இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?

This entry is part 8 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
  1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
  2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
  3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
  4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
  5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
  6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
  7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
  8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
  9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
  10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
  11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

8. இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தமது நலன்களுக்கு ஏற்றவகையில் அரசியல் நிர்ணயசபையும், அரசியல் நிர்ணயச் சட்டமும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதிகார மாற்றத்துக்கான பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தமது நலன்களுக்கான சரத்துகளைச் சேர்ப்பதில் இந்திய ஆளும் வர்க்கங்களினுடைய அடிவருடிகளுடன் பேரம் பேசிய அதேசமயம், பிரச்சினைகள் மிக்கதும் பிரித்தாளும் சூழ்ச்சி மிக்கதுமான சரத்துகளை நுழைப்பதில் அக்கறை செலுத்தினர்.

ஏகாதிபத்தியவாதிகள் நைஜீரியாவில் பிராந்தியவாதத்தை பயன்படுத்திக் கொண்டதைப் போன்றே, கானாவுக்கும் கென்யாவுக்குமிடையே பிராந்தியவாதத்தை விதைக்க முயன்றது போன்றே, பிரெஞ்சு மலகாசி மற்றும் பிற பகுதிகளை பதினான்கு மாநிலங்களாகப் பிரித்து, அதேசமயம் பிரச்சனைகள் மிக்க மலகாசி மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளின் பொது அமைப்பை உருவாக்கி பின்னர் தலையிட்டதைப் போன்றே,

  • இந்திய துணைக்கண்டத்திலும் இருநாடுகளை உருவாக்கி மோதவிடவும், சுதேச மன்னர்கள் ஒவ்வொருவரும் தாமே எந்த நாட்டில் இருக்கலாம் என்று தீர்மானிக்க வழிவகை செய்து மோதவிடவும் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் தகுந்த இடமளித்தனர்.
  • எல்லைப் பிரச்சனைகளையும், தேசிய இனப் பிரச்சனைகளையும் மேலும் சிக்கலாக்கினர்.
  • அந்நிய மூலதனத்துக்கும் அந்நிய சொத்துக்களுக்கும், தமது கூட்டாளிகளான சுதேசி மன்னர்களின் நலன்களுக்கும் பாதுகாப்பு தேடிக் கொண்டனர்; இந்தியாவை காமன்வெல்த்தில் இருக்கச் செய்வதிலும் வெற்றி பெற்றனர்.
டாக்டர் பி.ஆர் அம்பேத்கர்

அதை எரித்து ஒழிப்பதற்கான முதல் நபராக நான்தான் இருப்பேன்

அதிகார மாற்றத்திற்கு ஆறு மாதத்திற்கு முன்பே ஆங்கிலேய அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டத்திலிருந்த முன் வைப்புகளுக்கு முரணான எந்த அரசியல் நிர்ணய சட்டத்தையும் ஏற்க முடியாது என்று காலனியவாதிகள் பிரகடனம் செய்தனர். “அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாத அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை வகுத்தால், அரசியலதிகாரத்தை யாரிடம் ஒப்படைப்பது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று எச்சரித்தனர்.

எனவே, அதிகார மாற்றத்திற்குப் பின் அமைக்கப்படும் அரசின் தன்மைகளும், வடிவமுறையும் இந்திய மக்களின் சுதந்திரமான தீர்மானத்தின் மீதானது அல்ல.

அரசியல் நிர்ணய சபையே ஒரு சுதந்திரமான முற்றாளுமை பொருந்தியதோ, சுதந்திரமான பொது வாக்கெடுப்பின் மூலம் அமைக்கப்பட்டதோ அல்ல. வெற்றிகரமான தேசிய விடுதலைப் போரின் விளைவாக அரசியலதிகாரத்தைக் கைப்பற்றி அமைக்கப்பட்டதும் அல்ல.

ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளும் அனைத்துப் பகுதி இந்திய மக்களும் ஒரு மனதாக நிராகரித்த 1935 இந்திய அரசாங்க சட்டத்தின் அடிப்படையில் 90 சதவீதம் மக்களைப் புறக்கணிக்கும், வகுப்புவாத, வர்க்க மற்றும் சிறப்புத் தொகுதிகள் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாநில சட்டமன்றங்கள் தேர்ந்தெடுத்தவர்களையும், ஏகாதிபத்தியவாதிகளால் – சுதேச அரசால் நியமிக்கப்பட்டவர்களையும் சேர்த்து அமைக்கப்பட்டது. ஆங்கிலேயக் கல்வி, கலாச்சாரத்தில் ஊறித்திளைத்த வறட்டுத் தத்துவக் கோட்பாட்டுவாதிகளும், சட்டவாதிகளும் அடங்கியதே ‘சுதந்திர’ இந்திய மக்களின் நிர்ணயசபை.

இவ்வாறு நியமிக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபைதான் இரண்டாண்டு கூட்ட நாடகங்கள், அரசியல் பித்தலாட்டங்கள், விவாதங்களுக்குப்பின் ஏகாதிபத்தியவாதிகளின் 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தை சாராம்சமாகக் கொண்ட உலகிலேயே மிக நீண்டதான இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் என்னும் மிகப்பெரிய மோசடியை காலனிய அரசின் அனைத்து அடக்குமுறைத் தன்மைகளோடு இந்திய மக்கள் மீது திணித்தது. நாடாளுமன்ற ஆட்சிமுறை, அடிப்படை உரிமைகள், மத்திய-மாநில உறவுமுறை, சிவில்-கிரிமினல் சட்டங்கள் உள்பட சில மாறுதல்களுடன் காலனிய அரசின் கொள்கைகளே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அரசியல் நிர்ணய சபை

ங்கிலேயக் கல்வி, கலாச்சாரத்தில் ஊறித்திளைத்த வறட்டுத் தத்துவக் கோட்பாட்டுவாதிகளும், சட்டவாதிகளும் அடங்கியதே ‘சுதந்திர’ இந்திய மக்களின் நிர்ணயசபை.

“ஒரு புரட்சிக்குப்பின ஒரு புத்தம் புதிய அரசியல் நிர்ணய அமைப்பை நாங்கள் தொடங்கவில்லை. நீண்ட காலமாக செயல்பட்டு வரும் – தற்போது நிலவும் நிர்வாக கட்டுமானத்தை, புதிய அமைப்பில் ஒரேயடியாகப் புறக்கணிக்க முடியாது” என்று அரசியல் நிர்ணய சட்டம் வகுத்த முக்கியமான மூலவர்களில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அச்சபையிலேயே அறிவித்தார். தற்போது நிலவும் சமுதாய பொருளாதார மற்றும் அரசியல் கட்டுமானம் காலனிய ஆட்சிக்காலம் போன்றே நீடிக்கும் என்கிறபோது, அதிலிருந்து ஒரேயடியாக மாறுபட்ட ஒரு புதிய அரசியல் நிர்ணய சட்டம் வகுக்கப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.

ஆனால், பெரிதாக பீற்றப்பட்ட அரசியல் நிர்ணயச் சட்டம் காலனிய அரசின் காலாவதியான கருவி என்பதிலிருந்து மாறுபட்டது என்று மக்களை ஏமாற்றவே, ஒரு முற்போக்கு முத்திரை அணிவிக்கவே – வேலை செய்வதற்கான, கல்வி பெறுவதற்கான உரிமை, வேலையின்மை, வயதான-உடல்நலமற்ற காலங்களில் அரசு உதவி பெறுவதற்கான அனைத்து உரிமை, அனைத்து தொழிலாளருக்கும் நீதியான மற்றும் மனிதத் தன்மையுள்ள வேலை சூழ்நிலைகளை உத்தரவாதப்படுத்துவது, மகப்பேறுகால நிவாரணம், நியாயக் கூலி, ஓய்வூதியம், சமூக மற்றும் கலாச்சார வாய்ப்புகளைப் பெறுவது, பதினான்கு வயது வரை கட்டாய இலவசக் கல்வி போன்றவையும் உள்ளடக்கிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

‘அரசுக் கொள்கையின் கட்டளைக் கோட்பாடுகள்’ என்று சில சேர்க்கப்பட்டன. ‘கட்டளைக் கோட்பாடுகள்’ என்று பெயரிட்டிருப்பினும், மக்கள் அவற்றைத் தமது உரிமைகளாக வழக்கு மன்றங்களுக்கு எடுத்துச் செல்லவோ, ஆட்சியாளர்களை நிர்ப்பந்திக்கவோ இயலாதவாறு அவற்றை அரசியல் சட்டமாக அன்றி, அரசியல் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிட்டிருப்பதே – இவை அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்கான மாய்மாலங்களே என்பதைக் காட்டுகின்றன. ‘கட்டளைக் கோட்பாடுகளை’ நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்துடன் கூடிய பருண்மையான வழிவகைகள் செய்யாததன் மூலம் அரசியல் நிர்ணயச் சட்டமியற்றியவர்கள் ஏகாதிபத்திய – நிலப்பிரபுத்துவச் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் பாதுகாத்ததோடு, பரந்துபட்ட மக்களின் எழுச்சி என்னும் பூதத்தைப் பார்த்து அஞ்சினார்கள்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி அம்பேத்கர்

அதை எரித்து ஒழிப்பதற்கான முதல் நபராக நான்தான் இருப்பேன்

“பெரும்பான்மை தவறிழைத்து விடலாம் என்று அஞ்சும் சிறு சமுதாயங்களையும், சிறு மக்கள் பிரிவினரையும் சமாதானப்படுத்துவதன் மூலம்தான் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இயங்குகிறது. ஐயா, நான் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதை எரித்து ஒழிப்பதற்கான முதல் நபராக நான் இருப்பேன் என்று சொல்வதற்கு தயாராக இருக்கிறேன். எனக்கு அது தேவையில்லை. அது யாருக்கும் பொருத்தமானதாக இல்லை.

அது எப்படியிருந்தாலும் சரி, நமது மக்கள் அதைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், பெரும்பான்மையினரும் உள்ளனர், சிறுபான்மையினரும் உள்ளனர் என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது. “உங்களை அங்கீகரிப்பது ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும்” என்று சொல்லி சிறுபான்மையினரை புறந்தள்ளி விட முடியாது. சிறுபான்மையினருக்கு ஊறு விளைவிப்பதன் மூலம்தான் மிகப்பெரிய தீங்கு வரும் என்று சொல்ல விரும்புகிறேன்.”

– 1953 செப்டம்பர் 2-ம் தேதி, ராஜ்ய சபாவில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

I Shall be the First Person to Burn It Out 

“It is by placating the sentiments of smaller communities and smaller people who are afraid that the majority may do wrong, that the British Parliament works. Sir, my friends tell me that I have made the Constitution. But I am quite prepared to say that I shall be the first person to burn it out. I do not want it. It does not suit anybody. But whatever that may be, if our people want to carry on, they must not forget that there are majorities and there are minorities, and they simply cannot ignore the minorities by saying, “Oh, no. To recognise you is to harm democracy.” I should say that the greatest harm will come by injuring the minorities.”

Dr BR Ambedkar in the Rajya Sabha on 2 September 1953

Series Navigation<< காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சிஇதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-8/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்

"அரசு தலையிட வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தான் மானியங்கள் கொடுக்கப்பட்டன. வேலை இழப்பு நடக்கும் போது தலையிட்டு, யூனியன், நிறுவனம், தொழில்துறை என்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை...

ஒன்றுபடுத்துவோம், ஒன்றுபடுவோம், சங்கமாக அணிதிரள்வோம் – ஆடியோ

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் ஒருவரின் ஆடியோ செய்தி. "ஐ.டி ஊழியர்களும் சமூகத்தின் அனைத்து பிரிவு உழைப்பாளர்களும் தமது பிரச்சனைகளை...

Close