பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

ஜூன் மாதம் முதல் வாரம் புது டெல்லிக்கு அருகில் குருகிராம் (குர்கான்) பகுதியில், மிட்சுபிசி ஆலை தொழிலாளி ஒருவர் தன்னை வேலைநீக்கம் செய்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியைத் (HR) துப்பாக்கியால் சுட்டுள்ளார். வேலைநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் இது போல் தங்களது மேலாளரை, அல்லது மனிதவள அதிகாரியைத் தாக்குவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

  • 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அருகில் நோய்டாவில் இத்தாலிய நிறுவனமான கிராசியானோவின் நிர்வாக இயக்குனர் வேலை நீக்கம் செய்யப்பட்ட 200 தொழிலாளர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
  • 2009-ம் ஆண்டு கோவையில் செயல்படும் பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்த மோதலில் அதன் எச்.ஆர் அதிகாரி ராய் ஜார்ஜ் கொல்லப்பட்டார்.
  • 2012-ம் ஆண்டு டெல்லி மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையில் நடந்த மோதலில் ஒரு எச்.ஆர் அதிகாரி தீயில் சிக்கி உயிரிழந்தார்.

இத்தகைய தாக்குதல்களுக்கான அடிப்படை என்ன? முதலாளித்துவ லாப வெறி அதிகரிக்க அதிகரிக்க, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் தீவிரமாகிறது; வேலைச்சுமையும் அதிகரிக்கிறது. ஆலைக்குள் நுழையும் தொழிலாளி வெளியே செல்லும்வரை ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்குப் போட்டு வேலைவாங்குவது, உணவு இடைவேளையைக் குறைப்பது, ஏன் கழிவறைக்குச் செல்லும் நேரத்தைக் கூட கணக்கிட்டுக் கட்டுப்படுத்துவது என ஒரு தொழிலாளியை எப்படியெல்லாம் பிழிய முடியுமோ அப்படியெல்லாம் பிழிந்து உற்பத்தி வேகத்தை அதிகரிக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக மாருதி மானேசர் தொழிற்சாலையில் 2012-ம் ஆண்டு பணி நிலைமை பற்றிய ஒரு விவரிப்பை பார்க்கலாம்.

“மானேசர் ஆலையை பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமானால் அது 50 விநாடிகளில் ஒரு கார் உற்பத்தியாகும் இடம். மாருதி சுசுகி காரின் மூன்று அடிப்படை மாடல்களுடைய 180 வேறுபட்ட வடிவங்கள் இந்த ஆலையில் உற்பத்தி ஆகின்றன. கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும் ஒரு கார் எந்த வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்.

அதன் ஸ்டியரிங் வலது புறமா, இடது புறமா, அதன் எரிபொருள் பெட்ரோலா, டீசலா, எரிவாயுவா, ஏ.சி உள்ளதா இல்லாததா, இருக்கைகளில் என்ன ரகம், டயர்கள் மற்றும் வீல் அசெம்பிளிகளில் எந்த வகை, கதவுகள், பூட்டுகள், கியர் பாக்ஸ்கள், டாஷ் போர்டுகள் போன்ற காரின் அனைத்து அங்க அவயங்களின் பட்டியலையும் தாங்கி அந்தக் கார் கன்வேயர் பெல்ட்டில் நகர்ந்து வரும். அந்தப் பட்டியலைப் பார்த்து, காரின் இனத்தை புரிந்து கொண்டு, தொழிலாளி அதன் மீது வினையாற்ற வேண்டும். ஒரு நொடி அதிகமானாலும் விளக்கு எரியும். எந்தத் தொழிலாளியினால் உற்பத்தி இழப்பு என்று பதிவாகும். நரம்புகள் முறுக்கேறித் தெறிக்கும் பதட்டத்துடனும், கை நடுக்கம் இல்லாத நிதானத்துடனும் ஐம்புலன்களையும் குவித்து தொழிலாளி தனது பணியை செய்து முடிக்க வேண்டும். முடித்ததும் அடுத்த கார் வந்து நிற்கும்.

தொழிலாளியின் இயற்கைத் தேவைகளான தண்ணீர் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, பணி இடையில் சிறிது ஓய்வு போன்றவையெல்லாம் வீணாகும் நேரம் என்று கருதும் நிர்வாகம்.

மதிய உணவுக்கென ஒதுக்கப்படும் 30 நிமிடங்களுக்குள் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று உணவு பெற்று, அவசர அவசரமாக விழுங்கிவிட்டுத் தாமதமின்றி பணிக்குத் திரும்பிடவேண்டும். ஒரு நிமிடத் தாமதத்துக்குக் கூடச் சம்பளம் வெட்டப்படும். ஒவ்வொரு ஷிப்டிலும் இரண்டு முறை கழிவறைக்கும் கேண்டினுக்கும் சென்று திரும்ப ஏழரை நிமிடங்கள் என்ற வீதம் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அடுத்த ஷிப்டிற்கான ஆள் வராவிட்டால் 16 மணிநேர வேலை கட்டாயமாகப் பார்க்க வேண்டும்.

தொழிலாளி ஒருநாள் விடுப்பெடுத்தால் ஊக்கத் தொகையில் ரூ.1,500/ ம், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் வெட்டப்படும்.”

ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட பலமடங்கு அதிகமான லாப வீதத்தை எட்டிவிட வேண்டும் என்பதை இலக்காக முதலாளிகள் வைக்கின்றனர்; அதற்கு ஏற்றாற் போல திட்டமிட்டு, தொழிலாளர்களின் வேலைப் பளுவை அதிகரித்து திட்டமிட வேண்டியது மேலாளர்களின் வேலை. அதை அமல்படுத்தி தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் கங்காணிகளாக அவர்கள் செயல்படுகின்றனர். எச்.ஆர் அதிகாரிகள் இந்த உபரி கறத்தலை கண்காணித்து, தொழிற்சாலை ‘சட்ட ஒழுங்கை” நிலைநாட்டும் தொழிற்சாலை போலீஸ்காரர்கள்.

லாப வீதத்தை அதிகரிக்க இன்னொரு வழி செலவைக் குறைப்பது, தொழிலாளர்களை தனித்தனியாகவோ கொத்து கொத்தாகவோ, ஒட்டு மொத்தமாகவோ வீட்டுக்கு அனுப்பி விட்டு புதிய இளம் தொழிலாளர்களை குறைந்த கூலியில் அமர்த்துவது பிரத்யோக உத்தி. இவ்வாறு முதலாளித்துவ இலாபவெறிக்கு இரையாக தீவிர உழைப்புச் சுரண்டலுக்கும் வேலை இழப்புக்கும் உள்ளாகும் தொழிலாளர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தும் போது அவர்களது கண்முன் நிற்பது எச்.ஆர் அதிகாரிகளும் தொழிற்சாலை மேலாளர்களும்தான். கோபத்தை எச்.ஆர் அதிகாரிகளை தாக்குவதில் வெளிப்படுத்துவதன் மூலம் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் தீர்ந்துவிடப் போவதில்லை.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து தொழிலாளர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எந்திரங்களை தமது வேலை இழப்புக்கு காரணமானவையாக கருதி தாக்கி உடைத்தனர். அவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை எதிர்க்கும் குழுவினர் லட்டைட் (luddite) என்று அழைக்கப்பட்டனர். இந்தப் போராட்டங்களை அரசு ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கியது. தொழிலாளர்கள், பின்னர் வேலை இழப்புக்குக் காரணம் எந்திரங்கள் இல்லை, எந்திரங்களை கொண்டு வந்து வைத்து வேலையை பிடுங்கும் முதலாளி வர்க்கமே என்று உணர்ந்து தங்களது போராட்டத்தை முதலாளி வர்க்கத்துக்கு எதிராக திருப்பினர்.

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்; முதலாளிகளால், முதலாளிகளுக்காக இயக்கப்படும் இந்த அரசுகள், கார்ப்பரேட்டுகளுக்கு மானியம், வரிச் சலுகை, வங்கிக் கடன் தள்ளுபடி என்று குளிப்பாட்டுகின்றன. அவர்களது சுரண்டலை அதிகரிக்க வசதியாக தொழிலாளர் சட்டங்களை திருத்துகின்றன; வேலை நேரம், பணி பாதுகாப்பு, சங்கம் அமைக்கும் உரிமை ஆகியவற்றை பறிக்கின்றன. அதை எதிர்த்து போராடும் தொழிலாளர்கள் மீது போலீசையும், நீதித்துறையையும் அவிழ்த்து விடுகின்றன. வேலைப் பறிப்பு துவங்கி உயிர்வாழும் உரிமை பறிப்புவரை முதலாளிகளது ஏவல் படையாகவே அரசுக் கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

2012-ம் ஆண்டில் 148 மாருதி மானேசர் தொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது, போலீஸ். 5 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு 117 தொழிலாளர்கள் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிரிக்கால் நிறுவனத்தின் 2 தொழிற்சங்க தலைவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற தொழிலாளர்கள் பல ஆண்டுகள் சிறைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகளிலும் விடுவிக்கப்பட்டவர்களை நிரபராதிகள் என்று ஒத்துக் கொள்ள மறுத்து மேல்முறையீடு செய்திருக்கிறது, முதலாளி வர்க்கம்.

இது இரண்டு எதிரெதிர் வர்க்கங்களுக்கிடையேயான போர். அரசு என்கிற அதிகார அமைப்பு முதலாளிகள் கையில் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். எனவே, தனிநபர் மீது தாக்குதல், தனித்தனியாக போராடுதல், சட்டப் போராட்டங்களை நடத்துவது ஆகியவற்றின் மூலமாக மட்டும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையை சாதிக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிகளை எதிர்த்த போராட்டங்களை , முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகார அரசை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுகின்ற புரட்சிகர இயக்கத்தோடு இணைக்க வேண்டும். அதுதான் தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமின்றி, சுரண்டப்படும் அனைத்து வர்க்கங்களின் விடுதலைக்கான பாதை.

– ராஜா

புதிய தொழிலாளி, ஜூன் 2018 இதழில் வெளியானது

Permanent link to this article: http://new-democrats.com/ta/increasing-capitalistic-oppression-where-to-vent-the-anger/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”

உண்மையில் வங்கிகள் யார் கையில் இருக்கின்றன என்பது பிரச்சனை இல்லை. பிரச்சனை, பொருளாதாரத்தின் மீதான தனியார் கார்ப்பரேட் ஆதிக்கம்தான். ஊழலும், மோசடியும் முதலாளித்துவத்தின் உயிரணுவிலேயே இருப்பவை. முதலாளித்துவத்தை...

2018-ல் நாம் என்ன செய்தோம், 2019-ல் நாம் எதை நோக்கி செல்கிறோம்!

நிச்சயமாக நமக்கு ஒரு கடுமையான ஆனால் சுவாரஸ்யமான ஆண்டு 2018. இது ஒரு தொடக்கம் என்று நமக்கு தெரியும் ஆனால் நிச்சயமாக நாம் இது ஒரு நல்ல...

Close