செய்தி: 1. தமிழ்நாடு முழுவதும் உள்ள சீம கருவேல மரங்களை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல நாட்களாகிவிட்டது. ஆனால் பல மாவட்டங்களில் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2 : அரசின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டைகள் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. ஆதலால் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கருத்து : உயர் அதிகாரிகளோ/அரசியல்வாதிகளோ தவறு செய்தால் கண்டனம் அல்லது கேள்வி மட்டும் கேட்டுவிட்டு கடந்துபோகும் இந்த நீதிமன்றங்கள் சாதாரண மக்களிடம் சட்டத்தை மதிக்கவேண்டும் என்று கறாராக நடந்துகொள்ளும் முறையிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம் நீதித்துறை யாருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று.
=================
செய்தி : திருப்பதி அருகே போராட்டக்காரர்கள் கூட்டத்தில், லாரி புகுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மணல் மாஃபியாவுக்கு எதிராக போராடியதால், போராட்டக்காரர்கள் மீது மணல் மாஃபியா கும்பல் லாரி ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்து : போராடும் மக்கள் மீது இதுபோல தாக்குதல் நடத்துவதன் மூலம் அவர்களுக்கு மறைமுகமாக விடுக்கப்படும் எச்சரிக்கை இனிமேல் இதுபோல கொள்ளைகளை எதிர்த்து எந்தவித போராட்டமும் செய்ய கூடாது என்பதுதான்.
தமிழ்நாட்டில் சாராயக் கடையை எதிர்த்து போராடும் மக்களை வெறிநாய்களை போல தாக்குகிறது போலிஸ். போராடும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற பல்வேறு முறைகளை கையாண்டு தங்களது பிரச்சனைகளுக்கு போராடும் மக்களை அடக்கி ஒடுக்குகிறது. திருப்பதி அருகில் போராடும் மக்களின் மீது மணல் லாரி ஏற்றி படுகொலை செய்த மணல் கொள்ளையர்களுக்கும் தமிழ்நாட்டில் சாராய கடையை எதிர்த்து போராடும் மக்களை கொடூரமாக தாக்கும் போலீசுக்கும் எந்த வேறுபாடுமில்லை ….
போராடும் மக்களுக்கு தீர்வு கிடைக்காததால் கோபத்தில் சிறிய கல்லெறிந்தால் கூட மக்கள் தீவிரவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று சவடால் அடிப்பவர்கள் இப்போது 20-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று பயங்கரவாதத்தில் ஈடுபட்ட மணல் கொள்ளையர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்.
இதுபோல தமிழ்நாட்டிலும் மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் மக்களை தடம் தெரியாமல் அழித்திருக்கிறார்கள். எந்த செய்தித்தாளும் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில்லை.
சொல்லமுடியாது சில நாட்களுக்கு பிறகு சாராயக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா கூட நடத்தும் அளவு கேடுகெட்ட அரசு நிர்வாகம்தான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.
=================
செய்தி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கருத்து :
பெண்களில் குழந்தை முதல் முதியவர் வரை வயதுவேறுபாடு இல்லாமல் தாக்கப்படுகிறார்கள்.
ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி மீது கூட பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதிகளை யார் தண்டிப்பது? நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததில் நாட்டின் இறையாண்மையாக இருக்கும் நீதிபதிகளை கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். அனைத்து அதிகாரமும் நீதிபதிகளுக்கு உள்ளதால் அவர்கள் எந்த தவறும் செய்தாலும் கேள்விகேட்க முடியாத அடிமையாகத்தான் மக்கள் வாழ்கிறார்கள்.
வாச்சாத்தி போலிஸ் நடத்திய வன்முறை கீழ்வெண்மணியில் நடந்த கொடூரம், சாராயக் கடைகளை எதிர்த்து போராடும் பெண்கள் மீதான போலீசின் பாலியல் வன்முறை, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க மீண்டும் அனுமதி என்று அதிகாரிகளின் அராஜகத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களை நேரடியாக தண்டிக்க நீதிபதிகளுக்கு தெரியாதா?
எல்லாம் தெரிந்துமே, நரித்தனமாக செயல்படும் அதிகாரிகளையும் நீதிமன்றத்தையும் கேள்விகேட்கும் அதிகாரம் யாருக்குமில்லை. ஆனால் வாய்கிழிய சுதந்திர நாடு என்று கூப்பாடு போடும் சூழ்நிலைதான் இங்கே உள்ளது.
=================
செய்தி : மத்தியப் பிரதேசத்தின் மனா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சந்தர் மேக்வால் தனது மகள் மம்தாவின் திருமண வரவேற்புக்கு பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய விரும்பினார். இதை அறிந்த மாத்திரத்தில் கொதித்தெழுந்த உயர்சாதியினர் தாழ்ந்த சமூக அந்தஸ்தில் உள்ள சந்தருக்கு , தங்களுக்குச் சம்மாக பேண்ட் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை என்றும் மீறி நடத்தினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர்.
கிராம நிர்வாகத்தின் உதவியை நாடி மனு கொடுத்துள்ளனர். மனுவை விசாரித்த நீதிபதி கப்பார் , பேண்ட் இசையைத் தடை செய்வது சட்ட விரோதம் என தீர்ப்பளித்தார். சந்தரின் பயம் நீங்காது தொடரவே காவல்துறை பாதுகாப்புடன் திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது.
கருத்து
சாத்தியமான அனைத்துத் தளங்களிலும் பார்ப்பன உயர்சாதி வெறி தனது நச்சை பாய்ச்சத் தவறுவதேயில்லை! வாய்ப்புகள் கிட்டும்போதும், வாய்ப்புகளை உருவாக்கி தாழ்த்தப்பட்ட / சிறுபான்மை சமூக மக்கள் மீது தனது காழ்ம்பைக் காட்டத் தவறுவதில்லை.
மேலும், நுகர்வுக் கலாச்சார தாக்கத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் ஆடம்பரத் திருமண முறைக்கு பலியாவது ஒருபுறமும், சாதிக் கொடுங்கோன்மைகளுக்கு ஆட்பட்டு அஞ்சி வாழ்வதும் நம் சமூகத்தின் எதார்த்தங்கள்.
சாதியும் , வர்க்கமும் இரண்டறக் கலந்திருக்கும் இச் சமூக அமைப்பை மாற்றாமல் சாதிக் கொடுமைகளுக்கும் , ஆணவப் படுகொலைகளுக்கும் தீர்வு இல்லை ! வளர்ச்சி என்று எத்தனை பிதற்றினாலும் இளவரசன்களும், சங்கர்களும் இன்னும் இரத்த சாட்சியங்களாய் நம் கண்ணில் ஆடுகிறார்கள் !
=================
செய்தி
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தமது நாட்டில் வந்து வேலை செய்வதற்கான விசா விதிமுறைகளில் புதிய மாற்றங்களும் கெடுபிடிகளையும் புகுந்தியுள்ளன. இதன் எதிரொலியாக விப்ரோ நிறுவனம் 600 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஊழியர்கள் கட்டாய வேலை நீக்க கடிதம் ( forced resignation) தர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும் முறையான ஊதியம் வழங்கப்படாமலும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் சி.டி.எஸ் நிறுவனம் 6000 முதல் 20000 ஊழியர்கள் வரை வெளியேற்றப் போவதாக அறிவித்து அதை முழூவீச்சில் செயல்படுத்தியும் வருகிறது.
கருத்து
ITEC என்னும் இந்த அமைப்பு இந்தியத் தொழிலாளர் நலச் சட்டங்களை இந்நிறுவனங்களுக்கு நினைவூட்ட விழைகிறது. மேலும் இந்த அமைப்பு அரசாங்கம் தான் இச்சட்டங்களை இந்த நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோருகிறது. 100 க்கு மேல் எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யும் பொழுது தொழிலாளர் நலத்துறை அதிகாரிக்குத் தகவல் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் என்ற சட்டம் பற்றிப் பேசுகிறது.
விலை போகாத அரசு அதிகாரி என்று எவரேனும் உண்டா? இது நாள் வரை இந்நிறுவனங்கள் யாரும் எந்த இந்தியச் சட்டத்தையும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. முற்றிலுமாகத் தோற்றுப் போய் நிற்கும், முதலாளிகளின் எடுபிடியாகச் செயல்பட்டு வரும் இந்த அரசு தொழிலாளர் நலச் சட்டங்களைத் தமது புரவலர்களுக்கு ஏற்றவாறு வளைக்குமேயன்றி வேலையிழந்து வாடும் ஆயிரக்கணக்கான ஊழியர் நலனையா பேணும்?
மேலும் ITEC, இந்த நிறுவனங்கள் குவித்த இலாபம் இந்த ஊழியர்களது உழைப்பில் கிடைத்தது தானே என்று அறிவுரை சொல்கிறது.
தமது இலாப வேட்கைக்கு பல ஆயரம் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பலியிடும் இது போன்ற நிறுவனங்களிடம் இரக்கமும், அறமும் , சட்ட ரீதியான அணுகுமுறையும் எதிர்பார்த்து நிற்பது ஒரு ஏமாற்று ! சங்கத்தில் இணைந்து உரிமைகளை மீட்பதற்காக போராடுவதுதான் ஒரே மாற்று !
எழுதியவர்கள் : பிரகாஷ், ராஜா