நந்தினி, ஹாசினி கொலைகள் – குழந்தைகள் வளர்வதற்கு உகந்த சமூகமா இது?

ரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது நந்தினியின் கொலைக்கு பிறகு ஊடக வெளிச்சம் பெற்றிருக்கும் போரூர் ஹாசினி மீதான தாக்குதல் ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்று.

காதலிப்பதாக மோசடி செய்து, கர்ப்பமான நந்தினியை கொடூரமாக உடலை சிதைத்து கொடூரமாக கொலை செய்திருக்கிறான், இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு செயலாளர் மணிகண்டன் என்ற ரவுடி. அவனுடன் கூட்டுக் குற்றவாளிகளாக மாவட்ட இந்து முன்னணி தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட கும்பல் இருந்துள்ளது. ஆனால், போலீசோ முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்காமல், நந்தினியின் உடலை அவசரமாக புதைத்து உண்மைகளை இழுத்து மூடி குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிக்கிறது.

“கடைக்குப் போன பெற்றோர் ஹாசினியை தனியாக கார் நிறுத்தத்தில் விளையாட விட்டுச் சென்றதை சிலர் குறை சொல்கிறார்கள். உண்மையில் பெற்றோரைத்தான் குறை சொல்ல வேண்டுமா?”

16 வயது நந்தினிக்கும் பாதுகாப்பில்லை, 7 வயது ஹாசினிக்கும் பாதுகாப்பில்லை. பிப்ரவரி 5-ம் தேதி மாலை போரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தனது மகள் சிறுமி ஹாசினியைக் காணவில்லையென போலீசில் புகார் கொடுக்கிறார் அவர் தந்தை பாபு. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அதே அடுக்குமாடி குடியிருப்பில் ஹாசினியின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் தஸ்வந்த் (22) என்பவனைக் கைது செய்துள்ளனர். சி.சி.டி வி கேமரா பதிவில் 6.30-க்கு தஸ்வந்த் வீட்டில் நுழையும் ஹாசினி அதற்கு பிறகு வெளியே வரவில்லை. ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தஸ்வந்த் அந்த சிறுமியின் கதறலை மறைக்க தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளான். அதன் பின்னர் ஹாசினியின் உடலை ஒரு பேக்கில் அடைத்து எடுத்துக் கொண்ட தஸ்வந்த் வீட்டை விட்டு வெளியேறுவதும் ஒரு மணி நேரம் கழித்து திரும்ப வருவதும் கேமராவில் பதிவாகியுள்ளன. ஹாசினியின் கருகிய உடல் அருகிலிலுள்ள பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக பேஸ்புக்கில் ஒரு குழந்தையின் தாய் எழுதிய கருத்திலிருந்து சில பகுதிகளை பார்க்கலாம் :

“கடைக்குப் போன பெற்றோர் ஹாசினியை தனியாக கார் நிறுத்தத்தில் விளையாட விட்டுச் சென்றதை சிலர் குறை சொல்கிறார்கள். உண்மையில் பெற்றோரைத்தான் குறை சொல்ல வேண்டுமா?

நான் குழந்தையாக இருக்கும் போது எப்போதுமே வீட்டில் அடைபட்டு இருந்ததாக எனக்கு நினைவில்லை. எந்த பயமும் இல்லாமல் என் நண்பர்களோடு தெருக்களில் சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்படித்தான் இருக்க வேண்டும்.

எந்த பயமும் இல்லாமல், முழு பாதுகாப்புடன் திறந்த வெளியில் விளையாடுவது என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை இல்லையா?

ஆனால், அதற்கு பதிலாக இன்றைக்கு ஒரு குழந்தையை தனியாக விட்டது பற்றி நாம் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த பயமும் இல்லாமல், முழு பாதுகாப்புடன் திறந்த வெளியில் விளையாடுவது என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை இல்லையா?

இன்றைக்கு, ஒரு அம்மா குழந்தையுடன் வெளியில் போகும் போதெல்லாம், சுற்றி என்ன நடக்கிறது என்பதை விடாமல் கவனத்தில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் கையை விடாமல் பிடித்திருக்க வேண்டியிருக்கிறது.

எனக்குத் தெரிந்த ஒரு தம்பதியினர், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டாலும், இந்த பயங்கரமான உலகிற்குள் குழந்தையை கொண்டு வருவதற்கு பயந்து, குழந்தையே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

அது போல, நான் தாய்மையின் மகிழ்ச்சிகளை அனுபவிப்பதற்காக என் குழந்தைகளை இந்த உலகுக்குக் கொண்டு வந்தது என்னுடைய சுயநலமில்லையா என்று கூட நான் அடிக்கடி யோசிக்கிறேன். என்னை நான் எப்படி நியாயப்படுத்திக் கொள்ள முடியும்? குழந்தைகள் வளர்வதற்கான ஒரு பாதுகாப்பான உலகை நாம் எப்படி உறுதி செய்ய முடியும்?”

ஒட்டு மொத்த சமூகமே காறி உமிழும் அளவுக்கு பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தாக்குதல்கள் முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

  • சமூக உணர்வை புறக்கணித்து, தனிநபர் நுகர்வு, தனிநபர் கொண்டாட்டம், தனிநபர் வெறி என்ற தனிநபர் வாத பண்பாடு இத்தகைய புதைகுழியில் சமூகத்தை தள்ளியிருக்கிறது.
  • சாதிய, மதவாத அமைப்புகளின் அதிகாரம் கொடிகட்டி பறக்கும் நம் நாட்டில், ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் மீதான வன்முறை எந்த வித தட்டிக் கேட்பும், தண்டனைக்கான பயமும் இல்லாமல் அரங்கேற்றப்படுகின்றன.

திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இணைய தளங்கள் என்று பச்சிளம் குழந்தைகளைக் கூட பாலியல் பொருட்களாக காட்சிப்படுத்தும் கேளிக்கை நிகழ்ச்சிகள், பாலியல் வக்கிரங்களை வளர்த்து விட்டுள்ளன. அதற்கு பலியாகி, தமது சமூகப் பொறுப்பை கைவிடும் இளைஞர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகளாக மாறி சிறு குழந்தைகளைக் கூட சிதைக்கின்றனர்.

ஆணும் பெண்ணும் மனிதரை மனிதராக மதிக்கும், தனிநபர் சுயநலத்தை ஒழித்துக் கட்டி கூட்டுத்துவ பொறுப்புடன் சமூகமாக இணைந்த ஒரு உண்மையான ஜனநாயகக் கட்டமைப்புதான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பான முழு உரிமைகளுடன் கூடிய சமூகச் சூழலை கொடுக்க முடியும்.

அத்தகைய ஜனநாயகத்தை நோக்கிய, குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் கட்டியமைக்கப்படும் போராட்டங்களின் ஊடாகத்தான் இந்த மாற்றத்தை சாதிக்க முடியும்.

– மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-the-world-safe-for-children-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கடற்கரையை ஆக்கிரமிக்கும் மூலதன ஆக்டோபஸ்கள்

தொழிலாளர், விவசாயிகள் வாழ்வாதாரங்களை பறிப்பது மட்டுமின்றி, கனிம வளங்களை கைப்பற்றுவது, கடற்கரை வளங்களை ஆக்கிரமிப்பது என்று நாட்டின் இண்டு இடுக்குகளில் எல்லாம் தனது ஆக்டபஸ் கரங்களை நீட்டி...

1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு அடிமைகளாக விற்கும் வெரிசான்!

நமது பு.ஜ.தொ.மு ஐடி ஊழியர்கள் பிரிவு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை திரட்டி இருக்கிறது. இந்த விற்பனையினால் பாதிக்கப்படும் ஊழியர்கள் உதவிக்காக சங்கத்தை...

Close