தற்போது டெல்லியிலும் தமிழகமெங்கும் போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டங்களை ஐ.டி ஊழியர்கள் அக்கறையோடும் கவலையோடும் கவனித்து வருகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் விவசாயத் துறையை திட்டமிட்டு புறக்கணிப்பது, விவசாயத்துக்கு தேவையான நீராதாரங்கள் அழிக்கப்படுவது, விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை மறுக்கப்படுவது, விவசாயிகள் சிக்க வைக்கப்பட்டிருக்கும் கடன் வலை, இது எல்லாவற்றுக்கும் மேல் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இது வரை பார்த்திராத வறட்சி நிலைமை ஆகியவை சேர்ந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளன. மத்திய மாநில அரசுகள் இந்த நிலைமையை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் ஆளும் கட்சி தலைவர்கள் போராடும் விவசாயிகளை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர்.
ஆனால், நவீன தொழில்நுட்ப உலகில் முன்னணியில் பணி புரியும் ஐ.டி ஊழியர்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான வாழ்க்கை நடத்தினாலும் விவசாய பொருளாதாரத்தின் மீதான இந்த தாக்குதல் மூலம் நமது உணவு பாதுகாப்பும், பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்திருக்கின்றனர்.
எனவே, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள் போராடும் விவசாயிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், அவர்களது கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் கூட்டங்களை நடத்தவிருக்கின்றனர்.
அதன்படி டைடல் பார்க், மெப்ஸ், சிறுசேரி சிப்காட், சோழிங்நல்லூர் சிப்காட் மற்றும் பிற இடங்களில் பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் இன்று (ஏப்ரல் 3, 2017) மாலை 4 மணிக்கு அலுவலகங்களிலிருந்து வெளியில் வந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 1 மணி நேரம் கூடுகின்றனர்.
விவசாயிகளின் பின்வரும் கோரிக்கைகளை ஐ.டி ஊழியர்கள் ஆதரிக்கின்றனர்.
- விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.
- அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ 25,000 வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
- விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டின் நீர் உரிமைகள் உறுதி செய்யபட வேண்டும். நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும்.
- தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.