மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதன் உண்மையான நோக்கம் என்ன, வரலாறு என்ன என்பது குறித்த கட்டுரை
பெண்கள் தினம் வெறும் வாழ்த்துச் சொல்லிவிட்டு போவதற்கும் வணிக நிறுவனங்கள் விதவிதமாக துணி நகைகள் எடுக்கும்படி விளம்பரம் செய்வதற்கும், தொலைக்காட்சி சேனல்கள் கோலப் போட்டி வைப்பதற்கும் அல்ல. பெண்கள் தினம் நீண்ட நெடிய வரலாற்றின் தொடர்ச்சியாக உருவானது; உழைக்கும் பெண்களின் போராட்டங்களில் விளைந்தது. பெண்களுக்கு வாழ்த்து சொல்லி ஒரு மீம்ஸ் போட்டு விட்டு நின்று விடாமல், உண்மையான பெண்கள் தின வரலாற்றை தெரிந்து கொள்வோம்.
அந்த வரலாற்றை தெரிந்து கொள்ளும் போதுதான் இப்போது பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான பாதை நமக்கு தெரியும். நாளை அத்தகைய தாக்குதல்கள் இல்லாத உலகத்தை உருவாக்க முடியும். பெண்களுக்கு எதிரான இன்றைய சமூக கொடுமைகளில் இருந்து தனிப்பட்ட முறையிலோ, தனிநபராகவோ பாதுகாத்துக் கொள்ள முடியாது, ஒன்றிணைந்து அவற்றை எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை இந்த வரலாறு நமக்கு புரிய வைக்கிறது.
19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இயந்திரத் தொழில் உற்பத்தி வேகமாகவும், பெரிதாகவும் வளர்ச்சியடைந்த கட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் பெருமளவு கூலி உழைப்புக்குள் இழுக்கப்படுகிறார்கள். நேர வரம்பின்றி ஒரு நாளைக்கு 15 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கப்பட்டார்கள்.
“1863-ம் ஆண்டு ஜூன் மாதம் மேரி ஆன் வாக்லி என்ற 20 வயதான மேரி ஆன் வாக்லி என்ற பெண் தொழிலாளி திடீரென்று பணியிடத்தில் இறந்து போனது பற்றிய செய்தி லண்டன் நாளிதழ்களில் வெளியானது.
அப்போது லண்டன் உடை தொழிலின் மும்முரமான பருவம். வேல்ஸ் இளவரசருக்காக நடத்தப்படவிருந்த நடன விருந்தில் கலந்து கொள்ளவிருந்த சீமாட்டிகளுக்கு தேவையான ஆடம்பர உடைகளை வெகு வேகமாக தயாரிக்க வேண்டியிருந்தது.
மேரி ஆன் வாக்லி இடைவெளியின்றி 16.5 மணி நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டாள். வேலை அதிகமான காலத்தில் 30 மணி நேரம் வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. அவ்வப்போது, சிறிதளவு ஒயின் அல்லது காஃபி கொடுத்து அவளது உழைப்பும் சக்திக்கு உயிரூட்டப்பட்டது.
மேரி ஆன் வாக்லி உயிரிழந்த போது அவள் 26.5 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். அவளை போலவே 60 இளம் பெண்கள், ஒரு அறைக்கு 30 பெண்கள் வீதம் இரண்டு சிறிய அறைகளில் வேலை செய்தனர். ஒரு மனிதருக்கு தேவையான காற்றில் 3-ல் 1 பகுதிதான் அவர்களுக்குக் கிடைத்தது. இரவு நேரத்தில் ஒரு குறுகலான, பலகைகளால் பிரிக்கப்பட்ட மூச்சைத் திணறடிக்கும் பொந்துக்குள் அவர்கள் இரண்டிரண்டு பேராக தூங்க வேண்டியிருந்தது. இது லண்டனில் இயங்கும் தலைசிறந்த தையல் நிறுவனங்களில் ஒன்று. ஆன் வாக்லி வெள்ளிக்கிழமை நோய்வாய்ப்பட்டாள்; ஞாயிற்றுக் கிழமை இறந்து போனாள்”.
– (காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலில் இருந்து)
இதைப் போன்ற கடும் உழைப்புச் சுரண்டலை எதிர்கொண்டிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக பெண்களும் இணைந்து வேலை நேரத்தை முறைப்படுத்துவதற்காக போராடினர். உலக அளவில் தொழிலாளர் அமைப்புகளை ஒருங்கிணைக்க சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இது முதலாவது அகிலம் என்று இப்போது அழைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர் இயக்கங்கள் வலுவாக வளர்கின்றன. உலகத் தொழிலாளர் வர்க்கம் 8 மணி நேர வேலை என்ற முழக்கத்தை பதாகையில் பொறிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து தொழிலாளர் இயக்கங்களுக்கான சர்வதேச அமைப்பான இரண்டாவது அகிலம் உருவாக்கப்படுகிறது. இந்த போராட்டங்கள் அனைத்திலும் உழைக்கும் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 1910-ம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோப்பன் ஹெகனில் நடைபெற்ற இரண்டாம் அகிலத்தின் மாநாட்டின் ஒரு பகுதியாக சர்வதேச சோசலிச பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் சோசலிசத்துக்கான போராட்டத்தோடு, வாக்குரிமை உட்பட பெண்களுக்கு சம உரிமைகள் பெறுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினம் ஒன்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1911-ம் ஆண்டில் ஜெர்மனி, ஆஸ்திரியா, இங்கிலாந்து போன்ற இடங்களில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இது உலகம் முழுவதும் பரவியது.
இதைத் தொடர்ந்து 1914-ம் ஆண்டு முதல் உலகப்போர் மூள்கிறது. ஜார் ஆட்சியில் இருந்த ரசியா போரில் ஈடுபடுத்தப்பட்டு லட்சக்கணக்கான ரசிய படைவீரர்கள் போரில் பலி கொடுக்கப்படுகின்றனர். உணவு தட்டுப்பாடு, முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சுரண்டல் என்று உழைக்கும் மக்கள் “உணவு, சமாதானம், நிலம்” என்ற முழக்கத்தோடு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் போராடுகின்றனர்.
1917-ம் ஆண்டு மார்ச் 8 அன்று ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரில் ஜவுளி ஆலை பெண் தொழிலாளர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்கிறார்கள். மற்ற தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களையும் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுக்கிறார்கள்.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதா வேண்டாமா என்று தயங்கும் தொழிலாளர்கள் மத்தியில் சென்ற பெண்கள் “பசியும் பட்டினியுமாய் குழந்தைகள் சாகிறார்கள், போரில் நம்முடைய மகன்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆதலால் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும், உணவு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டியது அவசியம்” என்று வலியுறுத்துகிறார்கள்.
வேலை நிறுத்தப் போராட்டம் பரவி 1,80,000 தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறுகிறது. இரண்டாவது நாளில் 2,00,000 பேர் பேரணியில் கலந்து கொள்கிறார்கள். அப்போது ஜார் மன்னராட்சி உள்ளூர் ராணுவத்தை கொண்டு அடக்க முயற்சி செய்கிறது, ராணுவ வீரர்களிடமும் பெண்களே பேசுகிறார்கள் “எங்கள் கணவரும் ராணுவத்தில் இறந்துவிட்டார், பிள்ளைகளும் பலிகொடுத்துவிட்டோம் இப்போது பசிக்காகவும் அமைதிக்காகவும் போராடுகிறோம் நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்” என்கிறார்கள்.
உள்ளூர் ராணுவ வீரர்கள் சுட மறுக்கிறார்கள். பிற பகுதி ராணுவ வீரர்களை கொண்டுவந்து போராடும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது ஜார் ஆட்சி. 400க்கும் மேற்பட்டோர் பலியாகிறார்கள்.
மார்ச் 8 அன்று பெண்கள் தொடங்கிய புரட்சி வெற்றி பெற்று, மார்ச் 16-ல் ஜார் ஆட்சி வீழ்த்தப்பட்டு இடைக்கால அரசு அமைக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் சமாதானம், நிலம், உணவு என்ற கோரிக்கையை நிறைவேற்றாத இடைக்கால அரசை எதிர்த்து போல்ஷ்விக் கட்சி தலைமையில் பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து 1917 நவம்பர் 7-ம் தேதி அதிகாரத்தை கைப்பற்றுகிறது.
ஆட்சிக்கு வந்ததும் மறுநாளே நவம்பர் 8 அன்று போர்நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. நிலப்பிரபுக்களிடமிருந்தும் பண்ணையார்களிடமிருந்தும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கப்படுகிறது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வு உள்ள அனைத்து சட்டங்களையும் ஒழித்து சமத்துவமான சட்டங்கள் பிறப்பிக்கபடுகிறது. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஒரு பகுதியாக கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலம் நிறுவப்பட்டு அதற்கான மாநாடு 1921-ம் ஆண்டு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பெண்மணி “1917 மார்ச் 8 அன்று பெண்கள் தொடங்கிய புரட்சியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் தினம் கொண்டாட வேண்டும்” என்ற தீர்மானத்தை முன் வைக்கிறார். அது முதல் சோசலிச நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள உழைக்கும் பெண்களாலும் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் தினத்தின் சுருக்கமான வரலாற்றை தெரிந்து கொண்டோம், அடுத்து என்ன செய்வது?
எந்த உரிமையும் இல்லாத அவ்வளவு நெருக்கடியான காலகட்டத்திலும் பெண்கள் போராடியுள்ளார்கள். இப்போது நம் வீடு நம் குடும்பம் என்று சுயநலமாக சீரியல் சினிமா என்று பார்த்து பழகி வீட்டுக்குள் முடங்கி கிடக்கும்படி ஆளும் வர்க்கங்கள் நம்மை பயிற்றுவிக்கின்றன. ஆனால், இந்த சமூக கட்டமைப்பு தோற்றுவிக்கும் சமூக கொடுமைகளிலிருந்து நமக்கு எப்படி விடிவு காலம் பிறக்கும், சமூகத்தில் சீரழிவால் பெண்கள் பாதிக்கப்படுவது எப்போது ஒழிக்கப்படும்?
சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு நாம் மட்டும் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும் என்பது வெற்று கற்பனை. ஒவ்வொரு நாளும் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதும், காதலை ஒப்புக் கொள்ளாத பெண்களை ஆசிட் வீசப்படுவதும் கொலை செய்யப்படுவதும், வேலை பார்க்குமிடத்தில் சீண்டல்களை எதிர்கொள்வதும், நகைக்காக தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. சிறைச்சாலைக்குள் வாழ்வது போல பெண்கள் சமூகத்தில் நடமாட வேண்டியிருக்கிறது.
ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் விடிவு காலம் பிறக்கும் என்பதை உணர்ந்து இந்த சுரண்டல் சமூகத்தை ஒழிக்கும் போரில் பெண்கள் வர்க்கமாக ஒன்று திரண்டு போராட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை உடைத்த தமிழக பெண்கள் போல, பி.எஃப் பணத்தை பாதுகாக்க மோடி அரசுக்கு எதிராக போராடிய பெங்களூர் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போல, மகாராஷ்டிராவில் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தில் பேரணியாக திரண்டு வந்து மும்பையை முற்றுகையிட்ட பெண்களை போல, அவர்களை முன் உதாரணமாக கொண்டு நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தொழிற்சங்கமாகவும், புரட்சிகர பெண்கள் அமைப்புகளிலும் ஒன்று சேர்ந்து எதிர்த்து போராட வேண்டும்.
– சுகேந்திரன்