ஐ.பி.எல்-ம் தமிழகத்தின் காவிரி உரிமையும் – என்ன தொடர்பு?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் தமிழக மக்களின் போராட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

ஐ.பி.எல் கார்ப்பரேட் ராஜ்ஜிய கொண்டாட்டம்

காவிரி போராட்டத்தை ஆதரிப்பவர்கள் சிலர்

  • “நாங்கள் ஐ.பி.எல்-க்கு எதிர்ப்பு இல்லை, இழவு வீட்டில் கொண்டாட்டம் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்.”
  • “ஐ.பி.எல் மைதானத்தில் வெளிநாட்டு வீரர் மீது காலணியை வீசியது அநாகரீகம்.”
  • “ஐ.பி.எல் பார்க்க வந்த ரசிகர்களை சட்டையை கழற்றச் சொன்னது, அடித்தது போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டது. எதிரிகளைத்தான் தாக்க வேண்டும், எதிரிகளால் மயக்கப்பட்டவர்களை பிரச்சாரம் செய்து திருத்த வேண்டும்.”

என்று பேசுகிறார்கள்.

கூடவே, ஐ.பி.எல் போட்டிகள் சென்னையிலிருந்து பூனேவுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஐ.பி.எல் சென்னை அணி ஆட்டக்காரர்களும், முன்னாள் ஆட்டக்காரர்களும், ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் ஐ.பி.எல் மீது தமது மாறா காதலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். “இனிமேல் காவிரி தண்ணீர் வந்துடுமா, டாஸ்மாக்கை மூடிடுவாங்களா, ஸ்டெர்லைட் போய் விடுமா” என்று குமுறுகிறார்கள். “விளையாட்டையும் அரசியலையும் கலக்காதீர்கள்” என்று நல்லுரை சொல்கிறார்கள். “ஐ.பி.எல் போட்டிகளை சென்னையிலிருந்து மாற்றியது தமிழகத்துக்கே அவமானம். தமிழக காவல்துறை தனது கையாலாகத்தனத்தை காட்டி விட்டது.” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஐ.பி.எல்-க்கு காவிரி பிரச்சனைக்கு தொடர்பு இல்லையா என்ன?

பண முதலைகளின் ஐ.பி.எல்

கடந்த 2 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு (இல்லை டெல்லிக்கட்டு) தொடங்கி மோடி அரசு தமிழகத்துக்கு எதிராக தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களில் மிக முக்கியமானது ஐ.பி.எல் எதிர்ப்பு. ஐ.பி.எல் என்பது போராட்டத்தை பிரபலப்படுத்தவதற்கான எளிய இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், ஐ.பி.எல் எதிர்ப்புக்கும் தமிழகத்தின் காவிரி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

ஐ.பி.எல் என்பது இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளாலும், பணக்காரர்களாலும் குத்தகை எடுக்கப்பட்ட அணிகளுக்காக, உள்நாட்டு, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை ஏலம் பிடித்து நடத்தப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு $7.5 கோடியிலிருந்து, புனே வாரியர்ஸ்-க்கு $30.1 கோடி வரை ஒவ்வொரு அணியும் வாங்கப்பட்ட விலை ரூபாய் மதிப்பில் பல நூறுகோடிகளை எட்டுகிறது. 2018-ல் பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ 12.5 கோடியிலிருந்து ஷ்ரேயஸ் கோபாலுக்கு ரூ 2 லட்சம் வரை ஆட்டக்காரர்களுக்கான ஏலத் தொகை எகிறியிருக்கிறது.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு உலக அளவில் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா ரூ 16,347.5 கோடி செலவில் எடுத்திருக்கிறது. விவோ (சீன நிறுவனம்) ரூ 2,199 கோடி செலவில் ஐ.பி.எல் பெயரை ஸ்பான்சர் செய்கிறது. இது போக கோக்கோ கோலா, பார்லே, பாலி கார்ப், எலிகா கிச்சன்ஸ், கென்ட் & டிரீம் ஆகியவை விளம்பரம் செய்யும் உரிமையை வாங்கிய கார்ப்பரேட் பிராண்டுகளில் சில.

ஐ.பி.எல் விளையாட வரும் வீரர்கள், ஏலத்தில் எடுக்கப்பட்ட அடிமைகள். வெளிநாட்டு வீரர்கள் மீது காலணியை எறிந்தது தமிழகத்தின் விருந்தோம்பல் மாண்பை குலைத்து விட்டது என்று பேசுபவர்கள், தங்களை நல்ல விலைக்கு ஏலம் போட அனுமதித்த இந்த வீரர்கள் விளையாட்டின் மாண்பை கூறு போட்டு விற்பதை திரை போட்டு மறைக்கிறார்கள், அவர்களது கார்ப்பரேட் அடிமைத்தனத்துக்கு சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.

சென்னை அணிக்கு கேப்டன் ஆக இருந்த தோனியின் பொறுப்பு என்ன?

ஐ.பி.எல் ஆட்டக்காரர்களுக்கு எந்த தொழில்முறை அறமும் கிடையாது. சூதாடியது, விளையாட்டை சூதாட்டத்துக்கு ஏற்ப நடத்தியது என்ற குற்றச்சாட்டுக்காக 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை அணிக்கு கேப்டன் ஆக இருந்த தோனியின் பொறுப்பு என்ன? 2 ஆண்டுகள் வேறு அணியில் சேர்ந்து விளையாடி விட்டு திரும்பவும் எதுவுமே நடக்காதது போல இங்கு வந்து விளையாட ஆரம்பித்திருக்கிறார். எந்த கார்ப்பரேட் அதிக காசு கொடுக்கிறதோ அவர்களுக்கு விசுவாசம் என்பதைத் தவிர அவருக்கு கிரிக்கெட் தொடர்பாகவோ, நாட்டு மக்கள் தொடர்பாகவோ என்ன அக்கறை இருக்கிறது?

லலித் மோடி, குருநாதன் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா போன்றவர்கள் கார்ப்பரேட் கழுத்தறுப்பு போட்டியில் சிக்க வைக்கப்பட்ட சூதாடிகள். ஆனால், ஒட்டு மொத்த ஐ.பி.எல் அணிகளும் அவர்களே இயற்றிக் கொண்ட சட்டப்படியும், அதை மீறியும் சூதாடும் முதலாளிகள்தான்.

அம்பானிக்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலம், அதானிக்கு சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய நிலம், ராணுவ-கார்ப்பரேட் போர்களை நடத்த பாதுகாப்பு துறை தாழ்வாரம், தூத்துக்குடியை பாழாக்கும் ஸ்டெர்லைட், காவிரி டெல்டாவில் விவசாயத்தை அழித்து மீத்தேன்/ஹைட்ரோகார்பன்/நிலக்கரி எடுத்தல் என்று அடுத்தடுத்து தமிழகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு உச்சநீதின்றமும், மத்திய அரசும் பாதுகாவல் படையாக நிற்பதற்கு பின் இருக்கும் காரணங்களில் முதன்மையானது ஐ.பி.எல் நடத்தும் கார்ப்பரேட்டுகளின் நலன்.  நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி நீரில், 14.75 டி.எம்.சியை உச்ச நீதிமன்றம் கார்ப்பரேட் திட்டங்களுக்காக குடிநீர் வளங்கள் அழிக்கப்பட்டு விட்ட பெங்களூருவுக்கு ஒதுக்கி, தமிழகத்தின் பங்கை 177.5 டி.எம்.சி என இன்னும் குறைத்தது இதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.  அதாவது, இழவு வீட்டில் ஐ.பி.எல் கொண்டாடுவது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டை இழவு வீடாக்கி விட்டு அந்தப் பணத்தையும் மூலதனமாக போட்டு நடத்தப்படும் சூதாட்ட ஐ.பி.எல்-ஐ எதிர்க்க வேண்டும் என்பதுதான் விஷயம்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் உட்பட தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்துக்கு கார்ப்பரேட்டுகளின் ஐ.பி.எல் மிகப் பொருத்தமான இலக்கு.

2018-ல் பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ 12.5 கோடியிலிருந்து ஷ்ரேயஸ் கோபாலுக்கு ரூ 2 லட்சம் வரை ஆட்டக்காரர்களுக்கான ஏலத் தொகை

பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள், முற்றுகை என்று நடந்தும் காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சனையை கண்டு கொள்ளாத அகில இந்திய ஊடகங்கள், ஐ.பி.எல் பாதிக்கப்பட்டவுடன் அதைப் பற்றி பேச ஆரம்பித்தன. ஐ.பி.எல் தலைவர் (காங்கிரஸ்காரர்) ராஜீவ் சுக்லா உள்துறை செயலர் ராஜீவ் கவுபாவிடம் முறையிடுகிறார். பின்னவர், தமிழக டி.ஜி.பியிடம் பேசுகிறார். ஐ.பி.எல் போட்டிக்கு ஆயிரக்கணக்கான போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்த தனியார் கார்ப்பரேட் சூதாட்டத்துக்கும், அதை பார்க்கப் போகிறவர்களுக்கும் ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்பு எதற்காக? யாருடைய செலவில்?

இவ்வாறு, பா.ஜ.கவின் பெரியார் மீதான வெறுப்பும், கர்நாடகா தேர்தல் கணக்குகளும் தமிழகத்தின் உரிமைகளின் மீது ஏறி மிதிப்பதற்கு அரசியல் காரணங்களாக இருக்கும் அதே நேரம், ஐ.பி.எல்-ஐ நடத்தும் பண மூட்டைகளின் கார்ப்பரேட் நலன்தான் டெல்டாவை பாலைவனமாக்குவதன் பின்னாலும் உள்ளது.

இந்நிலையில், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், முகேஷ் அம்பானி, வாடியா, பிரீத்தி ஜிந்தா, ஷாரூக் கான், யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் (மல்லையாவின் முன்னாள் நிறுவனம்), கலாநிதி மாறன் என்று இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளிகளாலும் முன்னணி பணக்காரர்களாலும் (1%) நடத்தப்படும் இந்தப் போட்டிகளை மைதானத்துக்குச் சென்று ஒரு நபருக்கு சில ஆயிரம் ரூபாய் செலவழித்து பார்க்கப் போவது யார்?

இவ்வளவு பணம் செலவழித்து ஐ.பி.எல் போட்டிக்கு

  • விவசாய கூலித் தொழிலாளி போக முடியாது.
  • நகர்ப்புற கூலித் தொழிலாளி போக முடியாது.
  • நகர்ப்புற சுயதொழில் செய்பவர் போக முடியாது.
  • ஆலைத் தொழிலாளி போக முடியாது.
  • ஏழை, நடுத்தர விவசாயி, அல்லது சிறு வணிகர் போக முடியாது.

பொதுவாக சொன்னால் மைதானத்துக்குச் சென்று ஐ.பி.எல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்கள், நகர்ப்புற மேட்டுக்குடியினர். நாட்டு மக்கள் தொகையில் 10-15% இருக்கும் இவர்கள் கார்ப்பரேட்டுகளை அண்டி பிழைத்து, மல்டிபிளெக்சுகள், கேட்டட் கம்யூனிட்டி, ஆடம்பர உணவகங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என்று பெரும்பான்மை மக்களை ஒதுக்கி வைக்கும் வளர்ச்சிக்குள் தம்மை பொருத்திக் கொண்டிருப்பவர்கள். இந்த நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு இந்த கார்ப்பரேட் துறை வளர்ச்சியிலும், அவர்களைச் சார்ந்தவர்களுக்காக நடத்தப்படும் ஐ.பி.எல் கொண்டாட்டத்திலும் கை நனைக்க அனுமதியும் இல்லை, வாய்ப்பும் இல்லை. உழைக்கும் மக்கள், பல ஆயிரம் கோடி செலவில் விளம்பரங்கள் மூலம் நடத்தப்படும் ஒளிபரப்பின் மூலம் இந்த மேட்டுக்குடியினரின் கேளிக்கை கொண்டாட்டத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த பேறுக்குக் காணிக்கையாக பெப்சி, கோக், செல்ஃபோன், செல்ஃபோன் சேவைக் கட்டணம் என்று கார்ப்பரேட்டுகளுக்கு கப்பம் செலுத்துகிறார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தின் பொதுவான போக்கான பெரும்பான்மை விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சிறு தொழில் செய்பவர்களை உறிஞ்சி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளும், அவர்களை அண்டிப் பிழைக்கும் மேட்டுக்குடியினரும் என்ற பாணியை ஐ.பி.எல் திருத்தமாக வெளிப்படுத்துகிறது.

“ஐ.பி.எல் மைதானத்தில் வெளிநாட்டு வீரர் மீது காலணியை வீசியது அநாகரீகம்.”

ஐ.பி.எல் போட்டிகளை பூனேவுக்கு மாற்றியதால் தமிழ்நாட்டுக்கு வருவாய் இழப்பு என்கிறார்கள் கிரிக்கெட் வியாபாரிகள். யாருக்கு வருவாய்? அது யாருடைய பாக்கெட்டிலிருந்து எடுக்கப்படுகிறது? என்பதை பார்த்தால் தமிழ்நாட்டில் ஈட்டப்படும் இந்த வருமானம் பகுதி அளவாவது ஒழிந்து விட்டது என்று நாம் சந்தோஷப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடந்து வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஐ.பி.எல் எதிர்ப்பு, அதை புறக்கணிக்க வேண்டுகோள் என்ற சூழலில் ‘ஐ.பி.எல் போட்டிக்கு போயே தீர வேண்டும், அதுவும் சென்னை அணியின் சட்டையை அணிந்து கொண்டு, அந்த அணியின் நிறத்தை உடம்பில் பூசிக் கொண்டு போக வேண்டும்’ என்று விடாப்பிடியாக நிற்பவர்கள் யார்? காவிரி பிரச்சனையை ஒட்டி மாநிலம் முழுவதும் நடந்து வரும் போராட்டம், கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கிளுகிளுப்பு வேண்டி போகிறவர்கள் யார்?

“ஒரு பொது பிரச்சனைக்காக ஐ.பி.எல்-ஐ புறக்கணியுங்கள், போவதாக இருந்தால் கருப்பு சட்டை அணிந்து போங்க” என்று அறிவித்து நடத்தப்படும் போராட்டத்தின் மத்தியில் கெத்தாக சட்டை அணிந்து, சாயம் பூசி போகிறவர்கள் ‘காவிரியாவது ஒண்ணாவது, எனக்கு எனது கொண்டாட்டம்தான் முக்கியம்’ என்ற மேட்டுக் குடி திமிரில் வருபவர்கள். அவர்களின் இந்த வர்க்கத் திமிரை, சமூக பிரச்சனையை புறங்கையால் ஒதுக்கித் தள்ளும் குற்றத்தை மறைத்து அவர்களை அப்பாவிகளாக காட்டுவதற்குத்தான் போராட்டக்காரர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் எல்லை மீறியதை பூதக்கண்ணாடி வைத்து பெரிது படுத்துகின்றனர். மைதானத்துக்கு சென்னை அணி சட்டை அணிந்து வந்தவர்களை சட்டையை மாற்றும்படி கட்டாயப்படுத்தியதை, ஸ்ரீராம் சேனா மங்களூருவில் பப்-ல் புகுந்து நடத்திய அடாவடியுடன் சமப்படுத்துகின்றனர். ஸ்ரீராம் சேனை கும்பலின் நோக்கம் பெண்களை இழிவு படுத்துவதும், கலாச்சார காவலர்களாக தங்களை நியமித்துக் கொள்வதும். அதையும் காவிரி பிரச்சனைக்கான போராட்டத்தையும் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது.

காவிரி பிரச்சனை என்பது கோடிக்கணக்கான விவசாயிகளின், விவசாயக் கூலித் தொழிலாளர்களின், நகர்ப்புற உழைக்கும் மக்களின் பிரச்சனை. அவர்களது நலன்களுக்கு நேர் எதிராக, அவர்களது வாழ்வாதாரங்களை சுரண்டிக் கொண்டிருக்கும் அதே கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்படுகிறது. ஐ.பி.எல் சூதாட்டம் உட்பட கார்ப்பரேட் ராஜ்யத்துக்கு எதிரான போராட்டங்கள் காவிரி நீரை விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான பாதை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ipl-and-tamilnadu-cauvery-rights-what-is-the-link/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மெரினாவில் காவிகளின் கண்களுக்கு தெரிந்த சமூக விரோத செயல்கள் – கார்ட்டூன்

மெரினாவில் ஒலித்த தமிழகத்தின் குரல் - விவசாயத்தை பாதுகாப்போம், டாஸ்மாக்கை மூடுவோம், கல்வி உரிமையை மீட்போம் - இன்னும் பல.

அரசியல் பேசாத தொழிற்சங்கத்தால் ஆவது என்ன?

உங்களிடம் வந்து ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் தொழிலாளர்களின் பிரச்சனைக்காக ஆலைக்குள்ளும் போராட்டம் நடத்துவதில்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக இம்மியளவு கூட கவலைப்படுவதுமில்லை. இவர்களா நம்மை காப்பாற்றக்...

Close