இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயல்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்ட விஷால் சிக்காவுக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்திய நாராயணமூர்த்தி முதலிய முதலாளிகளுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வேலையை வீட்டு நீக்கப்பட்ட ராஜீவ் பன்சால் என்ற உயர் அதிகாரிக்கு ரூ 17.38 கோடி கோடி போனஸ் தொகை கொடுத்திருக்கிறார்கள். நிறுவனத்தை விட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட தலைமை சட்ட அலுவலர் டேவிட் கென்னடிக்கு (நிறுவன நடைமுறைகள் சட்டத்துக்குட்பட்டு உள்ளனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தவருக்கு) சுமார் ரூ 6 கோடி விடைகொடுக்கும் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் போய் விடாமல் பாதுகாக்க அந்தத் தொகையை வழங்கியதாக கூறியிருக்கிறது, இன்ஃபோசிஸ். முறைகேடுகளை மறைப்பதற்காக பணம் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்புகிறார் நாராயணமூர்த்தி.
இன்ஃபோசிஸ்-ன் ஆண்டு வருமானத்தை 2020-ம் ஆண்டில் இரண்டு மடங்காக்கி $2,000 கோடியாகவும், லாப வீதத்தை 30% ஆகவும், ஒரு ஊழியரை வைத்து ஈட்டும் லாபத்தை $80,000 ஆகவும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார் விஷால் சிக்கா. நெருக்கடியான வணிகச் சூழலில் இதன் பொருள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைப்பதும் ஆகும். அதே நேரம் விஷால் சிக்காவின் 2015-16 ம் ஆண்டு ஊதியம் ரூ 49 கோடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
விஷால் சிக்காவுடனான தனது சண்டையில் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பேசுவது “பங்குதாரர்களின், முதலீட்டாளர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும்” என்பதைத்தான்.
எனவே, 2016-ம் ஆண்டில் 9,000 ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பியதாக இன்ஃபோசிஸ் தெரிவித்திருப்பது பற்றி நாராயணமூர்த்தி எதுவும் பேசவில்லை.. ஆட்டமேஷனின் காரணமாக புதிய ஊழியர்களை சேர்ப்பதும் கணிசமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இன்ஃபோசிஸ் 5,700 ஊழியர்களை மட்டும் வேலைக்கு எடுத்திருக்கிறது. இது கடந்த ஆண்டின் 17,000 எண்ணிக்கையில் 3-ல் ஒரு பங்கு ஆகும்.
ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியும், புதிய வேலை வாய்ப்புகளை குறைத்தும் பணத்தை திரட்டும் இன்ஃபோசிஸ் பங்குச் சந்தையில் நிறுவன பங்குகளை வாங்குவதன் மூலம் அவற்றின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. $525 கோடி (ரூ 35,175 கோடி) பணக் கையிருப்பிலிருந்து ரூ 1,200 கோடி மதிப்பில் பங்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் இன்ஃபோசிஸ் குவித்து வைத்திருக்கும் பணம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு போய்ச் சேரும். இந்தப் பணத்தை ஈட்டிக் கொடுத்த ஊழியர்களின் நிலை என்ன?
விவசாய நிலத்தை விட்டுக் கொடுத்து அல்லது நஞ்சாக்கி, சிறு தொழிலை அழித்து, உள்ளூர் உணவுப் பொருளாதாரத்தை பன்னாட்டு சூதாட்டத்துக்கு அடகு வைத்து இந்தியாவுக்குள் கால் பரப்பிய மென்பொருள் துறை இப்போது தரை தட்டி நிற்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய பன்னாட்டு அல்லது தேசங்கடந்த தொழிற்கழகங்கள் தத்தமது முதலீடுகளை பணமாக மாற்றிக் கொண்டு இன்னொரு இடத்தில் வேட்டையாடுவதற்கு நகர்ந்து விடுவார்கள். அப்படி பாதுகாப்பாக பணத்தை எடுத்துக் கொண்டு போவதற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு மோடி அரசு தயாராக இருக்கிறது.
சாதாரண ஊழியர்களும், இந்தத் துறையை நம்பி பொறியியல் படிப்புக்கு பல லட்சம் செலவழித்த லட்சக்கணக்கான இளைஞர்களும் நடுக்கடலில் விடப்படுகிறார்கள். சூட்டு கோட்டும் போட்ட பணமூட்டைகள் கிடைத்ததை கைப்பற்றிக் கொள்ள சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?