TCS, விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் பிற கம்பெனிகளில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்த லே ஆஃப்-களைத் (தொழிலாளர் பணிநீக்கம்) தொடர்ந்து IT தொழிலாளர்களின் பிரச்சனை வெளியில் தெரிய ஆரம்பித்தது. வலுக்கட்டாயமாக வேலையை ராஜினாமா செய்ய வைப்பது, சில சமயம் குண்டர்களை வைத்து மிரட்டுவதன் மூலம் தொழிலாளர்கள் பணியை விட்டு நீக்கப்பட்டனர். சமீப ஆண்டுகளில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதில் நிர்வாகம் புதிய முயற்சிகளை கையாண்டு வருகிறது.
தொழிற்சாலைகள் போல் இல்லாமல், ஐடி நிறுவனங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு வைக்கும் போது ஆபர் லெட்டர் கொடுக்கப்படுகிறது. இதில் பணிநீக்கம் குறித்தான ஷரத்துகளும் உள்ளன. தொழிலாளர்களால் ஆபர் லெட்டரில் உள்ள ஷரத்துகளை மாற்ற முடியாது. தற்போது பணிநீக்கம் தொடர்பான ஷரத்துகளை பயன்படுத்தி, நோட்டீஸ் பீரியடுக்கான ஊதியத்தை வழங்கி உடனடியாக ஊழியர்களை வேலையை விட்டுத் தூக்கிவிடுகிறார்கள்.
முன்பு நிறைய ஊழியர்களை ஒரே சமயத்தில் லே ஆஃப்பில் வெளியே அனுப்பிய TCS, விப்ரோ, டெக் மகேந்திரா மற்றும் பிற கம்பெனிகள் தற்போது சின்னச் சின்னக் குழுக்களாக ஊழியர்களை வெளியேற்றுகின்றன. இது இத்துறையில் உள்ள ஊழியர்களுக்குப் புதிய சவாலாக எழுந்து நிற்கிறது.
TCS, விப்ரோ, டெக் மகேந்திரா மற்றும் பிற கம்பெனிகள் தற்போது லே ஆஃப்பில் வெளியே அனுப்புவதற்கான தந்திரத்தை மாற்றிக் கொண்டுள்ளன என்று NDLF-IT பிரிவு குற்றம் சாட்டுகிறது. கடந்த சில மாதங்களில் நூற்றுக் கணக்கான ஊழியர்களுக்கு டெர்மினேஷன் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு IT கம்பெனிகள் இந்த முறையைக் கையில் எடுத்ததில்லை.
இதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஊழியரிடம் பல கட்ட சந்திப்புகளை நடத்துவார்கள். வேலையை ராஜினாமா செய் என்று நெருக்கடி கொடுப்பார்கள். ஊழியர் ஒப்புக்கொள்ளும் வரை விடமாட்டார்கள். வேறு பல நிகழ்வுகளில் ஊழியருக்கு வேலையளிக்காமல் சும்மா உட்கார வைப்பார்கள். இதனை bench ல் அமர வைத்தல் என்று குறிப்பிடுகின்றனர்.
கடந்த சில மாதங்களில், பல கம்பெனிகள் அளித்த 20க்கும் மேற்பட்ட டெர்மினேஷன் நோட்டீஸ்களைப் தன் பார்வைக்கு வந்துள்ளதாக NDLF-IT பிரிவின் தலைவர் தோழர் ஷியாம் சுந்தர் குறிப்பிடுகிறார். அந்த டெர்மினேஷன் நோட்டீஸ்கள் பலவற்றில் ‘இரண்டு மாத முன்னறிவிப்பு அல்லது இரண்டு மாதத்துக்கான ஊதியத்துடன் வேலையை விட்டு அனுப்பும் உரிமை கம்பெனிக்கு உள்ளது‘, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“பலரை ஒரே சமயத்தில் லே ஆஃப் விடுவது நிகழ்ந்த பின்னர் IT ஊழியர்கள் விழிப்புணர்வு அதிகரித்தது. வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நெருக்கடியை எதிர்த்து நிற்கத் துவங்கினர். தொழில் தகராறு சட்டத்தின் 2A மற்றும் 2K பிரிவுகளின் கீழ் தொழிலாளர் துறையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான கால அவகாசம் இருக்கும். ஆனால், தற்போது ஊழியர் எதிர்ப்பு நிலை எடுக்கிறார் என்று தெரிந்த நிமிடத்திலேயே கம்பெனி டெர்மினேஷன் கடிதம் கொடுத்து விடுகிறது. ஊழியர்களைக் காப்பாற்றுவதற்கான நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது“, என்று தோழர் ஷியாம் சொல்கிறார்.
ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில், விப்ரோவுடன் சேர்ந்து BITS-Pillani பல்கலைக்கழகம் நடத்தும் கல்வித் திட்டத்தில் இளம் ஊழியர் ஒருவர் சேர்ந்துள்ளார். அந்தப் படிப்பில் சேர்ந்தவர்கள், படிக்கும்போதே விப்ரோவின் ஊழியர்களாக அமர்த்தப்படுவார்கள். படிப்பு முடித்த உடனேயே அவர் பணிக்கும் அமர்த்தப்பட்டார். இப்போது அவருக்கு டெர்மினேஷன் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விவகாரத்தினை விரிவாகப் படிக்க NDLF வலை மனைக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.
அந்த இளம் ஊழியர் தினக்கூலி தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். WASE என்று அறியப்படும் M.Tech படிப்பில் அவர் சேர்ந்தார். இப்படிப்பில் சேர்ந்தவர்கள் வார நாட்களில் விப்ரோவில் வேலை செய்ய வேண்டும். வார இறுதி நாட்களில் நேரடி கல்வி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு 13,500 ரூபாய் உதவித் தொகை முதல் ஆண்டு வழங்கப்படும். படிப்படியாக அது அதிகரிக்கப்பட்டு நான்காம் ஆண்டு முடிவில் 23 ஆயிரம் ரூபாய் வரை உதவித் தொகை அதிகரிக்கப்படும்.
இதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்- விப்ரோவின் WASE திட்டம் சுரண்டல் திட்டமான NEEM திட்டத்தை விட வேறுபட்டதா என்ன?
சான்று பெற்ற ஏஜன்டுகள், உற்பத்தி ஆலைகளில் குறிப்பிட்ட காலத்துக்கு குறைவான ஊதியத்துடன் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதற்கு NEEM திட்டம் அனுமதியளிக்கிறது. தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இவ்வாறு செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், யதார்த்தம் என்னவென்றால், தொழிலாளர்கள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டு, மற்ற தொழிலாளர்கள் என்ன உற்பத்தி செய்கிறார்களோ, அதே உற்பத்தியைத்தான் செய்கிறார்கள்.
“மாணவர்“ ஒருவரை வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்ய வைக்கும் WASE திட்டம் உண்மையில் மாணவருக்குக் கல்வி அளிக்கிறதா என்ன?
தொழிற்சாலைகளில் நடைமுறையில் உள்ள NEEM திட்டம் போல, அப்பரன்டீஸ் பயிற்சித் திட்டம் போல, இதுவும் ஒரு சுரண்டல் திட்டமே. மேற்படி திட்டங்களில் தொழிலாளருக்குப் பயிற்சி அளிக்கிறோம் என்ற பொய்யைச் சொல்லி அவருக்குக் குறைந்த கூலி கொடுத்து உழைப்பைச் சுரண்டிக்கொள்கிறார்கள்.
WASE திட்டத்தைப் பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட M.Tech பட்டம் வழங்கப்பட்ட போதும், ‘நடைமுறை பயிற்சி‘ என்ற பெயரில் கம்பெனியில் வாரத்துக்கு 5 நாள் ‘மாணவர்‘ உழைக்கிறார்.
இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டுள்ள நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் நான்கு ஆண்டுகளில் M.Tech படிப்பை முடித்துவிட்டு, நிரந்தரம் செய்யப்பட்ட ஊழியராக ஓராண்டுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார். முதல் மதிப்பீடு நடக்கும்போதே அவருக்கு மிகவும் குறைவான தரவரிசை கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ‘செயல்பாடு மேம்பாட்டு திட்டம் (Performance Improvement Program -PIP) ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார். அந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம் அவருக்குக் கூடுதல் பயிற்சி கிடைக்கும் என்றும், தனது உழைப்பை மேம்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பளிப்பதாகவும் கம்பெனி சொல்லிக்கொள்கிறது. மூன்று மாத காலம் அந்தப் பயிற்சியில் இருந்த பின்னரும் அவரின் உற்பத்தித் திறன் மேம்படவில்லை என்று சாக்கு சொல்லி 21 நவம்பர் அன்று அவரை டெர்மினேட் செய்துவிட்டனர்.
இந்த நிகழ்முறை அனைத்துமே கண் துடைப்பு என்று தோழர் ஷியாம் சொல்கிறார். மதிப்பீடு முறை என்பதில் மேல்முறையீட்டுக்கோ, பேச்சுவார்த்தைக்கோ எந்த இடமும் இல்லை என்றும், என்ன மதிப்பீடு அளிப்பது என்பதை கம்பெனி தன்னிச்சையாக முடிவு செய்கிறது என்றும் IT யூனியன்கள் சொல்கின்றன. மதிப்பீடு முடிந்தவுடன் மேம்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கூட கொடுக்காமல் வேலையை விட்டு விரட்டுகின்றனர் என்ற விமர்சனத்தை எதிர்கொள்வதற்காகவே திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ற PIPயை விப்ரோ கொண்டுவந்துள்ளது. இது வெறும் ஒரு கண்துடைப்பே.
சட்ட கட்டுப்பாடுகள்
IT தொழிலுக்கு கடைகள்- வணிக நிறுவனங்கள் சட்டம் (Shops and Establishment Act) பிரதானமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு NDLF வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. அதற்குப் பின்பு தொழில் தகராறு சட்டம் IT தொழிலுக்கும் பொருந்தும் என்று தமிழ்நாடு தொழிலாளர் துறை சொன்னது. இதன் விளைவாக ஊழியர்கள் தொழிலாளர் துறை மூலம் பிரச்சனைகளுக்கான தீர்வைத் தேட முடிந்தது.
வலுக்கட்டாயமாக வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட ஊழியர்கள் தாக்கல் செய்த 2A மனுக்கள் பல, நாட்டின் மாநிலங்கள் பலவற்றில் நிலுவையில் உள்ளன. ஆனால், வழக்கம் போல, சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு கம்பெனிகள் ஆஜராவதில்லை.
புனேயில் நிகழ்ந்த ஒரு விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு வரவில்லை என்பதால் தொழிலாளர் துறை விப்ரோவிற்கு ரூபாய் 3 ஆயிரம் தண்டம் விதித்தது. ஆனால், பல கோடிகளில் சம்பாதிக்கும் கம்பெனிகளில் ஒன்றான விப்ரோவுக்கு 3 ஆயிரம் என்பது சில்லறைச் செலவுதான். வழக்குகளில் பல, பற்பல ஆண்டுகள் இழுபட்ட பின்னர் தற்போது தொழிலாளர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
விப்ரோவின் 14 ஊழியர்கள் டெர்மினேட் செய்யப்பட்ட பின்னர், சென்னையில் தாக்கல் செய்த 2K மனு இதற்கு விதிவிலக்காக உள்ளது. அவர்களில் பாதி பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது. மற்றவர்கள் சும்மா உட்கார (benched) வைக்கப்பட்டார்கள். அவர்களை டெர்மினேட் செய்வதற்கு கம்பெனி முயற்சி எடுக்கவில்லை என்றாலும் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா ஊழியர்கள் வழக்குப் பற்றி மேலும் படிக்க பின்வரும் இணைப்புகளைச் சொடுக்கவும்:
விப்ரோ நிர்வாகம் நெருக்கடி கொடுத்த போதும் வேலையை விட மறுப்பு! வேலைப் பறிப்புக்கு எதிராகப் போராட்டம்!
மற்றொரு நிகழ்வில் டெக் மகேந்திராவைச் சேர்ந்த 41 ஊழியர்கள் நிர்வாகத்தின் வலுக்கட்டாயப்படுத்தியதன் பேரில் வேலையை விட வேண்டி வந்தது. அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றனர். தற்போது அங்கேயே வேலை பார்க்கின்றனர். அவர்களில் பலர் சும்மா உட்கார வைக்கப்பட்டிருந்த போதும், துன்புறுத்தல்களுக்கு ஆளானபோதும், கம்பெனிக்கு எதிராக 2A வழக்குகளைப் பதிவு செய்திருப்பதாக கூட்டு மெயில் ஒன்றை அனுப்பியதின் மூலம் கூட்டு பேர உணர்வை வலுப்படுத்த NDLF ஆல் முடிந்திருக்கிறது.
ஆனால், இப்போது நிர்வாகங்கள் தங்களின் செயல் தந்திரத்தை மாற்றிக்கொண்டு வருகின்றனர். வேலைக்கமர்த்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விதியை மேற்கோள் காட்டி உடனடியாக டெர்மினேட் செய்துவிடுகின்றனர்.
தொழிலக நிலையாணை (Industrial Standing Order) சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி நிலையாணையின் ஷரத்துகள் படியும் தொழில் தகராறு சட்டத்தின் விதி 25Fன் படியும் முன்னறிவிப்பு கொடுத்து, அல்லது முன்னறிவிப்புக் காலத்துக்கான ஊதியத்தைக் கொடுத்து, தொழிலாளர்களை டெர்மினேட் செய்வது சாத்தியம் என்று சட்ட வல்லுனர்கள் சொல்கின்றனர்.
ஆனாலும், ஏதேனும் குறிப்பிட்ட குற்றச்சாட்டு இருக்குமெனில் உள் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதன் காரணமாக, சட்ட விரோதமான வேலை நீக்கத்தை சட்டப்பூர்வமாக எதிர்த்து நிற்பது யூனியன்களுக்குக் கடினமான ஒன்றாகும்.
தங்கள் மனம் போல வேலைக்கு எடுக்கவும், வேலையை விட்டு அனுப்பவுமான அதிகாரத்தை IT கம்பெனிகளுக்குத் தற்போதைய சட்டம் அளிப்பதாக தோழர் ஸ்யாம் சுந்தர் சொல்கிறார். டெர்மினேஷன் செய்வதில் எவ்வித நியாயமோ அல்லது வகை மாதிரியோ இல்லை. இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள ஊழியர்கள் முதல் சில மாதங்களில் ரிடையர் ஆகும் நிலையில் உள்ள ஊழியர்கள் வரை டெர்மினேட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தொழில் அதிபர்களுக்குச் சாதகமான IT கொள்கை அரசின் நோக்கம் என்னவென்பதைக் காட்டுகிறது
தொழிலாளர் சட்டங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசின் ICT கொள்கை (Information and Communication Technology Policy-2018), IT தொழில்களுக்கு பல சலுகைகளை அளிக்கிறது. அந்தக் கொள்கை மிகவும் வசதியான அளவுக்குத் தெளிவற்றதாக இருக்கிறது. “IT தொழில்முறையாளர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முறையான கட்டமைப்பை உருவாக்கும், அதேசமயம், ITதொழிலின் நலனையும், பிற மாநிலங்களில் உள்ள தொழில் நடைமுறைகளையும் கருத்தில் கொள்ளும்“, என்று தமிழக அரசின் ICT கொள்கை சொல்கிறது.
தமிழ்நாடு ICT கொள்கை 2018 யைப் படிக்க இங்கே சொடுக்கவும்
கடைகள் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தின் வேலைநேரம், விடுமுறை தினங்கள் தொடர்பாக இத்தொழிலுக்குக் குறிப்பான விதிவிலக்குகளை ICT கொள்கை அளிக்கிறது. பாதுகாப்பு அளித்தல் மற்றும் பெண் கண்காணிப்பாளர்கள் இருக்க, பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடலாம் என்று கொள்கை குறிப்பிட்டுச் சொல்கிறது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013-ன் படி, புகார் அளிப்பதற்கான உள் கமிட்டியை (Internal Complaints Committee) அமைக்க வேண்டும் என்றும் கொள்கை குறிப்பிடுகிறது.
இவற்றுக்கு அப்பால், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் விழாக்கால விடுமுறைகள்) சட்டத்தின் படி விதிவிலக்குகளையும் இக்கொள்கை அறிவிக்கிறது. சட்டத்தின்படி அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றால், ஊழியர்களுக்கும் தொழிலாளர் அலுவலகத்துக்கும் நிர்வாகம் முன்னறிவிப்பு அறிக்கை அளிக்க வேண்டும். கொள்கையின் இந்த விதிவிலக்குகளின்படி, எட்டு மணி நேர வேலை, ஒரு வாரத்துக்கு 48 மணி உழைப்பு நேரம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டவை ஆகின்றன.
கர்நாடக அரசைப் போல, தொழிற்சாலை நிலையாணைகள் சட்டத்திலிருந்து இத்தொழிலுக்கு தமிழக அரசு விதிவிலக்கு அளிக்கவில்லை என்பது ஒரு சிறிய ஆறுதலாக உள்ளது.
முன்னுள்ள சவால்கள்
பாதிப்புக்கு ஆளானால் மட்டும், ஊழியர்கள் யூனியனை நோக்கி வருகிறார்கள் என்பது NDLF-IT அமைப்பு எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த காலத்தில் நடந்தது போல, ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் கடிதத்தில் கையொப்பமிட்ட பின்னர் அல்லது டெர்மினேஷன் கடிதத்தைப் பெற்ற பின்னர்தான் ஊழியர்கள் சங்கத்திற்கு வருகின்றனர்.
தற்போது இத்தொழிலில் சில யூனியன்கள் இயங்கி வருகின்றன. இருந்தபோதும், தமிழ்நாடு, புனே, பெங்களூரு, மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தொழிலாளர் துறையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. சட்ட தீர்வு என்பது குறுகலான ஒன்றாக இருக்கிறது.
ஊழியர்களின் மன ஆரோக்கியமும் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. வேலையிழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாத பல ஊழியர்களுக்கு NDLF-IT பிரிவு மன நல ஆலோசனைகள் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாற்று வேலைகளைப் பெறுவதில் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அத்துடன் பல்வேறு விதமான கடன் தொல்லைகளில் சிக்கிக்கொண்டுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
நிர்வாகங்களின் தந்திரங்களை எதிர்கொள்வதற்கும், ITதொழில்களுக்கு அரசுகள் அளிக்கின்ற சட்டவிதித் தளர்வுகளை எதிர்கொள்வதற்கும் ஐக்கியப்பட்ட தொழில் முழுவதையும் உள்ளடக்கிய அணுகுமுறை தேவையானதாக இருக்கிறது.
நன்றி : தொழிலாளர் கூடம்