ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்

ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், மற்ற பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், “நாமும் படித்திருந்தால் இது போன்று ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம்” என்று ஐ.டி. துறை மீதுள்ள ஈர்ப்பை தன்னுடைய ஆவலாக வெளிப்படுத்துகின்றனர்.

இன்றுவரை படித்த இளைஞர்களிடமும் பரந்துபட்ட மக்களிடமும் ஐ.டி துறை குறித்து ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. குளு குளு அலுவலகத்தில், சட்டை அழுக்காகாமல் வேலை. மிகப் பெரிய சம்பளம். விடுமுறை என்றால் கொண்டாட்டம். இதுதான் ஐ.டி. ஊழியர்கள் என்ற உடனே அனைவர் மனதிலும் வரும் பிம்பம்.

அதற்கு ஏற்றார்போல பல ஐ.டி. ஊழியர்கள் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில ஆண்டுகளிலேயே வீடு, கார் என வாங்கிக் குவிப்பதும் இது போன்றதொரு பிம்பம் ஐ.டி ஊழியர்கள் மீது உருவாகக் காரணமாக இருக்கிறது.

அதேசமயம் ஐ.டி. ஊழியர்களின் மனநிலையோ, நாம் ஏன் ஒரு ஓட்டல் தொடங்கக் கூடாது, கால் டாக்சி வாங்கி ஓட்டக் கூடாது என மற்ற துறையினரைப் பார்த்து ஏங்கும் விதத்தில் இருக்கிறது. அந்த அளவிற்கு ஐ.டி. ஊழியர்களின் வேலை நிலைமையும், அது உண்டாக்கும் மன அழுத்தமும், வாழ்நிலை சார்ந்த நோய்களும் அவர்களை அச்சுறுத்துகிறது.

ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பார்க்கும் வேலைசார்ந்த நோய்கள் வருவது நாம் அறிந்த ஒன்று. நின்று கொண்டே வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வெரிக்கோஸ் வெயின், அசெம்பிளி லைனில் தொடர்ந்து வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு கை முட்டிகளில் ஏற்படும் தேய்மானம் போல் ஐ.டி. ஊழியர்களுக்கு அவர்கள் வேலை சார்ந்த நோயாக தீவிர மன அழுத்தம் ஏற்படுகிறது.

பெயருக்குத்தான் எட்டு மணிநேர வேலை, ஆனால் காலையில் அலுவலகம் வந்துவிட்டால், பிறகு அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இருக்கும் வாடிக்கையாளர் அவரது நேரத்திற்கு வந்து நீ போகலாம் எனச் சொல்லும் வரை 12 மணி நேரமானாலும் சரி வேலை செய்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

எட்ட முடியாத இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம், ஊழியர்கள் ஒரு நாள் கூட குறித்த நேரத்திற்குள் வேலையை முழுவதுமாக முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல இயலாத நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.  இது தவிர வருட இலக்கு, மாத இலக்கு,வார இலக்கு ஆகியவைகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்துகொண்டே இருக்கும்.

நமது மாநிலத்தில் புற்றீசல் போலப் பரவியிருக்கும் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோரும் இலட்சக் கணக்கில் வெளியே வரும் இளம் பொறியாளர்கள் மிகக் குறைந்த சம்பளத்திற்கு, ஏன் ஆறு மாதம் வரை சம்பளமே இல்லாமல் கூட வேலைபார்க்கத் தயாராக இருக்கின்றனர். இதனால் பத்து வருடத்திற்கும் கூடுதலான அனுபவத்துடன், அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை நிறுவனங்கள் தேவையற்ற சுமையாகக் கருதுகின்றன.

இதன் காரணமாக எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற அச்சத்துடனேயே இவர்கள் வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. மாதம் மாதம் வரும் சம்பளத்தை நம்பி வீடு, கார், என அனைத்தையும் கடனில் வாங்கி வைத்துவிட்டு, திடீரென வேலை பறிபோனால் எவ்வாறு சமாளிப்பது என்ற சிந்தனையே அவர்களுக்குக் கூடுதலான மன அழுத்தத்தைத் தருகின்றது. அது மட்டுமன்றி, நிர்வாகத்தின் சுரண்டலை கேள்விக்கிடமற்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையையும் ஏற்படுத்துகிறது.

பொருள் உற்பத்தித் தொழிற்சாலைகளில் உள்ள கூட்டுப் பேர ஊதிய ஒப்பந்தம் போல் அல்லாமல் ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக சம்பளம் பேசும் அப்ரைசல் முறை, ஊழியர்களை ஒன்றாகச் சேர விடாமல் தடுக்கிறது. மேலும், ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருதும் போட்டி மனப்பான்மையை வளர்த்து, வர்க்க ஒற்றுமையைச் சிதைக்கிறது. இதன் மூலம் நிறுவனம் எந்தவித எதிர்ப்புமின்றி சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இதெல்லாம் போதாதென்று தினந்தோறும் மாறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக புதிதாக உருவாகிவரும் ஆட்டோமேசன், செயற்கை நுண்ணறிவு போன்றவைகள், சக தொழிலாளர்களுடன் போட்டி போடும் நிலையிலிருந்து, ரோபோக்களுடன் போட்டி போட்டு வேலை செய்ய வேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டுள்ளது.

ஊழியர்களிடையே அதிக அளவு மன அழுத்தங்கள் இருப்பதை ஒப்புக்கொள்வது போல, பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மன அழுத்தத்தை அல்லது உளவியல் சோர்வை எதிர்கொள்ள தங்கள் ஊழியர்களுக்கு உடனடியாக ஆலோசனை வழங்குவதற்கு வசதியாக “உதவி மையங்களை”  அமைத்துள்ளன.

இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், காக்னிசண்ட் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கு “மன அழுத்த இடைவேளைகளை” வழங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை வேலைக்கும் விளையாட்டுக்கும் இடையில் சமநிலையில் வைத்துக்கொள்ளும் திட்டங்களை வைத்துள்ளன.

காக்னிசண்ட், ‘தி எவரெஸ்ட்’ என்ற ‘சாகசப் பயணத்தை’ ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்கிறார்கள்.  மேலும் ஆர்வமுள்ள ஊழியர்களுக்கான யோகா அமர்வுகளையும் இந்நிறுவனம் வைத்துள்ளது. அதேபோல் விப்ரோ மற்றும் டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக ‘குடும்ப விழாக்கள்’ மற்றும் ‘பயிற்சி திட்டங்கள்’ வைத்துள்ளார்கள். ​​இன்ஃபோசிஸ் தனது உணவு கடைகளில் ‘பசுமை உணவுக் கடைகளை’யும் வைத்திருக்கிறது.

இருப்பினும், இத்தகைய ஏற்பாடுகள் மூலம் மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கு மட்டுமே பயன்படுமேயொழிய இதன் மூலம், தடுத்து விட முடியாது.

ஐடிஇஎஸ் (ITES) என்று அழைக்கப்படும் கால் சென்டர், பி.பி.ஓ.க்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலையோ இன்னும் பரிதாபம். மிகவும் குறைவான சம்பளத்திற்கு, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் இவர்கள் பெரும்பாலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் இந்தத் துறையில் நீடிப்பது கிடையாது. அந்த அளவிற்கு உடலளவிலும் மனதளவிலும் கடும் பாதிப்புகளை இவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து இரவுப் பணியில் (Night Shift) வேலைபார்க்கும் ஊழியர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய்விடுகின்றது. உடலளவில் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் இவர்களது குடும்ப வாழ்க்கையும் இதனால் பாதிப்படைகிறது.

நீண்ட நேரம் கீ போர்டு, மவுசைக் பயன்படுத்துவதால் மணிக்கட்டில் வலியும். திரையை (மானிட்டர்) பார்பதனால் கண் நோயும், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதால் முதுகுவலியும் (Back Pain) ஏற்படுகிறது.

அதேபோல வரைமுறையற்ற வேலைப் பளு காரணமாக சரியான நேரத்திற்கு சப்பிடாமல் இருப்பது, சாப்பிடும் உணவும் நமது தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாததாக இருப்பது, இதன் தொடர்ச்சியாக செரிமானப் பிரச்சினை என நோயாளிகளுக்கான தன்மைகள் அனைத்தும் தொடர்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில் இளம் வயதில் மாரடைப்பால் காலமாகும் ஐ.டி. ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தவிர சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, உடல் பருமன் என பத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள் ஏதாவதொரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எட்டுமணி நேர வேலை, பணிப் பாதுகாப்பு, கூட்டு பேர ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியம், எனத் தொழிலாளி வர்க்கம் இதுகாரும் போராடிப் பெற்ற சலுகைகள் அனைத்தையும், சில ஆயிரம் அதிக சம்பளத்திற்காகத் தொலைத்துவிட்டு ஒரு தலைமுறையே நோயாளிகளாக மாறி வருகின்றனர். சென்னையின் ஐ.டி. காரிடார் என்று அழைக்கப்படும் ஓ.எம்.ஆர் பகுதியில் புதிதாக உருவாகிவரும் பிரம்மாண்ட மருத்துவமனைகளே இதற்குச் சான்று.

வின்சென்ட்

புதிய தொழிலாளி – செப்டம்பர் 2019

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-health-issue/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி

சி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி 1. நாம் எத்தனை மணி நேரம் ஆஃபிஸ் வேலையில் இருந்தாலும் டைம்...

சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் – மீம்ஸ்

ஹஸ்ரத் மகல், காஷ்மீர், பெங்களூரு, மூணாறு, சாவித்ரிபாய் பூலே, ஜோதிபா பூலே, சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்

Close