«

»

Print this Post

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

32 மாருதி தொழிலாளர்கள் மீது பொய்யாக கொலைக்குற்றம் சாட்டி தண்டித்துள்ள போலீசு, நீதிமன்றம், அரசுக் கட்டமைப்பை எதிர்த்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மார்ச் 16-ம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக பு.ஜ.தொ.மு திருவள்ளூர் (கிழக்கு – மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட தோழர்களின் ஆவடி புதிய நகராட்சி அலுவலகம் முன்பு நடத்தினர்.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் டைடல் பார்க் முன்பு, திருவான்மியூர் ரயில் நிலையத்தின் முன்பு நோட்டிஸ் வினியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

கார்ப்பரேட்டுகளின் தரகு அரசின் சதித்திட்டத்தால் தண்டிக்கப்படும் மாருதி தொழிலாளர்களுக்கு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் ஆதரவில் ஐ.டி ஊழியர்களும் இணைந்து நிற்போம்.

நீதித்துறையும் போலீசும் நமக்கானதல்ல! மாருதி ஆலைத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே!

நீதித்துறையும், போலீசும், ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே உழைக்கும் மக்களுக்கு எதிரானதுதான் என்பதை மார்ச் 10 அன்று தில்லி குர்கான் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மாருதி ஆலைத் தொழிலாளர்கள் மீது நடந்து வந்த குற்றவியல் வழக்கில் 117 தொழிலாளர்களை விடுவித்த நீதிமன்றம், 31 தொழிலாளர்கள் குற்றவாளிகள் என்ற அறிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் மீது கொலைக் குற்றமும், 18 பேர் மீது வன்முறை-தீயிடல்-சூறையிடல் குற்றமும் திணிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்கான தண்டனையை எதிர்வரும் மார்ச் 17 அன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு – முதலாளிகளது திட்டமிட்ட சதி!

கடந்த 18-07-2012 அன்று தில்லி மனேசர் தொழிற்பேட்டையில் இயங்கி வந்த மாருதி – சுசூகி கார் தொழிற்சாலையில் வன்முறை வெடித்தது. நிர்வாகம் நூற்றுக்கணகாகன குண்டர்களை ஆலைக்குள் அனுப்பி வைத்து இந்த வன்முறை – தீ வைப்பு சம்பவத்தை அரங்கேற்றியது. இந்த வன்முறையின் போது அவானிஷ் தேவ் என்கிற மனிதவள அதிகாரி செத்துப் போனார். இந்த சாவை சாக்காக வைத்து 2300 தொழிலாளர்கள் வேலையை விட்டே துரத்தப்பட்டனர். 148 தொழிலாளர்கள் மீது கொலை, வன்முறை, தீயிடல், சூறையாடல் உள்ளிட்ட வழக்குகளில் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த வன்முறைக்கு யார் காரணம், அதிகாரியைக் கொன்றது யார் என்பது குறித்து பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டுமென தொழிலாளர்கள் கோரியதை அரியானா மாநில அரசு நிராகரித்தது. மாறாக, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை பிணையில் விடக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. பல ஆண்டுகள் போராட்டத்தில்தான் பிணைகூட கிடைத்தது. இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு குர்கான் – மனேசர் தொழிற் பிராந்தியத்தில் இயங்கி வந்த நூற்றுக் கணக்கான பன்னாட்டு கம்பெனிகளில் தொழிற்சங்கம் அமைக்கவே முடியாத சூழலை உருவாக்கிட அரியானா மாநில அரசும், பன்னாட்டு முதலாளிகளும் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

போலீசு – நீதிமன்றம் – முதலாளிகளது கூட்டு!

வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தக் கூட்டணியின் செயல்பாடுகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்க தீவிரமாக முயற்சி செய்தது கண்கூடாகத் தெரிந்தது. தொழிலாளர்களது வன்முறையில் 90 போலீசு மற்றும் மாருதி அதிகாரிகள் காயமடைந்ததாக போலீசு சொல்லியது. ஆனால், ஒரே ஒரு தொழிலாளிக்குக் கூட சிறுகாயமோ, கீறலோ ஏற்படவில்லை என்றது போலீசு. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதே நீதிமன்றம்தான் 148 பேரில் 117 பேரை நிரபராதிகள் என்று விடுவித்துள்ளது. அப்படியானால் 90 அதிகாரிகளுக்கு – முக்கியமாக, கலவர தடுப்பு போலீசுக்கு- காயத்தை ஏற்படுத்தியது யார்? கும்பல் வன்முறை என்கிற குற்றச்சாட்டு போலீசால் இட்டுக் கட்டப்பட்டதுதான் என்பது தெளிவாகவில்லையா?

போலீசு கொண்டு வந்த சாட்சியங்கள், தடயங்கள் பொய்யானவை என்பது பல சந்தர்ப்பங்களில் அம்பலமானது. போலீசு கொண்டு வந்த சாட்சிகளில் பலர் சம்பவம் நடந்தபோது தாங்கள் அந்த இடத்தில் இல்லை என்றும், பொய்சாட்சி சொல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்றும் நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளனர். செத்துப் போன அதிகாரியின் பிரேத பரிசோதனை (போஸ்ட் மார்ட்டம்) நடந்திருப்பது கொலையா என்பதை உறுதிப்படுத்தவும் இல்லை. தற்போது கொலைக் குற்றத்துக்கு ஆளாகி இருக்கின்ற 13 பேரின் பங்கு என்ன என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிலை நிறுத்தவும் இல்லை. போலீசின் ‘தயாரிப்பில்’ உள்ள இத்தனை ஓட்டைகளையும் மீறி சங்க நிர்வாகிகள் அனைவரையும் குற்றவாளியாக்கியுள்ளது, குர்கான் நீதிமன்றம்.

கற்க வேண்டிய பாடம் என்ன?

போலீசு, நீதிமன்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. ஆலை விபத்துக்கள், பாதுகாப்பற்ற வேலை நிலைமை போன்றவற்றால், முதலாளித்துவ பயங்கரவாதம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொன்று வருகிறது. இலட்சக்கணக்கான தொழிலாளர்களது வேலையைப் பறித்தும், அச்சுறுத்தியும் பணிய வைத்து கொலை வெறியாட்டம் போடுகின்ற கார்ப்பரேட் முதலாளிகளது சுண்டுவிரலை அசைக்கக் கூட துப்பற்றதாக தொழிலாளர் துறை புழுவைப் போல நெளிந்து கொண்டிருக்கிறது.

சங்கம் அமைக்க முயல்கின்ற தொழிலாளர்களை காட்டிக் கொடுக்கவும், சங்கத்தின் மீது முதலாளி நடத்துகின்ற தாக்குதல்களை வேடிக்கை பார்க்கவும் உரிய சன்மானம் பெற்றுக் கொள்கிற தொழிலாளர் துறையோ, வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று கண்ணை மூடிக் கொள்கின்ற நீதித்துறையிம் நம்மைப் பாதுகாக்காது என்பதே நாம் கற்க வேண்டிய முக்கிய பாடம். கொலை வழக்கு முதல் கலவர் வழக்கு வரை பொய்யாக வழக்குகளைப் பதிந்து தொழிலாளி வர்க்கத்தை அச்சுறுத்துகின்ற போலீசுக்கு நாம் ஏன் பணிய வேண்டும்? கோடிக்கால் பூதமான தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் இது. தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமைதான் மாருதி தொழிலாளர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தையும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாக்கும்.

  • தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! 16-03-2017, மாலை 4 மணிக்கு புதிய நகராட்சி அலுவலகம் அருகில், ஆவடி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் (கிழக்கு- மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.

94444 61480, 94453 68009, 88075 32858, 84897 35841

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-in-solidarity-with-persecuted-maruti-workers/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஆவடியில் பு.ஜ.தொ.மு.வின் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்

மே 1, 2017 ஆவடி பேரணி - இராமரத்னா திரையரங்கு அருகில் மாலை 4 மணி ஆர்ப்பாட்டம் - நகராட்சி அலுவலகம் அருகில் மாலை 5 மணி

போராடும் உரிமையை மறுக்கும் தமிழக போலீசுக்கு எச்சரிக்கை – நீதிபதி கட்ஜூ

தமிழ்நாடு போலீசும், அதிகாரிகளும் தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமையை அப்பட்டமான முறையில் மீறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும், இல்லாவிடில் இந்த சட்டவிரோத செயலில்...

Close