ஐ.டி கம்பெனிகளில் ரத்தக் களரி, வேடிக்கை பார்க்கும் அரசுகள்!
- சி.டி.எஸ் (CTS) ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து துரத்துகிறது.
- ஐ.பி.எம் தனது ஒப்பந்த ஊழியர்களை ஒரே நாள் முன்னறிவிப்பில் துரத்துகிறது.
- டி.சி.எஸ் (TCS) ஊழியர்களின் போனஸை வெட்டி சம்பள உயர்வை ஒற்றைப்படையில் வைக்கிறது.
- விப்ரோவும் வேலை நீக்கத்தைத் தொடங்கியிருக்கிறது.

எலியட் மேனேஜ்மன்ட்டின் (Elliott Management) காக்னிசன்ட்டிற்கான திட்டம் ஊழியர்களை நட்டாற்றில் விடுகிறது. (எலியட் மேனேஜ்மன்ட்டின் நிறுவனர் பால் சிங்கர்)
தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதின் மூலம் தொழிலாளர்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டிய மத்தியநில அரசுகள் என்ன செய்கின்றன? ஓரமாக அமர்ந்து மிக்சர் சாப்பிடுகின்றன.
எலியட்டின் பாட்டுக்குத் தாளம் போடும் சி.டி.எஸ்
ஐ.டி ஊழியர்களுக்கு ஏன் இத்தகைய அநீதி இழைக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள எலியட் மேனேஜ்மன்ட் என்ற நிதிமூலதன நிறுவனம் சி.டி.எஸ் ஊழியர்களை எப்படி நெருக்கடியில் தள்ளியது என்பதை பார்க்கலாம். அந்நிறுவனம் 2016 நவம்பரில் $1.4 பில்லியன் மதிப்பிலான சி.டி.எஸ் பங்குகளை வாங்கிய கையோடு சி.டி.எஸ் க்கு எழுதிய கடிதத்தில் பங்குகளின் மதிப்பை அதிகரிப்பதற்கான ஒரு திட்டத்தை கோரியிருந்தது. அதாவது சி.டி.எஸ் பங்குகளில் மூலதனமிட்டு சூதாடும் பணமுதலைகளுக்கு மேலும் அதிக வருமானம் கிடைப்பதை உறுதி செய்வற்கான திட்டமது.
எலியட் போன்ற முதலீட்டாளர்களின் கட்டாயத்திற்கு பணிந்த சி.டி.எஸ் 2017 பிப்ரவரியில் எலியட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டது. அதன் முக்கிய நிபந்தனை சி.டி.எஸ் குவித்து வைத்திருக்கும் நிதி சேமிப்பை பயன்படுத்தி அதன் சொந்த பங்குகளை பங்குச் சந்தையில் வாங்குவதன் மூலம் பங்குதாரர்களுக்கு $3.4 பில்லியன் தருவதாகும். அந்த ஒப்பந்தத்தைப் பற்றிய செய்திக்குறிப்பில் உள்ள சில அம்சங்களும் அவை ஊழியர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதும் கீழ்வருமாறு:
- “expand margin targets” (லாப விகித இலக்குகளை அதிகமாக்கு)
“further optimizing operations” (செயல்பாடுகளை மேலும் சீர்திருத்து)
“drive long-term shareholder value” (பங்குதாரர்களுக்கு நீண்ட கால மதிப்புக்கு பாடுபடு)
[தற்போதைய அனுபவமிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்வது, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை வேலைக்கமர்த்துவது, இருப்பவர்களின் வேலைச்சுமையை அதிகப்படுத்துவது] - “robust new capital return program” (முதலீட்டாளர்களுக்கு லாபம் வழங்கும் துடிப்பான திட்டத்தை அமலாக்கு)
“returning capital to its shareholders” (பங்குதாரர்களுக்கு முதலீட்டை திருப்பிக் கொடு)
“deliver compelling value to shareholders”. (பங்குதாரர்களுக்கு கவர்ச்சிகரமான லாப வீதத்தை உறுதி செய்)
[$3.5 பில்லியன் (ரூ 22,750 கோடிகள்) பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்தில் ஈடுபடும் பங்குதாரர்களுக்கு கொண்டு சேர்ப்பது]
நிறுவனங்களும் நிதி மூலதனமும்
காக்னிசன்ட்டைப் போலவே டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஐ.பி.எம் மற்றும் பல நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதன் மூலம் பணமுதலைகளின் பணப்பெட்டிகளை நிரப்பும் பாதையில் செல்கின்றன.
- விப்ரோ ஜூன் 2016-ல் $2500 கோடி மதிப்பில் தனது பங்குகளை பங்குச் சந்தையில் வாங்கியதன் மூலம் தனியார் துறையின் மிகப்பெரிய பங்குகளை வாங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.
- இன்ஃபோசிஸ் $13,000 கோடி தொகையை லாப ஈவாகவும் சந்தையில் பங்குகளை வாங்குவதன் மூலமும் பங்குதாரர்களுக்கு கொடுக்க முடிவெடுத்திருக்கிறது.
- டி.சி.எஸ் தனது 2.85% பங்குகளை பங்குச் சந்தையில் $16,000 கோடி செலவழித்து வாங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
இதிலிருந்து பங்குச் சந்தைகளில் நடைபெறும் கொண்டாட்டத்தை புரிந்து கொள்ளலாம். பாம்பே சென்செக்ஸ் 2017 ஏப்ரல் 26-ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக 30,000 புள்ளிகளை தாண்டியிருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் இது 32,000-ஐ தாண்டும் என்று வணிக தினசரிகள் கணிக்கின்றன.
ஆம். முதலாளிகளின் லாபத்திற்கான தாகம் அடங்காதது. அரசுகளும் அவர்களின் கோப்பைகள் காலியாகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கின்றன.
மக்களுக்கு சிக்கனம் முதலாளிகளுக்கு வரிச்சலுகை
அமெரிக்காவில், ஏப்ரல் 27-ல் அதிபர் டிரம்ப் கார்ப்பரேட் வரி வீதத்தை 35% த்திலிருந்து 15% -க்கு குறைப்பதாக முதலாளிகளுக்கான வரிகுறைப்புத் திட்டத்தை அறிவித்தார். அடுத்த நாளே அதே போன்ற வரி்க்குறைப்பை இந்தியாவிலும் செய்ய வேண்டும் என்று முதலாளிகள் கேட்கிறார்கள்; நிறுவன லாபத்தின் மீதான 30-40% வரி மிகவு அதிகம் என்று கூறுகிறார்கள்.
மற்றுமொரு முனையில், நிதி மூலதன முதலைகளும் முதலாளிகளும் தங்களின் லாபவிகிதம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர் நலச் சட்டங்களை போதுமான அளவு நீர்த்துப் போகவோ அல்லது சுத்தமாக நீக்கி விடவோ வேண்டும் என்று கோருகிறார்கள். எதேச்சதிகார வேலைநீக்கம், நேரவரம்பில்லாமல் வேலைவாங்குவது போன்ற கொடுமைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் (ஐ.டி ஊழியர்கள் உட்பட) உரிமைகளை இந்தச் சட்டங்கள் பாதுகாக்கின்றன. இந்த உரிமைகள் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பல ஆண்டு கால தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமாகவும் மகத்தான தியாகங்கள் மூலமும் வெல்லப்பட்டவை.
தொழிலாளர் நலச் சட்டங்களை எப்படி மீற முடியும் என்பதில் தான் முதலாளிகள் குறியாக இருக்கிறார்கள் என்பதை 2014-ல் டி.சி.எஸ் பணிநீக்கத்தின் போதும் இப்போது சி.டி.எஸ், விப்ரோவிலும் நாம் நேரடியாக பார்த்தோம்.
முதலாளிகளின் சேவையில் பா.ஜ.க அரசுகள்

பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு 2014-ல் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளின் நலனுக்கு ஏற்றாற் போல் திருத்தியது.
பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான ராஜஸ்தான் அரசு 2014-ல் தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளின் நலனுக்கு ஏற்றாற் போல் திருத்தியது.
- அதன்படி 300 தொழிலாளர்கள் வரை கொண்ட தொழிலகங்கள் பணிநீக்கம் செய்ய அரசின் முன்னனுமதி பெறத் தேவையில்லை. உரிமைகளைப் பற்றி பேசும் தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்துவதை எளிதாக்கியதன் மூலம் இந்த திருத்தம் நடுத்தர தொழிலகங்களில் தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கியிருக்கிறது.
- தொழிற்சாலை சட்டம் அமல்படுத்தப்பட தேவையான தொழிலாளர்களின் எண்ணிக்கையை 10 லிருந்து 20 ஆகவும் (மின்சாரத்தினால் இயக்கப்படும் தொழிலகங்கள்) 20 லிருந்து 40 ஆகவும் (மின்சாரமில்லாமல் இயக்கப்படும் தொழிலகங்கள்) உயர்த்தியதன் மூலம் சிறிய தொழிற்சாலைகளின் தொழிலாளர்களை சட்டப்பாதுகாப்பிலிருந்து அகற்றியிருக்கிறது.
- 30 சத தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தால்தான் தொழிற்சங்கம் அங்கீகாரம் செய்யப்படும் என்ற மாற்றத்தின் மூலம் பெரிய நிறுவனங்களில் தொழிற்சங்கம் கட்டப்படுவதும் தொழிலாளர்களின் குரல் கேட்கப்படுவதும் அரிதாக்கப்பட்டிருக்கிறது.
இந்துத்துவம் கையில் எடுத்திருக்கும் இந்த திரிசூலம் தொழிற்சங்கங்களை கருவிலேயே குத்திக் கிழிப்பதற்கான ஆயுதம்.
பா.ஜ.க.-வின் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த ராஜஸ்தான் மாதிரியை நாடெங்கும் திணிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி போன்ற புரட்சிகர சங்கங்கள் இந்த மாற்றங்களை எதிர்த்து நீதி மன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் போராடிக்கொண்டிருக்கின்றன.

இந்த மாற்றங்களை எதிர்ப்பதற்கும் நமது உரிமைகளை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஏற்ற வழியை பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளிகள் நமக்குக் காட்டியிருக்கிறார்கள்
எங்கள் உரிமைகளின் மீது கைவைக்காதே!
இந்த மாற்றங்களை எதிர்ப்பதற்கும் நமது உரிமைகளை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஏற்ற வழியை பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளிகள் நமக்குக் காட்டியிருக்கிறார்கள். 2016-ல் தொழிலாளர்கள் தங்கள் பி.எஃப் பணத்தை எடுப்பதற்கு தடைகளை விதிக்க மோடி அரசு துணிந்த போது இந்த பெங்களூரு பெண் தொழிலாளிகள் பெங்களூரு தீப்பிடிக்க வைத்து மோடியை பின்வாங்க வைத்தார்கள்.
தங்கள் லாபம் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவதன் அளவிற்கு நேர்விகிதத்தில் குவியும் என்பது முதலாளிகளுக்கு நன்கு தெரியும். ஒரு கம்பெனியின் தொழிலாளர்கள் எவ்வளவுக்கெவ்வளவு நசுக்கப்படுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அக்ககம்பெனியின் பங்கு மதிப்பு கூடும். எடுத்துக்காட்டாக மாருதி சுசூகி நிறுவனம் ஹரியானா அரசு மற்றும் போலிஸ் துணையோடு தொழிற்சங்கத்தை காட்டுமிராண்டித்தனமாக நசுக்கியும், 2300 தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்தியும், 148 தொழிலாளர்களின் மீது அப்பட்டமான பொய்வழக்குகளைப் போட்டும், 14 பேருக்கு வாழ்நாள்சிறை பெற்றுக் கொடுத்தும் காட்டாட்டம் போட்டது. இப்போது அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தை கொண்டாட்டத்தில் முன்னணியில் உள்ளன. கடந்த 12 மாதங்களில் அதன் பங்கு மதிப்பு 65% கூடியிருக்கிறது.
ஆம். பங்குச் சந்தையின் ஏற்றம் உழைக்கும் மக்களின் துன்பங்களுடன் நேர்விகிதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். முதலாளிகள் பங்குச்சந்தையை கவனித்துக் கொள்கிறார்கள். அரசுகள் முதலாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்களாகிய நாம் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். அது நாம் அனைவரும் சங்கமாக திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.