நவீன வாழ்வின் தவிர்க்க முடியாத, தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு விஷயம், கடன். கடன் கொடுப்பது, கடன் படுவது வட்டியும் அசலும் பெருகிக் கொண்டே போவது என்று பல புதிர்களை உள்ளடக்கியிருக்கும் கடன் செலாவணி முறையைப் பற்றிய ஒரு சித்திரம்.
வட்டிக் கடன் என்பது முதலில் எப்போது உருவாகியிருக்கும்? வட்டிக்குக் கடன் கொடுப்பதும், வாங்குவதற்குமான பொருளாதார அடிப்படை என்ன?
முதலாவதாக, சமூகத்தின் உற்பத்திப் பொருட்களில் ஒரு பகுதியாவது சரக்குகளாக மாற்றப்பட்டிருக்க வேண்டும், மேலும் பணம் அதற்குரிய பல்வேறு பணிகளிலும் வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், சமூகத்தின் சொந்தத் தேவைகளுக்கான உற்பத்தி முதன்மையாக இருந்தாலும், பரிவர்த்தனையும் வர்த்தகமும் போதுமான அளவு வளர்ந்து பணம் மற்ற அனைத்து சரக்குகளுக்குமான பொதுச் சமதையாக செயல்பட ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஆனால், முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறையில் கடுவட்டி அல்லது கந்துவட்டி ஆதிக்கம் செலுத்துகின்றது. ஏனென்றால், உற்பத்தி பண்டங்கள் எவ்வளவு குறைவாக சரக்குகளாக ஆகின்றனவோ, அவ்வளவு அதிகமாக பணம் பொதுவான செல்வமாக தோற்றமளிக்கிறது. அதாவது, பணம் கிடைப்பது அவ்வளவு கடினமாக உள்ளது. அதன் காரணமாக செல்வத்தின் பிரதிநிதியாக பணம் பதுக்கி வைக்கப்படுவது ஆரம்பமாகிறது. ஆனால், தொழில்முறை பதுக்கல் பேர்வழி வட்டிக்குக் கடன் கொடுப்பவராய் மாறுவது வரை அவருக்கு முக்கியத்துவம் இல்லை.
வட்டிக் கடன் வாங்குபவர்களாக வணிகர்கள், மேல்தட்டு வர்க்க ஊதாரிகள், சிறு உற்பத்தியாளர்கள்
வட்டிக் கடன் வாங்குபவர்களைப் பொறுத்தவரை முதல் முக்கியமான பிரிவினர் தொலைதூரத்துக்கு பொருட்களை கொண்டு சென்று விற்று பணம் ஈட்டும் வர்த்தகர்கள். அவர்கள் ஈட்டும் லாபத்தில் ஒருபகுதியை தாம் பெறும் கடனுக்கு வட்டியாகக் கொடுக்கிறார்கள். அவ்வாறு, வணிகர் கடுவட்டி கடன் வாங்குவது அதை மூலதனமாக பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதற்காகவே. எனவே, முதலாளித்துவ உற்பத்தி முறையில் முதலாளிகளோடு வட்டிக்காரர் கொண்டிருக்கும் உறவும் முன்னாளைய சமூக வடிவங்களில் வணிகரோடு கொண்டிருக்கும் உறவும் ஒன்றுதான். இவ்வாறாக, வட்டி மூலதனத்தின் (அதாவது குட்டி போடும் பணம்) வளர்ச்சி, வணிக மூலதனத்தின் வளர்ச்சியோடு (அதாவது பணத்தைப் போட்டு பொருட்களை வாங்கி விற்று இட்ட முதலை பெருக்குவது), தன வணிக மூலதனத்தின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்ததாகும்.
ஆனால், முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறைகளில் கடுவட்டிக் கடன் செயல்படுவதன் தனிச்சிறப்பான வடிவங்கள் மேல்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த ஊதாரிகளுக்கு முக்கியமாக பண்ணையார்களுக்கு பணம் கொடுக்கும் கடன் மற்றும் தம் உழைப்புக்கு வேண்டியவற்றை தாமே சொந்தமாக வைத்துள்ள சிறு உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கும் கடன் ஆகியவை. இரண்டாவது பிரிவில் கைவினைஞர்களும் இருந்தாலும், விவசாயிகள்தான் முக்கிய இடம் பெறுகிறார்கள். ஏனெனில் முதலாளித்துவத்துக்கு முற்பட்ட நிலைமைகளில் சிறு உற்பத்தியாளர்களுக்கு இடமளிக்கும் சூழல் இருக்கும் வரையில் அவர்களில் ஆகப் பெரும்பான்மையாக விவசாயிகளே உள்ளனர்.
சிறு உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்படும் கந்துவட்டிக் கடன்
சிறு உற்பத்தியாளர்களுக்கு கடன் கொடுக்கும் வட்டிக்கடைக்காரர், அவர்களது உற்பத்தியின் உபரி மதிப்பு முழுவதையும் மட்டுமின்றி, அவர்களது அவசிய உழைப்பின் ஒரு பகுதியையும் கறந்து கொள்கிறார். இதனால், இந்த உற்பத்தி நடைமுறையே அவலத்துக்குள்ளாகிறது. சிறு உடைமையாளர்களின் உடல்நலமும், குடும்ப வளமும், வாழ்வாதாரமும் படிப்படியாக சிதைக்கப்படுகிறது. அவர்கள், விரைவில் ஓட்டாண்டியாக்கப்பட்டு அவர்களது சொத்துக்களை வட்டிக்கடைக்காரர்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். விவசாய சமூகத்தில் சமூகக் குடிமகனாக, அரசியல் உரிமைகளுக்கு ஆதாரமாக இருக்கும் நில உடைமையை பறித்துக் கொள்ளும் இந்த வட்டிக் கடன் மீது மக்கள் கடும் வெறுப்பு கொண்டிருப்பது இயல்பாக உள்ளது.
சிறு உற்பத்தியாளர் கந்துவட்டிக்காரரால் துவைத்து காயப்படப் படுவது எப்படி நடக்கிறது?
அனைத்துக்கும் மேலாக பணமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே சிறுவீத உற்பத்தியாளருக்கு பணம் தேவைப்படுகிறது. சிறு உற்பத்தியாளர்கள் (விவசாயிகள், கைவினைஞர்கள்) பண்ணையாருக்கு அளக்க வேண்டிய படியையோ, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையோ பணமாக செலுத்த வேண்டும் என்ற நிலைமை வரும் போது வட்டிக் கடனுக்கான களம் உருவாகிறது. குறிப்பிட்ட தேதியில் தீர்க்க வேண்டிய – நில வாடகை, கப்பம், வரி என்ற ஒவ்வொரு பணக் கொடுப்பும் அதற்காக பணம் பெற்றாக வேண்டிய தேவையை தோற்றுவிக்கிறது. பணப்புழக்கம் குறைவாய் இருந்தாலும், கொடுக்க வேண்டிய பெரும்பாலானவை பணமாகவே செலுத்தப்பட வேண்டியிருந்தாலும் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மேலும், வாழ்வுச் சாதனங்களும் கச்சாப் பொருட்களும் சிறு உற்பத்தியாளர்களின் உற்பத்திக்கு இன்றியமையாதனவாக உள்ளன. தம் உற்பத்தி சாதனங்களை தற்செயலாகவோ அல்லது அசாதாரண நிகழ்வுகளாலோ பறி கொடுத்து விடும் எந்த ஒரு சூழ்நிலையும் உற்பத்தியாளர் மேலும் வறுமைப்படுவதையும் கந்துவட்டிக்கார ஒட்டுண்ணி நுழைந்து ஒட்டிக் கொள்வதற்கு இன்னுமோர் இடுக்கு ஏற்படுவதையும் குறிப்பதாகும். வாழ்வுச் சாதனங்கள் மற்றும் கச்சாப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டால் உற்பத்திப் பொருளின் விற்ற வருமானத்திலிருந்து அவற்றை மாற்றீடு செய்ய முடியாமல் போகலாம். விளைச்சல் பொய்த்துப் போய் அல்லது வேறு காரணங்களால் விளைபொருளை விற்று பணமாக்க முடியாத போது வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியது வருகிறது. சிறு விவசாயிக்குச் சொந்தமான ஒரு பசுமாடு செத்துப் போவதாலேயே, அவர் மறுபடியும் பழைய அளவு வீதத்தில் மறுஉற்பத்தி செய்ய முடியாமல் போய் விடலாம்.
இத்தகைய ஏதாவது ஒரு காரணத்தால் சிறு உற்பத்தியாளர் கடுவட்டிக்காரரின் பிடியில் சிக்கிக் கொள்கிறார், ஒரு முறை சிக்கிக் கொண்டபின் அவரால் இதிலிருந்து ஒருபோதும் மீளமுடிவதில்லை.
உழைப்புச் சாதனங்கள் நேரடி உற்பத்தியாளர்களுக்கு சொந்தமாக இருப்பது அல்லது அவர்களின் கைவசமிருப்பது மேலும் இதற்கிணையான சிறுவீத பொருளுற்பத்தி கடுவட்டி மூலதனத்திற்கு இன்றியமையாத முன்தேவையாக இருக்கிறது. எனவே, அம்மூலதனம் உழைப்பைத் தனக்கு கீழ்ப்படுத்தாமல், தொழில்துறை மூலதனத்தைப் போல உழைப்பை எதிர்கொள்ளாமல் உள்ளது. இந்த கடுவட்டிக்காரரின் மூலதனம் அந்த பொருளுற்பத்தி முறையை வளங்குன்றச் செய்து, உற்பத்திச் சக்திகளை முடக்கிப் போடுகிறது. அதே போது அதன் அவல நிலைகளை மாறாமல் நீடிக்கச் செய்கிறது. உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனை வளரவிடாமல் தேங்க வைத்திருக்கிறது. கடுவட்டி பொருளுற்பத்தி முறையை மாற்றி விடாமல் ஒட்டுண்ணி போல அதில் ஒட்டிக் கொண்டு அதை வளங்குன்றச் செய்கிறது. அதை ஒட்ட உறிஞ்சி வீரியமிழக்கச் செய்து மறுவுற்பத்தியை இன்னும் கூட அவலமான நிலைமைகளில் நடைபெறச் செய்கிறது.
கடுவட்டி மூலதனம் வட்டியின் வடிவில் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச சாதனங்களுக்கு மேல் உபரி மதிப்பு முழுவதையும் கைப்பற்றிக் கொள்கிறது. கடுவட்டி மூலதனமானது மூலதனத்தின் பொருளுற்பத்தி முறை இல்லாமலேயே மூலதனத்திற்குரிய சுரண்டல் முறையைக் கையாளுகிறது.
பணம் பதுக்கியவரிடமிருந்து கோரப்படுவது பணம்தான், ஆனால் அவர் வட்டியின் மூலம் இந்த பணக் குவியலை மூலதனமாக, அதாவது உபரி உழைப்பை பகுதியாகவோ முழுமையாக தனதாக்கிக் கொள்வதாக, மாற்றிக் கொள்கிறார். மேலும் உற்பத்தி சாதனங்கள் பெயரளவில் பிறரது சொத்தாக இருக்கும் போதே அவற்றின் மீது ஆதிக்கம் பெறுவதற்கான சாதனமாக மாற்றிக் கொள்கிறார். இவ்வாறாக, கடுவட்டி பொருளுற்பத்தியின் இண்டு இடுக்குகளில் வாழ்கிறது.
இனி, நிலப்பிரபு அல்லது அடிமை உடைமையாளர் வாங்கும் கடுவட்டிக் கடனின் விளைவை பார்க்கலாம்.
ஊதாரித்தனத்துக்கும் ஊழலுக்குமான செல்வத்திற்கு வேண்டியதெல்லாம் பலவித பொருட்களை வாங்குவதற்கான சாதனமாகவும், கடன் அடைப்பதற்கான சாதனமாகவும் பயன்படும் பணமே ஆகும். இந்தக் காரணங்களுக்காக அடிமையுடைமையாளரோ பிரபுத்துவக் கோமானோ கடுவட்டிக்கு இரையானாலும் பொருளுற்பத்தி முறை மாறாமல் இருந்து வருகிறது, அவர்களுக்கு உட்பட்ட உழைப்பாளர்களுக்குத்தான் நிலைமை மேன்மேலும் கடுமையாகி விடுகிறது. கடன்பட்ட அடிமையுடைமையாளர் அல்லது பிரபுத்துவக் கோமானிடமிருந்து கறக்கப்படுவது அதிகரிக்க அதிகரிக்க உழைப்பாளர்களை அவர் ஒடுக்குவதும் அதிகரித்துச் செல்கிறது. முடிவில் அவரை ஒரேயடியாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு கடுவட்டியாளரே அடிமையுடைமையாளர் அல்லது நிலக்கிழார் ஆகிவிடுவதுமுண்டு. அரசியலதிகாரத்திற்கான கருவியாக, ஓரளவுக்கு தந்தைவழித் தன்மை உடையதாய் இருந்த சுரண்டலின் இடத்தில் இம்மியும் விட்டுக் கொடுக்காத பணந்தின்னிப் பகட்டுப் பேர்வழி வந்து விடுகிறார்.
இவ்வாறு தோன்றி இயங்கும் வட்டிக் கடன் கொடுத்தல்/வாங்கல் சமூக உற்பத்தி முறை மீது ஏற்படுத்தும் விளைவுகள் என்ன?
கடுவட்டி மூலதனம், உற்பத்தி முறையை மாற்றாமலேயே, நேரடி உற்பத்தியாளர்களின் உபரி உழைப்பு முழுவதையும் கைப்பற்றி விடுகிறது. வணிகர்களின் செல்வத்தைப் போன்று நிலச் சொத்துவுடைமையை சாராமல் பணக் குவியல் உருவாவதை அது சாத்தியமாக்குகிறது. உற்பத்தி சாதனங்கள் சிறுவீத அளவில் பிளவுபட்டிருக்கும் போது அது பணச் செல்வத்தை ஒன்று குவிக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்வதற்கான அடிப்படை நிலைமைகள் இருக்கும் போது, இந்த பண முதலைகள் முதலாளிகளாக மாறிக் கொள்கிறார்கள். எனவே, பாரம்பரியமாக வட்டித் தொழில் செய்து வந்த குழுவினர் நவீன முதலாளித்துவ உற்பத்தியில் தொழில்முனைவர்களாகவும் வங்கி முதலாளிகளாகவும் உருவெடுப்பது குருமூர்த்தி சொல்வது போல இந்திய சாதி அமைப்புமுறையின் தனிச்சிறப்பு அல்ல.
பணக்கார நிலவுடைமையாளர்கள் கடுவட்டியால் நாசமாவது, சிறு உற்பத்தியாளர்கள் வறுமைப்படுவது ஆகிய இந்த இரண்டுமே பெரும் பணமூலதனத் தொகைகள் உருவாவதற்கும் ஒன்று குவிவதற்கும் வழி செய்கின்றன. ஆனால் இந்தப் போக்கு பழைய பொருளுற்பத்தி முறையை எந்த அளவுக்கு ஒழித்துக் கட்டுகிறது என்பதும், அதனிடத்தில் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையை ஏற்றியமர்த்துகிறதா என்பதும் முழுக்க முழுக்க வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தையும் அவற்றுக்கு வகை செய்திடும் நிலைமைகளையும் பொறுத்ததாகும்.
உதாரணமாக, ஆசிய வழிபட்ட சொத்துடைமை வடிவங்களில் கடுவட்டி பொருளாதாரச் சீர்கேட்டுக்கும் அரசியல் ஊழலுக்கும் மேல் உற்பத்தி முறையில் மாற்றம் எதையும் ஏற்படுத்தாமலேயே நீண்ட காலம் நீடித்திருக்க முடியும். முதலாளித்துவ உற்பத்தி முறைக்கான முன்நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே கடுவட்டி ஒருபுறம் நிலப்பிரபுக்களையும் சிறுவீத உற்பத்தியாளர்களையும் நாசம் செய்தும் மறுபுறம் உழைப்பு நிலைமைகளை மையப்படுத்தியும் புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்தப்படுவதற்கு உதவி செய்கிறது.
மூலதனம் நூலின் 3-வது தொகுதியின் 36-வது அத்தியாயத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கருத்துக்கள் – முதல் பகுதி (மறு பகுதி அடுத்த பதிவில்)
தொகுத்தவர் : குமார்