ஐ.டி துறை நமது நாட்டுக்கு செய்தது என்ன?

 1. ஐ.டி துறை நமது நாட்டுக்கு செய்தது என்ன?

இந்திய ஐ.டி அயல் சேவை துறை பற்றிய தொகுப்பு

.டி வேலை என்பது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்திய இளைஞர்களின் கனவு வாழ்க்கையாக இருந்து வருகிறது. டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா முதல் சமீபத்தில் வெரிசான் வரையில் வேண்டாத ஊழியர்களை வேலையிலிருந்து கழுத்தைப் பிடித்து தள்ளப்படாத குறையாக துரத்திய பிறகு அது ஓரளவு மட்டுப்பட்டிருக்கிறது. இருந்தாலும், படித்து முடித்ததுமே 5 இலக்க சம்பளம், குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை, கையில் அழுக்குப்படாத கணினி வேலை என்ற கவர்ச்சி இன்னும் தொடர்கிறது.

ஓரிரு ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பிறகு “ஆன்-சைட்” என்ற பெயரில் அமெரிக்காவுக்கு போகும் வாய்ப்பு, சமூக கவுரவம் போன்றவை ஓரளவு மங்கி போயிருந்தாலும், புதிதாக அடிபடும் “கிளவுட் (மேகக் கணிமை)”, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்ற தொழில்நுட்பங்களை படித்து நாமும் அந்தக் கப்பலில் ஏறி விடலாம் என்ற கனவு மறைந்து விடவில்லை.

உண்மையில் இந்திய ஐ.டி துறை என்னதான் செய்கிறது? எப்படி தோன்றி வளர்ந்தது என்பதைப் பற்றிய சுருக்கமான கட்டுரைத் தொடரை வெளியிடுகிறோம்.

1. அறிமுகம்

அ. இந்திய தகவல் தொடர்பு சேவைத் துறையின் தன்மை

அமெரிக்காவுக்கு சேவை செய்ய இந்திய முதலாளிகள்

மெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்த (92%), வங்கி-காப்பீடு-நிதிமூலதனம், தொலை தொடர்புத் துறை (70%)-யைச் சேர்ந்த ஏகபோக நிறுவனங்களுக்கு தொலைதூர சேவை வழங்குவது இந்தியாவில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப அயல்சேவை துறையின் சாராம்சமாக உள்ளது.

1970-களில் தொடங்கிய உலகமயமான உற்பத்தி, உலகமயமான மூலதனம், உலகமயமான சந்தை என்ற நிகழ்ச்சிப் போக்கின் ஒவ்வொன்றுக்கும் தேவையான கட்டமைப்பின் இன்றியமையாத பகுதியாக தகவல் தொழில்நுட்பம் விளங்குகிறது.

 • பங்குச் சந்தைகள், நிதி மூலதன நிறுவனங்கள், வங்கிகள், ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றுக்கான தகவல் தொடர்பு கட்டுமானத்தை பராமரிப்பது தொடர்பான பணிகள்
 • மேற்கத்திய தொலை தொடர்பு, மருத்துவம், பதிப்பகம் முதலான நிறுவனங்களின் நிர்வாக மென்பொருளை பராமரிப்பதோடு தொடர்புடைய வேலைகள்
 • இணைய வணிகம், உலகளாவிய உற்பத்தி, வினியோக நிகழ்முறை ஆகியவற்றுக்கான தகவல் தொடர்பு கட்டுமானத்தை பாரமரிப்பதற்கான பணிகள்

இவற்றுக்கு பங்களிப்பு செய்யும் பராமரிப்பு அலுவலகமாக (back office) இந்திய ஐ.டி துறை செயல்படுகிறது.

1970-களில் தொடங்கிய நிதிமூலதனத்தின் உலகளாவிய ஆதிக்கம், சோவியத் யூனியனின் வீழ்ச்சி, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவது இந்திய தகவல் தொழில்நுட்ப அயல்சேவை துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது.

ஆ. தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையின் தரகு வர்க்கம்

மேற்கத்திய ஏகபோக நிறுவனங்களுக்குத் தேவையான ஆலை உற்பத்தி இடம் பெயர்க்கப்பட்டு, சீனா ஏகாதிபத்திய உலகின் தொழிற்சாலையாக மாற்றப்பட்டது போல நிதிமூலதனத்துக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப சேவை பணிகள் கொண்டு வரப்பட்டு இந்தியா ஏகாதிபத்திய உலகின் பராமரிப்பு அலுவலகமாக மாற்றப்பட்டது.

சீன தொழிற்சாலைகளில் மேற்கத்திய கார்ப்பரேட்டுகளுக்கான உழைப்பு சுரண்டலுக்கு இடைத்தரகர்களாக அமெரிக்கா, ஐரோப்பாவில் குடியேறிய சீனர்களும், தாய்வான், ஹாங்காங் போன்ற காலனிய நாடுகளைச் சேர்ந்த சீன முதலாளிகளும் ஈடுபடுத்தப்பட்டனர். அது போல, ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படித்து, அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து பணிபுரிந்த இந்தியர்கள் இந்திய தகவல் தொழில்நுட்ப அயல்சேவை துறை வளர்ச்சிக்கு இடைத்தரகர்களாக செயல்பட்டார்கள்.

இந்தத் துறையின் முன்னணி நிறுவனங்களான 1968-ல் தொடங்கப்பட்ட டி.சி.எஸ் (டாடா கன்சல்டிங் சர்வீசஸ்), 1976-ல் கணினி/கணினி பொருட்கள் (hardware) நிறுவனமாக தொடங்கப்பட்டு 1991-ல் தகவல் தொடர்பு சேவை வழங்க ஆரம்பித்த எச்.சி.எல், 1982-ல் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ், அதே காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைக்குள் காலடி எடுத்து வைத்த விப்ரோ டெக்னாலஜிஸ் ஆகியவையும் பிற நடுத்தர, சிறு நிறுவனங்களும் இத்தகைய அமெரிக்கமயமாக்கப்பட்ட இந்தியர்களால் தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன.

“இந்திய உயர்சாதியினருக்கு தொழில்துறை, உடல் உழைப்பு மீதும் இருந்த வெறுப்பும், மூளை உழைப்பு வெள்ளை சட்டை வேலையில் இருந்த கவர்ச்சியும் ஐ.டி துறையின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது” என்கிறார் தேவேஷ் கபூர் என்ற ஆய்வாளர்(1).

இ. இந்திய சந்தையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம்

மலிவான உழைப்பு சக்தியை பயன்படுத்தும் நோக்கில் தகவல்தொழில்நுட்ப அயல்சேவை இந்தியாவுக்கு மாற்றப்பட்ட அதே நேரத்தில் ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்களின் சந்தையாக நாடு முழுவதும் திறந்து விடப்பட்டது.

 • உலகமயமாக்கப்பட்ட சந்தை, தனியார் சந்தை என்ற கொள்கையின்படி ஐ.டி ஊழியர்களை குறி வைத்து பெங்களூருவிலும், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையிலும், ஹைதராபாதிலும் வெளிநாட்டு துரித உணவகங்கள், பெரிய மால்கள், மின்னணு பொருட்கள், உடற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்பட்டன.
 • மேலும் மேலும் அதிக கட்டணம் கோரும் தனியார் பள்ளிகள் – சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.ஈ பள்ளிகள், உறைவிட பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என்று முளைத்தன.
 • ஐ.டி துறையில் சேர்ந்து ஆளாகி விடலாம் என்ற கனவோடு வந்த மாணவர்களையும் பெற்றோரையும் குறி வைத்து ஆயிரக்கணக்கில் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. குடும்பத்தின் சேமிப்புகள் நிலம், தங்க நகைகள் என்று ஒரு கட்டத்திலும், அடுத்த கட்டத்தில் வங்கிக் கடன் வடிவில் எதிர்கால உழைப்பை இரையாக்கியும் இந்த கல்வி வியாபாரம் நடத்தப்படுகிறது.
 • ஐ.டி ஊழியர்களை குறி வைத்து குளோபல், அப்பல்லோ, மியாட் என்று கார்ப்பரேட் மருத்துவமனைகள் புதிதாக திறக்கப்பட்டன அல்லது விரிவுபடுத்தப்பட்டன.
 • ரியல் எஸ்டேட் புராஜக்ட்கள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டன. ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் என்ற வடிவில் தனியார் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு பல லட்சம் கோடி வங்கிப் பணம் வழங்கப்பட்டது; ஊழியர்கள் வாழ்நாள் அடிமைகளாக பிணைக்கப்பட்டார்கள்.
 • ஐ.டி ஊழியர்களை அழைத்துச் செல்வதற்கான பேருந்துகள், தனியார் ஊர்தி சேவைகள் தொடங்கப்பட்டு நடைபெற்றன. புதிய சாலைகள், மேம்பாலங்கள், குளிரூட்டப்பட்ட பேருந்துகள், மெட்ரோ ரயில் போடப்பட்டன.

இப்படி ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தையும், உலகப் பொருளாதாரத்தையும் மாற்றியமைத்த விஷயங்களின் பிரதிபலிப்பாக இந்த ஐ.டி/ஐ.டி சேவை துறை வளர்ந்து வந்துள்ளது.

ஆனால், இந்தியாவின் உள்நாட்டு பொருளாதாரமோ தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. மலிவான உழைப்பு சக்தியை சுரண்டுவது என்ற வகையில் 80% மேற்கத்திய நாடுகளுக்கான ஏற்றுமதியை சார்ந்திருக்கும் இந்தத் துறையின் உள்நாட்டு செயல்பாடுகள் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் சந்தையை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், அரசு அடக்குமுறையை தீவிரப்படுத்தவும் மட்டுமே பயன்படுகின்றன.

(தொடரும்)

ஆதாரங்கள்

 1. The Causes and Consequences of India’s IT Book, Devesh Kapur (2002)
 2. Sector Profile – IT Sector, FICCI (2010)
 3. India IT-BPM Overview | NASSCOM (2015)
 4. Indian IT Sector Statistics, Centre for Development Informatics, Univ. of Manchester, U, Creator: Richard Heeks http://www.cdi.manchester.ac.uk
  Source: Dataquest (India); Indian Dept. of Electronics/IT reports; Interviews; ESC India
 5. NASSCOM Annual Report (2015)
 6. NASSCOM Strategic Review (2015) Executive Summary
 7. NASSCOM Indian IT-BPM Industry Report (2016)

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-it-outsourcing-industry-a-report-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பெரும்பான்மை உழைப்பாளர்களை ஒதுக்கி வைக்கும் முதலாளித்துவ தானியக்கம்

தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தப்போகும் சிக்கல்கள், நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அவை, இந்தியத் தொழிலாளர் சந்தையின் நிலைமைகளை மேம்படுத்தாது. மாறாக, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த புதிய சிக்கல்களை...

150 வயதில் இளமைத் துடிப்போடு மார்க்சின் மூலதனம்

இன்று நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும், ஆர்வமும் உடைய எவரும் மார்க்ஸ்-எங்கெல்சின் மூலதனம் 4 பாகங்களையும், லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் பற்றிய...

Close