அடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம்!

“சுதந்திரத்தின் புகலிடம், அனைவருக்கும் வரம்பில்லா வாய்ப்புகள், முதலாளித்துவத்தின் சொர்க்கம்” என்று முதலாளித்துவ அறிஞர்களால் போற்றப்படுகிறது அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவின் வரலாறும், இன்றைய அரசியலும் அடிமை உழைப்பு சுரண்டலையும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஈவு இரக்கமின்றி நடத்தப்படுவதையும் அம்பலப்படுத்துகின்றன. 1865-ல் அடிமைமுறை சட்ட பூர்வமாக ஒழித்துக் கட்டப்படுவதற்கு முன்பும் பின்பும் இந்த நிலை தொடர்கிறது.

அடிமை முறை சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்டதன் 150-வது ஆண்டை ஒட்டி Counter Punch தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையின் ஆங்கில மூலத்தையும் தமிழ் மொழிபெயர்ப்பையும் இங்கு தருகிறோம்.

அடிமை வர்த்தகம், காலனிய கொள்ளை, தென் அமெரிக்க தங்க வேட்டை, இங்கிலாந்தில் விவசாயிகளை அவர்களது நிலங்களில் இருந்து பறித்து எறிந்தது இவற்றின் மீது கட்டி எழுப்பப்பட்டது நவீன முதலாளித்துவம். அமெரிக்க முதலாளித்துவம் பற்றிய இந்தக் கட்டுரை முதலாளித்துவத்தின் வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டை நமக்கு காட்டுகிறது.

டிசம்பர் 18, 2015  அடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம்! – கரிகாய் செங்கு

ன்று அமெரிக்காவின் கருப்பின அடிமைத்தனம் சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டதன் 150-வது ஆண்டுவிழா. அடிமைமுறை, மேற்கத்திய முதலாளித்துவத்தின் ஒரு விளைபொருள் என்கிற பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக மேற்கத்திய முதலாளித்துவம் அடிமைத்தனத்தின் ஒரு விளைபொருளாகும்.

அமெரிக்க சுதந்திரத்திற்குப் பிந்தைய 80 ஆண்டுகள் நடைபெற்ற அடிமைத்தனத்தின் விரிவாக்கம், அமெரிக்க பரிணாம வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் ஆகியவற்றுக்கு உந்து சக்தியாக விளங்கியது.

அழிந்துபட்டு வந்த புகையிலை தோட்டங்கள் நிரம்பிய ஒரு சிறிய கடற்கரைப் பகுதியாக விளங்கிய அமெரிக்காவின் தெற்கு, எவ்வாறு ஒரு மனிதனின் சராசரி வாழ்நாள் காலப்பொழுதில் ஒரு மாபெரும் பருத்தி சாம்ராஜ்யமாக உருவானது என்பதையும் அமெரிக்கா நவீன தொழில்துறையிலான முதலாளித்துவ பொருளாதாரமாக வளர்ந்தது என்று வரலாற்றாசிரியரான எட்வர்ட் பாப்டிஸ்ட் விளக்குகிறார்.

அடிமைகளை சித்திரவதைக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக்குவதன் மூலமாக அடிமை உரிமையாளர்கள், அடிமைகளிடம் இருந்து அதிக உழைப்பை கறந்தனர். இது தொழில்துறை புரட்சியின் முக்கிய மூலப்பொருளான பருத்திக்கான உலகச் சந்தையை கைப்பற்றி கட்டுப்படுத்த உதவியது. இதன் மூலம் அமெரிக்கா ஒரு வளமான சக்திவாய்ந்த நாடாக வளர்ந்தது.

20-ம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தில் நாடுகளின் செல்வத்தை தீர்மானிக்கும் வளமாக எண்ணெய் எவ்வகை முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறதோ, அவ்விடத்தில் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பருத்தி இருந்தது. அமெரிக்காவின் ஏற்றுமதிகளில் 50 சதவிகித இடத்தைப் பருத்தி பிடித்திருந்தது. இதன் மூலம் அமெரிக்கா கடந்து சென்ற பெருமளவு பொருளாதார வளர்ச்சிக்கான அடிக்கொள்ளியாக இருந்தது. இன்று முதல் உலக நாடாக விளங்கும் தனது இடத்துக்கு அமெரிக்கா அடிமைகளுக்கு கடன்பட்டிருக்கிறது.

சுருக்கமாகக் கூறினால், முதலாளித்துவமும் அடிமைமுறை அடிப்படையிலேயே பிணைந்துள்ளன. முதலாளித்துவம் இலவச உழைப்பு அடிப்படையிலானது, அடிமைமுறை கட்டாய உழைப்பு அடிப்படையிலானது. ஆயினும், நடைமுறையில், அடிமைத்தனம் இல்லாமல் முதலாளித்துவத்துவம் சாத்தியமாகியிருந்திருக்காது.

அமெரிக்காவில், அடிமைகள் பறித்த பருத்தி அல்லது அவர்களால் வெட்டப்பட்ட கரும்பு மூலம் மட்டும் அடிமைமுறை மூலம் ஆதாயம் ஈட்டப்படவில்லை என்பதை அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ரியல் எஸ்டேட், காப்பீடு, நிதித்துறை தொழில்களின் நிர்மாணத்திற்கு அடிமை முறை பிரதான பங்களித்திருக்கிறது

வால் வீதி அடிமைமுறையின் மூலம் நிறுவப்பட்டது. ஆப்பிரிக்க அடிமைகள் வால்வீதிக்கு, அதன் பெயரைக் கொடுக்கும் சுவரைக் கட்டினர்; டச்சு காலனியின் வடக்கு எல்லையாக அது உருவாக்கப்பட்டது. தங்களது நிலத்தை மீட்க விரும்பிய மக்களை எதிர்க்கும் வகையிலும் அவர்களை அந்த நிலத்திலிருந்து துண்டிக்கும் வகையிலும் அந்தச் சுவர் வடிவமைக்கப்பட்டது. 1711-ல் நியூயார்க் அதிகாரிகள் வால்வீதியில் ஒரு அடிமைச் சந்தையை நிறுவியிருந்தனர்.

ஜே.பி மார்கன் மற்றும் வச்சோவியா கார்ப் உள்ளிட்ட பல முக்கிய அமெரிக்க வங்கிகள் அடிமைகளை “இணைபொருளாக” ஏற்றுக்கொண்டன. “சுமார் 13,000 அடிமைகளை கடன்களுக்கு ஈடாகவும் சுமார் 1,250 அடிமைகளை விலைக்கு வாங்கியும் தன் வசம் வைத்திருந்ததாக” ஜே.பி மார்கன் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.

அமெரிக்க பள்ளி பாடப்புத்தகங்கள் அடிமைமுறை குறித்து சொல்லும் கதையில் அது வட்டார அளவிலானதாக சித்தரிக்கப்படுகிறது; அமெரிக்க தேசம் முழுவதிலும் அதற்கு பங்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அது ஜனநாயகமும், சுதந்திரமும் நிலவிய அமெரிக்க ஆட்சி முறைக்கு ஒரு மிருகத்தனமான பிறழ்ச்சி என்று அடிமைத்தனம் சித்தரிக்கப்படுகிறது. தேசத்தின் நவீன மயம் நோக்கிய பயணத்தில் இந்த அடிமைத்தனம் ஒரு துரதிர்ஷ்டம் என்று சாதிக்கிறது. அதாவது, அடிமைத்தனமானது, அமெரிக்க பொருளாதார செழிப்பைத் தூண்டிவிட்ட இயந்திரம் அல்ல. உண்மையிலேயிருந்து அப்பாற்பட்டது இதைவிட எதுவும் இருக்க முடியாது.

அமெரிக்க முதலாளித்துவத்திற்கு அடிமைத்தனத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக, லேமன் பிரதர்ஸ் என்றழைக்கப்படும் அலபாமா உலர்-பொருட்களின் நிறுவனத்தின் கலங்கிய வரலாற்றை மட்டும் பார்த்தால் போதுமானது.

வாரன் பஃபெட், பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அமெரிக்காவின் பணக்கார கோடீஸ்வரரும் ஆவார். பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் முன்னோடி நிறுவனம் ரோட் தீவைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி மற்றும் அடிமைத்தொழில் நிறுவனம் ஆகும்.

வடக்கில், நியூ இங்கிலாந்துதான் அமெரிக்கப் பருத்தி நெசவுத் தொழிலின் தாயகமாகவும் அடிமை ஒழிப்பு வாதத்தின் களமாகவும் விளங்கியது. தென் மாநிலங்களின் பருத்தி விவசாயத்தில், கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளின் முதுகில்தான் இந்த வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்தது. இது, நியூ இங்கிலாந்தின் தொழில்துறைப் புரட்சியை கட்டமைத்தவர்கள் பருத்தி விலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஏனெனில், தொலைதூரத் தோட்டங்களில் அடிமைகளின் உழைப்பு இல்லாமல் அவர்களது ஜவுளித் தொழிற்சாலைகள் அழிந்தே போயிருக்கும்.

“Complicity: How the North Promoted, Prolonged, and Profited from Slavery” என்ற “Anne Farrow” எழுதிய புத்தகம் அடிமை முறையும் வடக்கு முதலாளித்துவ வர்க்கமும் கோடிக்கணக்கான இழைகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகிறது: அடிமை உழைப்பு மூலம் கிடைத்த கரும்புச் சக்கைகளை கொண்டு அவர்களால் தயாரிக்கப்பட்ட ரம் முக்கோண வர்த்தகத்தின் ஒரு பகுதியாக விற்கப்பட்டது; அவர்கள் தெற்கு விவசாயிகளுக்கு பணம் கடன் கொடுத்தார்கள்; பிரிட்டனுக்கு விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான பருத்தி நியூ இங்கிலாந்து துறைமுகங்கள் மூலம் அனுப்பப்பட்டது.

சிவில் உரிமைகளின் நாயகனாக மாறினாலும், கறுப்பர்கள் வெள்ளையர்களுக்குச் சமமானவர்கள் என்று ஆபிரகாம் லிங்கன் நினைக்கவில்லை. லிங்கனின் திட்டம், அமெரிக்க கறுப்பின மக்களை ஆப்பிரிக்காவிற்கு திருப்பி அனுப்புவதாகும். அவர் படுகொலை செய்யப்படாதிருந்தால், ஆப்பிரிக்காவிற்கு கறுப்பர்களைத் திரும்பி அனுப்புவது சிவில் போருக்குப் பிந்தைய அவரது கொள்கையாக இருந்திருக்கலாம். லிங்கன், தனது சொந்த வார்த்தைகளில், அடிமை முறை ஒழிப்பு பிரகடனம் பிரிட்டனை சமாதானப்படுத்துவதற்கான “நடைமுறை யுத்த நடவடிக்கை” மட்டுமே என்று ஒப்புக் கொண்டார்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பின அடிமைத்தனம் சட்டரீதியாக முடித்து வைக்கப்பட்டது, அந்த மக்களுக்கு இன்றும் கிடைக்காத ஜனநாயக, பொருளாதார, இன சமத்துவத்திற்கான தேடலின் தொடக்கமாகவே அமைந்தது. இன்றும் அது அவ்வாறே தொடர்கிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய சகாப்தத்தில், அமெரிக்க உயர்குடியினர் முதலாளித்துவ நாகரீகத்தை ஒரு இனவாத மற்றும் காலனியாதிக்க நடைமுறையாகவே கருதியது. இன்று வரையிலும், அமெரிக்க முதலாளித்துவத்தை “இனவாத முதலாளித்துவம்” என்று மட்டுமே சித்தரிக்க முடியும்:

நவீன அமெரிக்காவின் வெள்ளை ஆதிக்கமும், முதலாளித்துவமும் கருப்பின அடிமைத்தன மரபோடு ஒரே நேரத்தில் பிணைந்ததிருந்தன.

அமெரிக்காவில், கருப்பின மக்கள் ஒரு இனவாத முதலாளித்துவ அமைப்பில் வாழ்கின்றனர். இனவாத முதலாளித்துவம், போலீசாரின் நவீனகால படுகொலை அணிவகுப்பு மூலமும், இலாப நோக்கிலான பெருவீத சிறைவாசம் மூலமும் , நிறுவன ரீதியான பொருளாதார சமத்துவமின்மை மூலமும் கருப்பு சிறுபான்மையினரின் மீது தனது அதிகாரத்தை செலுத்துகிறது. இனவாத முதலாளித்துவம் சந்தேகத்திற்கு இடமின்றி நவீன மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் ஆகும். .

கருப்பின மக்களின் சமத்துவத்துக்கான குறியீடுகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கா விட்டால்தான் அடிமைகளின் நாட்டில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் தலைமை பதவியில் அமர்வதை கொண்டாட முடியும்.

உண்மையில், ஒபாமாவின் ஆட்சியின் போது கருப்பின வெள்ளை இன குடும்பங்களின் சொத்து இடைவெளி, ஒரு வெள்ளை டாலருக்கு ஏழு கருப்புசென்டுகள் என்ற வீதத்தில் மட்டுமே இருந்தன. ஒபாமா பதவியில் அமர்ந்ததில் இருந்து, கருப்பின மக்களின் வேலையின்மை வீதத்துக்கும் வெள்ளையினத்தவரின் வேலையின்மைக்கும் இடையிலான வேறுபாடு நான்கு சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.

அமெரிக்க நாட்டின் காவல்துறை வரலாற்றுரீதியாக இனவாத முதலாளித்துவத்தை அமல்படுத்தி வந்திருக்கிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் நடத்தைகளைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட அடிமை ரோந்துகளும் இரவு கண்காணிப்புகளும்தான் அமெரிக்காவின் முதல் நவீன போலீஸ் படைகள் ஆகும்.

உள்நாட்டுப் போருக்கு முன்னர், அடிமை மக்களை ஒடுக்கவும் வெள்ளை அடிமை உரிமையாளர்களின் சொத்துக்களையும், நலன்களையும் பாதுகாப்பதற்கும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே சட்டபூர்வமாக போலீஸ் படை இருந்ததை வரலாறு தெளிவுபடுத்துகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் அடிமை ரோந்துக்கும், நவீன அமெரிக்க போலீஸ் கொடூரத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் அவ்வளவு எளிதில் நிராகரிக்கவோ அல்லது கடந்து செல்லவோ இயலாத அளவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அமெரிக்காவில் முதல் போலீஸ் படைகள் நிறுவப்பட்ட பின்னர் இனவெறி படுகொலைகள் முதலாளித்துவ சட்ட ஒழுங்குக்கு அடிப்படையாக இருந்தன. அடிமை முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட்ட பிறகு, அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான பயங்கரவாத அமைப்பான க்ளூ க்ளக்ஸ் கிளான் (The Klu Klux Klan) அமெரிக்க அரசின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்டது.
பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இது ஜிம் க்ரோ சட்டங்களின் சகாப்தத்தின் இறுதி வரை நிலவிய இனவாத பயங்கரவாதத்தின் காலாவதியான வடிவம் என்று நம்புகின்றனர். ஆயினும், தடையற்ற கருப்பின மக்கள் மீதான படுகொலைகள் மீதான அமெரிக்காவின் விருப்பம் காலப்போக்கில் மேலும் அதிகரித்து மோசமாகி வந்திருக்கின்றது.

கார்டியன் செய்தித்தாள் சமீபத்தில் வெளியிட்ட செய்தியின்படி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஒரு வாரத்திற்க்கு சராசரியாக 2 கருப்பின மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.

மேலே சொன்னதை அமெரிக்க உளவுத்துறையான FBI-ஆல் தொகுக்கபட்ட அறைகுறை தரவுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அதன்படி ஒரு வாரத்தில் 2 முறைக்கு மேல் ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர்கள் கொல்லப்படுகின்றனர். கருப்பின சமுதாயங்களில் போலீஸ் மிருகத்தனம் மிக மோசமாகி வருகிறது, குறையவில்லை என்பதையே இது தெளிவாக்குகிறது.

படுகொலை தூக்கிலிடுவதை மட்டும் குறிக்கவில்லை. அவமானப்படுத்துவது, சித்திரவதை செய்வது, எரிப்பது, துண்டு துண்டாக வெட்டுவது, விதையில் அடிப்பது ஆகியவை அதில் அடங்கும். ஒரு படுகொலை அமெரிக்க பொது சடங்காக இருந்தது, இது பெரும்பாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பொது இடங்களில் பெரிய எண்ணிக்கையிலான கூட்டங்களுக்கு முன்பாக நடைபெற்றது.

அடிமைத்தனம் அகற்றப்பட்டதற்குப் பின்னர், 1899-ம் ஆண்டில் ஸ்ப்ரிங்ஃபீல்ட் வீக்லி செய்தித்தாள் KKK நடத்திய ஒரு படுகொலையை விவரித்தது.

“ஒரு நீக்ரோ அடிமை அவரது காதுகள், விரல்கள் மற்றும் அவரது உடலின் பிறப்புறுப்புப் பகுதிகள் துண்டாக்கபட்டு உயிர் போவதற்கு முன்பே, குளிர்வதற்கு முன்பே உடல் துண்டுகளாக வெட்டப்பட்டது. உடல் வெட்டப் படும் போதே தன்னை விட்டு விடுமாறு அவர் பரிதாபமாக கதறிக் கொண்டிருந்தார். எலும்புகள் சிறு துண்டுகளாக நொறுக்கப்பட்டன. இதயம் பல துண்டுகளாக வெட்டப்பட்டது. அதே போல் அவரது கல்லீரலும்…சிறிய துண்டு எலும்புகள் 25 சென்ட் விலைக்கு விற்றன… “.

இனவாத முதலாளித்துவம் நிலைத்திருப்பதன் அடைப்படையாக இனவாத பயங்கரவாதம் உள்ளது. அதனால்தான் இன்றுவரை, அமெரிக்க அரசாங்கம் KKK ஐ உள்நாட்டு பயங்கரவாத அமைப்பு என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

இனவாத பயங்கரவாதம் கருப்பின சமூகங்களை நிறுவன ரீதியாக கட்டுப்படுத்தி சிறைப்படுத்தி வைப்பதுடன் கைகோர்த்து செல்கிறது. போதைப்பொருள் மீதான போர் என்கிற முகாந்திரத்தில், அமெரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை தென் ஆப்பிரிக்காவில் நிறவெறியின் உச்சத்தில் இருந்த எண்ணிக்கையை விட அதிகம்.

தனியார் சிறைச்சாலைகள் பணக்காரர்களால் பணக்காரர்களுக்காக வடிவமைக்கப்பட்டன. இலாபத்திற்கான இந்த சிறைச்சாலை முறை அதன் இருத்தலுக்காக கருப்பினத்தவரை சிறையில் அடைப்பதை சார்ந்துள்ளது. அமெரிக்காவும் இதுபோன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, 1850-ம் ஆண்டில் உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர் அடிமைப்படுத்தப்பட்டிருந்த எண்ணிக்கையை விட அதிகமான கருப்பின ஆண்கள் இன்று சிறைச்சாலையில் அல்லது பரோலில் உள்ளனர்.

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடிமை முறையையும் மீறி நடக்கவில்லை. அடிமை முறையின் மூலம்தான் நடந்திருக்கிறது. அந்த வகையில் அடிமைத்தனத்திற்க்கு அமெரிக்கா மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது. முதலாளித்துவம் அடிமைமுறையால் உருவானது, அடிமை முறையோ இன்றும் அமெரிக்காவில் தொடரும் இனவாத முதலாளித்துவத்தின் மரபை உருவாக்கியது.

வரலாற்று ரீதியாக அமெரிக்கா உயர்வாக தூக்கிப் பிடிக்கும் கொள்கைளுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வெளிப்படையான நிரந்தர இரண்டாம்-தர நிலைக்கும் இடையே கூர்மையான இடைவெளி உள்ளது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திர தேவி சிலை பல லட்சம் வெளிநாட்டவர்களின் வருகையை நியூயார்க்கில் பார்த்துக் கொண்டிருந்த போது, தெற்குப் பகுதி கருப்பின விவசாயிகளையும் தமது சொந்த மண்ணிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு சமூகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

அமெரிக்கா நாஜிக்களை போரில் தோற்கடித்த பிறகும் அமெரிக்காவில் இனவாத கருத்தியலின் பாசாங்குத்தனம் தொடர்கிறது. இன்றளவும் அமெரிக்காவின் இன சமனிலைக் குறியீடுகளும், இன உறவுகளும், அது ஒரு இனப் பாகுபாடற்ற தேசம் என்று அறியப்படுவதற்கு வெகு தொலைவிலேயே உள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயகப் பரிசோதனைக்கு அச்சுறுத்தலாகவும், மிகப் பெரிய தேசிய இக்கட்டாகவும் நிறவெறி உள்ளது. அடிமைத்தனத்தின் மிக நீண்ட மரபின் தொடர்ச்சியான இனவாத முதலாளித்துவத்தை முழுமையாக அம்பலப்படுத்தி முற்றிலும் அகற்றுவதை வரை கறுப்பின சமூகங்களின் கொந்தளிக்கும் அதிருப்தி ஒரு அபாயகரமான கொதிநிலையை நோக்கி உயர்ந்து கொண்டே செல்லும்.

மொழிபெயர்ப்பு – பிரியா

நன்றி : Counter Punch 

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-slaves-built-american-capitalism-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
எச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி? – ஐ.டி சங்கக் கூட்டம்

பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து...

ஐ.டி.துறையில் அடிமை வியாபாரம்!

ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல்...

Close