மனிதர்களுக்கு வேலை காலி இல்லை – ஆவணப்படம்

தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இதன் விளைவாக புதிய, புதிய தொழில்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய தொழில்களோடு, புதிய வசதிகளும் அதனை செய்வதற்கு புதிய, புதிய சேவைத் தொழில்களும் வந்து கொண்டே இருக்கின்றன. புதிய ஒரு தொழில்நுட்பம் வந்தால், பழைய தொழில்நுட்பத்தை வைத்து செய்யப்பட்ட வேலைகளும் மாறுகின்றன.

வங்கி, தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்டு அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்த்த மாற்றங்கள் மட்டுமல்ல, நமது பணியிடத்திலும் அத்தகைய மாற்றங்களை பார்த்திருக்கிறோம். உற்பத்தி அசெம்ப்ளி லைனில் தொழிலாளர்களின் இடத்தில் எந்திரங்கள் வந்து விட்டன. கார் தொழிற்சாலைகளில் பல டஜன் ரோபோக்கள் காரின் பாகங்களை பொருத்துகின்றன. அவற்றை கண்காணித்து இயக்குவதற்கான ஆப்பரேட்டர் மட்டுமே இருக்கிறார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்த பொருள் உற்பத்தித் துறையில் இன்று ஒரு சில 10 தொழிலாளர்களை வைத்து மட்டும் உற்பத்தியை இயக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முன்னேறிய நாடுகளில் தொழில்துறை வளர்ச்சிக்கு இணையாக விவசாயமும் எந்திரமயமாக்கப்பட்டது. இன்று அமெரிக்காவில் 2%-க்கும் குறைவான உழைப்பாளர்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பாவில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த உழைப்பாளர்கள் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட போது அவர்களை உள்வாங்கிக் கொள்ளும் வகையில் தொழில்துறை வேலை வாய்ப்புகள் பெருகின. இப்போதோ தொழில்துறையிலும் எந்திரமயமாக்கம் அதிகரித்து உற்பத்தித் திறன் பலமடங்கு பெருகி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவு அபரிமித வளர்ச்சி கண்டிருக்கிறது; அதில் ஈடுபடும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. எனவே, விவசாயத்தில் வேலை இல்லாமல் வெளியேறும் உழைப்பாளர்களுக்கு தொழில்துறையிலும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகிறது.

சரி, விவசாயத்திலும் வேலை இல்லை, தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு இல்லை, எல்லோருக்கும் அலுவலக பணிகளில் இடம் கிடைக்குமா என்று பார்த்தால், உடல் உழைப்பிலான வேலைகளை எந்திரமயமாக்கியது போல இன்றைக்கு அலுவலகப் பணிகளை தானியக்கமாக்கும் (ஆட்டோமேஷன்) மென்பொருள்கள் எழுதப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

மைக்ரோசாஃப்ட் எக்செல் விரிதாளில் ஒரு செயல்பாட்டை ஒரு முறை செய்து, பதிவு செய்து கொண்டு விட்டால், அந்த செயல்பாட்டை தேவைப்படும் போதெல்லாம் பல்வேறு தரவுகளின் மீது திரும்பத் திரும்ப தானாகவே செய்விக்கலாம். அது போல இன்னும் சிக்கலான கணக்கு போடுதல், அறிக்கை தயாரித்தல், கடிதம் எழுதுதல், தகவல் தொடர்பு போன்ற அலுவலக வேலைகள் பலவற்றுக்கு தானியக்கம் அமலாக்கப்பட்டு விட்டது. ஏன் கணினி மென்பொருள் துறையில் கூட தானியக்கம், கிளவுட் கணினி முறை, நிரல் எழுதும் மென்பொருட்கள், வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட சாதனங்கள் என்று மனித உழைப்பின் தேவை குறைந்து கொண்டே வருகிறது.

“விவசாயம், உற்பத்தி, அலுவலக பணிகள் எல்லாம் எந்திரமயமானாலும் சேவைத் துறை இருக்கிறது. அதில் எந்திரமயமாக்கம் சாத்தியமில்லை. கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் தேவைப்படுகிறார், மருத்துவத் துறையில், சட்டத் துறையில், ஏன் மென்பொருள் எழுதுவதற்கு பலர் தேவைப்படுவார்கள்” என்று சிலர் சொல்லலாம்.

ஆனால் அதுவும் மாறி வருகிறது. ஓட்டுனர் இல்லாத கார்கள் இன்று அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. காரை இயக்கும் கணினிகள் தமக்குத் தேவையான தகவல்களை கணினி வலைப்பின்னலில் (இணையம்) இணைந்து பிற கணிகளிடமிருந்து தேவையான தகவல்களை பெற்றுக் கொண்டு தமது செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
கார்களில் மேம்படுத்தப்படும் இந்தப் போக்குவரத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிடங்குகளில் பொருட்களை அடுக்கி வைத்தல், தேவைப்படும் எடுத்து வந்து அனுப்பி வைத்தல் போன்ற பணிகளுக்கும் நகரும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய சுரங்கங்களில் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் உழைப்பின் தேவையை குறைக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான, கடினமான உடல் உழைப்பை எந்திரங்கள் மாற்றீடு செய்வது நல்ல விஷயம்தானே, என்று கேட்கலாம். உண்மையில் நல்லதுதான். உதாரணமாக, கழிவுநீர் தொட்டியில் இறங்குவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக எந்திரங்களை ஈடுபடுத்தலாம், மலம் அள்ளுவதற்கு எந்திரங்களை பயன்படுத்தலாம். ஆனால், இத்தகைய வேலைகளுக்கு எந்திரங்கள் அமர்த்தப்படுவதற்கு முன்னதாக அலுவலகத்தில் கணக்கு போடும் வேலைக்கு எந்திரமயமாக்கம் வந்திருக்கிறது. ஏன்? ஏனென்றால், எந்திரத்துக்கு ஆகும் செலவு மனிதர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை விடக் குறைவாக இருந்தால் மட்டுமே முதலாளிகள் எந்திரத்தை வாங்கி வேலையில் ஈடுபடுத்துவார்கள்.

சரி உடல் உழைப்பு, மூளை உழைப்பு எல்லாம் எந்திர மயமானாலும் சிறப்பு அறிவை பயன்படுத்தும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் தொடர்ந்து தேவைப்படுவார்கள் என்று தோன்றலாம்.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடுவதை விட அதிக நேரம் செலவழிப்பது ஒரு வழக்குக்கான ஆதாரங்கள், முன் உதாரணங்கள், ஆவணங்களை படித்து தயாரிப்பது போன்ற வேலைகளுக்கு. ஒவ்வொரு மணி நேரம் நீதிமன்றத்தில் வாதிடுவதற்கும் பல நாட்கள் முன்தயாரிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருப்பார்கள்.இப்போது மென்பொருட்கள் மூலம் லட்சக்கணக்கான ஆவணங்கள், பழைய வழக்குகள் பற்றிய விபரங்கள் இவற்றை சேகரித்து வைத்து அவற்றிலிருந்து தேவையான விபரங்களை தொகுத்து வழக்கு ஆவணங்களை தயாரிக்கும் பணியை கணினிகள் செய்து முடித்து விடுகின்றன. அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது.

மருத்துவர்களின் பணியிலும் இத்தகைய மென்பொருட்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான மருந்துகள், அவற்றின் தன்மைகள், அவற்றை பயன்படுத்துவதன் விளைவுகள், பிற மருந்துகளுடன் அவற்றின் எதிர்விளைவு இவை அனைத்தையும் ஒரு மருத்துவர் நினைவில் வைத்திருக்க வேண்டும். கணினி மென்பொருட்கள் இவை அனைத்தையும் சேமித்து வைத்து பயன்படுத்துவதோடு, கணினி வலைப்பின்னல் மூலமாக பிற கணினிகளோடு தொடர்பு கொண்டு தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். புதிய கண்டுபிடிப்புகளை அப்டேட் செய்து கொள்ள முடியும்.

நுணுக்கமான அறுவை சிகிச்சை, சிக்கலான வழக்குகள் ஆகியவற்றுக்கு மட்டுமே மருத்துவர்களும், வழக்கறிஞர்களும் தொடர்ந்து தேவைப்படுவார்கள். ஆனால், அது மேலும் மேலும் குறைந்த எண்ணிக்கையில், ஒரு சிலர் மட்டுமே தேவைப்படுவதாக மாறி விடும். ஆரம்ப நிலை வேலை வாய்ப்புகளில் பெரும்பாலானவை ஒழிக்கப்பட்டு விடும்.

ஓவியம் வரைதல், இசை அமைத்தல், பத்திரிகையாளர் போன்ற படைப்புத் திறன் கொண்ட துறைகள் என்னவாகும்? இதிலும் மிகத் திறமை வாய்ந்த, புகழ் பெற்ற ஒரு சிலரை தவிர நிலைத்து நிற்க முடியாது. கணினி மென்பொருட்கள் நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்து தள்ளி விட முடியும், இசை மென்பொருட்கள் இசைஅமைக்க முடியும். வானிலை அறிக்கை, பங்குச் சந்தை செய்தி, விளையாட்டுச் செய்திகள் போன்றவற்றை எழுதும் மென்பொருட்கள் வந்து விட்டன. கணினிக்குள் விபரங்களை உள்ளிடும் மனிதர்களுக்கான வேலையையும் ஒழித்துக் கட்டி தானியக்கமாக கணினியே விபரங்களை உள்வாங்குவதற்கான உணரிகள் (sensors) பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வளவு மாற்றங்களும் வரும் போது இவற்றை எல்லாம் உருவாக்கி, இயக்கி, பராமரிக்கும் தொழில்நுட்பங்களில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்புகள் இன்றைய வேலை வாய்ப்புகளை விட பல மடங்கு குறைவாக, உழைப்பாளர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிப்பதாக இருக்கப் போவதில்லை.
நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று ஒரு சில நூறு பேருக்கு மட்டும் வேலை செய்யும் வாய்ப்பு இருந்து மற்ற அனைத்து வேலைகளும் எந்திரங்களால் செய்யப்பட்டு விட்டால் என்ன ஆகும்?

மிகக் குறைந்த அளவு உடல், மூளை உழைப்பிலேயே மனித குலம் அனைத்துக்குமான அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைந்து விடும். யாருக்கு என்ன தேவையோ அதை தேவையான அளவுக்கு பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தத்தமது திறமைக்கு ஏற்றபடி வேலைகளில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று நிலை உருவாகும் என்று சிலர் கருதலாம். ஆனால், இது தனிச்சொத்துடைமை நீடிக்கும் வரை சாத்தியமில்லை. தனிச்சொத்துடைமை மீது கோட்டை கட்டி வாழ்ந்து வருகின்ற முதலாளித்துவம், மனிதகுலத்தின் சாதனைகளான அத்தகைய தொழில்நுட்பங்களை தனிச்சொத்துடைமையாக தன்வசம் பிடித்து வைத்துக் கொண்டு, கோடிக்கணக்கான மக்களை வறுமையிலும் இல்லாமையிலும் தள்ளிக் கொண்டிருக்கிறது. உலகை அழிவை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறது.

மனித குலத்தின் கடந்த கால உழைப்பை தனிச்சொத்துடைமையாக கைப்பற்றி வைத்துக் கொண்டு, நிகழ்கால உழைப்பை தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கும் முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டி உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் சமூக உடைமையாக மாற்றுவதுதான் இந்தப் பிரச்சனைக்கான ஒரே தீர்வு. இதை நோக்கி போராடுவதுதான் தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

Humans Need Not Apply என்ற ஆவணப்படத்தை தழுவி எழுதப்பட்டது.

– குமார்

புதிய தொழிலாளி, ஜூன் 2017

Permanent link to this article: http://new-democrats.com/ta/humans-need-not-apply-documentary/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டது

கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும்,...

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை

விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ,...

Close