பணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்

Appraisal ௭திர்பார்ப்பு:

பிப்ரவரி மாதம் 2017 ல், ஐ.டி மக்களில் அநேகரை போல நானும் அப்ரைசலிற்காக காத்துக்கொண்டு இருந்தேன். புதிதாய் திருமணமான அந்த வருடம், “௭னக்கு அப்ரைசல் நல்லபடியாக வரும், பதவி உயர்வு வரும்” என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு அது அதிர்ச்சியை அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் டிசம்பர் வரையில் என்னை star performer என்று சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் திடீரென என்னை under performer என்று 4th bucket கொடுத்திருந்தார்கள்.

Appraisal meeting:

ஐ.டி.யில் பொதுவாக ஒரு பழக்கம் உண்டு இதுபோன்ற அப்ரைசலுக்குப் பிறகு அதைப்பற்றி மேனேஜருடன் விவாதிப்பது ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விவாதம் எனக்கும் நடந்தது. அந்த விவாதத்தில் எனது மேனேஜர் என்னிடம் சொன்ன வார்த்தை “நீங்கள் செய்த வேலை திருப்திகரமாக தான் இருந்தது அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நமது கம்பெனியில் இந்த வருடம் 7 சதவிகித ஊழியர்களுக்கு 4th bucket, கொடுப்பது கட்டாயமாக்கபட்டுள்ளது. அதனால்தான் உங்களுக்கும் அது கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதுமட்டுமல்ல இதுபோன்ற செயல்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்காக செய்யப்படும் முதற்கட்ட செயல்பாடு என்பதையும் அவரே எச்சரித்தார்.

Post appraisal analysis:

அவர் எச்சரித்த அந்த நொடி என் மனதில் ஏற்பட்டது பணிநீக்கம் மட்டுமல்ல, “நாம் எப்படி வேலை செய்தாலும் நமக்கு மேல் இருக்கும் மேல் மட்ட குழுதான் நம் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றால் அந்தக் குழு எதற்காக அப்படி செய்கிறது? லாப நோக்கம், இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?” என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். எனவே ஒரு நிறுவனத்தில் mass lay off எதற்காக நடைபெறுகிறது என்பதைப் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் எனது நிறுவனத்திலேயே மேல்மட்ட குழுவில் பல ஊழல்கள் நடைபெற்று இருப்பதும், அது வெளியே தெரிந்தவுடன் பங்குதாரர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதும் எனக்கே தெரிந்தது. அதுமட்டுமல்ல ஊழியர்கள் மத்தியில் தான் பணி நீக்க நடவடிக்கை என்பது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஆனால் பங்குதாரர்கள் மத்தியில் அல்லது பங்குச்சந்தையில் இதுபோன்ற ஐ.டி கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கை என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. பங்குதாரர்களின் நன்மதிப்பைப் பெற கம்பெனிகள் பணிநீக்க நடவடிக்கையை ஒரு யுக்தியாக பயன்படுத்தி வருகிறது என்பதையும் புரிந்து கொண்டேன்.

இப்பொழுது என் தேடலுக்கு பதில் கிடைத்துவிட்டது. எனது கம்பெனியில் மேல் மட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் அதனால் பங்குதாரர் மத்தியில் ஏற்பட்ட அதிருப்திகளை சமாளிக்கவே 2017 ஆம் வருடம் அந்தப் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது எனக்கு தெள்ளத் தெளிவாகி விட்டது.

Against Layoff mentality:

அதுவரையில் பணி நீக்கம் என்பதை ஒரு சம்பிரதாயம் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு அது ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதி என்பது அப்போதுதான் உறைத்தது. எவனோ ஒருவன் மேல்மட்டத்திலிருந்து செய்த ஊழலுக்காக கீழ்மட்டத்தில் உள்ள 25,000 ஊழியர்களை தண்டிப்பது எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. என் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்த நான் ஒருவேளை பணிநீக்க நடவடிக்கைக்கு நாம் ஆளாக்கப்பட்டால் அதை எதிர்த்தே தீருவது என்ற முடிவிற்கு வந்து அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள தயாரானேன்.

NDLF introduction:

இப்படி பணி நீக்க நடவடிக்கையை எதிர்க்க தீர்மானித்த பிறகு என் மனதில் வந்த முதல் விஷயம் 2014-ம் ஆண்டு TCS நிறுவனத்தை எதிர்த்து ஒரு பெண் நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றார் என்பதுதான். எனவே அது எப்படி சாத்தியமானது என்பதை பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் அந்தப் பெண் FITE சங்கத்தின் உதவியுடன் நீதி மன்றத்தை நாடினார் என்பதும் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அந்த வழக்கை வென்றார் என்பதும் தெரிந்தது. உடனடியாக நாமும் அந்த சங்கத்தில் சேர்ந்து விட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். தொலைபேசியில் அவர்களை தொடர்புகொண்டு இது பற்றி பேசிய பொழுது கோயம்புத்தூரில் இன்னும் நாங்கள் சங்க நடவடிக்கைகளை பெரிதாக துவங்கவில்லை எனவே அந்த முயற்சிகளை கூடிய விரைவில் நாங்கள் மேற்கொள்ள இருக்கிறோம் அப்பொழுது உங்களை நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.

பணிநீக்க நடவடிக்கைக்கு நாமும் உடனடியாக ஆளாகலாம் என்ற எண்ணம் என் மனதில் இருந்ததால் உடனடியாக வேறு ஏதாவது சங்கங்கள் கோயம்பத்தூரில் செயல்படுகிறதா என்பதை தேட ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் NDLF என்ற சங்கம் ஐ.டி கிளைகளை வைத்துள்ளது என்பதையும் அது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன். உடனடியாக அவர்கள் ஐ.டி பிரிவின் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தேன். அப்பொழுதுதான் எனது கம்பெனியில் வேலை செய்யும் பத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே சங்கத்தில் இணைந்து செயல்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டேன். உடனடியாக அவர்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து அவர்களின் whatsapp குரூப்பில் இணைந்து கொண்டேன்.

Labour Office:

ஏற்கனவே பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான மற்றும் என்னைப்போல் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாக இருக்கின்ற பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து தொழிலாளர் துறையை அணுகி புகார் கொடுக்கும்படி சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் நானும் சக ஊழியர்களும் தொழிலாளர் துறையை அணுகினோம். கம்பெனியில் நடைபெறும் அநீதிகளைப் பற்றி எடுத்துரைத்தோம், அதைப்பற்றி புகார் கொடுத்தோம்.

இதுபோன்று ஐ.டி துறையில் ஏற்படும் விஷயங்களெல்லாம் தொழிலாளர் துறையில் வேலை செய்யும் அலுவலர்களுக்கு புது அனுபவமாக இருந்தது என்பதை கண்கூடாக பார்த்தேன்.

HR entry to Labour Office:

தொழிலாளர் துறையின் வழக்கத்தின்படி எங்களிடமிருந்து எழுத்து மூலமாக வாங்கப்பட்ட புகார்கள் கம்பெனிக்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களை பேச்சுவார்த்தைக்காக தொழிலாளர் துறைக்கு அழைத்து ஒரு கடிதம் தொழிலாளர் துறையின் சார்பில் இருந்து அனுப்பப்பட்டது.

சரியாக 15 நாட்கள் கழித்து எங்கள் கம்பெனியின் HR, துறையிலிருந்து பேச்சுவார்த்தைக்காக தொழிலாளர் துறைக்கு வந்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் வெறுமெனே விஷயத்தை மட்டும் கேட்டுவிட்டு கம்பெனியில் விசாரித்துவிட்டு இதைப்பற்றிய முழு தகவல்களை தெரிவிப்பதாக சொல்லி விட்டு சென்றுவிட்டனர்.

அடுத்த பேச்சுவார்த்தை மீண்டும் 15 நாட்கள் கழித்து வைக்கப்பட்டது அதிலும் வந்தவர்கள் மழுப்பல் பதில்களையே கூறிவிட்டு காலம் தாழ்த்துவதிலேயே குறியாக இருந்தனர். கிட்டத்தட்ட நான்கு மாதம் இழுத்தடிக்கப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது. இதுவரை பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகாத ஊழியர்கள் கொடுத்த புகார்களில் எந்த முகாந்திரமும் இல்லை எனவும், அவர்கள் எந்த பணிநீக்க நடவடிக்கைக்கும் ஆளாக மாட்டார்கள் என்ற உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

இது ஒருபுறம் எனக்கு மன நிம்மதியை கொடுத்தாலும் எங்களது குழுவில் இருந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான வேறு சில ஊழியர்களின் புகார்கள் இன்னமும் அப்படியே இருப்பது கவலை அளிக்கத்தான் செய்தது.

Complaints of laid off employees:

என்னதான் எனது பிரச்சினை தீர்ந்து விட்டாலும் அவர்களுக்கும் ஒரு moral support கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்த காரணத்தினால் அவர்களின் புகார்களில் நடக்கும் விசாரணை மற்றும் அதன் போக்குகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டேன்.

இதுபோன்று பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்களின் மேல் வைக்கப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு என்னவென்றால் அவர்களாகவே ராஜினாமா செய்துவிட்டு கம்பெனியின் நற்பெயரை கெடுக்க இங்கு வந்து புகார் தெரிவிக்கிறார்கள் என்பதுதான். இதையெல்லாம் கேட்க கேட்க கம்பெனிகள் இதுபோன்று பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை திரும்பி பணியில் அமர்த்துவது ஒரு கௌரவ குறைச்சலாக பார்க்கிறது என்று நம்பினேன். அவர்களின் வழக்கம் அதுபோன்ற ஒரு திசையில்தான் பயணித்தது.

ஆனால் சில மாதங்கள் கடத்திய பிறகு இதுபோன்ற புகார்களை மறைக்க, HR, ஊழியர்கள் காட்டிய உத்வேகம், கம்பெனியின் board members தொழிலாளர் துறை முன்வந்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட பயம், அந்த புகார்களை திரும்பப் பெற 10 லட்சம் வரையில் கொடுக்க முன் வந்த விதம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒருவேளை HR, ஊழியர்கள்தான் ஏதோ தவறு செய்துவிட்டு அதை மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் எழத்தான் செய்தது.

எது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.

இதுபோன்ற கம்பெனிகளின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து போராடுவது சிரமமான காரியம் என்றாலும் அது காலத்தின் கட்டாயம்.

– வருண்குமார்

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-i-fought-against-forced-resignation/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் சாலை விபத்தில் மரணம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவரான திரு ஆர். சரவணன் சென்ற வாரம் ஒரு சாலை விபத்தில்...

மானியம், ஆதார், ரேசன் கடை – மக்களை ஏமாற்றும் மத்திய அரசு – வீடியோ

டிஜிட்டல் இந்தியா, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்ட் இவை எல்லாம் இந்திய மக்களை உலக பணக்காரர்களிடம் அடகு வைப்பதற்காக மோடி அரசு உற்சாகத்துடன் அமல்படுத்தும் திட்டங்கள்தான்.

Close