கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஐ.டி. துறை ஆட்குறைப்பு சம்பந்தமாக சில பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகவும் செய்திகளை ஊடகங்கள் மூலமாக அறிவித்து வருகின்றன. முதலில் காக்னிசன்ட் மேலதிகாரியின் ஊழியர்களுக்கான மின்னஞ்சல், பிறகு இன்ஃபோசிஸ், அதன்பின் கேப்ஜெமினி போன்ற நிறுவனங்களிலும் விரைவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வரத் துவங்கின.
ஐ.டி. நிறுவனங்களின் இந்த அடாவடி போக்கை கண்டிக்கும் வகையில் UNITE மற்றும் AIFITE ஆகிய இரு ஐ.டி. தொழிற்சங்கங்கள் சார்பாக பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டதுடன், தொழிலாளர் நல ஆணையரகத்தில் புகார் மனுவும் அளிக்கபட்டது. புஜதொமு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு சார்பாக இணையதளத்தில், ஆட்குறைப்பு நடவடிக்கைகளை ஊழியர்கள் எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி கட்டுரை வெளியிடப்பட்டது. அடுத்த சில தினங்களில் காகனிசன்ட் நிறுவனம் தன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த FITE சங்கத்தின் நிர்வாகியை அதிரடியாக வேலை நீக்கம் செய்தது. அதோடு மட்டுமில்லாமல் காக்னிசன்ட் ல் பணிபுரியும் FITE சங்க உறுப்பினர்கள் ஏற்கனவே 2K வழக்கு ஒன்று தொழிலாளர் நல ஆணையத்தில் நடத்தி வந்தனர், அவர்களையும் வேலை நீக்கம்(Termination) செய்து தனது திமிர்தனத்தை காட்டியுள்ளது அந்நிறுவனம்.
இது சம்பந்தமாக நமது சங்கம் சார்பில் இணையதளத்தில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது.
இவ்வாறு நமது சங்க உறுப்பினர்களும் ஏனைய பிற சங்கங்களின் உறுப்பினர்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக சட்டரீதியாகவும், ஊடகங்கள் வழியாகவும் எதிர்கொண்டு தீர்வை நோக்கி போராடி வருகிறோம். ஆனால் பெரும்பான்மையான ஐ.டி. ஊழியர்கள் தமது துறை சார்ந்து தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது என்பதை கூட தெரிந்து வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. ஊழியர் ஹரிணி
கடந்த வாரம் (20/11/2019) தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரத்தில் இருக்கும் ஒரு ஐ. டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹரினி என்ற 24 வயது பெண், தான் வேலை செய்து வந்த நிறுவனத்தால் வேலை நீக்கம் செய்யப்படும் பட்டியலில்(Shortlisted for termination) தன் பெயரும் இடம்பெற்றிருந்த படியால், அதன் காரணமாக மன அழுத்தம் மன சோர்வு கொண்டு தான் தங்கியிருந்த விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செய்தியை வெளியிடும் ஊடகங்கள் எந்த நிறுவனத்தில் நிகழ்ந்தது என்பதை மறைத்து விடுகின்றன, கார்ப்பரேட் விசுவாசமா என்று தெரியவில்லை.
இது போன்ற தற்கொலைகள் ஐ.டி. துறையில் தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது, ஒன்று மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வேலை முறை இருக்கும் மற்றொன்று சட்ட விரோத வேலை நீக்க நடவடிக்கை, ஆகிய இரண்டும் பிரதான காரணங்களாக இருக்கின்றன, இது ஒரு மறைமுகமான மனித உரிமை மீறல்கள் என்று தான் கூற முடியும்.
தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டுமெனில், அதற்கென்று இருக்கும் சட்டங்களை கடைபிடிப்பதில்லை என்பது ஒருபுறம், அதே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களை தனி அறையில் வைத்து கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் பாணியில் மிரட்டி பணிய வைத்து ராஜினாமா செய்ய வைத்து விடுகின்றனர், வேலை நீக்கம் செய்யப்பட்டவர் இன்ஜினியரிங் படித்தவராயிருப்பார், சர்வதேச செய்திகளை அன்றாடம் அறிந்து வைத்திருப்பார், பங்கு சந்தை நிலவரத்தை உற்று நோக்கக்கூடியவராய் இருப்பார், தனது திறமையால் பல்வேறு மென்பொருள் தயாரிக்க பங்களிப்பு செலுத்தி இருப்பார் ஆனால் ஒரு மனிதவள அதிகாரி(HR) தனி அறையில் வைத்து ‘நீயாக ராஜினாமா செய்யாவிட்டால், உனது பெயரை NASSCOM Block List ல் சேர்த்து விடுவோம்’ என்றவுடன் எந்தவித எதிர்ப்புமின்றி கைசாட்டி விடுவார்.
மிக மிக மிக சிலரைத் தவிர பெரும்பான்மை ஊழியர்கள் மிகவும் லேசான அச்சுறுத்தலுக்கே பயந்து விடுகின்றனர், எதிர்ப்புணர்வோ போராட்ட குணமோ என எதுவுமின்றி வெறும் தக்கை மனிதர்களை போல. குறிப்பாக 1991 தனியார்மய தாராளமய உலகமயமாக்கலுக்கு பின்னர் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது என்னவென்றால் அது பெரும்பான்மை மக்களை அரசியலற்றவர்களாக ஆக்கியிருப்பதுடன், போராடும் குணத்தை மழுங்கடித்திருப்பது தான். குட்டி முதலாளித்துவ தன்மை கொண்ட ஐ. டி. ஊழியர்கள் இதில் பிரதான உதாரண புருஷர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
அந்த பிரதிபலனை இந்தியாவில் இயங்கி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தத்தமது ஊழியர்கள் மீது பிரயோகித்து வருகின்றன, அதனால் தான் வேலை நீக்கத்தால் தன் துறையை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட ஒரு கோர நிகழ்வை மிகவும் எதேச்சையாக கடந்து செல்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு நமது சங்க நிர்வாகிகளும் பிற சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டாக ஆணையரை சந்திக்க சென்றிருந்தோம்(பாதிக்கப்பட்ட பெரும்பான்மை ஊழியர்கள் யாரும் முன்வராத காரணத்தால் வேறுவழியின்றி சங்க நிர்வாகிகள் மட்டும் செல்ல வேண்டிய சூழல்).
அதே நாளில் சென்னை ஊரப்பாக்கம் அருகில் இயங்கி வரும் மதர் சன் என்ற நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தங்களக்கு பத்து வருடங்களுக்கு மேலாக ஊதிய உயர்வே வழங்கப்படவில்லை என்று கடந்த மூன்று மாத காலமாக ஆலைவாயில் போராட்டம் நடத்தி வந்தனர், ஆனால் நிர்வாகம் எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்த முன்வரவில்லை, ஏற்கனவே அந்த தொழிலாளர்கள் ஒரு சங்கம் கட்டி செயல்பட்டு வருகின்றார்கள், அந்த சங்கத்தின் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்த்திற்கு வந்தவர்கள் ‘தொழிலாளர் நல ஆணையமே தலையிடு’ என்ற விண்ணதிரும் முழக்கத்துடன் முற்றுகையிட்டனர்.
இம்மாதிரியான ஒரு ஒற்றுமையும் போராட்டமும் நமது ஐ. டி. ஊழியர்கள் மத்தியில் இருந்தால், நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய ராஜினாமாவோ வேலை நீக்கமோ செய்ய துணியுமா? ‘ஹரினி போன்றவர்கள் போராட வாய்ப்பு இல்லை’ என்ற அதீத நம்பிக்கை தான் நிறுவனங்களுக்கு இவ்வளவு தைரியத்தை கொடுக்கிறது.
ஐ. டி. நிறுவனங்கள் பில்லியன் அளவிலான லாபங்களை ஒவ்வொரு வருடமும் பெறுகிறது என்றால் அது ஒட்டுமொத்த ஐ. டி. ஊழியர்களின் அபரீதமான உழைப்பே அன்றி வேறு என்ன, அலுவலக வேலை பணிகளை கணிணிமயமாக்கி பல்வேறு தரப்பட்ட வேலைகளை எளிமைபடுத்தி இந்த உலகத்திற்கு அர்ப்பணித்து உள்ளார்கள், அதில் ஏற்பட்ட சவால்களை மிகவும் நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்கள், இன்னும் பலப்பல சாதனைகளை செய்து முடிக்கும் வல்லமை படைத்த நம் ஐ. டி. துறை ஊழியர்கள் அமைப்பாக ஒன்றினையும் காலம் வருமெனில் அதுவே மிகப் பெரிய புரட்சியை வித்திடும் என்று உறுதியாக நம்பலாம். அத்தருணங்களை நோக்கி….!
R. ராஜதுரை
ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு