ஐ.டி ஊழியர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
போராடும் விவசாயி யாரோ ஒருவர் இல்லை நாம் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் ஒதுங்கிச் செல்ல முடியாது. அவர்கள் இந்த சமுகத்தின் முக்கியமான அங்கம்.
கார்ப்பரேட் முதலாளிகளுக்காக எந்தவித வரைமுறையும் இல்லாமல் மக்கள் பணத்தை அள்ளிக் கொடுக்கும் அரசு விவசாயிகளின் நேர்மையான கோரிக்கைகளுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் அலட்சியபடுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 9 மாதங்களில் மட்டும் ரூ 56,000 கோடி சிறப்பு பொருளாதார மண்டலஙகளுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது.
இந்த அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை மட்டும் நிராகரிக்கவில்லை பெருவாரியான உழைக்கும் மக்களின் உண்மையான கோரிக்கைகளையும் காலில் போட்டு மிதித்து வருகிறது.
இன்று விவசாயிகளுக்கு ஏற்பட்ட நிலைமையை நமக்கும் ஏற்படுத்த இந்த அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. ஊழியர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை நிறைவேற்ற மற்றும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களையும் திருத்தி ஒன்றும் இல்லாமல் செய்யவும் ஏற்கனவே வேலைகளை ஆரம்பித்து விட்டது. நமது எதிர்ப்பை பதிவு செய்ய நாம் இன்று தவறிவிட்டால் மிகப்பெரிய தவறை செய்தவர்கள் ஆகி விடுவோம்.
நாளை ஐ.டி கார்ப்பரேட் நிறுவனம் ஐ.டி துறையில் இருக்கும் நமது உரிமைகளில் கைவைக்க முயற்சித்தால், இன்று டெல்லியில் போராடும் விவசாயி நாளை நமக்காக போராட நமது அலுவலக வாசலில் உரிமையுடன் வந்து நிற்பார். உழைக்கும் மக்கள் அனைவரும் ஒரே கூட்டுக் குடும்பம். நாம் ஒவ்வொருவரும் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களின் உரிமைக்கும் குரல் கொடுப்பது அவசியம்….
வரும் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
– குறிஞ்சி
முழக்கங்கள்
மத்திய அரசே
- தமிழக விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்!
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 25,000 வறட்சி நிவாரணம் வழங்கு!
- காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு!
- விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயித்திடு
- நெடுவாசல் திட்டம் உட்பட விளைநிலங்களை பாதிக்கும் அனைத்து ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் ரத்து செய்!
மாநில அரசே!
- விவசாய பாசனத்துக்கான நீர்நிலைகள் பாதுகாப்பை உறுதி செய்!
- விவசாயிகளுக்கு கந்து வட்டி, நுண்கடன் கும்பல்களிடமிருந்து பாதுகாப்பு கொடு
- நெடுவாசல் திட்டத்தை அமல்படுத்த அனுமதி கொடுக்காதே!
- ஆற்று மணல் குவாரிகளை இழுத்து மூடு!
- விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கு!
ஐ.டி ஊழியர்களே!
- நமது மண்ணையும், நீரையும், விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க கைகோர்ப்போம்!
- தொழிற்சங்கமாக அணி திரண்டு நமது உரிமைகளையும், நாட்டின் நலன்களையும் பாதுகாப்போம்!
தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் – combatlayoff@gmail.com
படங்கள் : செல்வா