«

»

Print this Post

IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்

This entry is part 7 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

டிஜிட்டல் தொழிற்சாலை, டிஜிட்டல் தொழிலாளி

ணையம் (internet) என்பது கணினிகளை இணைக்கும் மின்னணு வலைப்பின்னல் என்று நமக்குத் தெரியும். இந்தக் கணினி வலைப்பின்னல்களை மனிதர்களை இணைக்கும் வலைப்பின்னலாக மாற்றும்  கருவிகளாக மின்னஞ்சல்,  இணைய பக்கங்கள், செய்தி தளங்கள் என்று தொடங்கி இன்றைக்கு, சமூக வலைத்தளங்கள் வரை வளர்ந்திருகின்றன.

இணையத்தின் இந்த இரண்டு பரிமாணங்களை விஞ்சி இன்று உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது பொருட்களுக்கான இணையம் என்பது. அதாவது பொருட்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மின்னணு வலைப்பின்னலுக்கு பொருட்களுக்கான இணையம் (Internet of Things – IoT) என்று பெயர் சூட்டி உலகைச் சுற்றி தமது வலையை இறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள்.  அவ்வாறு இணைக்கப்படும் பொருட்கள் உழைப்புக் கருவிகளாகவோ, ஆலை எந்திரங்களாகவோ, போக்குவரத்து வாகனங்களாகவோ, வீட்டுப் பயன்பாட்டு சாதனங்களாகவோ, ஆடம்பர நுகர்பொருட்களாகவோ இருக்கலாம். மனிதர்களுக்கான இணையத்தை நுகர்வை ஊக்குவிக்கும், முதலாளித்துவ ஆட்சியை வலுப்படுத்தும் கருவியாக மாற்றி சீரழித்திருக்கும் முதலாளித்துவம் இப்போது பின்னிக் கொண்டிருக்கும் பொருட்களுக்கான இணையத்தை வைத்து எதை சாதிக்கப் போகிறது?

பொருட்களுக்கான மின்னணு வலைப்பின்னல் பற்றிய தரவுகள் பிரம்மாண்டமானவை. கார்ட்னர் என்ற வணிக ஆய்வு நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி ஒவ்வொரு நாளும் 55 லட்சம் புதிய பொருட்கள் மின்னணு வலைப்பின்னலில் இணைக்கப்படுகின்றன. 2020 வாக்கில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு தமக்குள் மனிதத் தலையீடு இன்றி தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை 2100 கோடியாக இருக்கும் என்கிறது அந்த மதிப்பீடு. அதாவது உலக மக்கள் தொகை சுமார் 750 கோடி என்று எடுத்துக் கொண்டால் உலகின் ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் தலா 3 பொருட்கள் மின்னணு வலைப்பின்னலில் இணைக்கப்பட்டு தகவல்களை தானியக்கமாக பரிமாறிக் கொள்ளும். அவ்வாறு தமக்குள் பேச வைக்கப்படும் நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களும், கருவிகளும், எந்திரங்களும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது, அல்லது அவை நம்மை ஆள்வதற்கான வலைப்பின்னலின் பகுதிகளாக மாற்றப்பட்டிருக்கும்.

இவ்வாறு மின்னணு வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட வாகனச் சந்தையின் மதிப்பு 2016-ல் $22,500 கோடி (சுமார் ரூ 15.30 லட்சம் கோடி) யாக உயர்ந்திருக்கிறது. 2015-ல் $3,200 கோடி (சுமார் ரூ 2.17 லட்சம் கோடி) ஆக இருந்த இந்த மதிப்பு ஒரு ஆண்டில் கிட்டத்தட்ட 6 மடங்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. இன்று கூகிள் உட்பட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனங்களை  சோதனை செய்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. 2020 வாக்கில் அத்தகைய 25 கோடி வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.

பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கியில் பேருந்துகளும், போக்குவரத்து விளக்குகளும் இணைக்கப்பட்டு “எந்த வழியில் சென்றால் சீக்கிரமாக பயணிக்கலாம்” என்பது தானியக்கமாக தீர்மானிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் கார் நிறுத்தத்தில் காலியாக இருக்கும் இடம் பற்றிய அறிவிப்பை அனுப்புவதற்கு இடம் காட்டும் விளக்குகள் பயன்படுகின்றன. அமெரிக்காவின் கொலம்பஸ் நகரின் விமான நிலையத்தில் மின் ஏணிகளில் ஆற்றலை சேமிக்கவும், பயணிகளின் பயணப் பைகளை அடையாளம் காணவும் இணைக்கப்பட்ட உணர்விகளை பயன்படுத்தவுள்ளது.

விமானங்களை உற்பத்தி செய்யும் ஐரோப்பிய நிறுவனமான ஏர்பஸ் இத்தகைய “எதிர்காலத்துக்கான தொழிற்சாலை” ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. கம்ப்யூட்டர் போல உடை அணிந்த ஒரு சில மனித உழைப்பாளர்கள், எந்திர மனிதர்களுக்கு மத்தியில் வேலை செய்யும் வகையில் தனது உற்பத்தியை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய தொழிற்சாலையில் எந்திரத்தை இயக்க தொழிலாளி தேவை இல்லை. எந்திரத்தின் இயக்கம் தொடர்பான தரவுகளை பதிவு செய்து வைக்க தயாரிக்க தொழிலாளி தேவை இல்லை, எந்திரமே தரவுகளை பதிவு செய்து அதை இன்னொரு எந்திரத்துக்கு அனுப்ப, அந்த எந்திரத்தில் சேமிக்கப்பட்ட  தரவுகளை பிறிதொரு எந்திரம் பெற்றுக் கொண்டு நிர்வாகத்துக்கான அறிக்கையை தயாரித்து கொடுத்து விடும். இந்தத் தகவல் பரிமாற்றங்களை வெவ்வேறு தொழிற்சாலைகளுக்கிடையே, அவை வெவ்வேறு நகரங்களில் இருந்தாலும், ஏன் வெவ்வேறு நாடுகளில் கூட இருந்தாலும் சாத்தியமாக்குவது மின்னணு வலைப்பின்னலான இணையம்.

உற்பத்தி நிறுவனங்கள் தாம் இயக்கும் தொழிற்சாலைகளையும், தமக்கு பொருள் விற்பனை செய்யும் சப்ளையர்களையும் மின்னணு வலைப்பின்னல் மூலம் இணைத்து, எந்திரங்கள் தமக்குள்  தகவல் பரிமாறுவதை சாத்தியப்படுத்தி, தரவுகளை நிகழ்நேரத்தில் பெற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றன. உதாரணமாக, பொருட்களை எடுத்துச் செல்லும் போது பெட்டியுடன் இணைக்கப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள கருவி (RFID), அந்த வாகனத்தில் பொருத்தப்பட்ட கணினியுடன் இணைக்கப்பட்டு, உதிரிபாகம் எந்த இடத்தில் இருக்கிறது என்ற தகவல் ஜி.பி.எஸ் மூலம் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். வண்டியின் சராசரி வேகம், போக்குவரத்து நிலவரம், காலநிலை மாற்றங்கள் போன்ற விபரங்களையும் இணைத்து பொருள் வந்து சேர்வதில் இருக்கும் பிரச்சனைகளை முன்கூட்டியே கணித்து அதற்கான தீர்வுகளை தயாரித்துக் கொள்ள வழி செய்யப்படும்.

இவை எல்லாம் காட்டுவது என்னவென்றால் பொருட்களுக்கான இணையம் என்று அழைக்கப்படும் அடுத்தத் தொழில்நுட்பப் பாய்ச்சலின் மத்தியில் நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்பதைத்தான். அமெரிக்காவிலும், பிற வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பங்கள் முதலாளிகளின் இலாப வேட்டைக்கான ஆயுதங்களாக இந்தியா உட்பட பின்தங்கிய நாடுகளுக்கும் கொண்டு வரப்பட்டு மக்களின் பொருளாதார வாழ்வில் பெருமளவு சீர்குலைவை ஏற்படுத்தி

உழைக்கும் மக்களை மேலும் நெருக்கடியில் தள்ளவிருக்கின்றன என்பதைத்தான்.
ஓட்டுனர் இல்லாமல் ஓடக் கூட்டிய ஒவ்வொரு வாகனமும் ஒரு ஓட்டுனரின் வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் ஒழித்துக் கட்டுகிறது. மின்னணு வலைப்பின்னலில் சரக்குகளை இணைக்கும் ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடையும் அங்கு வேலை செய்யும் பல ஊழியர்களை வேலை இழக்கச் செய்கிறது. ஆக்ஸ்ஃபோர்ட் நடத்திய ஆய்வு ஒன்றின்படி அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் தற்போது உள்ள வேலை வாய்ப்புகளில் பாதிக்கும்  மேல் இந்த வகை தானியக்கத்தினால் இல்லாமல் ஒழிக்கப்பட்டு விடும். வழக்கறிஞர் அலுவகத்தில் சட்ட ஆய்வு செய்பவர் முதல் உணவகத்தில் பரிமாறும் வேலை வரை பல விதமான வேலை வாய்ப்புகள் இதில் அடங்கும். ஜப்பானில் அலுவலக ஊழியர்களில் பலர் ஏற்கனவே மின்னணு வலைப்பின்னலின் மூலம் இயக்கப்படும் கருவிகளால் வேலை இழந்துள்ளனர். உதாரணமாக, ஃபுகோகு பரஸ்பர ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஜனவரி 2017 முதல் 34 காப்பீட்டு இழப்பு மதிப்பு செய்யும் ஊழியர்களின் இடத்தில் “ஐ.பி.எம் வாட்சன் எக்ஸ்ப்ளோரர்” என்ற கணினியை பயன்படுத்த உள்ளது.

சுருக்கமாகச் சொல்லப் போனால், டிஜிட்டல் தொழிற்சாலையில் டிஜிட்டல் தொழிலாளி, டிஜிட்டல் சந்தையில் டிஜிட்டல் நுகர்வோர், டிஜிட்டல் அரசின் கீழ் டிஜிட்டல் குடிமக்கள் என மின்னணு வலைப்பின்னலின் மூலமாக மென்பொருள்கள் மனிதர்களை இயக்குவதும், கடைசிக் கணக்கில் அந்த மென்பொருள்களின் தர்க்கத்தை தீர்மானிக்கும் முதலாளிகளாலும், தொழிலாளி தான் உருவாக்கிய எந்திரத்திடம் வேலையைப் பறிகொடுப்பதும் தீவிரமாக்கப்படுகிறது.

மின்னணு வலைப்பின்னல் தொழில்நுட்பத்தினால் பல கோடி வேலை வாய்ப்புகள் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டாலும், புதிய துறைகளில் வேலை பார்த்து பிழைப்பதற்கு வழி இருக்கின்றன என்று முதலாளித்துவ ஊடகங்களும், அறிஞர்களும் நம்பிக்கையூட்டுகிறார்கள், அதற்கேற்ப தமது திறனை வளர்த்துக் கொள்ளுமாறு தொழிலாளர் வர்க்கத்துக்கு  வழிகாட்டுகிறார்கள். மின்னணு வலைப்பின்னலில் இணைக்கப்பட்ட பொருட்களால் இயங்கும் உலகத்துக்கு இன்னும் அதிகமான ரோபாட்டிக் பொறியாளர்கள், ஸ்மார்ட் விவசாய நிபுணர்கள், தொழில்நுட்ப நகர திட்டமிடுபவர்கள், புதிய மென்பொருள் பயன்பாடுகள் உருவாக்குபவர்கள், மென்பொருள் வடிவமைப்பவர்கள், நிரல் எழுதுபவர்கள், தரவு விஞ்ஞானிகள் போன்ற பணிகள் உருவாக்கப்படும் என்றும் அந்தத் துறைகளில் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக படிக்கப் போகும்படியும் விளம்பரம் செய்கிறார்கள். அப்படி படிக்க வரும் மாணவர்களை கடன் சுமையில் மூழ்கடிக்கவும் கல்வி வியாபாரிகள் முதலாளிகள் தயாராக இருக்கின்றனர். இவர்கள்தான் டிஜிட்டல் தொழிற்சாலைக்கு டிஜிட்டல் தொழிலாளிகளை சப்ளை செய்யக் கூடிய மேன்பவர் ஏஜென்டுகள்.

இந்த டிஜிட்டல் தொழிலாளர்களைத் தாண்டி புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்கின்றனர் சில அறிஞர்கள். போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற வணிக ஆலோசனை நிறுவனம் ஜெர்மனியில் மட்டும் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய தரவு விஞ்ஞானிகளுக்கான வேலை வாய்ப்புகள் 70,000  உருவாக்கப்படும் என்கிறது. வேலை போனால் என்ன, எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, வடிவமைப்பாளர்களாக, கைவினைஞர்களாக சுயேச்சையாக செயல்படும் புதிய ஒரு வர்க்கம் உருவாகும் என்று ஆறுதல் சொல்கிறார்கள்.

ஆம், இத்தகைய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகத்தான் செய்யும். ஆனால், உழைப்பிற்கு மரியாதையையும் உழைப்பாளிகளுக்கு சுயமரியாதையையும் காலில் போட்டு மிதித்து விட்டு ஏதோ தங்களது கருணையில் வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், ஜனநாயகம் பேசுவததே சட்ட விரோதம் என்றும் அடிப்படை உரிமைகளைக் கூட பறித்து தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக நடத்துவார்கள்.

இதற்கு நிகழ்முறையால் முறையான வேலை கிடைக்காமல் ஒதுக்கி வைக்கப்படும் பரந்து பட்ட மக்களை பிச்சைக்காரர்களாக்கி அம்மா உணவகம், மலிவு விலை அரிசி என்று தம்மை நாடி நிற்கும் ஏதிலிகளாக பராமரிப்பார்கள். அற்பக் கூலியில் ஏ.டி.எம் எந்திரங்களுக்கு செக்யூரிட்டி வேலை, கட்டிடத் தொழிலில் குறைந்த கூலியில் காண்ட்ராக்ட் வேலை என்று பெரும் அளவிலான சேமப் பட்டாளத்தை உருவாக்கி தொழிலாளர்களை அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பார்கள்.

இதை எல்லாம் எதிர்ப்பவர்களையும், தமது விருப்பத்துக்கு மாறாக நடப்பவர்களையும் கண்காணித்து கட்டுப்படுத்தவும் மின்னணு வலைப்பின்னல் பெருமளவு பயன்படுத்தப்படும். அமெரிக்க உளவுத் துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளப்பர் என்பவர் “உளவுத்துறை நிறுவனங்கள் பொருட்களின் இணையத்தை பயன்படுத்தி அடையாளம் காண, கண்காணிக்க, பின்தொடர, இடத்தை கண்டுபிடிக்க, ஆள் சேர்ப்பதற்கான இலக்குகளை அடையாளம் காண, பயனர் தொடர்பான விபரங்களை திரட்ட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

அதே நேரம், உலகளாவிய அனைத்தையும் ஊடுருவும் இத்தகைய மின்னணு வலைப்பின்னலை பாதுகாப்பது ஆளும் வர்க்கங்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது. அரசுக்கு எதிரான தனிநபர் வாத, அராஜகக் குழுக்கள் கணினி பாதுகாப்பை உடைத்து தரவுகளை திருடுவது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளை தடுப்பது மேலும் மேலும் அசாத்தியமான விஷயமாக மாறும்.  உதாரணமாக, மின்னணு பின்னலில் இணைக்கப்பட்ட ஒளிப்படக் கருவிகள் (கேமரா), வீட்டு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக சமீபத்தில் டுவிட்டர், நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட பிரபலமான தளங்கள் முடக்கப்பட்டன.

“அமெரிக்காவின் எதிரிகள், கிரிமினல்கள், குழப்பம் விளைவிப்பவர்கள் மின்னணு வலைப்பின்னலை உடைத்து தகவல்களை பெற்றுக் கொள்வதை தடுப்பது ஆகாத காரியம். வர்த்தகத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் பெருமளவு பயன்படுவதாக இருக்கும் இத்தகைய மின்னணு வலைப்பின்னல், சட்ட விரோத தாக்குதல்களை நடத்துபவர்களின் இலக்காகவும் மாறும்” என்று அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

உழைப்புத் துறையில் உழைக்கும் மக்களை வெளியேற்றி, மேலும் மேலும் தமக்கு அடங்கியவர்களாக மாற்றுவதோடு மட்டுமின்றி நுகர்வுத் துறையிலும் உரிமைகளை பறிக்க இத்தகைய மின்னணு வலைப்பின்னல் பயன்படுத்தப்படுகிறது.

வாகனங்கள், தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், அறை குளிரூட்டும் எந்திரங்கள், வீட்டு சாதனங்கள் என நுகர்வு வாழ்க்கையையும் கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவதாக மாற்றப்படும். நாம் எதை சாப்பிடுகிறோம், எப்படி சாப்பிடுகிறோம், எப்படி தூங்குகிறோம், யாருடன் பழகுகிறோம், என்ன கருத்துக்களை வைத்திருக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் உரிமை நமக்கு மறுக்கப்படும். அல்லது உரிமை இருப்பதாக சொல்லப்படும் போதே அது நம்மை அறியாமல் நமது முதுகுக்குப் பின்னால் பறிக்கப்படுகிறது.

உதாரணமாக, டிஜிட்டல் உலகில் புதிய மின் விசிறி வாங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு அது வேலை செய்வதை நிறுத்தி விடும். மின்னணு வலைப்பின்னல் மூலம் அதை கட்டுப்படுத்தும் நிறுவனத்தின் கணினியில் மென்பொருள் மாற்றப்பட்டு “இந்த மின் விசிறிக்கான பதிப்பு காலாவதியாகி விட்டது, புதிய மின்விசிறியை வாங்குங்கள்” என்று அறிவிப்புதான் வரும். இப்போது ஆண்ட்ராய்ட் செல்பேசிகளை பயன்படுத்தும்போது கிடைக்கும் இந்த அனுபவம், எல்லாக் கருவிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

ஒவ்வொரு முறை மென்பொருள் புதுப்பிக்கப்படும் போதும் உங்கள் கருவியின் செயல் வேகம் குறைந்து கொண்டே போகும். இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படும் போது புதிதாக வாங்க வேண்டிய பொருள் பற்றிய விளம்பரங்கள் முகத்தின் முன்பு நிறுத்தப்படும். மின்னணு வலைப்பின்னல் மூலம் உற்பத்தியாளரின் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் விளக்கு, காசு கட்டினால்தான் எரியும் என்று தகவல் அனுப்பும் போது நீங்கள் என்ன செய்ய முடியும்? இவ்வாறாக, நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து பறிக்கப்பட்டு விடும்.

நம் கையில் இருக்கும் கருவி நமக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது வாழ்க்கை அந்தக் கருவிக்குக் கட்டுப்பட்டது, அதாவது அந்தக் கருவியை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்குக் கட்டுப்பட்டது. ஒரு நிறுவனத்தின் தயாரிப்பில், மற்றொரு நிறுவனத்தின் பொருளை பயன்படுத்த முடியாது. உதாரணமாக, ஐரோப்பாவில் வாங்கிய டி.வி.டி பிளேயரில் அமெரிக்காவில் வாங்கிய டி.வி.டி தட்டை இயக்க முடியாதபடி மென்பொருள் மூலம் முடக்கப்படுகிறது. ஜியோ சிம்கார்டை வேறெந்த செல்போனிலும் போட முடியாது என்பது மற்றொரு உதாரணம்.

உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கவில்லை. ஆனால், அறிவியல் தொழில்நுட்பம் உருவாக்கியுள்ள கருவிகள் யாருக்குப் பயன்படுகின்றன என்பதைப் பொறுத்தே அதனை எந்த அளவுக்கு அனுமதிப்பது, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தொழிலாளி வர்க்கம் முடிவெடுக்கும். அத்தகைய முடிவினை அமல்படுத்தும் போரில் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

தொழிற்சங்கமாக அணிதிரள்வதே முதலாளித்துவம் உருவாக்கி வருகின்ற டிஜிட்டல் தொழிற்சாலை, டிஜிட்டல் தொழிலாளி போன்ற எத்தகைய தாக்குதலையும் முறியடிக்கும்.

– குமார்

புதிய தொழிலாளி, ஜனவரி 2017 இதழிலிருந்து

படங்கள் : இணையத்திலிருந்து

Series Navigation<< இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை

Permanent link to this article: http://new-democrats.com/ta/iot-to-enslave-working-class/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
எஸ்.வி.எஸ் கல்லூரி தீர்ப்பு : “எல்லா கேசும் சூட்கேசில் அடக்கம்”

எஸ்.வி.எஸ் கல்லூரியின் தாளாளர் மற்றும் அவரது கொலைக் கூட்டாளிகளும் அம்பலப்பட்டு கைதாகி ஏழு மாதங்கள் ஆகிறது. கிணற்றில் பிணமாக கிடந்த பிரியங்கா, மோனிஷா, சரண்யா என்ற மூன்று...

வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்

இந்தப் பொருட்கள் கார்ப்பரேட் மற்றும் நிதி உலகை மட்டும் சார்ந்திருப்பவை அல்ல. பிணையமாக்கல் நிகழ்முறை உழைக்கும் வர்க்க குடும்பங்களையும் தனது சுழற்சியில் இழுத்துப் போட்டிருக்கிறது. பிணையங்களுக்கு அடிப்படையான...

Close