நான் ஒரு பெண், பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்!

நூல்: நான் ஒரு பெண்.
பெண்கள் தொடர்பான “சரிநிகர்” கட்டுரைகளின் தொகுப்பு (1990 – 1996)
மூலம்: ஜக்குலின் அன் கரின்
தமிழில் : செல்லம்மா
பாரதி வெளியீட்டகம்

ந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் சமகால செய்திகள், நிகழ்வுகளை தொட்டுச் செல்கின்றன. சிறுமியர் பாலியல் வன்முறைக்குள்ளாப்படுவதில் ஆரம்பித்து மேக் அப் மீதான பழிப்புகள், நடை உடை பாவனைகளை குற்றம் சாட்டுவது, பெண்ணை பொருளாக காட்டுவது என்று ஒவ்வொன்றும் தொடர்கின்றன.

நான் ஒரு பெண்

நான் ஒரு பெண்நான் ஒரு பெண், நான் ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்.

ஏனென்றால் நான் ஒரு பெண். பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்.

என்னையும் என் போன்றவர்களையும் இந்தச் சமூகம் நோக்குகின்ற முறைக்கெதிராக குரல் எழுப்புமாறு நான் நிர்ப்பந்திக்கப்படுகிறேன். பெண்களை முழுமையாகவும், தனிநபராகவும், ஆண்கள் அனுபவிக்கும் முறைக்கெதிராகவும், நான் குரல் எழுப்புகிறேன். பெண்களைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் முறை பெண்கள் கூட தம்மை அப்படிப் பார்க்கும் படி. செய்துவிடுகின்றது.

நான் ஒரு பெண் ; மற்ற பெண்களையும் போலவே அறிவுள்ளவள்; சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள்;எனக்கென சொந்தமான புத்தியும் கொண்டவள்; என்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களில் தங்கி நிற்பதற்கு நான் ஒன்றும் மூளை இல்லாதவளோ முட்டாள் பிரஜையோ அல்ல.

நான் உணர்வு பூர்வமாகவும் ஆனவள் மட்டுமல்ல எனக்கென எந்த யதார்த்த இலட்சியங்களை நான் உருவாக்கிக் கொள்கிறேனோ அவற்றையெல்லாம் அடையக் கூடியவளும் கூட.

எனக்கும், என்போன்றவர்களுக்கும் உரித்தான உறுதியும், சக்தியும் ஒரு பெண் என்ற முறையில் என்னிடம் இருக்கின்றன.
நானோ அல்லது மற்ற பெண்களோ நம்பிக்கை இழந்த நிலையில் தன்னம்பிக்கை அற்றவர்களாய் சொந்தப் பாதுகாப்பிற்காகவோ, அல்லது சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவோ குடிவெறியிலும் சிகரெட் புகையிலும் மூழ்குகின்ற இளம் ஆண்களின் கைகளைப் பற்றிக் கொள்ள விரும்புவதற்கு ஒன்றும் அழகான‌ மூளை அற்ற பிராணிகள் அல்ல.

அப்படியென்றால், பெண்கள் தொடர்ச்சியாக கீழ்த்தரமான முறையில் சிறுமைப்படுத்தப்பட்டும், வக்கிர மனோபாவத்துடனும் சித்திரிக்கப்பட்டும், பொதுசன தொடர்புச் சாதனங்களில் விளம்பரப்படுத்துவது ஏன்? நான் சினிமாவுக்குப் போகும் போது ஒவ்வொரு முறையும், அதில் காண்பிக்கப்படும் விளம்பரங்களில் பெண்கள் சித்திரிக்கப்படும் விதங்களைக் கண்டு என்னை நானே இறுகக் கட்டிக் கொள்வதும், பற்களை நறநறவென கடித்துக் கொள்வதும், அருவருப்படைவதும் ஏன்?

இவை போன்ற. பெண்களுக்கெதிரான மோசமான கருத்துக்களை விட்டுவிடாது கட்டிக் காப்பாற்ற எமது சமூகம் வற்புறுத்துவது ஏன்? ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கின்ற உரிமைக்கான மதிப்பைப் படிப்படியாக அழித்து அவதூறு செய்யும் இவ்வாறான விளம்பரங்களை அரசாங்கம் அனுமதிப்பது ஏன்?

திரைகளிலும் பத்திரிகைகளிலும் இது போன்ற சித்திரிப்புகளை பார்க்கிற போதெல்லாம் பெண்களும் சரி, ஆண்களும் சரி ஒரே மாதிரியாக எவ்வித எதிர்ப்புணர்வுமின்றி அமைதியாக இருக்கிறார்களே ஏன்?

நாம் பார்ப்பதையெல்லாம் உண்மையென நம்புமளவிற்கு எமது மூளைகள் சலவை செய்யப்பட்டு விட்டதனாலா? எனவே அவற்றைப் பற்றிக் கதைப்பதில் அர்த்தம் இல்லை என்பதனாலா?

நான் ஒரு பெண், ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்.

நான் தகுதியும், சுயமரியாதையும் எனக்குரிய பெருமையையும் மதிப்பையையும் கொண்ட ஒரு மனித ஜீவி. அப்படியெனில் என்மீதும் என் போன்றவர்கள் மீதும் ஆண்கள் தொடர்ச்சியாக ஓநாய்கள் போல் சீழ்க்கையடிப்பதும், ஏளனமாகச் சிரிப்பதும், இகழ்ச்சியுடன் பேசுவதும் ஏன்?

மிருகங்களுக்கு மட்டுமே செய்யக்கூடிய பாணியிலான தொல்லைகளை அவர்கள் தொடர்ந்தும் எமக்குத் தருவது ஏன்?
பாலியல் தொல்லைகள் அவை எந்த வடிவில் வந்தாலும் கூட பெண்களை மிக ஆழமாகச் சிறுமைப்படுத்துகின்ற, இழிவுபடுத்துகின்ற தன்மையையே வெளிப்படுத்துகின்றன, மெல்லிய உடலமைப்பும், கருணையும், அழகும் உடைய, ஆண்களின் பாவனைப் பொருட்களாக, அவர்களுக்கு மகிழ்வூட்டும் பொருட்களாக இருக்க வேண்டியவர்களே பெண்கள் என்ற கண்ணோட்டத்திலிருந்தே இப்போக்கு எழுகிறது.

பெண்கள் உடமை கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும், பின் தேவையற்ற போது வீசி விடுவதற்குமான பாலியல் பொருட்கள் மட்டுமே. இவற்றை உடலியல்ரீதியாக அடையமுடியாது போகின்ற போது பெண்களை தங்கள் மனம்போன போக்கில் எல்லாம் கேளிக்கை செய்கின்றார்கள். தங்களுக்கு அடிமைப் பட்டுப் போக ஒருத்தி வரும் வரை இவ்வாறு மனத்தளவில் அனுபவிப்பதற்கும், காதலிப்பதற்கும், மற்றப் பெண்களைப் போலவே நானும் ஒன்றும் இறைச்சித் துண்டல்ல. என்னை அடிமையாக்கி அவர்களின் பரந்த எதிர்பார்ப்புகளை வரிசையாகத் திருப்தி செய்த பிறகு, கழித்து விடுவதற்கும் நான் ஒன்றும் இறைச்சித் துண்டல்ல.
நான் ஒரு பெண், அதற்காகப் பெருமைப்படுகின்ற ஒருத்தி.

உலகம் எனது அழகை வரைவிலக்கணப்படுத்தியபடி அல்லாமல் எனது வரைவிலக்கணப்படி நான் அழகான பெண். அதற்காகப் பெருமைப் படுகிறவள். என்னுடைய உடற்பலத்தில், என்னுடைய சகிப்புத் தன்மையில், எனது விடா முயற்சியில் எனக்குள்ளேயே ஒரு பெண்ணாக இருப்பதில் இருக்கின்றது, என்னுடைய அழகு, என்னுடைய முழுமையும் பெண்ணாக இருப்பதிலேயே என் அழகு இருக்கிறது. நான் பார்க்கும், அலங்கரிக்கும், நடக்கும் போக்குகளில் இது ஒன்றும் தங்கியிருக்கவில்லை.

அப்படியானால், பெண்களை நீச்சலுடையில் அணிவகுக்க வைக்கின்ற வக்கிரமான அழிவு நடவடிக்கைகளில் பெண்களை ஈடுபடுத்தி, அவர்கள் அழகாகவும் மெலிந்த உடல்வாகு உடையவர்களாகவும் இருக்கிறார்களா என்று இன்றைய பெரிய விமான சேவையாளர்கள் எல்லாம் பரீட்சித்துப் பார்ப்பது எதற்காக?

இந்த வகையான முறை கெட்ட செயல்களுக்கெல்லாம் பெண்கள் தம்மை ஈடுபடுத்த அனுமதிப்பது ஏன்? பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் வேண்டுமாயின் முக்கியமாக வழவழப்பான அழகான ஒடுங்கிய கவர்ச்சிகரமான உடல் அமைப்புகளைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுபவர் களின் முகங்களில் பெண்கள் காறித்துப்பாதது ஏன்?

இவைகள் எல்லாம் ஒருவகை பாலியல் சுரண்டல்களோ என பெண்கள் இன்னமும் உணராமல் இருப்பது ஏன்? பெண்களின் முக்கியத்துவமும், ஆளுமையும் பார்வையிலேயே கணிப்பிடப்படுகின்றன. அவளும் தனக்கான கணிப்பீட்டை மற்றவர்கள் பார்க்கும் முறையிலேயே செய்து கொள்கிறாளே ஏன்?

நான் ஒரு பெண். ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள்.

மற்றெல்லாப் பெண்களைப் போலவே நானும் எனது உடலுக்காகப் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் என் உடல் ஆண்களுடையதில் இருந்து வித்தியாசமானதாயும் தனித்துவமுடையதாயும் இருக்கிறது. மற்ற பெண்களைப் போலவே நானும் ஒரு பெண்ணாயிருப்பதற்கான எனது இயற்பண்புகளுக்காகப் பெருமைப்படுகிறேன். எனது பெண்மைக்காகவும், அதன் பாலியற் தன்மைக்காகவும் கூட, அப்படிப் பெருமைப்படுவதற்கான சகல உரிமைகளும் எனக்கும் இருக்கின்றன.

நாங்கள் ஆடைகளை அணிவதும், அலங்காரப்படுத்துவதும், தலைவாருவதும் நாங்கள் எங்களுக்காகச் செய்பவை, மற்றவர்களின் கேடு கெட்ட மகிழ்ச்சிக்காக அல்ல. ஏனெனில் நாங்கள் நாங்களாகவும் பெண்களாகவும் இருப்பதில் பெருமைப்படுகிறோம்.
எனவே ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்ற போதெல்லாம், அவள் கவர்ச்சிகரமாகவும் உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் உடையணிந்திருந்ததே அதற்குக் காரணம்;எனவே அவளுக்கு அது தகும் என்று இன்னமும் இச்சமூகம் விடாப்பிடியாக கூறி வருவது ஏன்? இக்குற்றச்சாட்டையே பாலியல் பலாத்காரம் செய்யும் கயவர்களும் பெண்கள் மீது சுமத்துவது ஏன் ?

எட்டு வயதுப் பெண் பிள்ளை மிகவும் கடுமையான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்ற வேளைகளில் கூட ஏனைய பெண்களும் இக்குற்றச்சாட்டை நம்புவது ஏன்?

ஆண்கள் கவர்ச்சியாக ஆடையணிந்து அலங்கரித்துச் சென்றால் குற்றம் சாட்டப்படுகின்றார்களா? அல்ல; அவன் அப்படி அழகாக இருந்து கொண்டு பாலியல் தேவைகளுக்காக அழைக்கும்போது குற்றம் சாட்டப்படுகின்றானா? நான் நினைக்கவில்லை?
அப்படியானால், அவர்களுக்கெதிராக நடாத்தப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு அவர்களே பழிகாரர்களாக்கப்படுவது ஏன்? இந்தப் பாலியல் பலாத்காரம் அவர்களை நாதியற்றவர்களாய் குற்றவாளிகளாய் குறுகிப்போக வைப்பது ஏன்?
இந்தச் சமூகம் பெண்களைப் பாரபட்சமாக நடாத்துவதால் அல்லாமல் வேறு எதனால் இவையெல்லாம் நடக்கின்றன.
நான் ஒரு பெண், ஒரு பெண்ணாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்த உலகம் என்னைச் சுரண்டியும் மோசடி செய்தும், சிறுமைப்படுத்தியும் என்னை ஒரு காட்சிப் பொருளாக குறைத்து அவமதித்தும் நடாத்தினாலும் கூட நான் நானாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்,

நூல்: நான் ஒரு பெண்.
பெண்கள் தொடர்பான “சரிநிகர்” கட்டுரைகளின் தொகுப்பு (1990 – 1996)
மூலம்: ஜக்குலின் அன் கரின்
தமிழில் : செல்லம்மா
பாரதி வெளியீட்டகம்

Click to access 628.pdf

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/i-am-a-woman-and-proud-of-it/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போராடும் உரிமையை மறுக்கும் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை – நீதிபதி கட்ஜூ

தமிழ்நாடு போலீசும், அதிகாரிகளும் தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமையை அப்பட்டமான முறையில் மீறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும், இல்லாவிடில் இந்த சட்டவிரோத செயலில்...

மே தினம்

பிரிட்டிஷ் ஆட்சியின் கங்காணி முறை ஒப்பந்தத் தொழிலாளர் முறை என நவீன வடிவில் புகுத்தப்பட்டுள்ளது, ஏன்?

Close