சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் தொடர்பாக பெண்கள் விடுதலை முன்னணி வெளியிட்டுள்ள நோட்டீசில் இருந்து
சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் மார்ச் 8, 2018
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே,
உலக பெண்களின் நாளான இன்றைய தினத்தை 50% தள்ளுபடியுடன் கல்லா கட்டுகிறார்கள் முதலாளிகள்.
குடும்பத்தைக் காக்கும் பெண்கள் நாங்கள்தான் என்பதை நீண்ட நெடிய தொடர்கள் மூலம் நிரூபிக்க கண்ணீர் கதைகள், பாட்டுப் போட்டிகள், டான்ஸ் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள் என டி.ஆர்.பி-யை ஏற்றி, ஊடகங்கள் கொண்டாடுகின்ன.
பத்திரிகைகள், பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்று பெண்ணியவாதிகளின் கட்டுரை ஒரு பக்கம், நான்கு பக்கத்திற்கு திருமணத்திற்கு போட வேண்டிய நடைகள் பற்றி நான்கு பக்க விலைப்பட்டியலுடன் விளம்பரம், சத்தான, சுவையான சமையல் செய்து குடும்பத்தினரிடம் பாராட்டு வாங்குவது பற்றி இரண்டு பக்கம் என்று கொண்டாடுகின்றன.
ஆனால், உலகப் பெண்கள் நாள் பிறந்து 108 ஆண்டுகள் ஆகியும்,
- பெண்கள் தாங்கள் விரும்பியதை படிக்க முடியவில்லை. படித்த படிப்புக்கேற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்லை. வேலைக்கு சென்று பாதுகாப்பாக வீடு திரும்ப உத்தரவாதம் இல்லை.
- தான் விரும்பியவனை மணந்தால், ஆணவக் கொலை. பிடிக்காதவனை வேண்டாம் என்றால் ஆசிட் வீச்சு. பச்சிளம் குழந்தைகள் முதல் 90 வயது மூதாட்டியர் வரை தொடரும் பாலியல் வன்முறைகள்.
- குடும்பத் தேவைக்காக வேலைக்குச் சென்றால் முதலாளிகள் நமது உழைப்பு சக்தியை அட்டை போல உறிஞ்சி எடுக்கின்றனர். உழைப்புச் சுரண்டல் போதாதென்று பணியிடத்தில் பாலியல் சுரண்டல் வேறு.
- பட்டினிக்கு தள்ளும் விலைவாசி ஏற்றத்திற்கு எதிராக, தாலி அறுக்கும் டாஸ்மாக்-குக்கு எதிராக வீதியில் இறங்கி போராடினால் கடித்துக் குதறும் போலீஸ் வெறிநாய்கள்.
- இவைகள் போதாதென்று தினமும் ஒரு வரி விதிப்பு, பணப்பறிப்பு, எப்ப என்ன திட்டத்தை போட்டு நம்மை வழிப்பறி செய்வார் என்ற அஞ்சும் வகையில் மோடி அரசின் அசத்தல் திட்டங்கள் பெண்களின் தலையில் இடியாக இறங்குகின்றன.

நம் வீட்டு பிள்ளைகளோடு நாமும், இணைந்து சென்றதால்தானே மெரீனாவில் நிகழ்கால வரலாற்று நிகழ்வை நடத்திக் காட்ட முடிந்தது.
இக்கொடுமைகளுக்கு எதிராக போராட விடாமல் ஆணாதிக்கம் அடக்குகிறது. இதற்கு மதங்களும், சாதிகளும், சடங்குகளும், சொந்த பந்தங்களும் ஒத்து ஊதுகின்றன.
இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் தம் பங்கிற்கான போராட்டங்களை பெண்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெங்களூரை மிரள வைத்த பெண் தொழிலாளர் போராட்டமானாலும், பணி நிரந்தரம் கோரி செவிலியல் போராட்டமானாலும், டாஸ்மாக்கிற்கு எதிரான பெண்கள் போராட்டமானாலும், கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என்று எந்தப் போராட்டமானாலும் பெண்களின் பங்களிப்பில்லாமல் வெற்றி இல்லை.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. குடும்பத்தை காக்கும் புயலாகும் நாம், நாட்டை காக்க, சமூக விடுதலையை சாதிக்க சூறாவளியாக மாற ஏன் தயங்க வேண்டும்?
உதாணமாக, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்த மெரினாவில் அல்லவா அது சாத்தியப்பட்டது. உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது. தமிழகத்தின் இளைஞர்களை உலகமே கொண்டாடியது. யார் காரணம்? நம் வீட்டு பிள்ளைகளோடு நாமும், இணைந்து சென்றதால்தானே அப்படியான நிகழ்கால வரலாற்று நிகழ்வை நடத்திக் காட்ட முடிந்தது.
பெண் உரிமைக்கும் விடுதலைக்கும் கிளாரா ஜெட்கினாக, நாட்டைக் காக்க குயிலியாக, ஜாதி ஆணவத்திற்கு எதிராக கௌசல்யாவாக, மதவெறிக்கு எதிராக ஹாதியாகாவாக, மூடநம்பிக்கைக்கு முடிவு கட்ட பெரியாரின் பேத்திகளாக, முதலாளிகளின் லாபவெறிக்கும், நுகர்வு வெறிக்கும் முடிவு கட்ட மார்க்சின் வாரிசுகளாக வீதியில் இறங்காமல் விடிவு இல்லை என்பதை உணர்ந்து உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம்.
சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!
உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்!
உலக மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!
பாலியல் சுரண்டலுக்கும், உழைப்பு சுரண்டலுக்கும் முடிவு கட்டுவோம்!
நுகர்வு வெறியையும், லாபவெறியையும் அறுத்தெறிவோம்!
ஆணாதிக்கத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் முறியடிப்போம்!
பெண்ணும் ஆணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!
சமூக விடுதலையை முன்னெடுப்போம், பெண் விடுதலையை சாதிப்போம்
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
98416 58457