«

»

Print this Post

ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி

This entry is part 2 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

ஆதார் : விற்பனைப் பொருளாகும் அந்தரங்க விபரங்கள்! கண்காணிக்கும் செல்போன்கள்!

தார் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிறகு அதற்கான எதிர்ப்பு பல தரப்பினரிடம் இருந்தும் கிளம்பியது. வலுத்து வரும் எதிர்ப்பை நீர்த்து போக செய்ய, உச்சநீதிமன்றம் தனது பங்குக்கு “அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை” என்று தீர்ப்பு அளித்தது. இதனை மதிக்காமலேயே எரிவாயு சிலிண்டர் மானியத்துக்கும், ரேசன் பொருளுக்கும் ஆதார் எண் கேட்டு மக்களை அலைய வைக்கின்ற கொடுமை தொடரத்தான் செய்கிறது.

பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து, ஆதார் அடையாள அட்டைகளை வழங்குவதும், அது இல்லாமல் எந்த குடிமகனும் இருக்க முடியாது என்கிற நிலை உருவாகி வருவதற்கும் என்ன காரணம். “ஒற்றை அட்டையில், ஒட்டுமொத்த சலுகைள்” என்ற பசப்புவது ஏன்? வெறும் மானியங்கள், சலுகைகளுக்காகத்தான் ஆதார் அட்டை என்றால், குடிமக்களின் தனிநபர் விபரங்கள் முதல் கருவிழி மற்றும் கைரேகைப் பதிவுகள் போன்ற அடையாளங்கள் வரை சேகரிப்பது ஏன்? பிறந்த குழந்தைக்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவது ஏன்?

ஆதார் திட்ட இயக்குனர் நந்தன் நீலகேனியும், தரகு முதலாளி அம்பானியும் ஒருமித்த குரலில், ‘ஏழைகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரிடையாக கொண்டு செல்வதற்கு ஆதார் அற்புதமான திட்டம்’ என்கின்றனர். ‘மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளியின் மருத்துவ வரலாறு, லேப் ரிசல்ட், மருத்துவக் காப்பீடு  போன்றவற்றை ஒரு நொடியில் பெற முடியுமானால் அது எவ்வளவு சிறப்பானதாக இருக்கும், கல்வித்துறையில் தகுதியான மாணவர்களை தனியாக அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவித்தொகையை அரசு நேரிடையாக வழங்க முடியும், இதன் மூலம் தகுதியற்றவர்களுக்கு அரசின் உதவி தொகை செல்வது குறையும், அரசின் நல உதவி நேரிடையாக விவசாயியை சென்றடையும், ஆதார் இதனை செய்யும்’ என்கிறார், நந்தன் நீலகேனி.

aadhaar-queueஆனால் ஆதாரின் உண்மை முகம் வேறு மாதிரியாக இருக்கிறது. ஆதார் அட்டை எப்படி உருவாகிறது? தனிநபர் விபரங்களின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பிரத்தியோகமான ஆதார் எண் உருவாக்கப்பட்டு, அதனுடன் செல்போன் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் இணைக்கப்படும். இப்படி உருவாக்கப்பட்ட ஆதார் எண்ணை ஏற்கனவே தனித்தனியாக பல இடங்களில் திரட்டப்பட்டுள்ள தகவல்களுடன் தொடர்புப்படுத்தி இணைப்பதன் மூலம் ஒரு தனி நபரின் மருத்துவம், நிதி, சாதி, மதம், அவரின் செயல்பாடுகள், அரசியல் பார்வை, குடும்பம், பொழுதுபோக்கு, சமூகம் சார்ந்த போராட்ட விபரங்கள் முதலிய அனைத்து விபரங்களையும் ஒரு நொடியில் பெற முடியும். அந்த விபரங்களை வைத்து அவரை கண்காணிக்கவும் முடியும்.

இவ்வாறான கண்காணிப்பு என்ன செய்யும் என்பதை வரலாறு ஏற்கனவே நமக்கு பல்வேறு வடிவங்களில் புலப்படுத்தி சென்று இருக்கிறது. ஜெர்மனியில் 1930 வாக்கில் ஐ.பி.எம் நிறுவனமும் ஹிட்லரின் நாசிக்களும் இணைந்து உருவாக்கிய DEHOMAG அடையாள அட்டையானது, யூதர்களையும், கம்யூனிஸ்ட்களையும், ஜனநாயக சக்திகளையும், ஜெர்மன் இனத்தல்லாதவர்களையும் தனித்தனியாக பிரித்து மரண முகாம்களுக்கு அனுப்புவதற்கு நாஜிகளுக்கு உதவியாக இருந்தது. அரசாங்கத்திடம் தானே நமது விபரங்கள் இருக்க போகிறது என்று நம்பிக்கையோடு பேசுபவர்களுக்கு ஹிட்லர் தருகின்ற பதில் இதுதான்.

‘ஜனநாயகத் தன்மை’ நிறைந்த இந்திய நாட்டில் இதற்கு வழியில்லை என்பவர்களுக்கு ஹிட்லர் மீண்டும் பதிலளிக்கிறார். ஹிட்லரும் மோடியைப் போலவே ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரை உருவாக்கிய முதலாளித்துவம்தான் மோடியையும் உருவாக்கியுள்ளது. குஜராத்தில் மோடி ஆட்சி செய்தபோது, அரசாங்கமும் ஆர்.எஸ் எஸ்.சு.ம் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு இஸ்லாமியர்களை தேடிப் பிடித்து வேட்டையாடியது நினைவில் வரவில்லையா?

aadhaar-captionஆதார் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்துக்கும் தகவல் சேமிப்பு மென்பொருள் நிறுவனமான மாங்கோடிபி (MongoDb) க்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் உளவு நிறுவனம் சி.ஐ.ஏ (CIA) வால் உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். கூகிள் எர்த் (Google Earth) மூலம் நமது வீடுகள், தெருக்கள், பணியிடம் முதல் கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும் சி.ஐ.ஏ-விற்கு ஆதார் அடையாள அட்டையானது முக்கியமானதாகும். ஏற்கனவே உலகெங்கிலும் தன்னை எதிர்க்கின்ற நாடுகளில் தீவிரவாதத்தை வளர்த்துவிடும் சி.ஐ.ஏ, மாங்கோடிபி மூலம் ஆதார் விபரங்களைப் பெற்றுக் கொண்டு எதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளும். இதற்காக இந்திய அரசின் அனுமதி தேவையில்லை. அப்படி கேட்டால் மோடி மறுக்கப் போவதும் இல்லை.

அடக்குமுறை அல்லது கண்காணிப்பு நோக்கத்துக்காக மட்டுமா அரசு இந்த அளவு முக்கியத்துவம் தருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்து கொண்டிருப்பது உண்மையல்லவா? இந்த ஆதார் அட்டையின் பின்னாலும், பன்னாட்டு மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளது சந்தனை நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இன்றைய உலகச் சூழலில் தகவல் விற்பனை என்பது பல்லாயிரம் கோடிகள் கொழிக்கும் துறையாக உருவெடுத்திருக்கிறது. உங்கள் கைபேசியில் நீங்கள் அனுப்பும் குறுந்தகவல், சமூக வலைத்தளங்களில் நீங்கள் பதிவிடும் விபரங்கள், தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும் நிகழ்சிகள், நீங்கள் உண்ணும் உணவுகள், பார்க்கும் சினிமாக்கள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள், நீங்கள் பார்க்கும் மருத்துவர்கள் வரை அனைத்துமே ஆதார் அட்டையின் வழியாக சேமிக்கப்படும். இந்த தனிநபர் விபரங்கள் வணிகப் போட்டிகள் நிறைந்த தற்போதைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் அத்தியாவசிய தேவையாக உருவெடுத்து உள்ளன. இவை அனைத்துமே மையப்படுத்தப்படாத தகவல்களாக ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. காஸ் இணைப்பு முதல் மருத்துவக் காப்பீடு வரை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்த அரசு தகவல்கள் அனைத்தையம் ஒன்று சேர்க்கும் வேலையை முன்னின்று செய்து கொடுத்திருக்கிறது. ஒரு தனி நபரின் அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் ஆதார் எண்ணை இந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டி போட்டு வாங்க தயாராய் உள்ளன. கார்ப்பரேட்களின் கரங்கள் நமது கிராம எல்லை வரை நீண்டிருக்கும் காலத்தில் இந்த ஆதார் விபரங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் நுழைந்து, ஒவ்வொரு தனிமனிதனது மூக்கு வரைக்கும் நீண்டு கார்ப்பரேட்டுகளது சந்தையை பலப்படுத்துகிறது.

இது தனிப்பட்ட நபரின் விபர திருட்டாக மட்டும் குறுகிவிடுவதில்லை, மாறாக இது நம் அனைவரையும் சோதனைக்கூட எலியாக மாற்றும் வேலையைக் கூட செய்கிறது. ஆப்பிரிக்க மக்களை சோதனை சாலை எலியாக தங்களின் என்.ஜி.ஓ-க்கள் மூலம் பயன்படுத்தி வந்த மருந்து கம்பனிகளுக்கு, இந்தியக் குடிமகனது மருத்துவக் குறிப்புகளை தாரை வார்க்கும் வேலையை செய்யப்போகிறது ஆதார் எண். இதனை வைத்துக் கொண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, எந்த மருந்தினை யார் மீது செலுத்தி சோதனைக்கூட எலியாக்க வேண்டும் என்பதை மருந்துக் கம்பெனிகள் முடிவு செய்வார்கள். நாளைய தினமே உங்கள் வீட்டுக் கதவை ஏதாவது ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் தட்டக் கூடும். உங்களுக்கு வரப் போகின்ற நோய்கள் பற்றி ஆருடம் சொல்லி, இலவசமாக மருந்துகளை தரவும் கூடும். ஆதார் அட்டையின் உபயத்தில் இது சாத்தியமான ஒன்றுதான்.

உலக வர்த்தக சந்தையில் இன்று இந்தியா பெரும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள சந்தையாக மாறி நிற்கிறது. குறிப்பாக, நுகர்பொருள் சந்தை விரிவடைந்து கொண்டே வருகிற இந்தச் சூழலில், தனிநபர் குறித்த விபரங்களை வைத்துக் கொண்டு புதிய வாடிக்கையார்களாக ஆள்பிடிப்பது சுலபமானதாகும். திடீரென்று உங்களுக்கு ஜான்சன் & ஜான்சன் கம்பெனியில் இருந்து, “நீங்கள் அப்பாவாகி விட்டீர்கள், வாழ்த்துக்கள் மறவாமல் குழந்தைக்கு ஜான்சன் & ஜான்சன் பொருட்களையே பயன்படுத்துவீர்” என்று குறுஞ்செய்தி வரலாம். உங்கள் மனைவி தாய்மை அடைந்திருக்கிறார் என்ற விசயமே இனி கார்ப்பரேட் கம்பனிகள் மூலமே தெரிய வரும். ஏனெனில் மருத்துவப் பரிசோதனையில் விபரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு போவதற்கு முன்னதாக கார்ப்பரேட்டுகளுக்கு பரிமாறப்படும். அந்த அளவுக்கு ஆதார் எண் உங்கள் தகவல் அனைத்தையுமே பொதுமைப்படுத்தி கார்பரேட்களின் கம்ப்யூட்டர்களுக்கு தாரை வார்க்கிறது. தகவல் விற்பனைக்கு என்றானவுடன் விற்பவன் யோக்கியனுக்கு மட்டுமே விற்பேன் என்றா விற்பான்?

ஒருபுறம் சந்தை, மறுபுறம் கண்காணிப்பு. நாடே கண்காணிப்பின் கீழ் மாற்றப்பட்டுள்ள இந்த ஆபத்தான் சூழ்நிலையில் அரசுக்கு எதிரான உங்கள் மூச்சுக் காற்று கூட போலீசின் லத்திக்கு பதில் சொல்ல வேண்டி வரும். நாட்டின் குடிமக்கள் அனைவரையும் இதுவரை இல்லாத அளவுக்கு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் பாசிசக் கட்டமைப்பை நிறுவ அரசு மேற்கொண்டுள்ள முயற்சியே, ஆதார் எண்.

– ராஜா

புதிய தொழிலாளி, செப்டம்பர் 2016 இதழிலிருந்து

 

 

Series Navigation<< மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளைஆய் போவதற்கு ஆதார் கார்டா? – இணையத்தை கலக்கும் வீடியோ >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-lives-turned-into-commodities-by-aadhaar/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
விவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் : நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக கைகோர்ப்போம்!

உழைக்கும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பம். நாம் ஒவ்வொருவரும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் உரிமைக்கும் குரல் கொடுப்பது அவசியம்….

விவசாயத்தை பாதுகாப்போம்! உழவர்களை பாதுகாப்போம்! தமிழகத்தை பாதுகாப்போம்! – கருத்துப்படம்

படைப்பு : சரண் கிருஷ்ணா

Close