காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி

This entry is part 7 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னோடி

பகத் சிங்

பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் தலைமையிலான இயக்கங்கள் தமது கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிடும் நிலையில்தான், ஆளும் வர்க்கங்களின் வழக்கமான தந்திரத்தை மேற்கொண்டு, 1929-ல்தான் முதன்முறையாக காங்கிரசும் முழுச்சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

1929-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் சைமன் தலைமையில் இந்தியாவுக்கான அரசியல் சட்ட ஆணையத்தை அமைத்தனர்; 1930-களில் மூன்று வட்டமேசை மாநாடுகளைக் கூட்டினர். இந்தியர்கள் அனைவருக்கும் தாமே பிரதிநிதி என்று கோரி அது மறுக்கப்பட்டதும் அவற்றைப் புறக்கணித்ததும், சரணடைந்ததும், பங்கேற்பதும் என்று இரட்டைப் போக்குகளை காந்தியும் காங்கிரசும் பின்பற்றினர்.

ஐம்பது ஆண்டுகளாக தேசிய விடுதலை இயக்கத்தை நடத்தியதாகக் கூறிக் கொண்ட காங்கிரசுக் கட்சி அது வரையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட டொமினியன் அந்தஸ்தை மட்டுமே கோரி வந்தது. முழுச்சுதந்திரம் கோரி போராடும் பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் தலைமையிலான இயக்கங்கள் தமது கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிடும் நிலையில்தான், ஆளும் வர்க்கங்களின் வழக்கமான தந்திரத்தை மேற்கொண்டு, 1929-ல்தான் முதன்முறையாக காங்கிரசும் முழுச்சுதந்திரம் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

வட்ட மேசை மாநாடு

வட்ட மேசை மாநாடுகள், கமிஷன்கள் போன்ற கபடநாடகங்களுக்குப் பின், ஏகாதிபத்தியவாதிகளே 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தை அறிவித்தனர்.

ஆனால், வட்ட மேசை மாநாடுகள், கமிஷன்கள் போன்ற கபடநாடகங்களுக்குப் பின், ஏகாதிபத்தியவாதிகளே 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தை அறிவித்தனர். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், அதிகார மாற்றத்தின் போது அமைந்த அரசின் ஆட்சிமுறைக்கான அரசியல் சட்டத்துக்கு அடிப்படையாக இருந்த முக்கியமான அம்சங்களை இந்திய அரசாங்க சட்டம் 1935 கொண்டிருந்தது. அப்போது அனைத்து தரப்பினாலும் அது எதிர்க்கப்பட்டது.

கீழ்க்கண்டவற்றை 1935 இந்திய அரசாங்க சட்டம் அடிப்படையாகக் கொண்டிருந்தது : (அடைப்புக் குறிக்குள் 1950-க்குப் பிந்தைய வடிவங்கள் தரப்பட்டுள்ளன)

 1. கவர்னர்களின் கீழ் பதினொரு மாநிலங்களும், ஹை கமிஷனர்களின் கீழ் ஆறு மாநிலங்களும் கொண்ட ஒரு கூட்டரசில் ஆங்கிலேய இந்தியா மற்றும் சுதேச சமஸ்தானங்களை இணைப்பது; பாதிக்கு மேற்பட்ட மக்கள்தொகையுடைய சமஸ்தானங்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட உறுப்பினர்களில் பாதிக்கு மேலும் ஒப்புக் கொண்டால், இது அமலுக்கு வரும்.
 2. மாநிலங்களில் இருந்த இரட்டை ஆட்சிமுறையை ஒழித்து முழு சுயாட்சியும், பொறுப்பான அரசாங்கங்களும் அமைப்பது; (மாநில சட்ட மன்றங்கள்)
 3. இராணுவம், வெளி விவகாரங்கள், சுங்கம், மத்திய நிதி, மத்திய செய்தித் தொடர்பு போன்ற 59 துறைகள் கூட்டாட்சியிடமும்; (மத்திய பட்டியல்)
  நீதி, போலீசு, வருவாய்த்துறை, விவசாயம், பொதுசுகாதாரம், கல்வி, பொதுப்பணித்துறை போன்ற 54 துறைகள் மாநிலங்களிடமும்; (மாநில பட்டியல்)
  தொழிலாளர், சிவில்-கிரிமினல் சட்டம், அதிகாரிகள் கட்டுப்பாடு போன்ற 26 துறைகள் மத்தியக் கூட்டாட்சி மற்றும் மாநிலங்கள் இரண்டிடமும் (பொதுப் பட்டியல்)
  என்று பிரிக்கப்பட்டன.
 4. மத்திய கூட்டரசாங்கத்தில் வெளிவிவகாரங்கள், இராணுவம், பழங்குடிப்பகுதிகள் போன்ற துறைகள், லண்டனில் இருந்த இந்தியாவுக்கான அரசுச் செயலருக்கும் ஆங்கிலேய நாடாளுமன்றத்துக்கும் பொறுப்பான வகையில் நேரடியாக கவர்னர் ஜெனரல் நிர்வாகம் செய்வார்; மற்ற துறைகளை அமைச்சரவையின் ஆலோசனையோடு இயக்குவார். மத்திய சட்டப் பேரவையில் பெரும்பான்ம ஆதரவு பெற்ற தலைவர் (பிரதமர்) ஆலோசனைப்படி அமைச்சர்களை நியமிக்கவும், சட்டப் பேரவைக்குப் பொறுப்பான அமைச்சரை விருப்பம் போல் விலக்கவும் அவருக்கு உரிமை உண்டு. (கவர்னர் ஜெனரலின் பாத்திரத்தில் குடியரசுத் தலைவர் – அரசியல் ரீதியாக அன்னிய அதிகாரத்துக்குக் கட்டுப்படாதவர்)
 5. மத்திய, மாநில, சட்டப் பேரவைகள் வகுப்புவாத, வர்க்க அடிப்படையிலும் பொது மற்றும் சிறப்பு தொகுதிகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படும். முக்கியத்துவமற்ற துறைகளில் ஓரளவு மாநில சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் இருப்பினும், ஏகாதிபத்தியவாதிகளே அரசியல், இராணுவ, பொருளாதார அதிகாரத்தை தம் பிடிக்குள் வைத்திருந்தனர். ஒட்டுமொத்த அரசு அமைப்பிலும் அரசாங்க அமைப்பிலும் பெரிய அளவு மாறுதல்களின்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், சமஸ்தான அரசர்கள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள் மற்றும் பிற்போக்குவாதிகளின் கூட்டை உறுதிப்படுத்தினர்.

சமஸ்தான மன்னர்கள் முழுவதும் சீர்திருத்தத்தை ஒப்புக் கொள்ளத் தயங்கியதால், கூட்டாட்சி அம்சங்களைத் தவிர பிற அம்சங்களை அமல்படுத்த 1937-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. காங்கிரசும், முஸ்லீம் லீகும் இந்தத் தேர்தல்களில் பங்கேற்றன. எட்டு மாநிலங்களில் காங்கிரசு அமைச்சரவை அமைத்தது.

இரண்டாம் உலகப் போரும், இந்திய மக்களின் எதிர்ப்பும் கட்சிகளின் நிலைப்பாடும்

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போரின்போது போர் நடவடிக்கைகளுக்கு இந்திய மக்களின் ஆதரவைப் பெற எவ்வளவோ முயன்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் தோல்வியுற்றனர்.

இரண்டாண்டுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்திய ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின.

இரண்டாம் உலகப் போரின்போது போர் நடவடிக்கைகளுக்கு இந்திய மக்களின் ஆதரவைப் பெற எவ்வளவோ முயன்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் தோல்வியுற்றனர். ஆனால், வெவ்வேறு கட்சிகளோ தத்தமது வர்க்க நலன்களுக்கேற்ப நிலைப்பாடு எடுத்தன.

 • முஸ்லீம் லீக் உடனடியாக ஏகாதிபத்தியவாதிகளின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது;
 • தவறான திரிபுவாத செயல்தந்திரத்தைக் கையாண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை தேசிய விடுதலைப் போரை நடத்தத் தவறியதோடு, உலகப் போரின் பிற்பகுதியில் சுயேச்சையான நடவடிக்கைகளின்றி ஏகாதிபத்தியவாதிகளை ஆதரித்தது.
 • உலகப் போரின் போக்கு பற்றி கணிப்பதில் காங்கிரசு தலைமை பிளவுபட்டது.
  ஏதாவது ஒருவகையிலான சமரசத்துக்குக் காத்திருந்த காந்தியத் தலைமை, பாசிசப் போக்குள்ள திமிர்பிடித்த பிற்போக்குவாதி சர்ச்சிலின் சமரசமற்ற போக்கால் ஏகாதிபத்தியத்துக்கு ஊக்கமான ஒத்துழைப்புத்தர மறுத்தது.
  அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுடைய நேரு தலைமையோ, அதன் உறுதிமொழிகளை ஏற்று உலகப்போரில் நேச நாடுகளை ஆதரிக்க முடிவு செய்தது.
  போஸ் தலைமை, ஜெர்மன், ஜப்பானிய பாசிச ஆதரவுநிலை எடுத்து, அவற்றுடன் கூட்டுச் சேர்ந்து பாசிசத் தலைமையின் கீழ் ‘தேசிய விடுதலைப் போர்’ப் பிரகடனமும், முயற்சியும் செய்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் புரட்சிகர உலக நிலைமையும், இந்திய விடுதலைப் போராட்டங்களும்

இரண்டாவது உலகப்போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மேலும் கூடுதலான நெருக்கடிகளையே கண்டது. போரின் முடிவு முதலாளித்துவத்தின் உலகுதழுவிய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதில், அதன் எல்லா அம்சங்களையும் ஆழப்படுத்தியது.

ஸ்டாலினுடைய தலைமையில் சோவியத் ஒன்றியத்தினால் வழிநடத்தப்பட்ட உலக மக்கள் பாசிச சக்திகளை வென்று முறியடித்ததும், சீனாவிலும், தென்கிழக்காசிய நாடுகளிலும் பெரும்பாய்ச்சலுடன் புரட்சிகர இயக்கங்கள் முன்னேறியதும், சோசலிச நாடுகளும் தேசிய விடுதலைப் போர்களும் என்ற புதிய சக்திகளின் சேர்க்கையும், தெற்கு – மேற்கு ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

உலகப் போரில் வெற்றி பெற்றிருப்பினும், போரின் விளைவாக ஏகாதிபத்திய நாடுகள், குறிப்பாக இங்கிலாந்தும், பிரான்சும் அதிகாரபலத்திலும், செல்வாக்கிலும் பலத்த வீழ்ச்சியை சந்தித்திருந்தன.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சோசலிச சக்திகளின் மிகப்பெரும் எழுச்சி தோன்றியிருந்தது; இவை காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்களை தீவிரப்படுத்தின.

 • இப்புரட்சிகரமான வரலாற்றுச் சூழ்நிலையில் இந்திய துணைக்கண்டமும் இதுவரை கண்டிராத அளவு புரட்சிகர எழுச்சிகளைக் கண்டது.
 • ஆசாத்-இந்து கைதிகளை விடுவிக்கக் கோரிய வலிமைமிக்க இயக்கம்,
 • இந்திய கடற்படை வீரர்களின் எழுச்சிமிகு கிளர்ச்சி-கலகம்,
 • விமானப்படை-தரைப்படையின் வெளிப்படையான ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி

இவையனைத்தும் சாதி, மத, இன வேற்றுமையின்றி அனைத்து பரந்துபட்ட தேசபக்த சக்திகளின் ஒற்றுமையைக் கட்டி தேசிய விடுதலை இயக்கத்தைப் பேரெழுச்சிக்குள்ளாக்கின.

அதைத் தொடர்ந்து

 • பீகாரில் போலீஸ்காரர்களின் கிளர்ச்சி,
 • தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தங்கள்,
 • மாணவர்கள் – விவசாயிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள்,
 • எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுங்கானா உழவர் இயக்கத்தின் தொடக்கம்

ஆகியவை இந்தியாவில் ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியைத் தூக்கியெறியும் அளவு வளர்ந்தன.

ஆங்கிலேய அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியா வந்தடையுமுன்பு பலருடைய கருத்துப்படி, “இந்தியா ஒரு புரட்சியின் விளிம்பில் இருந்தது. அமைச்சரவை தூதுக்குழு அந்த அபாயத்தை துடைத்தெறியவில்லை. குறைந்தபட்சம் தள்ளிப் போட்டிருக்கிறது”.

“இந்திய (ஆங்கிலேய) ஆட்சியாளர்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நிச்சயமாகக் கூறலாம். போருக்குப்பின் ஏற்பட்ட சூழ்நிலையின் விளைவாக எந்த நேரத்திலும் புரட்சி வெடிப்பதை எதிர்பார்க்கலாம்” என்றும், “1947 மார்ச்சில் இந்தியா வெடிமருந்துகள் நிரம்ப ஏற்றப்பட்ட நடுக்கடலில் உள்ள தீப்பற்றிய கப்பலை ஒத்திருந்தது. தீ, வெடிமருந்துகளை அடையும்முன் அதை அணைப்பதே முக்கியமான பிரச்சினையாக உள்ளது. நாங்கள் என்ன செய்தோமோ அதைத்தவிர உண்மையில் வழி ஏதும் இல்லை” என்றும் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளே கணிக்குமளவு இந்தியாவில் நெருக்கடி நிலைமை முற்றியிருந்தது.

இத்துடன் போருக்குப்பின் ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான புதிய பலாபலத்தைப் பொறுத்து இந்தியாவை மறுபங்கீடுக்கு உள்ளாக்கும்படி அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரிட்டனை நிர்ப்பந்தித்தது.

காலனிய அரசு எந்திரம் இந்திய ஆட்சியாளர்களுக்கு கைமாற்றப்பட்டது

அதிகார மாற்றம்

அதிகார மாற்றத்துக்கான ஏகாதிபத்திய திட்டத்தை ஏற்றுக் கொண்ட 7 தலைவர்கள்

இவை அனைத்தின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் ஒருவரையொருவர் வகுப்புவாதப் படுகொலை செய்யும்படியானதும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் இயக்கத்தை சீர்குலைப்பதிலும் போய் முடியும்படியான வகையில் காங்கிரஸ், முஸ்லீம் லீக் சூழ்ச்சிகளின் மூலம் காலனி ஆட்சியாளர்களால் இந்திய துணைக்கண்டம் இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது, ஏகாதிபத்திய அடிவருடிகளான தரகுமுதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதிகளான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் 1947-ல் ஆட்சியதிகாரம் மாற்றப்பட்டது.

இவ்வாறு இது வெற்றிகரமான தேசிய விடுதலைப் போர் நடத்தப்படாமல், தேசிய விடுதலைப் படையால் வென்றெடுக்கப்படாமல், காலனிய அரசு எந்திரம் அடித்து நொறுக்கித் தூக்கியெறியப்படாமல் பெறப்பட்ட அதிகார மாற்றமாக இருந்தது. ஆங்கிலேயப் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ், அதன் வழிகாட்டலின் படி அரசியல் சட்டபூர்வமாக, சமாதானமாக ஆட்சியதிகாரம் கைமாற்றப்பட்டது.

காலனிய அரசுகளின் உறுப்புகளாக விளங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், அடக்குமுறைக் கருவிகள் அவற்றின் கட்டுக்கோப்பு கலையாமல் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நேரடி ஆட்சியிலிருந்து அதன் அடிவருடிகளிடம் மாற்றித் தரப்பட்டது.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, சோசலிசப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி ஆகிய இரட்டைத் தாக்குதலின்கீழ் புதிய சக்திகளின் கூட்டணி, சர்வதேசிய-தேசிய வர்க்கப் போராட்டங்களின் வீச்சு இவற்றின் காரணமாக, காலனிய ஆதிக்கத்தை பழைய வடிவில் தொடர முயன்றால் வன்முறை புரட்சியும் தமது தோல்வியும் தவிர்க்க முடியாதவையாகும் என்பதை அங்கீகரிக்கும்படி ஏகாதிபத்தியவாதிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

எனவே, தமது காலனியாதிக்க சுரண்டல்கள் பாதிக்கப்படாமல் புதிய காலனியாதிக்க ஏகாதிபத்தியக் கொள்கைகளும், வடிவமுறைகளும் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டன. அதன் நேரடி விளைவாகவே இந்த அதிகார மாற்றத்தைக் கருத வேண்டும்.

பிரித்தாளும் சூழ்ச்சியும், மத வன்முறையும்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்கை மிகவும் நெகிழ்ச்சியான தன்மை கொண்டிருந்தது.

இந்திய சமுதாயத்திற்கே தனிச்சிறப்பாக உள்ள பல்வேறு முரண்பாடுகளையும் வரலாற்று ரீதியான தொடர்ச்சிகளையும் (மதம், சுதேச சமஸ்தானங்கள் போன்றவை) பயன்படுத்தி, நடைமுறையில் திட்டமிட்ட ரீதியில் தனது கொள்கையை அமல்படுத்தியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். குறிப்பாக இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவதன் மூலம் மத அடிப்படையில் தனித்தனியான அரசியல் அமைப்புகளை உருவாக்குவதில் (இந்துமகாசபை, முஸ்லீம் லீக்) பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்வதற்கான முக்கிய ஆயுதமாக இவை விளங்கின.

பிரிவினை

பிரிவினையைத் தொடர்ந்து கோடிக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டனர்

தேசிய காங்கிரஸ் தலைவர்களின் தொடர்ச்சியான துரோகத்தையும் இந்து நிலப்பிரபுக்களுடனும் லேவாதேவிக்காரர்களுடனும் அவர்கள் வைத்திருந்த தொடர்பையும் தொழிலாளர்-விவசாயி இயக்கத்தைக் கண்டு காங்கிரஸ் பீதியடைந்ததையும், தேசிய, விவசாயப் பிரச்சனைகளை தீர்க்க கையாலாகாமற் போனது மட்டுமின்றி, அவற்றைத் தீர்ப்பதற்கு தீவிரமான திட்டங்களை முன்வைக்கவும் கையாலாகாமற் போனதையும் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு, முஸ்லீம் லீக் தலைவர்களையும், முஸ்லீம் அறிவுஜீவிகளையும், விவசாயிகளையும் கவர்ந்திழுக்க முயன்றது.

இவ்வாறாக முஸ்லீம் ஜனநாயகப் பிரிவினர்களில் கணிசமானவர்களை பரந்துபட்ட போராடும் இந்திய மக்களிடமிருந்து பிரித்தது மட்டுமின்றி, அவர்களை அப்போராட்டங்களுக்கு எதிராக நிறுத்தச் செய்வதிலும் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது.

இவை அனைத்தின் விளைவாக, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவைப் பழைய வழிகளில் ஆள இயலாமற் போனபோது, அவர்கள் நாட்டை இரண்டாகத் துண்டாடி இரண்டு டொமினியன்களை உருவாக்கினர்; புதிதாக உருவாக்கப்பட்ட இவ்விரு அரசுகளுக்கு இடையேயான முரண்பாடுகளை வைத்து விளையாடுவது மற்றும் அவற்றை ஒன்றுக்கெதிராக மற்றொன்றை நிறுத்துவது என்ற சாத்தியப்பாடுகளை உத்தரவாதம் செய்து கொண்டு தமது அரசியல் ஆதிக்கத்தை புதிய வடிவத்தில் தக்கவைத்துக் கொண்டனர்.

Series Navigation<< காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-7/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அதிகரிக்கும் கொரோனா மரணங்களும்: மத்திய-மாநில அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையும்!

                                       ...

ஹாக்கிங், ஐன்ஸ்டைனின் அறிவார்ந்த பணிவும் இந்துத்துவாவின் மூடத்தன செருக்கும்

எனக்கு எல்லாம் தெரியும், நமது முன்னோர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டார்கள் என்பது ஹர்ஷவர்தன், மோடி போன்றவர்களின்  இந்துத்துவ பாரம்பரிய மூடத்தனம். கற்றது கையளவு, கற்க வேண்டியது  மலையளவு...

Close