காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்

This entry is part 6 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

லகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் தேர்தல் நடக்கிறது, பெருவாரியான மக்கள் தமது ஜனநாயக உரிமையை பிரயோகிக்கிறார்கள் என்றெல்லாம் போற்றி புகழப்படும் இன்றைய நமது ஜனநாயகத்தின் தோற்றம் என்ன? யார் அதை ஆரம்பித்து வைத்தார்கள், அது எப்படி வளர்ந்தது, முதல் தேர்தல் எப்போது எந்த அடிப்படையில் நடந்தது?

படியுங்கள்.

1857-க்கு முன்

முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்பு சட்டமியற்றும் அதிகாரத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் தன் வசம் வைத்திருந்த கவர்னர் ஜெனரலுக்கு ஆலோசனைக் குழு ஒன்று இருந்தது. 1853-ல் இந்த ஆலோசனைக் குழுவுக்கு மேலும் அறுவர் நியமிக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் இந்திய விவகாரங்கள் மீது அதிகாரம் செலுத்துவதாக ஆணைக்குழுவின் தலைவர் இருந்தார்.

1857-க்குப் பின் மாற்றங்கள்

முதல் சுதந்திரப் போருக்குப் பின் ஆங்கிலேயப் பேரரசுக்கும் ஆங்கிலேய நாடாளுமன்றத்துக்கும் பொறுப்பான இந்தியாவுக்கான அரசுச் செயலர் என்ற அமைச்சரிடம் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

மின்டோ பிரபு

மின்டோ பிரபு

1861-ல் கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவும் மாநில கவர்னர்களின் ஆலோசனைக் குழுக்களும் விரிவுபடுத்தப்பட்டு சட்டமியற்றும் உரிமையுடன் கூடிய சட்டமன்ற கவுன்சிலாக மாற்றப்பட்டன. ஆனால், அந்த கவுன்சில்கள் எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னர் ஜெனரலுக்கு இருந்தது. அதற்கும் மேலே ஆங்கிலேயப் பேரரசுக்கும் ஆங்கிலேய நாடாளுமன்றத்துக்கும் இந்தியாவில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் ரத்து செய்ய பொது அதிகாரம் இருந்தது. எனவே, இந்த சட்டமன்ற கவுன்சிலாக மாறிய ஆலோசனைக் குழு உண்மையில் எந்த அதிகாரமும் இல்லாத டம்மி பீஸ்தான்.

இந்த சட்டமன்ற கவுன்சிலிலும் ஆங்கிலேயர்கள் மட்டுமே அதுவும் காலனிய ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டனர். இச்சட்டமன்றக் கவுன்சிலே, ‘இந்தியாவின் நாடாளுமன்ற முறைக்கான சிறிதான துவக்கம்’ என்றனர், ஏகாதிபத்தியவாதிகள்.

ஓராண்டுக்குப் பின் முதன்முறையாக அதிகாரபூர்வமற்றவர்களாக மூன்று இந்தியர்களை இந்த கவுன்சிலுக்கு நியமித்தனர்.

1882-ல் உள்ளாட்சித் துறை சீர்திருத்தங்கள்

நாடு முழுவதும் நிர்வாகச் சீர்குலைவு, பொருளாதார நெருக்கடி, பல்வேறு வரிக்கொடுமைகள் – ஆகியவை காரணமாக வன்முறைப் போராட்டங்கள், குறிப்பாக விவசாயிகளின் எழுச்சிகள் வெடித்தன. எதிர்வரும் தேசிய எழுச்சிக்கான சக்திகளை திசைதிருப்ப இந்திய தேசிய காங்கிரசைத் தொடங்கியதாக ஆங்கிலேயர்களே ஒப்புக் கொள்ளும் கிளர்ச்சிகரமான சூழ்நிலை காரணமாக, 1882-ல் உள்ளாட்சித்துறை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.

கல்கத்தா, பம்பாய், சில மத்திய, வடமேற்கு மாகாண நகரங்களில் மட்டும் இருந்த உள்ளூராட்சி அமைப்புகளை விரிவாக்கி நாடு முழுவதும் அமல்படுத்தினர். மாவட்ட, வட்ட அளவிலும், நகர, கிராமப் புறங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட வாரியம் (ஜில்லா போர்டு), வட்ட வாரியம் (தாலுக்கா போர்டு) போன்ற உள்ளூர் வாரியங்களை நிறுவினர். இருப்பினும், வட்ட வாரியங்கள், மாவட்ட வாரியங்களின் மேற்பார்வையிலும், மாவட்ட வாரியம் கலெக்டர் கட்டுப்பாட்டிலும் இருந்தன. வட்ட அளவிலான வாரியங்கள், உண்மையில் ஏகாதிபத்தியவாதிகள் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு கமிஷன் அதையே சிபாரிசு செய்தது.

உள்ளாட்சி அமைப்புகள், கிராம சுயாட்சி என்று இன்று சொல்லப்படுபவற்றின் அடிப்படை இங்கிருந்து தொடங்குகிறது.

மத்திய, மாநில சட்ட மன்ற கவுன்சில்களின் விரிவாக்கம்

1892-ல் மத்திய சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை விரிவாக்கி, கல்கத்தா தொழில் மற்றும் வர்த்தக கழகத்தின் சிபாரிசின் பேரில் அதிகாரிகளில்லாத உறுப்பினர்களை நியமிப்பது என்று கொண்டு வந்தனர். மாநில சட்டமன்ற கவுன்சில்களுக்கும் அதே போல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கினர்; அந்தந்த மாநில தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்களின் சிபாரிசின் பேரில் நியமனம் மூலமும், நகராட்சிகளிலிருந்து தேர்தல் மூலமும், அதிகாரிகளல்லாத உறுப்பினர்கள் இடம்பெறும் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தனர்; மேலும், சட்டமன்றக் கவுன்சில்களின் அதிகாரத்தைக் கூடுதலாக்கினர்.

புரட்சிகர கதர் கட்சி

புரட்சிகர கதர் கட்சி

காலனியாதிக்க எதிர்ப்பு எழுச்சிகளும், நிர்வாக, ஆட்சி சீர்திருத்தங்களும்

1909-ல் இருபெரும் ஆயுதம் தாங்கிய பயங்கரவாத நடவடிக்கைகள் அடங்கிய தேசிய விடுதலை இயக்க எழுச்சிகளில் ஒன்றின் விளைவாக மிண்டோ -மார்லி சீர்திருத்தங்களை அமல்படுத்தினர்.

புரட்சிகரமான கேதார் கட்சியின் தலைவர் லாலா ஹர்தயாள், இதைப் பின்வருமாறு மிகச் சரியாகவே கூறினார். “… கொடுங்கோலர்கள் முன்னோக்கிப் பார்த்தார்கள். ஒரு புதிய யுகம் தொடங்கி விட்டதை உணர்ந்து கொண்டார்கள். ‘சீர்திருத்தங்கள்’, ‘சலுகைகள்’ அளிப்பதன் மூலம் மக்களை சமரசப்படுத்த முடிவு செய்தனர். ‘படித்த’ ஒட்டுண்ணிகளுக்குப் பதவிகளை உருவாக்கினார்கள்; கவுன்சில்களை விரிவாக்கினார்கள்; பேராசை பிடித்த அரசியல்வாதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஆதாயங்களை விரிவாக்கினர். நாய்களிடையே ஒரு எலும்புத்துண்டை வீசுவதன் மூலம் அவற்றை ஓயச் செய்வது போன்று, இந்தப் பயனற்ற ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் மிதவாதிகளை அரசாங்கத்தின் பக்கம் திரட்டிக் கொள்ள வேலை செய்தனர்.”

ஏற்கனவே இருந்த சென்னை, பம்பாய் மாநில நிர்வாகக் கவுன்சில்களை பிரிக்கவும், பெரிய மாநிலங்களுக்காக புதிய நிர்வாக கவுன்சில்களை அமைக்கவும் கவர்னர் ஜெனரல் உரிமை பெற்றார். சட்டமன்ற கவுன்சில்களில் – அதிகாரிகள், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் ஆகிய மூன்றுவகை உறுப்பினர்கள் இருந்தனர். கொண்டவை.

மத்திய சட்டமன்றக் கவுன்சிலுக்கு நிலவுடைமையாளர்கள், பம்பாய் – வங்க தொழில் மற்றும் வர்த்தகக் கழகங்கள், முஸ்லீம் தொகுதிகள் ஆகியோரை வாக்காளர்களாக அனுமதித்து, பொது, வர்க்கம், சிறப்பானவை என்ற மூன்றுவகை வாக்காளர்களைக் கொண்ட வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலான தேர்தல் முறையைப் புகுத்தினர்.

வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலான தேர்தல் முறையை 1909-ல்தான் முதன்முறையாகப் புகுத்தினர். மறைமுகத் தேர்தல் முறையான இச்சீர்திருத்தமே எதிர்வந்த பலகட்சி நாடாளுமன்ற முறைக்கும் இரட்டை ஆட்சிமுறைக்கும் தொடக்கமாக அமைந்தது.

முதல் உலகப் போருக்குப் பின்

நீதிக்கட்சி - 1930-களில்

நீதிக்கட்சி – 1930-களில்

லாலா ஹர்தயாள் வர்ணித்த புரட்சிகர எழுச்சிநிலை மேலும் வளர்ந்து, முதல் உலகப் போரின்போது பஞ்சாபில் கேதார் கட்சியும், வங்காளத்தில் தேசியப் புரட்சியாளர்களும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடவடிக்கைகளை உயர்ந்த கட்டத்துக்குக் கொண்டு சென்றனர்.

“1857 மாபெரும் கலவரத்திற்குப் பின் மிகவும் அபாயகரமான, வேகமிகு இந்தியப் புரட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது” என்று ஏகாதிபத்தியவாதிகளே அஞ்சும் அளவுக்கு நெருக்கடிகள் முற்றின.

தேசியப் புரட்சியாளர்களத் தனிமைப்படுத்தி தாக்கி அழிப்பது என்ற நோக்கத்தோடு ஒரு புறம், ஆயுதங்கள் சட்டம், ரவுலட் சட்டம் போன்ற கொடிய அடக்குமுறைச் சட்டங்கள், ‘காமகட்டமாரு’ வீரர்கள், ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் என்று ஒடுக்குமுறையை ஏவி விட்டனர்.

மறுபக்கம், காங்கிரசும் அதன் தலைவர்களான லாலா லஜபதிராயும், திலகரும், காந்தியும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு விசுவாச உறுதிமொழிகள் கொடுத்தனர். புரட்சிகரப் போராட்டங்கள், முதல் உலகப் போர் ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கொடுத்த நெருக்கடி, மாபெரும் அக்டோபர் புரட்சியின் வீச்சு பற்றிய அச்சம் – ஆகியவை காரணமாக நிர்வாக முறை, ஆட்சிமுறை சீர்திருத்தங்களைச் செய்து மிதவாதிகளை தம்பக்கம் இழுத்துக் கொள்ளும் நோக்கத்தோடு இரட்டை ஆட்சிமுறை போன்ற அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வந்தனர். முதல் உலகப் போர் முடிந்தபின் 1919-ல் மாண்ட்-போர்டு அறிக்கைகளின் அடிப்படையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். இந்திய காலனிய ஆட்சிமுறையில் முக்கிய மாறுதல்களை ஏற்படுத்தினர்.

இங்கிலாந்து அரசாங்கத்துக்கும், இந்திய காலனிய அரசாங்கத்துக்கும் இடையேயான உறவைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கான அரசுச் செயலகம் என்னும் ஆங்கிலேய நாடாளுமன்ற அமைச்சரின் ஆலோசனைக் குழுவிற்கு நியமிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அரசுச் செயலரின் சில செயல்பாடுகளை இந்தியாவுக்கான ஹைகமிஷனர் என்னும் புதியதூதர் பதவியை உருவாக்கி அவரிடம் ஒப்படைப்பது, இந்திய விவகாரங்களில் ஆங்கிலேய நாடாளுமன்றத்தின் அதிகார அளவைக் கூட்டுவது – ஆகிய மாற்றங்களைக் கொண்டு வந்தனர்.

மான்ட்-ஃபோர்ட் சீர்திருத்தங்கள்

மான்ட்-ஃபோர்ட் சீர்திருத்தங்கள்

இந்தியக் காலனிய அரசைப் பொறுத்த வரை, மத்தியில் மாநிலங்களவை, சட்டமன்றம் என்று இரு சட்டமியற்றும் அமைப்புகளும் அதிக பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்;

மாநிலங்களவைக்கு வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலும், இந்தியாவிலுள்ள ஐரோப்பிய தொழில் மற்றும் வர்த்தசபையும் வாக்காளர்களாக இருந்து பெரும்பான்மை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சியோர் நியமிக்கப்படுவர்.

மத்திய சட்டமன்றத்துக்கு ஆகப் பெரும்பான்மையினர் வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலும் தொழில் மற்றும் வர்த்தகசபையும் வாக்காளர்களாக இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்; எஞ்சியோர் நியமிக்கப்படுவர்.

மத்திய சட்டமியற்றும் பேரவைகளுக்கு கூடுதலான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலேய நாடாளுமன்றத்திற்கும், இந்தியாவுக்கான அரசுச் செயலாளருக்கும் நேரடிப் பொறுப்புடைய கவர்னர் ஜெனரலே அதன் எல்லா தீர்மானங்களையும் அனுமதிக்கவும், ரத்து செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தார்.

மாநிலங்களில் சுயராஜ்ய கட்சி, நீதிக் கட்சி ஆட்சி யாருடைய ஆட்சி

ஆங்கிலேய – இந்திய மாநிலங்களைப் பொறுத்தவரை ‘டையார்க்கி’ என்னும் இரட்டை ஆட்சி முறை இருந்தது; அதாவது, ஆங்கிலேய அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆலோசனைக் குழுவுடன் கூடிய கவர்னரின் பொறுப்பில் நிதி, வருவாய்த்துறை, நீதித்துறை, போலீஸ் போன்ற துறைகள் இருந்தன.

மாநில சட்டமன்ற கவுன்சில், அதன் அமைச்சர்கள் மூலமாக கவர்னரின் பொறுப்பில் உள்ளூராட்சி, கல்வி, சுகாதாரம், பொதுப்பணித்துறை போன்ற துறைகள் இருந்தன.

ஆங்கிலேய – இந்தியா மற்றும் சுதேச சமஸ்தானங்களுக்கிடையேயும் ஆளும் எந்திரங்களுக்கிடையேயும் உறவு மேலும் பிணைக்கப்பட்டது; அந்நிய நாடுகள், சமஸ்தானங்களிடையே உறவுகள் மற்றும் உள் அபாயங்கள் எழும்போது தலையிடும் அதிகாரம் மட்டும் கவர்னர் ஜெனரலிடம் இருக்கும்; சமஸ்தான மன்னர்களின் கவுன்சில் என்று நிரந்தர சபையும், கவர்னர் ஜெனரல் அதை இயக்குவதற்காக தலைமை அலுவல் கமிட்டியும் (standing committee) அமைக்கப்பட்டது.

இந்த காலனிய ஆட்சிமுறைச் சீர்திருத்தங்கள் அடிப்படையில்தான் நான்காண்டுகளுக்குப் பின் 1923-ல் தேர்தல் நடைபெற்றது. ‘ஒத்துழையாமை இயக்கத்தை’ நடத்தி வந்த காங்கிரசுக் கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக பெரும்பான்மையாக முடிவெடுத்தது. இருப்பினும், காங்கிரசின் செல்வாக்கு மிக்க தலைவர்களான சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, வல்லபாய் பட்டேல் போன்றோர் சுயராஜ்யக் கட்சி என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். உள்ளூர் மட்டத்தில் காங்கிரசுக் கட்சியில் தலைவர்களான எல்லா தரகு முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் தேர்தலில் பங்கேற்றனர். சென்னையில் நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது. ஓரிரு ஆண்டுகளில் காங்கிரசு தலைமை, சுயராஜ்யக் கட்சியையும் தேர்தலில் பங்கேற்பதையும் அங்கீகரித்தது.

ஆங்கிலேய ஆளுனரின் கட்டுப்பாட்டில், ஆங்கிலேயர்களுக்கு முக்கியத்துவமற்ற சில துறைகளை மக்களின் பிரதிநிதிகளாக ஆளும் உரிமையைத்தான் இந்த ஏகாதிபத்திய அடிவருடிகள் பெற்றார்கள்.

1920-30-களில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள்

ஆளும்வர்க்கத்தின் அடிவருடிகளாக காங்கிரசு கோரியதெல்லாம் அதிகாரத்தில் கூடுதல் பங்கே தவிர வேறெதுவுமில்லை. இவ்வாறு, ஒருபுறம் காங்கிரசின் துரோகத்தனம், சமரச சரணடைவுப் பாதையிலான திசைதிருப்பும் போராட்டங்கள்; மற்றொருபுறம் ஏகாதிபத்தியவாதிகளின் கொடிய அடக்குமுறைகள் ஆகியவற்றின் மத்தியிலும் கூட 1920-30 ஆகிய பத்தாண்டுகள் நாடு முழுவதும் மத்தியத்துவமும், அமைப்பு ரீதியானதும் இல்லாத தேசிய விடுதலைப் போராட்டங்கள் பொங்கியெழுந்தன.

பரந்துபட்ட மக்களின் புரட்சிகர அமைப்புகளாக பொதுவுடைமைக் கட்சியும், உழவர்-தொழிலாளர் கட்சியும் தோன்றின. அவற்றின் தலைமையில்

 • பம்பாய், ஷோலாப்பூர், கான்பூர் பஞ்சாலைத் தொழிலாளர்கள், கல்கத்தா சணல் ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் இரயில்வேத் தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தங்களும்,
 • பீகார் உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, வங்கம், மாப்ளா விவசாயிகளின் பேரெழுச்சிகளும்
 • இந்துஸ்தான் குடியரசுப் படை என்னும் விடுதலை இராணுவ அமைப்பை நிறுவி ஆங்கிலேய அதிகாரிகளை அழித்தொழித்தது;
  சிட்டகாங் ஆயுதக் கிடங்கிலும் பிற இடங்களிலும், மத்திய சட்டமன்றத்திலும் வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய ஆயுதந்தாங்கிய நடவடிக்கைகளும்;
 • கான்பூர், லாகூர் சதி வழக்குகளும்;
 • வடகிழக்கு எல்லைப்புற மாகாணத்திலுள்ள பெஷாவரில் பத்தாணியர்களும், ஷோலாப்பூர் தொழிலாளர்கள் எழுச்சியும் அந்நகரங்களை சில நாட்கள் விடுவித்ததும்;

ஆகிய போராட்டங்கள் காங்கிரசின் துரோகத்தனமான இயக்கங்களும், ஏகாதிபத்தியவாதிகளின் கொடிய அடக்குமுறைகளும், சூழ்ச்சிமிகு சீர்திருத்தங்களும் பரந்துபட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கவோ, திசைதிருப்பவோ முடியாத நிலையை எட்டியதைக் காட்டின.

இதைத் தொடர்ந்துதான் அதுவரை காலனிய ஆட்சியாளர்கள் வழங்கியிருந்த ‘ஜனநாயகத்தை’ விரிவுபடுத்தி இன்றைய நாடாளுமன்ற ஆட்சிமுறையின் கட்டமைப்பை உருவாக்கினர்.

(தொடரும்…)

Series Navigation<< காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-6/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
லெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்

வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு. சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு...

ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!

மோடி அரசின் அனைத்தும் தழுவிய தோல்வியை மூடி மறைக்கவே இந்த சர்ஜிகல் ஸ்ட்ரைக் - அறுவை சிகிச்சை! மோடியின் கருப்புப் பண மீட்பு மோசடி சாதாரண மக்களை...

Close