வட்டிக் கடன்கள் – 2

 

வீன வாழ்வின் தவிர்க்க முடியாத, தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு விஷயம், கடன். கடன் கொடுப்பது, கடன் படுவது வட்டியும் அசலும் பெருகிக் கொண்டே போவது என்று பல புதிர்களை உள்ளடக்கியிருக்கும் கடன் செலாவணி முறையைப் பற்றிய ஒரு சித்திரம்.

இரண்டாவது (கடைசி) பகுதி. முதல்பகுதி

கந்துவட்டியை எதிர்க்கும் முதலாளித்துவ கடன்-செலாவணி முறை

முதலாளித்துவ கடன் செலாவணி அமைப்பு கடுவட்டிக்கு எதிர்வினையாக வளர்கிறது. ஆனால் இதைத் தவறாக புரிந்து கொள்வதோ புராதன கால எழுத்தாளர்களையும் திருச்சபை தந்தைகளையும், மார்ட்டின் லூதரையும், ஆரம்பகால சோசலிஸ்டுகளையும் போல் பொருள் கொள்வதோ கூடாது. கடன் செலாவணி அமைப்பின் பொருள் வட்டி மூலதனம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் நிலைமைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் கீழ்ப்படுத்தப்படுகிறது என்பது மட்டும்தான், அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ வேறு எதுவும் இல்லை.

கடன் செலாவணி மூலதனத்தை, அது முதலாளித்துவ உற்பத்தி முறையின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாக இருந்து வரும் வரை அதை கடுவட்டி மூலதனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இம்மூலதனத்துக்குரிய இயல்போ தன்மையோ அல்லவே அல்ல. அது மாறிய நிலைமைகளில் செயல்படுவதும், எனவே வட்டிக்காரரின் எதிரில் வந்து கடன் வாங்குகிறவரின் தன்மை அறவே மாறிப் போய் இருப்பதும்தான் அதனை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.

முதலில் வட்டி வீதத்தை எடுத்துக் கொள்வோம். அரசுக்குப் போய்ச் சேரும் ஒரு பங்கு தவிர உபரி-மதிப்பு முழுவதையும் வசப்படுத்திக் கொள்ளும் கந்துவட்டி வீதத்தை உபரி-மதிப்பில் ஒரு பகுதியாக மட்டும் அமைகின்ற நவீன கால வட்டி வீதத்தோடு ஒப்பிடுவது அபத்தம். இப்படி ஒப்பு நோக்குவது கூலித் தொழிலாளி தன்னை வேலைக்கு அமர்த்துகிற முதலாளிக்கு இலாபமும், வட்டியும், நில வாடகையும், சுருங்கச் சொல்லின் முழு உபரி-மதிப்பும் உற்பத்தி செய்து கொடுப்பதை மறந்து விடுவதே ஆகும்.

கடுவட்டி உற்பத்தியாளரிடமிருந்து உடைமைகளை பறித்து விடுவதை முதலாளித்துவ உற்பத்தி முறையோடு எவ்வாறு ஒப்பிட முடியும் என்று பார்ப்போம். தொழிலாளியிடமிருந்து அவரது உழைப்புச் சாதனங்களை பறித்துக் கொள்ளும் முழுமையான உடைமை பறிப்பு முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையைப் பொறுத்தவரை அது சாதிக்கிற, அல்லது சாதிக்க முனைகிற விளைவு அல்ல. அந்த உடைமைப்பறிப்பை முன்தேவையாகக் கொண்டுதான் அது தொடங்கவே செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் கடுவட்டியால் உற்பத்தி சாதனங்களை உற்பத்தியாளர்களிடமிருந்து பறிக்க முடியாது. ஏனென்றால், அவ்விதம் உடைமை பறித்தல் அந்த உற்பத்தி முறைக்கு முன் நிபந்தனையாக ஏற்கனவே முடிந்து விட்டது.

உழைப்பாளர் கடன் கொடுப்பவரின் அடிமையாக்கப்பட்டு நாசமாக்கப்படுவதைப் பொறுத்தவரையில் என்ன வேறுபாடு இருக்கிறது?

உழைப்புச் சாதனங்களும் உழைப்பின் உற்பத்திப் பொருளும் மூலதனமாக உருவெடுத்து தொழிலாளியை எதிர்நோக்கும் போது (வளர்ச்சி பெற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் நடப்பது இதுவே) அவர் உற்பத்தியாளர் என்ற முறையில் சல்லிக் காசும் கடன் வாங்கத் தேவையில்லை. அப்படியே கடன் வாங்கினாலும் சொந்தத் தேவைக்காகவே வாங்குகிறார். அடகுக் கடையில் அவர் வாங்கும் கடன் இத்தகையதே. முறையான அடிமையைப் போலவே கூலியடிமையும் அவர் வகிக்கும் நிலை காரணமாக – எப்படியும் உற்பத்தியாளர் என்ற முறையில் கடன்-அடிமை ஆக முடியாது. அப்படியே கடன்-அடிமை ஆனாலும் நுகர்வாளர் என்ற வகையில்தான் ஆக முடியும்.

வீடுகள் முதலானவற்றை சொந்தப் பயன்பாட்டுக்கென வாடகைக்கு விடப்படுவதை இந்த விவாதத்துக்குள் இழுப்பது இன்னும் கூட பொருத்தமற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்கும். இவ்வகையிலும் தொழிலாளி வர்க்கம் பெருமளவு வஞ்சிக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், தொழிலாளிக்கு தேவையான வாழ்வுச் சாதனங்களை விற்கும் சில்லறை வணிகரும் அவரைச் சுரண்டவே செய்கிறார். பொருளுற்பத்தி நிகழ்முறைக்குள்ளேயே நடைபெறும் முதனிலைச் சுரண்டலோடு சேர்ந்து வரும் இரண்டாம் நிலைச் சுரண்டலாகும் இது. விற்றலுக்கும், கடன் தருதலுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு முக்கியத்துவமே இல்லாதது, வெறும் வடிவ அளவிலானது. பிரச்சனையின் உண்மைத் தன்மையை சற்றும் அறியாதவர்களுக்கு மட்டுமே இது அடிப்படை வேறுபாடாகத் தெரியும்.

ஆனால், தனது உழைப்புச் சாதனங்களுக்கும், உற்பத்திப் பொருளுக்கும் உழைப்பாளியே சொந்தக்காரராக இருக்கும் போதெல்லாம், அது பெயரளவிலே இருந்தால் கூட அவர் உற்பத்தியாளர் என்ற வடிவில் வட்டி மூலதனத்தை, கந்து வட்டி மூலதனமாக எதிர் கொள்கிறார். இவ்வாறாக, முதலாளித்துவப் பொருளுதாராத்திற்குள்ளேயும் பிற்பட்ட தொழில் கிளைகளில் அல்லது நவீன பொருளுற்பத்தி முறைக்கு மாறிச்செல்வதை தவிர்த்துக் கொண்டிருக்கும் தொழில்கிளைகளில் கடுவட்டிக் கடன் நிலைமை காணப்படுகிறது.

எனவே, கடுவட்டி முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சியுற்ற நாடுகளிலும் தொடர்ந்து வருவதோடு அல்லாமல், முந்தைய காலங்களில் சட்டத்தின் கீழ் இடப்பட்ட தளைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும் செய்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலான கடன் வாங்குதல் நடைபெறாத, நடைபெற முடியாத நிலைமைகளிலும், சொந்தத் தேவைகளுக்காக அடகுக்கடை போன்றவற்றில் கடன் வாங்கப்படும் நிலைமைகளிலும், ஊதாரி செலவுக்காக கடன் வாங்கப்படும் நிலைமைகளிலும், உற்பத்தியாளர் முதலாளித்துவ உற்பத்தியாளராக இல்லாமல் சிறுவிவசாயி அல்லது கைவினைஞராக நேரடி உற்பத்தியாளராக இருக்கின்ற நிலைமைகளிலும், முதலாளித்துவ உற்பத்தியாளரே சிறுவீதத்தில் செயல்படும் நிலைமைகளிலும் வட்டி மூலதனம் கடுவட்டி – மூலதனத்தின் வடிவத்தையே தக்க வைத்துக் கொள்கிறது.

கடுவட்டிக்கு எதிர்வினையாக ஏழை எளியவர்களை பாதுகாக்கும் முயற்சிகள், வரலாற்றில் புனிதமான விருப்பங்கள் அவற்றுக்கு எதிரானவையாக மாறும் வேடிக்கையைத்தான் வெளிப்படுத்தின. உதாரணமாக, இந்தியாவிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் கிராமப்புறத்தில் சிறு தொழில் செய்வதற்கு கடன் கொடுப்பதாக ஆரம்பிக்கப்பட்ட நுண்கடன் முறைக்கான நிதி வங்கியிலிருந்தே வந்தாலும் நேரடி உற்பத்தியாளரைப் பொறுத்தவரையில் உபரி முழுவதையும் பல்வேறு இடைத்தரகர்களிடம் பறிகொடுப்பதாகவே அமைந்தது.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையில் கந்து வட்டி வடிவங்கள் தம்மை புதுப்பித்துக் கொண்டாலும், அவை இரண்டாம் பட்சமான வடிவங்களாகவே உள்ளன. வட்டி மூலதனத்தின் தன்மையை தீர்மானிப்பவையாக இல்லை.

நவீன கடன்-செலாவணி அமைப்பை உருவாக்கியவர்கள் வட்டி மூலதனத்தை எதிர்த்து ஒதுக்குவதற்கு பதிலாக அதற்கு வெளிப்படையான ஒப்புதல் வழங்கியே தொடங்குகிறார்கள். எனவே, வங்கி முதலாளிகள் கடுவட்டித் தொழிலை எதிர்த்து முன் வைக்கும் வாதங்களில் பல சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட்டுகள் நுழைவதை வரவேற்கும் தாராளமய ஆதரவாளர்கள் மொத்த/சில்லறை வியாபாரிகள் விவசாயிகளையும், மக்களையும் சுரண்டுகிறார்கள் என்று வடிக்கும் கண்ணீரை ஒத்தவை.

கடுவட்டிக்கு எதிரான கடுமையான போராட்டம், வட்டி மூலதனத்தை தொழில்துறை-மூலதனத்துக்குக் கீழ்ப்படுத்துவதற்கான கோரிக்கை முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கான முன் தேவைகளை நவீன வங்கிப் பொருளாதாரத்தின் உருவில் தோற்றுவிக்கும் அங்ககப் படைப்புகளின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாகுமே தவிர வேறல்ல. அது வேலையில்லாமல் ஓய்ந்திருக்கும் பண இருப்புகளை குவித்து பணச்சந்தையில் வீசுவதன் மூலம் கடுவட்டி மூலதனத்தின் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. மறுபுறம் கடன்-செலாவணி பணத்தைத் தோற்றுவித்து உயர்நிலை உலோகத்தின் ஏகபோகத்திற்கு வரம்பிடுகிறது.

கடன் செலாவணி மூலதனத்தின் பணிகள்

சிலர் தொழிற்கருவிகளை பெற்றிருந்தும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு திறமையோ விருப்பமோ இல்லாதிருக்க, மற்றவர்கள் முயற்சியுடையவராய் இருந்தாலும் உழைப்புக் கருவிகள் ஏதுமற்றவர்களாக இருக்கும்படியான ஒரு சமுதாயத்தில் இந்தக் கருவிகளை அவற்றின் சொந்தக்காரர்கள் கையிலிருந்து பயன்படுத்தத் தெரிந்தவர்களது கைகளுக்கு எளிய முறையில் மாற்றுவதுதான் கடன் செலாவணியின் நோக்கம்.

இரண்டாவதாக, பணத்துக்குப் பதில் பல்வேறு சுற்றோட்டக் கடன்-செலாவணி வடிவங்களை நுழைக்க முடிவதிலிருந்து பணம் என்பது உண்மையில் உழைப்புக்கும் அதன் உற்பத்திப் பொருட்களுக்கும் உரிய சமூகத் தன்மையின் தனித்தெரிவிப்பே தவிர வேறல்ல என்பதை வங்கித் தொழில் நிரூபிக்கிறது. ஆனால், இந்தச் சமூகத் தன்மை தனியார் பொருளுற்பத்தியின் அடிப்படைக்கு எதிர்நிலையில் இருப்பதால், கடைசியில் பார்க்கும் போது பணம் பொருளாகவோ, தனிவகைச் சரக்காகவோ காட்சியளித்தாக வேண்டும். மூலதனத்தின் சமூக இயல்பு கடன் செலாவணி மற்றும் வங்கி முறையின் முழு வளர்ச்சியின் மூலம் முதலில் வளர்க்கப்பட்டு பின்னர் முழுமையாக உருப்பெறுகிறது.

ஆனால், கடன் செலாவணிக்கு அதன் இயல்பிலேயே பணம்தான் அடித்தளமாக இருந்து வருகிறது. இரண்டாவதாக, தனியாட்கள் சமுதாயப் பொருளுற்பத்தி சாதனங்களில் ஏகபோக உடைமை கொண்டிருப்பது கடன் செலாவணி அமைப்புக்கு இன்றியமையாதது. இவ்வமைப்பே முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் இயல்பான வடிவமாகவும், மறுபுறம் இப்பொருளுற்பத்தி முறை இறுதி உச்சநிலைக்கு வளர்ச்சி பெறுவதற்கான உந்து-சக்தியாகவும் இருக்கிறது.

சொத்து சுகம் இல்லாவிட்டாலும் ஊக்கமும், உறுதியும், ஆற்றலும், தொழில்திறமையும் வாய்ந்த ஒருவர் முதலாளி ஆகலாம் என்பது ஒவ்வொரு தனிநபரின் வர்த்த மதிப்பும் துல்லியமாக கணிக்கப்படுவது – முதலாளித்துவ அமைப்பிற்கு சப்பைக்கட்டுவோரால் பிரமாதமாக போற்றப்படுகிறது. இது செல்வ வேட்டைக்கான களத்தில் புதிய போட்டியாளர்களை கொண்டு வந்து சேர்த்தாலும், மூலதனத்தின் ஆளுகைக்கு வலுவூட்டி, அதன் அடித்தளத்தை விரிவாக்கி சமுதாயத்தின் கீழ்த்தட்டிலிருந்து புதுப்புது சக்திகளை அமர்த்திக் கொள்ள துணை புரிகிறது. ஆளும் வர்க்கம் ஆளப்படுகிற வர்க்கத்தின் மிகச்சிறந்த நபர்களை எவ்வளவுக்கு தன்வயப்படுத்திக் கொள்ள முடிகிறதோ, அதன் ஆட்சி அந்த அளவுக்கு நிலையானதும் ஆபத்தானதும் ஆகிறது.

கடன் செலாவணி முறையும் சோசலிசமும்

சோசலிச அர்த்தத்தில் கடன்-செலாவணி மற்றும் வங்கித் தொழில் அமைப்பின் அதிசய சக்தி தொடர்பாய் எழும் மாயைகள் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை குறித்தும் அதன் வடிவங்களில் ஒன்று என்ற முறையில் கடன்-செலாவணி அமைப்பு குறித்ததுமான முழு அறியாமையிலிருந்து எழுபவை. சரக்கு உற்பத்தியை நீடித்திருக்கச் செய்யவும், அதே நேரத்தில் பணத்தை ஒழிக்கவும் வேண்டும் என்று விரும்பிய பரபரப்பூட்டும் எழுத்தாளரான புரூதோனால்தான் வட்டியில்லாக் கடன் என்ற பேரபத்தம் பற்றிய மனக்கோட்டைகளை கட்டிப் பார்க்க முடிந்தது.

“தேசக் கடன் செலாவணி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திப் பாருங்கள். தகுதியும் திறமையும் பெற்றவர்கள் என்றாலும் சொத்துடைமையேதும் இல்லாதவர்களுக்கு அது செல்வாதாரங்களை முன்னீடு செய்யும் என்றும், ஆனால் பொருளுற்பத்தியிலும் நுகர்விலும் ஒன்று சேரும்படி இந்தக் கடனாளிகளை கட்டாயமாய் கட்டுப்படுத்தாது என்றும் அவரவரே உற்பத்தியையும், பரிவர்த்தனையையும் தீர்மானித்துக் கொள்வது என்றும் வைத்துக் கொண்டால், இவ்வழியில் சாதிக்கப் போவது ஏற்கனவே தனியார் வங்கிகள் சாதித்து முடித்திருப்பதைத்தான். அராஜகமும், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான விகிதக் கேடும், சிலர் திடீரென்று நாசமாவதும், வேறு சிலர் திடீரென்று செல்வந்தராவதும்தான் மிஞ்சும். அத்தகைய தேசக் கடன் செலாவணி நிறுவனம் ஒருவருக்கு நன்மைகள் கிடைக்கச் செய்யும் என்றால் அதற்கீடாக இன்னொருவர் துன்பப்பட வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெறும் கூலித் தொழிலாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவதற்கான சாதனங்களைத்தான் நீங்கள் அளித்திருப்பீர்கள்.” என்று ஷார்ல் பெக்கியோர் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையிலிருந்து கூட்டுத்துவ உழைப்பின் பொருளுற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் காலத்தில் கடன்-செலாவணி அமைப்பு சக்திமிக்கதொரு நெம்புகோலாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பொருளுற்பத்தி முறையிலான பிற உள்ளார்ந்த புரட்சிகளுடன் தொடர்புடைய ஒரு அம்சமாக மட்டுமே அது பயன்படும்.

உற்பத்திச் சாதனங்கள் மூலதனமாக மாற்றப்படுவது நின்று போனவுடனேயே (நிலத்தில் தனியுடைமை ஒழிக்கப்படுவது உட்பட) கடன்-செலாவணி என்பது பொருளற்றதாகி விடுகிறது. மாறாக, முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலைத்திருப்பது வரை வட்டி மூலதனமும் நீடித்து இருக்கிறது, அதன் கடன்-செலாவணி அமைப்புக்கு அடித்தளமும் ஆகிறது. உற்பத்திப் பொருட்கள் மூலதனமாக மாற்றப்படுவது நிறுத்தப்பட்ட உடனேயே, நிலத்தில் தனிச்சொத்துடைமையும் ஒழிக்கப்பட்ட உடன், கடன் செலாவணி எந்த பொருளும் இல்லாததாகி விடுகிறது. முதலாளித்துவ முறையிலான சொத்துடைமை ஒழிக்கப்பட்டவுடனேயே கடன் செலாவணியும் மறைந்து விடுகிறது. ஆனால், முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்கும் வரை அதன் ஒரு வடிவமாக கடன் மூலதனம் நீடித்து கடன் செலாவணி முறையின் அடிப்படையாக அமைகிறது.

மூலதனம் நூலின் 3-வது தொகுதியின் 36-வது அத்தியாயத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கருத்துக்களின் கடைசி பகுதி (முதல் பகுதியைப் படிக்க)

Permanent link to this article: http://new-democrats.com/ta/interest-bearing-loans-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சி.எஸ்.ஆர் (CSR) என்ற கார்ப்பரேட் மோசடி – ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்

நம்மை தனியாக பிரித்து, இதுதான் செய்யணும், அதுதான் செய்யணும் என்று முடக்கி விடுகிறார்கள். உலகம் தெரியாமல் இதற்குள்ளாகவே இருந்து விடுகிறோம். வெளியில் போய் நிறைய பேர் கிட்ட...

டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா?

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக. ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்! சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்! நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி...

Close