இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?

This entry is part 9 of 11 in the series இந்திய அரசின் வரலாறு
 1. கொள்ளையர்களின் ஆட்சி தொடங்கியது, கிழக்கிந்திய கம்பெனியின் கீழ்
 2. காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?
 3. இந்த அரசு இரத்தத்தாலும், நிறத்தாலும் மட்டும் இந்தியர்களுடையது
 4. காலனிய ஆட்சிக்கான கட்சிகளும், தேர்தல்களும்
 5. காலனிய சேவைக்கான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள்
 6. காலனிய ஆட்சியாளர்கள் போட்ட இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அடித்தளம்
 7. காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி
 8. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?
 9. இதுவா சுதந்திரம், இதுவா தேச விடுதலை?
 10. தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்
 11. 1947-க்குப் பின் தேர்தல் அரசியலும், அரசு எந்திரமும்

9. காலனிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமான அதிகார வர்க்கம், இராணுவம், அரசியல்வாதிகள் தொடர்ந்தனர்

ஆங்கிலேய காலனிய ஆட்சியின் தேவைகளுக்காக உருவாக்கி வளர்க்கப்பட்ட இராணுவம் அப்படியே தொடர்கிறது.

1947-க்குப் பின் ஆங்கிலேயரின் ஆட்சி காங்கிரஸ்/முஸ்லீம் லீகிடம் ஒப்படைக்கப்பட்டு நாடாளுமன்றம்/அமைச்சர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் ஆட்சி என்ற மாறுதல் தவிர, காலனிய அரசின் அதிகார வர்க்க இராணுவ அமைப்பின் அனைத்து கட்டுமானங்களும் சாராம்சத்தில் அப்படியே வரித்துக் கொள்ளப்பட்டன.

இந்திய இராணுவ அதிகாரிகள்

“பெரும்பான்மையான அதிகாரிகள் மேற்கத்திய கருத்துக்கள், கலாச்சாரம், நடையுடை மற்றும் சமூக பழக்கவழக்கங்களை உட்கொண்டவர்கள்”

“இந்திய ராணுவம் (ஆங்கிலேயப்) பேரரசினுடைய ராணுவத்தின் ஒரு அங்கமும் சதையும் ஆனதாகும். ஆங்கிலேய-இந்திய ராணுவம் அரசியலிலிருந்து தனியே பிரித்து வைக்கப்பட்டிருந்தது; பிரதானமாக, ஒரு பேரரசின் பாத்திரமாற்றுவதற்காகக் கட்டி வளர்க்கப்பட்டது. பேரரசிற்கு விசுவாசமாக இருக்கும் வகையில், அதன் அதிகாரிகள் கவனமாக வடித்தெடுக்கப்பட்டவர்கள். சிலர், ஆங்கிலேய ஆட்சியின்கீழ் பலன்களை அடைந்தவர்கள்; அதைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு மோசமான சுயநலமுடையவர்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பெரும்பான்மையான அதிகாரிகள் மேற்கத்திய கருத்துக்கள், கலாச்சாரம், நடையுடை மற்றும் சமூக பழக்கவழக்கங்களை உட்கொண்டவர்கள்” என்று காலனி இராணுவத்திலும் பின்னரும் ராணுவ அதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஜே.பி.தால்வியே ஒப்புக் கொண்டிருக்கிறார். (பிரிகேடியர் ஜே.பி. தால்வி, இமாலயத் தவறு, பக். 345)

சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திர இந்தியாவின் இராணுவம் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரில் தேசிய உணர்வுடன் கட்டி வளர்க்கப்பட்டதல்ல. மாறாக, ஏகாதிபத்திய நலன்களுக்காக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதிலும், பரந்துபட்ட மக்கள்மீது சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் ஏவிவிடப்படுவதிலும் பயிற்றுவிக்கப்பட்டு, அந்த நோக்கத்துக்காகவே பரந்துபட்ட மக்களின் தேசிய நீரோட்டத்திலிருந்து அரசியல் சூழ்நிலைகளிலிருந்தும் தனியே பிரித்து வைக்கப்பட்டு கட்டிவளர்க்கப்பட்டதாகும்.

பாகிஸ்தான் இராணுவம், இந்திய இராணுவம்

இந்த இரண்டு ராணுவங்களும், வங்க தேசம் பிரிந்த பிறகு உருவாக்கப்பட்ட வங்கதேச இராணுவமும் பிரிட்டிஷ் இந்திய இராணுவ பாரம்பரியங்களையே தொடர்கின்றன.

ஏகாதிபத்தியவாதிகளால் கட்டி வளர்க்கப்பட்ட இந்த தேசவிரோத இராணுவம்தான் ‘சுதந்திர’ இந்திய அரசால் வரித்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதிகார மாற்றத்திற்குப் பின்னரும், தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேய இராணுவத் தளபதியினுடைய ஆணையின்கீழ் நீடித்தது. அதன் பின்னும் ஏகாதிபத்தியவாதிகளின் கைகளிலேயே இராணுவக் கல்வியும் நீடித்தது.

1947 பிரிவினையைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தின் அமைப்புகள், யூனிட்டுகள், சொத்துக்கள், அதிகாரிகள் 3-ல் 2 பங்கு இந்தியாவுக்கும், 3-ல் 1 பங்கு பாகிஸ்தானுக்கும் என பிரிக்கப்பட்டன. இந்திய நாடும், இந்திய இராணுவமும் இவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு 1947-48-ல் இரண்டு நாடுகளும், இரண்டு ராணுவங்களும் (சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரே ராணுவமாக இருந்தவை) காஷ்மீரில் போரிட்டன. இந்த இரண்டு ராணுவங்களும், வங்க தேசம் பிரிந்த பிறகு உருவாக்கப்பட்ட வங்கதேச இராணுவமும் பிரிட்டிஷ் இந்திய இராணுவ பாரம்பரியங்களையே தொடர்கின்றன.

இன்றைய போலீசு, சிறை, நீதிமன்றம், அதிகாரிகள் அடங்கிய அரசு எந்திரம் காலனிய ஆட்சிக்காக உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டது

ஐ.சி.எஸ் அதிகாரிகள்

ஐ.சி.எஸ் அதிகாரிகள்

சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திர இந்தியா, காலனியாதிக்க நலன்களுக்காக, அவர்களாலேயே கட்டிவளர்க்கப்பட்ட இராணுவ அமைப்புகளை வரித்துக் கொண்டதைப் போன்றே, காலனியாதிக்க ஆட்சிக்காக கட்டிவளர்க்கப்பட்ட அதிகாரத்துக்கான கருவியாகிய போலீசு, சிறை, வழக்குமன்றம் மற்றும் அதிகாரவர்க்க நிர்வாக எந்திரம் அனைத்தும் அப்படியே அடிமுதல் முடிவரை, கிராம அதிகாரியிலிருந்து இந்திய அரசின் தலைமைச் செயலாளர் வரை முழுக்கட்டுமானத்தோடு வரித்துக் கொள்ளப்பட்டது. இந்த அதிகார வர்க்கம் தேசிய விடுதலைப் போராட்டத்தின் உச்சகட்டத்திலும்கூட காலனியாதிக்கவாதிகளின் மீதான விசுவாசத்தில் சிறிதும் பிறளவில்லை. ஆட்சியாளர்களின் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுப்பது தவறு என்று காந்தியும் காங்கிரசும் வலியுறுத்தி வந்தார்கள்.

காலனிய அதிகாரவர்க்க நிர்வாக எந்திரம் ஏராளமான சம்பளத் தொகைகளை விழுங்குவது மட்டுமல்ல, அரசியல் தில்லுமுல்லும் பிற்போக்குத்தனமும் வாய்ந்த சக்தியாகும்.

“பிரிட்டனில் இருப்பது போன்றே இந்தியாவிலும் சிவில் அதிகாரிகள் தனியாகவும், அரசாங்கத்தின் ஒரு பகுதி என்ற முறையிலும் அரசியல் செல்வாக்கு செலுத்துகின்றனர். இது பெரும்பாலும் மீண்டும் இப்போது நிலவும் அந்தஸ்துகளையும், நிலைமைகளையும் தீவிரமாக மாற்றுவதற்கு எதிராக செயல்படும் ஒழுங்குபடுத்தும், கெட்டிப்படுத்தும் செல்வாக்காக இருந்து வருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த அதிகார வர்க்கம் ஒரு பிற்போக்கு சக்தியாகும்” (குன்னர் மிர்தல், ஆசிய நாடகம், பக். 262).

காலனிய ஆட்சியைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட, கட்டி வளர்க்கப்பட்ட, முறைகளான “மே” நாடாளுமன்ற மரபுகளிலிருந்து, நிர்வாகத்தின் கீழ்மட்ட ஊழியர்கள் பற்றிய இரகசியக் கோப்புமுறை வரை, அதன் அனைத்து பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளோடு காலனிய அரசின் அதிகார வர்க்க நிர்வாக எந்திரம்தான் அதிகார மாற்றத்திற்கு பின்பும் நீடிக்கிறது.

காலனிய ஆட்சியைப் பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட, கட்டி வளர்க்கப்பட்ட, முறைகளான “மே” நாடாளுமன்ற மரபுகளிலிருந்து, நிர்வாகத்தின் கீழ்மட்ட ஊழியர்கள் பற்றிய இரகசியக் கோப்புமுறை வரை, அதன் அனைத்து பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளோடு காலனிய அரசின் அதிகார வர்க்க நிர்வாக எந்திரம்தான் அதிகார மாற்றத்திற்கு பின்பும் நீடிக்கிறது.

இந்திய நிர்வாகத்தையும் பொதுத்துறைகளையும் இந்தியன் சிவில் சர்வீஸ் துறையின் அதிகாரம் பிடித்தாட்டுவதையும், அவர்களுக்குப் பெருந்தொகைகளை சம்பளமாக வழங்குவதையும் கடுமையாகக் கண்டித்து, இந்த முறை முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டும் என்று நேருவும் (சுயசரிதை, பக். 445), காந்தியும் (காங்கிரசின் வரலாறு, பக். 634) காலனிய ஆட்சிக் காலத்தில் கதைத்ததெல்லாம் கட்டுக்கதைகளே, மக்களை ஏமாற்றவே என்பதை அதிகார மாற்றத்திற்குப்பின் அவர்களின் நடைமுறை அம்பலப்படுத்திக் காட்டி விட்டது.

பொருளாதார ரீதியில் அன்னிய மூலதனத்தின் நலன்களும் உள்ளூர் ஆளும் வர்கக நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன.

அரசியல் ரீதியில் மட்டுமல்ல; சமுதாய, பொருளாதார ரீதியிலும் அதிகார மாற்றம் பெயரளவிலான விடுதலையும் சுதந்திரமுமே என்பதையே காட்டுகின்றன; சொல்லிக் கொள்ளப்படும் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பலரும் ஏகாதிபத்தியவாதிகளின், நிலப்பிரபுக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதை பலமுறை உறுதிகூறியதோடு, அதிகார மாற்றத்துக்குப் பின் நடைமுறையிலும் அவை கட்டிக் காக்கப்படுகின்றன.

“பொருளாதாரக் கட்டுமானத்தில் திடீர் மாறுதல் எதுவும் இருக்காது, முடிந்தவரை தற்போதுள்ள தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட மாட்டாது”

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருந்த நேரு, அந்நிய மூலதனத்துக்கும் அதன் பிரதிநிதியாக ஆங்கிலேய அரசுக்கும் உறுதி கூறினார். “பொருளாதாரக் கட்டுமானத்தில் திடீர் மாறுதல் எதுவும் இருக்காது, முடிந்தவரை தற்போதுள்ள தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட மாட்டாது” என்றும் உறுதி கூறினார்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மீதான தீர்மானமும் அதன் விளக்க அறிக்கையும் பின்வருமாறு தீர்மானகரமாக அறிவித்தன : “இந்தியத் தொழிற்சாலையில் அந்நிய மூலதனம் மற்றும் நிறுவனங்களுக்கு இத்தீர்மானம் முழுச் சுதந்திரமளிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் அதேசமயம், அது தேசிய நலன்களுக்காக நெறிப்படுத்தப்படும் என்று உறுதி கூறுகிறது“, இவையெல்லாம் ஏகாதிபத்திய நலன்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கான உறுதிமொழி அன்றி வேறல்ல.

ஏகாதிபத்திய நலன்களைப் போன்றே நிலப்பிரபுத்துவ அமைப்பும் கட்டிக்காக்கப்படும் என்றும், அரசியல் நிர்ணயசபையில் எந்த அடிப்படை மாற்றத்தையும் எதிர்ப்பதாகவும் நேரு உறுதி கூறினார். “தற்போதைய கட்டுமானத்தை அதிகம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கட்டுமானத்தை அழிப்பதற்கு போதிய அளவு தைரியமும், வீரதீரமும் நான் பெற்றிருக்கவில்லை” என்று ஜமீன் இனாம் ஒழிப்பின்போது கூறினார்.

ஜமீன்தாரி ஒழிப்பு, மன்னர் மானிய ஒழிப்பு, சுதேச சமஸ்தானங்கள் இணைப்பு – மக்கள் மீதான மோசடியே

ஜமீன்தாரி முறை ஒழிப்பு, இந்திய மக்கள் மீதான மோசடியே

ஜமீன்தாரி முறை ஒழிப்பு மற்றும் சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனில் இணைப்பது ஆகிய நடவடிக்கைகள், இந்தியத் தரகு முதலாளிகள் சுதேச மன்னர்களுடனும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடனும் செய்து கொண்ட இரு பெரும் சமரசங்களும், இந்திய மக்கள் மீதான மோசடியே ஆகும்; மன்னர் மானியம், பலவகை வரிகளிலிருந்து விலக்கு போன்ற தாராள நிதிவசதி ஒப்பந்தங்கள், காலனிய அரசு அளித்த பட்டங்கள் மற்றும் பிற, நில உச்சவரம்பில் விலக்கு, இவற்றுடன் ஜனநாயகத்துக்கு முரணான பல்வேறு தனிச்சலுகைகள், வெளிநாட்டு தூதர், கவர்னர், ஐ.நா. சபை தூதுக்குழு உறுப்பினர் என்று பதவிகள் மூலமும், அதாவது சட்டபூர்வ லஞ்சம் மூலமும், ராஜதந்திரம் மற்றும் நிர்ப்பந்த் மூலமும் சுதேச சமஸ்தானங்கள் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டன. 1969 மன்னர் மானிய ஒழிப்பும்கூட ஏராளமான தொகை நட்டஈடு கொடுத்தே செய்யப்பட்டது.

ஜமீன் இனாம் ஒழிப்பின் போதும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலமும், பூதாகரமான மாளிகைகளும், அரண்மனைகளும், கோட்டைகளும் ஜமீன்தார்களின் – அரசர்களின் தனிச்சொத்தாகவும், அத்துடன் கோடிக்கணக்கான ரூபாய்கள் நட்ட ஈடாகவும் அளிக்கப்பட்டன. ஜமீன் இனாம் ஒழிப்பு உண்மையில் அடிப்படை சமுதாய பொருளாதார மாற்றத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. பிரபுத்துவ அரசர்கள் மற்றும் ஜமீன்தார்களின் சலுகைகள் ஓரளவு அழிக்கப்பட்டாலும், பிரபுத்துவ நிலவுடைமை உறவு – அதன் விளைவான நிலப்பிரபுத்துவ வர்க்கம், ஜாதி மற்றும் பிற நிலப்பிரபுத்துவ உறவுகள் பாதுகாக்கப்படுவதோடு சில வகைகளில் பலப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.

1938-ல் டெல்லி லஷ்மிநாராயண் கோவிலை பிர்லா குடும்பத்தினருடன் துவக்கி வைக்கும் காந்தி

இவையனைத்தும் முதலாளித்துவ முறையிலான காலனி அரசு, அதன் அனைத்து அதிகார வர்க்க – இராணுவ எந்திரத்தின் கட்டுமானங்களோடும், நாடாளுமன்றமுறையும் அனைவருக்கும் வாக்கெடுப்பும் ஆகிய ஆட்சிமுறை மாறுதலோடும், முதலாளித்துவ முறையிலான அரைக்காலனிய-அரைநிலப்பிரபுத்துவ அரசாக மாறியதையும், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஏகபோக முதலாளிகளிடமிருந்து தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருப்பதையும், பெயரளவிலான விடுதலை மற்றும் சுதந்திரத்தை அடைந்ததையும் நிரூபிக்கின்றன.

ஆங்கிலேய கவர்னர் ஜெனரல், இராணுவத் தலைமைத் தளபதி, செயலகம் மற்றும் எல்லாத் துறைகளின் தலைமை உள்பட – காலனிய அரசின் அதிகார வர்க்க இராணுவ எந்திரத்தையும், அரசியல் அதிகாரத்தையும் ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடிகளான தரகு முதலாளிகள் – நிலப்பிரபுக்களிடம் மாறியதை, உண்மையான தேசிய விடுதலை மற்றும் சுதந்திரம் என்று வர்ணிப்பது உண்மையில் ஒரு மோசடியாகும்.

(தொடரும்)

Series Navigation<< இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் யாருக்கானது?தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-9/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கொரோனா அவசரநிலை:  தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் நலன்.

நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக்...

நேர்கொண்ட பார்வை – திரை விமர்சனம்

அஜித்  நடித்த நேர்கொண்டபார்வை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவந்த படம். ஹிந்தியில் பிங்க் என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித்குமார் தமிழில் நடித்துள்ளார். ரசிகர்களின்...

Close