ஒருமுறைதான் வந்து போவார்கள். மேலே விவரிக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்புகள் மூலமும், ஆலோசனைக் குழுக்கள் மூலமும், புதிய துறைகள் மூலமும், மேலும் மத்தியத்துவப்படுத்தப்பட்ட நிர்வாகம் மூலமும் காலனிய அரசு குடிநீர் வினியோகம், கிராமப்பாதை போன்ற சாதாரண விவகாரங்களில் கூட தலையிடத் தொடங்கியது.

அரசு அதன் பல்வேறு நிறுவனங்கள் மூலம் சர்வ வல்லமை பொருந்தியதாகவும், நிரந்தரமானதாகவும், அனைத்தும் தழுவியதாகவும் மாறியது. கூடுதலான மூலாதாரங்கள் அரசு எந்திரத்தின் மூலம் பரவலாக்கப்பட்டதோடு, இன்னும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தமது அன்றாட வாழ்வில் அரசு துறைகளுடன் தொடர்பு கொள்வது அவசியமாக்கப்பட்டது.
அரசு மக்களையும் மூலாதாரங்களையும் கட்டுப்படுத்துவது மேலும் மேலும் பிரும்மாண்டமாக வளரத் தொடங்கியது. அதிகார வர்க்கம் பரவலானதாகவும், நெருக்கமானதாகவும், இறுக்கமானதாகவும் வளர வளர, அதிகாரத்தின் உண்மையான இருப்பிடமாக இருந்த உள்ளூர், மாவட்ட மையங்கள் மாநிலத் தலைநகர்களுக்கும் அவற்றின் மூலம் மத்திய அரசின் தலைநகருக்கும் மாறியது. மிகச் சிறியதாகவும், துகள்களாகவும் இருந்த பல்வேறு உள்ளூர் – மாவட்டப் பகுதிகளை உறுதியான பாணியில் ஒன்றிணைத்து, மாநில மற்றும் மத்தியத் தலைநகர்களை மையமாகக் கொண்ட புதிய அரசியல் அலகுகள் உருவாக்கப்பட்டன.

காந்தி, பட்டேல், மவுலானா ஆசாத்

காந்தி, பட்டேல், மவுலானா ஆசாத் (காங்கிரஸ் காலனிய அரசின் ஆட்சிமுறை சட்டங்களுக்கு கட்டுப்பட்டதாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கங்களையும், அமைப்புகளையும் காலனிய அரசின் ஒரு பகுதியாக நிறுவனமயமாக்கும் போக்கை பின்பற்றுவதாகவும் செயல்பட்டது)

மாநில தலைநகர்களிலும் மத்திய தலைநகரிலும் அரசு நிறுவனங்கள் புதிய அதிகார மையங்களாக மாறின. சான்றாக, அரசுப் பணித் துறைகளுக்கு தேர்வு செய்யும் முறை, பயிற்சிமுறை ஆகியவை கல்வித் தகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததன் விளைவாக, கல்வி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் முக்கியத்துவம் பெற்றன. வருவாய்த்துறை கட்டுப்பாட்டை கலெக்டர்களிடமிருந்து தலைமைச் செயலகத்துக்கு மாற்றி மையப்படுத்தியது அதிகார பதவிகளை நாடியவர்களுக்கு மாநில தலைநகர்களை கவர்ச்சியான இடங்களாக மாற்றின. மாவட்ட, மாநில மத்திய அளவில் நிர்வாகத்தின் மேல்மட்டத்திலும், கீழ்மட்டத்திலும் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டது அதிகாரத்துக்கும் செல்வாக்குக்குமான புதிய போட்டிகளுக்கு வழிவகுத்தன.

இந்திய சிவில் சர்வீஸ், மாநில சிவில் சர்வீஸ், கல்வி, நீதித்துறைகளில் அதிகாரிகள் என அதிகார வர்க்கமாகவும், சட்டப் பேரவைகள், உள்ளூராட்சி, வாரியம், ஆலோசனைக் குழுக்கள், அமைச்சரவை, பல்கலைக் கழக ஆட்சிக்குழு என அரசியல்வாதிகளாகவும் ஏகாதிபத்திய அடிவருடிகள் மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் வகையில் அரசு எந்திரத்துக்குள் நுழைந்தனர்.

ஒருபுறம் மாநில, மத்திய நிறுவனங்களும் அதிகார வர்க்கமும், உள்ளூர் ஆட்சியை நோக்கியும், மாவட்டங்கள் மீது படையெடுப்பதாகவும், மற்றொருபுறம் உள்ளூர்களிலும், மாவட்ட மையங்களிலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்காக மத்திய, மாநிலத் தலைமைகளை நோக்கி ஓட வேண்டிய நிலையும் காரணமாக 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உள்ளூர் அரசியல்வாதிகள், மாநில, மத்தியத் தலைநகர்களுக்கு மூட்டை கட்டினர். அவர்களது உள்ளூர் நலன்களுக்கு உதவும் பொருட்டு அதிகாரத்தின் குவிமையத்துக்கு நெருக்கமாகச் சென்றனர். இது மாநிலங்களின், நாட்டின் அரசியல் வாழ்வையே மாற்றியமைத்தது.

இவ்வாறாக ஏகாதிபத்தியங்களுக்கும், அவர்களால் கொள்ளையிடப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த பரந்துபட்ட மக்களுக்கும் இடையே உள்ளூர் அரசியல்வாதிகளும், கீழ்மட்ட இந்திய அதிகாரிகளும் உருவாக்கப்பட்டனர்.  இது பொங்கியெழும் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்தும் பரந்துபட்ட மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளிலிருந்தும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு கவசமளிப்பதாக அமைந்தது.

மத்திய, மாநில அளவில் தமது அரசியல் செல்வாக்கைப் பரப்பிக் கொள்வதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளித்தது.

முதலில் உள்ளூராட்சி, வாரியங்கள், ஆலோசனைக் குழுக்கள் ஆகியவை நிலவுடைமை அடிப்படையிலான அமைப்புகளுக்கு மாறாக நிர்வாக அமைப்புகளாக அமைக்கப்பட்டன. பழைய அதிகார அமைப்புகளை விடக் கூடுதலான அதிகாரமும், செல்வாக்கும் உடையவையாக இவை விளங்குவதையும், அவற்றைக் கைப்பற்ற வேண்டிதன் அவசியத்தையும் கிராமப்புற, நகர்ப்புற உள்ளூர் ஆளும் வர்க்கங்கள் விரைவில் உணர்ந்து கொண்டனர். அதுவரை கைப்பற்றியிருந்த உள்ளூர் பஞ்சாயத்து அடிப்படையிலான, பரம்பரை வழி வந்த அதிகாரத்துக்குப் புதிய காலனிய ஆட்சி அமைப்புகளில் நுழைய முற்பட்டனர். அவர்கள் முன்பு அதிகாரம் செலுத்திய பகுதிகளை விட, இப்புதிய உறுப்புகள் அதிக பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தின. எனவே, இவை புதிய, மேலும் கவர்ச்சிகரமான, செல்வாக்குக்கான வாய்ப்புடையனவாக, உள்ளூர் பெரிய தனக்காரர்களின் உயர்ந்த ‘சன்மானங்களாக’ விளங்கின.

நகர்ப்புற-உள்ளூராட்சி அமைப்புகளில், நகரின் சொத்துக்களையும், செல்வங்களையும் கட்டுப்படுத்துபவர்களாக, பிரதானமாக அலுவலர் மற்றும் வியாபாரத் துறைகளைச் சேர்ந்த ஆளும் வர்க்க அடிவருடிகள் புகுந்தனர். கிராமப் புற வாரியங்களில் ஆரம்பத்தில் வழக்கறிஞர்களும், பிற பழைய அலுவலர்களும், அதிகாரிகளும் அதிகார வர்க்கத்துடன் பேரம்பேச தகுதி வாய்ந்தவர்களாகக் கருதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், நிலவுடைமை அதிகார வர்க்கத்துக்கு புதிய நிறுவனங்களை இயக்கும் திறமை இன்மையும் பரந்து விரிந்த பகுதிகளைக் கட்டுப்படுத்தும் அனுபவக் குறைவும் கூடுதல் காரணமாக இருந்தது.

இருப்பினும், வாக்குரிமை நிலவுடைமை அடிப்படையில் இருந்தாலும், புதிய அரசு உறுப்புகளில் அதிகாரமும் செல்வாக்கும் பெறக் கூடிய அறிந்ததும், கிராமப்புற உள்ளூர் செல்வாக்குமிக்க நிலவுடைமை வர்க்கங்கள், பழைய முறையிலின்றி, உள்ளூராட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆலோசனைக் குழுக்களின் தலைவர்கள் – உறுப்பினர்கள் என்ற முறையில் தங்கள் பகுதிகளில் பெருமளவிலான செல்வாக்கு பெற்று மக்கள் மீது புதிய வகையில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். முதலாளித்துவத்துக்கு முந்தைய சமுதாயத்தின் மிகவும் உயிராதாரமான மூலாதாரங்களை கட்டுப்படுத்தியவர்கள் புதிய நிர்வாகக் கட்டுமானத்திலும் அதிகார நிலையை அடைந்தனர்.

புதிய நிர்வாக இயந்திரம், நிறுவனங்கள் மற்றும் ஆட்சிமுறை ஈடிணையற்ற போட்டியாளர்களை கவர்ந்தது. அவை சமுதாயத்தின் செல்வங்களையும், மூலாதாரங்களையும் கட்டுப்படுத்தும் நிலவுடைமை சக்திகள், அதிகார வர்க்கத்தினர், தரகு முதலாளிகள், வியாபாரிகள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரின் கசப்பான, கோமாளித்தனமான போட்டிகளின் குவிமையமாகின. அரசியல் பேராசை, அரசியல் விசுவாசம் ஆகியவற்றின் குவிமையம் என்கிற முறையில் அரசியல் அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் குவியற் கிடங்குகளாயின. அதிகாரபுரிகளின் நுழைவாயிலில் நந்தியாக நிற்கும் ஆளும்வர்க்க அடிவருடிகளாக இந்த அரசியல்வாதிகள் அசைக்க முடியாதவர்களாக இருந்தனர். காலனிய அரசு ‘பதவி’ என்னும் சன்மானங்களை பகிர்ந்து கொள்வதற்காக நாய்ச்சண்டைகள் நடந்தன. புதுத் தொழில்கள், வரிகள், வர்த்தகச் சலுகைகள் வேண்டி நகர்ப்புற தரகு முதலாளிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டனர். கிராமப்புற அதிகாரம், செல்வாக்கு, நீர்ப்பாசன வசதி, மராமத்துப் பணி, அரசு ஒப்பந்தங்கள் இவற்றைப் பெற கிராமப் புற ஆளும் வர்க்கங்களும்; அரசு உயர் பதவிகளையும், கீழ்மட்ட அலுவல பதவிகளையும் பெற நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களும் போட்டி போட்டன.

காலனிய அரசு, உள்ளூர் நிர்வாகத்தை மாவட்ட நிர்வாகத்தோடும், மாநில நிர்வாகத்தோடும் இறுதியில் மத்திய நிர்வாகத்தோடும் இணைத்தது. உள்ளூர் ஆளும் வர்க்க அரசியல்வாதிகளுக்கு உள்ளூராட்சி வாரியங்களும் ஆலோசனைக் குழுக்களும், மாநில மத்திய அரசியலில் குதிக்க உந்துபலகையாக அமைந்தன.

இந்தச் சூழலில்தான் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய தேசிய காங்கிரசு தோன்றியது. ஏற்கனவே கூறப்பட்ட காலனிய ஆட்சியாளர்களின் நோக்கங்களோடு, பல்வேறு மாநிலங்களின் சில அரசாங்க விவகாரங்கள் அனைத்திந்திய மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதும், உள்ளூர் அரசியல்வாதிகள் அத்தீர்மானங்கள் மீது செல்வாக்குப் பெற வேண்டுமானால் ஒரு அனைத்திந்திய அமைப்பின் தேவையையும் காங்கிரசு நிறைவு செய்தது.

1920-களிலும், 1930-களிலும் உள்ளூர் அளவில் காங்கிரஸ் பரவியது இந்திய காலனிய சமுதாயத்தின் அரசியல் அமைப்புகளும் அரசியல் போக்குகளும் மாநில, மத்திய அளவில் வளர்ந்ததைக் குறிக்கிறது.

எனவேதான், 1930-களில் உள்ளூர் ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் தம் தேவைகளுக்கேற்ப கிராம, உள்ளூர் மட்டத்தில் காங்கிரஸ் கிளைகளை கட்டியமைத்தனர். இவ்வாறு உள்ளூர், கிராம மட்டத்திலிருந்து மாநில, மத்திய மட்டம் வரை தரகு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் அடங்கிய ஆங்கிலேய ஏகாதிபத்திய அடிவருடிகளின் அரசியல் கூடாரமாக வளர்ந்தது காங்கிரசு கட்சி.

எனவே அக்கட்சி காலனிய அரசின் ஆட்சிமுறை சட்டங்களுக்கு கட்டுப்பட்டதாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலை இயக்கங்களையும், அமைப்புகளையும் காலனிய அரசின் ஒரு பகுதியாக நிறுவனமயமாக்கும் போக்கை பின்பற்றுவதாகவும் செயல்பட்டது. பரந்துபட்ட மக்களை அதன் மலட்டுத்தனமான சமரச சரணடைவுப் பாதையில் இட்டுச் சென்றது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரசு, ஜாதி, மத அடிப்படையிலான அமைப்பாகவே விளங்கியது.

பிரதானமாக இந்துக்களின் அமைப்பாக – இந்து மதத்தைத் திரும்ப நிலைநாட்டுவதே தேசிய உணர்வென்று கூறி பல மாநிலங்களில் செயல்பட்டதால், வெறுப்புற்ற முஸ்லீம் மக்களை திசைதிருப்பி வேறொரு ஆளும் வர்க்க அடிவருடிகளின் கூடாரமாக முஸ்லீம் லீக் வளர்ந்தது. இந்த இரு அரசியல் கட்சிகளின் பித்தலாட்டமும், பேரம் பேசுதலுமே இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குச் சற்றுமுன்னும் பின்னுமான காலகட்டங்களின் அரசியலாக ஏகாதிபத்தியவாதிகளால் அங்கீகரிக்கப்பட்டது.

இவ்விரு கட்சிகள் தவிர, பெரும்பாலும் சட்ட வரம்புக்குட்பட்ட போராட்டங்களை வழிநடத்திய காங்கிரசின் சொல்லிக் கொண்ட முற்போக்கு வாதிகளுக்கு வால்பிடித்த திரிபுவாதத் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சியும், இன்னும் பிற தேசிய விடுதலை அமைப்புகளும், நடுத்தர, மேல்தட்டு வர்க்க பிராந்திய அடிப்படையிலான கட்சிகளும் தோன்றி வளர்ந்தன. எப்படி காலனிய அதிகார வர்க்கம் 1947-க்குப் பிறகும் தொடர்ந்ததோ, அதே போல இந்த காலனிய ஆட்சிக்கு கட்டுப்பட்டு சேவை செய்த கட்சிகள் எதிர்காலத்தில் பலகட்சி முறைக்கு அடித்தளம் அமைத்தன.

(தொடரும்)

தொகுப்பு : பகத்

Series Navigation<< காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-5/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்

"ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க"

விவசாயத்தை பாதுகாப்போம்! உழவர்களை பாதுகாப்போம்! தமிழகத்தை பாதுகாப்போம்! – கருத்துப்படம்

படைப்பு : சரண் கிருஷ்ணா

Close