முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு!

தனியார்மயமே முதலாளித்துவத்தின் தாரக மந்திரம்

தற்பொழுது கொரானா பாதிப்பின் காரணமாக இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 90 சதவீத மக்கள் ஊரடங்கில் உள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலான தினக்கூலி தொழிலாளர்களும், புலம்பெயரும் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஏற்கனவே வறுமையில் சிக்கித் தவித்து வந்தாலும் இந்த ஊரடங்கானது அவர்களின் வாழ்வை மேலும் துன்பம் ஆக்கியது. இந்தநிலையில்  நம்முடைய முதல்வர் சாதாரண உழைக்கும் மக்களுக்கு ஆயிரம் ரூபாயை மற்றும் புழுத்துப்போன அரிசியை நிவாரணமாக கொடுத்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜாக்பாட் பரிசாக 60,000 கோடியை முதலாளிகளுக்கு தள்ளுபடியாக செய்தார்.

மேலும் 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவிக்கும் போதும்,  அதில் குறிப்பிட்ட தொகையை  கடன் வாங்கி வாராக் கடனாக ஏமாற்றிய முதலாளிகளுக்கு அந்த பணத்தை தள்ளுபடி செய்யப்போவதாக அறிவித்தார். இவர்கள் ஏற்கனவே கடன் வாங்கி கட்டாமல் ஏமாற்றியவர்கள். இவர்களுக்கு ஏன் திரும்பத் திரும்ப கடன் கொடுக்கிறிர்கள் என்று எந்த எதிர்க்கட்சிகளும் யாரும் பேசுவதில்லை. ஏற்கனவே இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிற நேரத்தில் இந்திய பொருளாதாரத்தை சவக்குழிக்குள் தள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். உங்களிடம்தான் பணம் இல்லையே 20 லட்சம் கோடிக்கு என்ன செய்வீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது பொதுத்துறை நிறுவனங்களை விற்று தனியார் முதலாளிகளுக்கு கொடுத்து இதன் மூலம் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்று அறிவித்தார்.

Privatisation of Public sectorஇந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களையும் மின்சாரத்தையும் தனியாருக்கு கொடுக்க போவதாக அறிவித்தார் நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த கொரானா ஊரடங்கை பயன்படுத்தி  இந்தியாவிலுள்ள மிகவும் அடர்த்தியான முப்பது காடுகளை தனியாருக்கு தாரை வார்த்து இருக்கிறது மத்திய அரசு. இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தலமான காஷ்மீரை இங்குள்ள முதலாளிகளான அதானிக்கும் அம்பானிக்கும்  தாரைவார்த்து கொடுக்க கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாகவே பொது முடக்கத்தை காஷ்மீரில் நடைமுறைப்படுத்தி வருகிறது மத்திய அரசு. ஏற்கனவே இங்கு உள்ள பல பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பிஎஸ்என்எல், ரயில்வே போன்ற அனைத்தையும் தனியாருக்கு விற்க முயன்றுகொண்டிருக்கிறது மத்திய அரசு. தனியாருக்கு கொடுப்பதால் மட்டுமே இங்கு மக்களுக்கு வேலைவாய்ப்பையும் நல்ல வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரமுடியும் என்று நினைக்கிறார்கள்.

அமெரிக்காவில் மட்டும் தற்போதைய கொரானாவின் ஊரடங்கு காரணமாக 4 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஒருவேளை உணவிற்காக காலை நாலு மணியிலிருந்து காரில் வந்து வாங்குவதற்காக மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்தார்கள் அந்நாட்டு மக்கள். அமெரிக்காவில் ஆய்வு நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் (பில்லியனர்கள்) சொத்து மதிப்பு வெறும் 23 நாட்களில் 282 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

நிறைய பேர் என்ன சொல்கிறார்கள் என்றால் இது மோடியின் தோல்வி. மோடியால் இதற்குமேல் எதுவும் செய்ய முடியாது என்பது போல் சொல்கிறார்கள். ஒருவேளை மோடிக்கு பதில் ராகுல் காந்தியோ அல்லது வேறு எந்த கேடியோ பிரதமராக இருந்தாலும் இங்குள்ள நிலைமை இதுபோல்தான் இருக்கும். ஏனென்றால் இங்குள்ள கட்டமைப்பே முதலாளிகளுக்கு சாதகமாக தான் இருக்கிறது. ஏனென்றால் இங்கு எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வதில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமே முடிவு செய்கிறார்கள்.

மோடியும், நிர்மலா சீதாராமனும் போட்டி போட்டுக்கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் கொடுப்பது,முதலாளிகளின் மீதுள்ள விசுவாசத்தினால் மட்டுமல்ல. அவர்களுக்கு அதைத் தவிர வேறொரு வழிமுறையே கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும் தான் இங்கு அனைவருக்கும் வேலை வாய்ப்பை கொடுக்க முடியும் என்பது தான் அவர்களின் நம்பிக்கை. வேறு எந்த தலைவர் வந்தாலும் அவர்களுக்கும் வேறு வாய்ப்பு இல்லை. கார்ப்பரேட் முதலாளிகள் என்ன செய்கிறார்களோ அதைத்தான் அவர்களும் செய்ய வேண்டும். ஏன் என்றால் இந்த சிஸ்டமே அப்படித்தான் உள்ளது.

காங்கிரசும் கட்சியினரும், இடதுசாரி கட்சிகளும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 ஆயிரம் நிவாரண தொகையாக கொடுக்க வேண்டும் என்பதை முன்வைக்கின்றனர். சரி அவர்கள் சொல்வது போல் மூன்று மாதம் நிவாரணத் தொகை கொடுக்கலாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த தொழிலாளியின் வேலை நிச்சயத்திற்கும் வேலைக்கும் யார் பொறுப்பு?இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஏனென்றால் இதற்குமேல் இந்தக் கட்டமைப்பில் தீர்வு என்பது இல்லை.

நிறுவனங்களின் லாப வெறி, தொழிலாளர்களுக்கோ வேலையிழப்பு

கொரானா பாதிப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உணவையும், அடிப்படை வசதிகளையும் இந்த அரசும் அவர்கள் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளிகளும் அவர்களை கண்டு கொள்ளாத காரணத்தால்தான் அவர்கள்  ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள சொந்த ஊரை தேடி நடக்க ஆரம்பித்தார்கள். வடமாநில தொழிலாளர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இவர்கள் ஒன்றும் திறமை குறைந்தவர்கள் இல்லை. இவர்கள் ஒன்றும் சோம்பேறிகள் இல்லை. மிகவும் கடினமாக உழைப்பவர்கள். உப்பு சப்பில்லாத சாப்பாட்டை தின்று மிகக்குறைந்த கூலிக்கு அதிகமான நேரத்தில் வேலை செய்து இங்குள்ள முதலாளிகளின் செல்வத்தை பெருக்கியவர்கள்.

இவர்களின் உழைப்பினால் உருவான செல்வத்தை கொண்டு தான் இங்குள்ள முதலாளிகள் ஆண்டிலியா (அம்பானியின் ஒரு குடும்பம் தங்குவதற்கு 4500 கோடியில் செலவு செய்து கட்டப்பட்ட மாளிகை) போன்ற மாளிகைகளையும், தீவுகளையும் கட்டி இந்திய பணக்காரர்களாக இருக்கும் இவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள். அந்த முதலாளிகளை உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க வைத்த தொழிலாளர்களை ஒருபொழுதும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. அவர்களைப் பாதுகாக்க வேண்டியது யார் பொறுப்பு?

ஒரு தொழிற்சாலையில் 20 ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உழைத்தாலும் அதன் லாபம் முதலாளி ஒருவனுக்கே செல்கிறது. அந்த லாபத்தை கொடுத்த தொழிலாளி பட்டினியில் தான் இருக்கிறான். முதலாளி தனக்கு ஆதரவாக சில பிரிவினர் இருக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்த தொழிலாளி நிரந்தரத் தொழிலாளி என்று பிரித்து வைத்திருக்கிறான். ஒரு 20% பேர் நிரந்தர தொழிலாளியாகவும் 80% பேர் ஒப்பந்த தொழிலாளர்களாகவும் இருக்கிறார்கள். இரண்டு பேருமே ஒரே வேலையை செய்தாலும் இரண்டு பேருக்குள்ள ஊதிய பிரிவு தொழிலாளர்களிடையே வேற்றுமையை வளர்க்கிறது.

சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக வேளச்சேரியில் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள் என்றால் ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி நன்கு திட்டமிட்டு வேளச்சேரி பகுதியில் ஏழு அல்லது எட்டு லட்சம் சோப்பு தயாரித்து விற்க முற்படுவான். இங்கு திட்டமிடல் என்பது சரியாக இருக்கிறது. ஆனால் சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களே 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளது. இதில் தான் சிக்கலே உள்ளது. வேளச்சேரியில் சந்தையை கைப்பற்ற மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கும். அது என்னவென்று பார்ப்போம்.

சோப்பு தயாரிக்கும் சிறிய நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்காதபடி பெரிய நிறுவனங்கள் செய்யும். சிறு நிறுவனங்கள் சிறிய அளவிலான இயந்திரங்களை மட்டுமே வைத்திருப்பார்கள். அதனால் அவர்களால் குறைந்த அளவு மட்டுமே சோப்புகளை தயாரிக்க முடியும். உதாரணமாக சிறு நிறுவனங்கள் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு நாளைக்கு ஆயிரம் சோப்புகள் தயாரிக்கிறார்கள் என்றால் பெரிய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு, இயந்திரங்களைக் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சோப்புகளை தயாரிக்க முடியும் இதனால் சிறு நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாது. பெரிய நிறுவனங்கள் அதிகப்படியாக சோப்பை தயாரிப்பதால் இரண்டு சோப்பு வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறி சந்தையை கைப்பற்றுவார்கள்.

Big Fish Eating Many Small Colorful Fish Comic Digital Art by ...ஒரு கட்டத்திற்கு பிறகு சிறு நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் வாங்க ஆரம்பிக்கும். இந்த வளர்ச்சிப்போக்கில் ஒரு கட்டத்திற்கு பிறகு முதலாளியின் லாபத்தை அதிகரிக்க தொழிலாளியின் உழைப்பை அதிகமாக உறிஞ்ச ஆரம்பிப்பான். 8 மணி நேர வேலையை 10, 12 மணி நேர வேலையாக மாற்றுவது. பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை நாலு பேர் செய்ய வைப்பது ஏனென்றால் வெளியில் வேலை இல்லாத ரிசர்வ் பட்டாளம் இந்த வேலையை செய்வதற்கு தயாராக இருக்கிறது.

வேண்டுமென்றே சிறிது காலத்திற்கு விலையை குறைத்து சந்தையை கைப்பற்ற ஆரம்பித்தவுடன் விலையை சிறிதுசிறிதாக ஏற்றுவது; ஜியோ-வை நமக்கு ஆரம்பத்தில் இலவசமாக கொடுத்து பிறகு சந்தையை கைப்பற்றிய பிறகு அவன் வைத்ததுதான் விலை அதை நாம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்று அம்பானி செய்ததை போல் செய்வார்கள். ஒவ்வொரு முதலாளியும் தனது சோப்பை விற்க போட்டி போட்டுக்கொண்டு விலையை குறைத்தும் சில சலுகைகளை கொடுத்தும் சோப்பை விற்க முற்படுவார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த முதலாளி சோப்புகளை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்து குவித்து விடுவான். ஆனால் சோப்புகளை வாங்குவதற்கு ஆட்கள் இருக்காது. சோப்புகளை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாததால் நிறுவனத்தின் லாபம் குறையும். இதனால் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வேலையை விட்டு விரட்டபடுவார்கள். ஆறு மாதத்திற்கு முன்பு பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியின் சிஇஓ இந்திய மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட் கூட கொடுத்து வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று சொன்ன நிலைதான் உருவாகும். பிஸ்கட் பாக்கெட் கூட வாங்கமுடியாத நிலைக்கு மக்கள் செல்லும்போது இந்த பொருளாதாரம் எவ்வாறு இயங்கும்? இயங்க முடியும்?

ஒரு பத்து லட்சம் மக்கள் வசிக்கும் வேளச்சேரி என்ற பகுதியிலேயே இவ்வளவு போட்டி நடக்கிறது என்றால் உலகம் முழுவதும் 700 கோடி மக்கள் வசிக்கிறார்கள் அப்படி என்றால் போட்டி எவ்வளவு உக்கிரமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.  இதில் இரண்டு முரண்பாடுகள் உள்ளன. ஒன்று மக்களால் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை. இன்னொன்று முதலாளி பொருட்களை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்து வைப்பது. இந்த முரண்பாடுகளில் இருந்து முதலாளிகள் தப்பிப்பதற்காக தான் ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகரிப்பது இயற்கை வளங்களை சூறையாடுவது மக்களின் சேமிப்பை கைப்பற்றுவது போன்ற விஷயங்களை  செய்கிறான். இந்த போட்டிதான் நாடுகளுக்கிடையிலான சந்தையைப் பிடிக்கும் போட்டியாக மாறி ஏகாதிபத்திய அரசுகள் தோன்றுவதற்கு வழிவகுக்கிறது. இதுதான் உலகப்போர் உருவாவதற்கான காரணமாகவும் இருக்கிறது. முதலாளித்துவத்தின் நிலை எப்போதுமே இதுதான்.

முதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு!

இதற்கு மாற்றாக சோவியத் ரஷ்யாவிலும் செஞ்சீனாவிலும் இருந்த சோசலிச அமைப்பைப் பற்றி பார்ப்போம். சீனாவிலும் ரஷ்யாவிலும் கூட்டுப் பண்ணைகள் இருந்தன. கூட்டுப் பண்ணைகள் என்பவை ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருக்கும். அந்த கூட்டு பண்ணைக்குள்ளே 2 சிறு நிறுவனங்கள் போன்று இருக்கும். அந்த கூட்டுப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள்,பழங்கள் மற்றும் அனைத்து பொருட்களையும் அங்கு உற்பத்தியிலிருந்து விற்பனை வரை அந்த பண்ணைகளுக்கு உள்ளே நடக்கும். இங்குவேலை செய்யும் தொழிலாளிகளுக்கு வேலை நேரத்தில் நல்ல சத்தான உணவு இருவேளை அளிக்கப்படும். மேலும் அங்கு கம்யூனிட்டி கிச்சன் என்று அழைக்கப்படும் ஒரு சிஸ்டம் உள்ளது.அங்கு தொழிலாளர்கள் தங்குவதற்கு அந்த கூட்டுப்பண்ணைகளுக்குள்ளே குடியிருப்பு பகுதிகள்,வீடுகள் இருக்கும். இன்று பெண்களுக்கிருக்கும் மிகப்பெரும் வேலை தங்கள் குடும்பத்தினருக்கு சமையல். ஆனால் அங்கிருக்கும் பெண்கள் யாரும் சமையல் செய்ய மாட்டார்கள். அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே  இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும். இதற்கு மேல் அந்த தொழிலாளிக்கு பெரிய செலவு ஒன்றுமில்லை. சம்பளமும் அனைவருக்கும் சமமாகத்தான் இருக்கும் இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் அனைவரும் சமம் என்ற மனநிலைக்கு உளவியல்ரீதியாக வந்து விடுகிறார்கள். இங்கு உள்ள அனைவருக்கும் பணத்தின் தேவை என்பது குறைந்து போய்விடுகிறது. ஒருவேளை அங்கு கொரானா போன்ற ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் அவர்களை கவனித்துக் கொள்ள அந்த அரசாங்கம் தயாராக இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உணவு, இருப்பிடம், கல்வி மருத்துவம் போன்ற அனைத்தும் இங்குள்ள தொழிலாளிகளுக்கு கிடைத்துவிடுகிறது. இன்று நாம் அனைவரும் காலைமுதல் இரவு வரை ஓடிக் கொண்டிருப்பதற்கான காரணம். இந்த அடிப்படை விஷயங்களுக்காகதான். நம் குழந்தைகளை படிக்க வைத்தால் சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களில் மட்டுமே படிக்கவைக்க வேண்டும். ஏனென்றால் அரசுப் பள்ளிக்கூடங்களில் சரியான கல்வி தரப்படுவதில்லை. நாம் எப்படியாவது கடன் வாங்கியாவது ஹவுசிங் லோன் போட்டாவது ஒரு வீட்டை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறோம். அப்படி ஹவுசிங் லோனும் போட்டு  முப்பது வயதிலிருந்து 50 வயது வரை இருபது வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம் பணம் என்று மனித மனம் ஓடிக் கொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். நமக்கு ஏதாவது ஆகிவிட்டால் நம் குடும்பத்தை யார்  பார்ப்பார்கள். சொத்து இல்லாவிட்டால் கடைசி காலத்தில் நம்மை யார் கவனிப்பார்கள் என்ற கண்ணோட்டம் இந்த முதலாளித்துவ கட்டமைப்பிலிருந்து தான் வருகிறது. இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பு அவ்வாறுதான் உருவாக்கி வைத்திருக்கிறது.

நாம் பெரும்பாலானவர்களிடம் பேசும்போது தங்கம் ஏன் வாங்குகிறீர்கள் என்று கேட்கும்பொழுது 95% சதவீதத்தினர் சொல்லும் பதில் கஷ்ட காலத்தில் நகையை அடகு வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்கிறார்கள். அது ஒரு நிதர்சனமான உண்மையாகத்தான் இருக்கிறது. பெண்களுக்கும் கூட ஆபரணம் என்ற வகையில் குறைந்த அளவே ஆசையிருக்கிறது. பெரும்பாலான பெற்றோர்கள் பெண்களுக்கு நகை போட்டு கட்டி கொடுப்பதே  இன்று நன்றாக இருப்பவர்கள் நாளை எந்த சூழ்நிலையிலும் கீழ்நோக்கி செல்லக்கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அந்த நேரத்தில் தங்கம் இருந்தால் ஓரளவு பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான். ஏனென்றால் இந்த பொருளாதாரம் நிலையற்றதாக இருக்கிறது.

அடுத்ததாக நம் குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தான் செல்கிறோம் ஏனென்றால் அரசு மருத்துவமனைகளில் சரியாக மருத்துவம் பார்க்கப்படாத காரணத்தால். இவை அனைத்தையும் உருவாக்குவது தனியார் முதலாளிகள்தான். நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வியிலும், உங்கள் ஹவுசிங் லோனிலும், உங்கள் மருத்துவ செலவிலும் ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் இருக்கிறது.

It's Time for Socialist Revolution! - New American Marxist magazineஒரு லட்சம் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உழைத்தாலும் அவர்களால் உருவாக்கும் லாபம் ஒரு முதலாளிக்கு மட்டுமே செல்கிறது. இதுவே இந்த கூட்டுப் பண்ணையில் எத்தனை தொழிலாளர்கள் வேலை செய்தாலும் அதனுடைய லாபம் அனைத்தும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மற்றும் பொருட்களை குறைவாக விற்பதன் மூலம் இந்த சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

அதுவே ஒரு தனி முதலாளியின் கீழ் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும்போது தொழிலாளர்களின் நிலைமை எப்படி இருக்கிறது. தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக உழைத்தாலும் அவர்களால் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பொருளாதாரமே ஒரு நிச்சயமற்ற தன்மையை நோக்கி செல்கிறது.வாழும் காலத்தில் நரகத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் கூட்டுப்பண்ணை மாதிரியான இடங்களில் உள்ள தொழிலாளர்கள் வாழும் காலத்தில் சொர்க்கத்தை அனுபவிக்கிறார்கள். இதை சோசலிச சமூகத்தில் மட்டுமே மாற்ற முடியும்.அந்த சோசலிச சமூகத்தை உருவாக்குவது தொழிலாளர்களின் கடமை. அதை புரட்சியின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்!

  • ராமசாமி

Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்

வறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும்...

விவசாய நெருக்கடி, சி.டி.எஸ் ஆட்குறைப்பு, ஆர்.கே நகர் ஜனநாயகம் – கலந்துரையாடல் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- - ஐ.டி ஊழியர்கள் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நாள் : ஏப்ரல் 22, 2017 சனிக்கிழமை நேரம் : 11 am...

Close