இந்திய ஆங்கிலேயர்கள் : வேகமாக வளரும் இந்தியாவின் புத்தம் புதிய சாதி

ந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.  இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார்.

Indo-Anglians: The newest and fastest-growing caste in India

கட்டுரையாளர் சொல்வது போல மேட்டுக்குடி சாதியான இந்தப் பிரிவு குடும்பங்களின் எண்ணிக்கை 4 லட்சம்  என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவின் 26 கோடி குடும்பங்களில் இவர்கள் 0.15% மட்டுமே உள்ளனர்.

இவர்கள் அதிகாரவர்க்க மேட்டுக்குடி (ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், நீதிபதிகள்) அல்லது வெளிநாட்டு இந்தியர் அல்லது மேட்டுக்குடி மருத்துவர், வழக்கறிஞர் குடும்பங்களிலிருந்து தோன்றுகின்றனர். பிற பிரிவினரும் தங்களது குழந்தைகளை இந்த அந்தஸ்துக்கு வளர்ப்பதை ஒரு கனவாக கொண்டிருக்கின்றனர்

இந்தப் பிரிவினர் அதிகார வர்க்கத்தில் இணைந்து சேவை செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றனர் (சர்வதேச பள்ளி, வெளிநாட்டு கல்லூரிகளில் படிப்பு) – ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் போல வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஏகாதிபத்திய நிறுவனங்களிலும், அரசு பதவிகளிலும் வேலை செய்யத் தயாரிக்கப்படுகின்றனர். அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில், நிதி நிறுவனங்களில் பந்தய மூலதனத்துக்கு பணிவிடை செய்கின்றனர்.

ஊழல், சுரண்டல், கொள்ளை என்ற சுவடே தெரியாமல் தெளிவான முகத்துடன், வசதியான பங்களாக்களில், சொகுசு கார்களில் வாழ்வதை கனவாக வைத்து அதை அடைகின்றனர்.

சசிதாரூர் போன்ற ஒரு சிலர் கட்சிகளில் சேர்ந்து தலைவர்கள் ஆகின்றனர். இன்னும் கணிசமான பிரிவினர், தமக்குக் கிடைத்த கல்வி அறிவு மூலம் இந்திய சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுவதற்காக தம்மை புரட்சிகர அணிகளில் இணைத்துக் கொள்கின்றனர். சமூக, அரசியல் விடுதலைக்காக போராடுகின்றனர்.

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவின் புத்தம் புதிய வேகமாக வளரும் சாதி – சஜித் பய்

ந்தியாவில் ஒரு செல்வாக்கு மிகுந்த மக்கள் தொகை மற்றும் உளவியல் பிரிவு உருவாகி வருகிறது. அது செல்வம் படைத்ததாகவும், நகர்ப்புறத்தைச் சார்ந்ததாகவும், உயர்கல்வி கற்றதாகவும் உள்ளது.

2012-2013-ம் ஆண்டிலிருந்து என்னுடை மகள்கள் எங்கள் தாய்மொழியான கொங்கணியில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள்.
அவள் ஆங்கிலத்தில் அதிகமாக பேச ஆரம்பித்ததற்கு மும்பையில் இருக்கும் அவளது பள்ளியில் ஆசிரியை வீட்டில் ஆங்கிலத்தில் பேசும்படி ஊக்குவித்ததோ, அல்லது வேறு ஏதோ தூண்டுதலாகவும் இருக்கலாம். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், எங்கள் வீட்டை ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இப்போது, நாங்கள் அரிதாகவே கொங்கணியில் பேசிக் கொள்கிறோம்.

நாங்கள் விதிவிலக்கானவர்களல்ல. எங்களைப் போன்று வசதி படைத்த, நகர்ப்புற இந்தியாவின் மேட்டுக்குடி குடியிருப்புகளில் வாழும் பல குடும்பங்களில், தாய்மொழி அல்லாமல், ஆங்கிலமே பிரதான பேச்சு மொழியாக இருக்கிறது. அவர்களுக்கு, தாய்மொழியில் பேசுவதைக் காட்டிலும், ஆங்கிலம் மிகச் சரளமாக வருகிறது. சிக்கலான எண்ணங்களைக் கூட ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவது சுலபமாக உள்ளது. நகர்ப்புறத்தில் வாழும், அதிகம் படித்த, பெரும்பாலும் சாதி, மத வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்பங்கள் இந்த வகையில் வருகின்றன. இவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் என்று அழைக்கலாம்.

நமக்கு பரவலாக தெரியும் பழைய வகை ஆங்கிலோ இந்தியர்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள், பெரும்பாலும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த புதிய இந்திய ஆங்கிலேயர்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக, பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவர்கள், மும்பை, தில்லி, சென்னை, பூனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களிலும், சிறிய அளவுகளில் மலைப் பிரதேச நகரங்களிலும், கோவாவிலும் வசிக்கின்றனர். குர்கான், தெற்கு டெல்லியின் சில பகுதிகள், தெற்கு மும்பை, பாந்த்ரா முதல் அந்தேரி வரையிலான புறநகர் பகுதிகள், பெங்களூருவின் இந்திரா நகர், கோரமங்கலா, புறவழிச் சாலையின் வேலியிடப்பட்ட குடியிருப்புகள் ஆகியவற்றில் இவர்கள் அதிகமாக காணப்படுவார்கள். பொருளாதார ரீதியாக மேல்தட்டு 1%-ஐ சேர்ந்த இவர்கள் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தைப் போல் செலவு செய்ய வல்லவர்கள். தங்களது பிள்ளைகளை ஆர்யன், கபீர், கைரா, ஷானயா, தியா என்ற சர்வதேசிய யோகா பெயர்களைக் கொண்ட சர்வதேசப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

ஒட்டு மொத்த மக்கள் தொகையில், தோராயமாக, 4 லட்சம் இந்திய ஆங்கிலேயர் குடும்பங்கள் இருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கா விட்டாலும், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 2.26 லட்சம் குடும்பங்கள் மட்டுமே ஆங்கிலத்தை தங்கள் பேச்சு மொழியாகக் கொண்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் தோன்றிய இந்த வர்க்கம், அடுத்து வரும் 5 முதல் 7 ஆண்டுகளில், எண்ணிக்கையில் இரு மடங்காக உயரும். இதன் விளைவாக ஆங்கிலக் கல்விக்கான தேவை அதிகரித்து, மேற்கத்திய நாகரிகமும், கலாச்சாரமும் வளரும், [மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இப்படி இந்துக்களே பெரும்பான்மையாக இருக்கும் இந்த வர்க்கம் அதிகரித்தால், கலாச்சாரக் காவலர்களான சங்கிகள் என்ன செய்வார்கள்!!!] சாதி கடந்த கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கும்.

இந்திய ஆங்கிலேயர் குடும்பங்களின் வளர்ச்சி, நம் சமூகத்தின் மீதும், தொழில்/ நிர்வாகம் மீதும் பாரிய விளைவுகளை உண்டாக்கும்.

சமூக ரீதியில், நடக்கும் கலப்புத் திருமணங்கள், இரு உயர்சாதி குடும்பங்கங்களுக்கு இடையிலானதாக அமையலாம். அல்லது வரலாற்று ரீதியில், கீழ் சாதியாக இருப்பினும், ஆதிக்க சாதியினராக இருப்பினும், அங்கும் இந்தக் கலப்பு நடக்கும். அந்தப் புது வர்க்கத்துக்குள் சேர்ந்து கொண்டதும் இவர்களது சாதிய அடையாளம் மாறிவிடுகிறது. எவ்வித சாதி, மத சடங்குகளையும் பின்பற்றாமல் சாதி அடையாளங்களை துறந்து இச்சமூகம் வாழ்கிறது.

இப்பிரிவினரில் சைவப் பழக்கமுள்ளவர்கள், தங்களது இணையின், அசைவப் பழக்கத்தை அங்கீகரிக்கிறார்கள். பொதுவாக, இக்குடும்பங்களில், சைவ உணவு பழக்கம் ஒரு அறமாக பின்பற்றப்படுகிறது, அதற்கு எந்த மத அடையாளமும் அவர்கள் கற்பித்துக்கொள்வதில்லை. சாதிய அடையாளங்களைத் துறந்து வாழும் இவர்களுக்கு, அவர்களது மந்தையில் ஒரு புது ஆட்டை சேர்த்துக்கொள்வதற்கு ஆங்கிலப் புலமை மட்டுமே காரணியாக விளங்குகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், போதுமான ஆங்கில அறிவும், மேற்கத்திய கலாச்சாரம் பற்றியும் அறிந்திருந்தால் இவர்களோடு ஐக்கியப்பட்டு விடலாம். ஏனெனில், இந்த புதிய சாதிப் பிரிவு பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பதில்லை.

இந்த வகுப்பினர், பாரம்பரிய முறைகளையோ, மத விழுமியங்களையோ கடைபிடிப்பதில்லை. அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றோரை நாடிப் போகின்றனர். இந்தப் பிரிவினர் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களை போன்ற சாமியார்களும் அதிகரிக்கும் அவசியம் தோன்றும். இவர்கள் இந்து குருக்களிடம் மட்டும் அடைக்கலம் தேடுவதில்லை, சோகா கக்காய் போன்ற பிற மத குருக்களையும் பின்பற்றுகிறார்கள்.

இந்த இன மக்கள் வளர்ச்சியின் கூடவே, பல்வேறு வணிகங்களும் வளர்கின்றன. குறிப்பாக ஊடகம் மற்றும் கல்வித்துறை வளர்ந்து இவர்களது வருமானத்தை சுருட்டிக்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த இன மக்களுக்காகவே பிரத்யேகமான கல்விமுறைகள் உருவாக்கப்பட்டன. 90களில் இது போன்ற பள்ளிகள் தொடங்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கடந்த தலைமுறை பெற்றோர்கள் முண்டியடித்து முன்னேறிய நிலையை போலன்றி, இந்தத் தலைமுறை பிள்ளைகள் மிகவும் சாதுவான, பன்முகத் திறமைகள் வாய்க்கப்பெற்ற பிள்ளைகளாக உருவாக்கப்பட்டனர். கல்லூரிப் படிப்புக்கு வெளிநாடு சென்று விடுவதற்கு இது போதுமானதாக இருந்தது.

பட்டப்படிப்புக்கு இந்தியாவில் தங்கி விடுவோர், அதிகம் போட்டியில்லாத, நேஷனல் சட்டக் கல்லூரி, சிருஷ்டி டிசைன் இன்ஸ்டிட்யூட், சிம்பயாஸிஸ் சர்வதேச கல்லூரி, மணிபால் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர். காலப் போக்கில் இங்கும் போட்டி அதிகரித்தவுடன், ஷிவ் நாடார், ஓபி ஜிண்டால், பி.எம்.எல், முஞ்சல் போன்ற கார்ப்பரேட்டுகள் தொடங்கி நடத்தும் கல்வி நிறுவனங்கள் பிரபலமாகின. கடுமையான போட்டி நிலவும் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, சர்வதேச முறைகளைக் கொண்டு மதிப்பீடு செய்து இடம் வழங்கப்படுகிறது. போட்டிகள் அதிகமற்ற, முழுமையான, ஆளுமைகளாக உருவாக இந்த வகை கல்விமுறை உதவுகிறது.

கல்வி, ஊடகம் ஆகிய துறைகளைப் போல், இயற்கை/ ஆரோக்கிய உணவு வகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற பிற வணிகங்கள் இந்த இன மக்களைக் குறி வைக்கின்றன. ஆனால், 25 லட்சம் முதல் 30 லட்சம் பேர் கொண்ட இந்த பிரிவினரைக் குறி வைத்து துவங்கி நடத்தப்படும் தொழில்கள், ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு தேங்கி விடுகின்றன.

தங்களை ஒத்த பிற நடுத்தர மக்களைக் காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து இப்பொருட்களை வாங்குவது ஒரு அந்தஸ்தைத் தருவதாக இவர்களால் பார்க்கப்படுகிறது. இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவது தங்களுக்குப் பிரத்யேக அடையாளத்தைத் தருவதாகக் கருதிக்கொள்கின்றனர்.

தேர்தல் அரசியல், அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இந்தப் பிரிவினர் இன்னும் வளரவில்லை. சட்ட அணுகுமுறை, என்.ஜி.ஓ பாணி போராட்டத்தில் ஈடுபடுவது, ஊடக கவனத்தை ஈர்ப்பது போன்ற செயல்கள் தான் இவர்கள் தேர்வு செய்யும் பாதை. தேர்தல அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும், இவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகவும், பிற அதிகார வர்க்கங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிதி ஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் போன்ற நிறுவனங்களில் உட்புகுந்து ஆதிக்கம் செய்கின்றனர்.

வெளி மாநிலத்தில் வசிக்கும் இவ்வின மக்கள், கோவாவில் முதலீடு செய்து வீடு வாங்குகின்றனர். அங்கு நிலவும் மேற்கத்திய கலாச்சாரம், உணவு விடுதிகள், கடற்கரை, அவ்வின மக்கள் அதிகம் வசிப்பது ஆகிய காரணங்கள், இவர்களை கோவாவை நோக்கி இட்டுச் செல்கின்றன. பணி ஓய்வுக்குப் பிறகு கோவாவில் குடியேறுவதும் அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, மேகாலயாவிலும் இந்த இன மக்கள் குடியேற்றம் நடக்கிறது. எனினும், இப்பகுதி, நகர்ப்புறத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், உயர்குடி இந்திய ஆங்கிலேயர்கள் இங்கு சென்று குடியேறுவது அரிது.

குர்கான், மும்பையின் சில பகுதிகள், பெங்களூரின் சில பகுதிகளில் வசிக்கும் இவர்கள், தேர்தல் அரசியலில் பெரும் பங்கு ஆற்றாவிட்டாலும், கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஆக்கிரமித்திருப்பதால், தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பது பற்றி இவர்கள் அதிகம் கவலை கொள்வதில்லை.

எண்ணிக்கையில் அதிகம் இல்லாத இந்த இன மக்கள், மிகவும் பிரபலமானவர்களாக இருப்பது ஒரு முரண். இருப்பினும் இவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இவர்கள் ஒரு தனிப்பெரும் வர்க்கமாக, சாதியாக உருவாகி, தங்களுக்கென பிரத்யேகத் தேவைகள், நடத்தை, கவலைகள், விருப்பங்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் தங்களை ஒரு தனி சாதியாக அடையாளப் படுத்திக் கொள்ளாவிடினும், அவர்களுக்குள் மட்டும் திருமணங்கள் செய்து கொள்வது, ஆங்கிலம் பேசும் திறனையும், மற்ற இந்திய ஆங்கிலேய ஆங்லியன் மக்களுடன் பழக முடிவதையும் நிபந்தனையாக கொண்டுள்ளது. இவை நால்வர்ண சாதியினருக்கு அதிகம் வாய்க்கப் பெற்றிருந்தாலும், வரலாற்று ரீதியாக, கீழ் சாதியாகக் கருதப்பட்டோரும், கலப்பு மணங்களின் மூலம், தங்களது சாதி அடையாளங்களிலிருந்து, இந்த புதிய அடையாளத்தை வரித்துக் கொண்டு “நம்மில்” ஒருவராக அவர்களால் ஆக முடிகிறது.

இந்த இனம் எண்ணிக்கையில் அதிகரித்து, பரிணமித்து, இந்த இந்தியக் குடியரசை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறது என்பது மிகுந்த ஆவலுக்குரிய நிகழ்வாக உள்ளது!

மொழிபெயர்த்தவர் : பிரியா

source : Indo-Anglians: The newest and fastest-growing caste in India

Permanent link to this article: http://new-democrats.com/ta/indo-anglians-the-newest-and-fastest-growing-caste-in-india/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மும்பையில் ‘பயங்கரவாதிகள்’ உலாவுவதாக வந்த செய்தி பொய்

பள்ளி மாணவி பயங்கரவாதிகளை பார்த்ததாகச் சொன்னது பொய் பதான் உடை தரித்த ஆயுதங்கள் ஏந்திய சில நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து செப்டம்பர்...

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை...

Close