ஐ.டி.ஊழியர்கள் பெரும்பாலும் தங்களைத் தொழிலாளர்களாகக் கருதிக்கொள்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் நமக்குப் பொருந்தாது என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கத்திற்கு தனது வேலை பறிபோய்விடும் என்ற பதைபதைப்புடனோ அல்லது வேலை பறிபோய்விட்டது இனி என்ன செய்வது என்ற குழப்பத்துடனோ வரும் ஊழியர்களிடம், தாங்களும் ஒரு தொழிலாளிதான், தங்களுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்தும் என உணரவைப்பதுதான் எங்களுக்கு முதல் வேலையாக இருக்கிறது.
ஐ.டி. நிறுவனங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ள கலாச்சாரம் தான் ஊழியர்களின் இந்தத் தவறான புரிதலுக்கு முக்கிய காரணம். இதனை நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று நிலைநாட்டிட வேண்டும் என்று ஐ.டி. நிறுவனங்கள் விரும்புகின்றன. தொழிலாளர் நீதிமன்றங்களில் நமது சங்கம் சார்பாகவும், உறுப்பினர்கள் சார்பாகவும் பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்திலும் நிர்வாகத்தின் தரப்பில் எழுப்பப்படும் முதல் பிர்ச்சனையே இவர்கள் தொழிலாளர்களே அல்ல, தொழிலாளர் நலச் சட்டங்கள் இவர்களுக்குப் பொருந்தாது என்பதுதான்.
ஏற்கெனவே நமது புஜதொமு ஐடி ஊழியர் பிரிவு சார்பாக கடந்த 2015ம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், ஐ.டி. ஊழியர்கள் அனைவரும் தொழிலாளர்களே அவர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் உள்ளது. அவர்கள் தொழிலாளர் ஆணையத்திடமும், தொழிலாளர் நீதிமன்றத்திலும் தங்களது குறைகளுக்காக முறையிடலாம் என்று தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அப்படியிருந்தும் ஒவ்வொரு முறையும் ஐ.டி. ஊழியர்கள் தொழிலாளர்கள் இல்லை. புரோஜக்ட் மேனேஜர் என்பவர் தொழிலாளி இல்லை என்று நிறுவனங்கள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றன.
இதே போன்றுதான் HCL நிறுவனத்தால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட நமது சங்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தொடுத்த வழக்கில் அவர் தொழிலாளயே இல்லை என்ற வாதத்தை நிறுவனம் முன்வைத்தது. இதனை ஒரு சுவராசியமான பிரதி வாதத்தின் மூலம் நமது வழக்கறிஞர் முறியடித்துள்ளார்.
நமது சங்க உறுப்பினர் தொழிலாளர் நல ஆணையத்தில் தனது சட்டவிரோத வேலை நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த போது ’இவர் தானாகவே தான் முன் வந்து வேலையை ராஜினாமா செய்தார் நிறுவனம் எந்த வகையிலும் இவரை வற்புறுத்தி ராஜினாமா செய்ய சொல்லவில்லை’ என்று HCL நிறுவனம் கூறியது அதன்பின் அங்கு சமரச முறிவு ஏற்பட்டு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கிற்கு வந்தபொழுது ’இவர் மேலாளர் (manager) பிரிவில் வருவதால் தொழிற்தகராறு சட்டம் (Industrial Disputes Act) இவருக்கு பொருந்தாது’ என்று கூறி ஒரு இடைக்கால முறையிட்டினை (Interim Application IA) தாக்கல் செய்தது.
நிறுவனத்தின் இந்த வாதத்திற்கு பதில் அளித்து நமது வழக்கறிஞர் சார்பாக முன்வைத்த பிரதிவாதமானது “ஒரு கிரிக்கெட் குழுவில் கேப்டன் என்பவர் அக்குழுவில் இருக்கும் விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் உதவுவதோடு எப்படியெல்லாம் விளையாட வேண்டும், விளையாட்டின்போது என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பது பற்றியெல்லாம் அறிவுறுத்தி அந்த விளையாட்டு குழுவை வழிநடத்தி செல்வதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழுவில் அவரும் ஒரு வீர்ராக களத்தில் இறங்கி விளையாடுகிறார். அது போலத் தான் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேலாளர் என்பவர் கிரிக்கெட் கேப்டன் போல் தனக்கு கீழுள்ள தொழிலாளர்களை வழி நடத்து செல்வதோடு மட்டுமல்லாமல் அவரும் ஒரு தொழிலாளியாக வேலை செய்கிறார், எனவே மேலாளர் என்பவரும் தொழிலாளி என்ற பிரிவில் தான் அடங்குகிறார்” என்று வாதிட்டுள்ளார். இந்த வாதத்தினை கேட்ட நீதிபதி பிரதி வாதத்தை ஏற்றுக்கொண்டு நிறுவனம் தாக்கல் செய்திருந்த இடைக்கால முறையிட்டினை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு நாம், தமிழக அரசினை, நமக்கு உள்ள உரிமைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கச் செய்தது போன்று, இதுவும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஐ.டி.. ஊழியர்கள் அனைவரும், புரோஜெக்ட் மேனேஜர் உட்பட அனைவரும், தொழிலாளர்களே என்று நமது தொழிலாளர் நல நீதிமன்றமே இன்று உறுதி செய்துள்ளது. ஆனால் ஐ.டி. ஊழியர்களாகிய நாம் இதனை என்று உறுதி செய்யப் போகிறோம்.
- ராஜதுரை.