«

»

Print this Post

ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம்

ஐ.டி துறை ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தும், ஐ.டி நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கடந்த மே மாத இறுதியில் தமிழக அரசை அறிவிக்க வைத்த பு.ஜ.தொ.மு-வின் வெற்றியைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.மு.வை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்களில் பலர் சங்கத்தில் உறுப்பினர் ஆகியுள்ளனர்.

மேலும், ஆட்டமேசன் மூலம் 2022-க்குள் 6 லட்சம் ஐ.டி ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்ற முதலாளிகள் சங்கங்களின் முன்னறிவிப்புகள் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், இந்த புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்தும், தொழிற்சங்கமாக அணிதிரள்வதன் அவசியம் குறித்தும் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவின் ஊழியர்கள் கூட்டம் சென்னை, சோழிங்கநல்லூரில் 16-07-2016 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில், ஐ.டி ஊழியர் பிரிவு உறுப்பினர்களிடையே புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றில் அடங்கியிருக்கும் அரசியல் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் பிக் டேட்டா (Big Data), ஓப்பன் சோர்ஸ் (Open Source) தொடர்பான உரைகள் நிகழ்த்தப்பட்டன.

முதலில் பிக் டேட்டா தொடர்பாக உரையாற்றிய சங்க உறுப்பினர் ராஜா, தரவுகளிலிருந்து அறிவியல் கோட்பாடுகள் உருவாவதை 17-ம் நூற்றாண்டில் கோள்களின் நகர்வுகள் தொடர்பான டைகோ பிராகேவின் அளவீடுகள், அவற்றிலிருந்து கெப்ளர் உருவாக்கிய கோள்களின் இயக்கம் தொடர்பான கோட்பாட்டு விதிகள், அந்த தரவுகளை பகுத்தாய நியூட்டன் உருவாக்கிய புள்ளிவிபர உத்திகள் ஆகியவற்றின் மூலமாக விளக்கினார். அடுத்த 3 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி இப்படி புற உலகு தொடர்பான பதிவுகளிலிருந்து கோட்பாட்டை உருவாக்குவதாக அமைந்ததையும், அதன் தொடர்ச்சியாக 1950-களில், மனித மூளை பருப்பொருட்களை உணர்ந்து கொள்ளும் நிகழ்முறையின் அடிப்படையிலான நியூரல் நெட்வொர்க் என்ற கோட்பாடு படைக்கப்பட்டதையும், அதை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான கணினி செயல்திறன் உருவான பிறகு அந்தக் கோட்பாடு கூகிள், யாஹூ போன்ற நிறுவனங்களால் பொருத்தமான முறையில் வளர்த்தெடுக்கப்பட்டு பெரு அளவிலான தரவுகளிலிருந்து பயன் தரக்கூடிய முடிவுகளை எடுக்கும் கருவிகள் உருவாக்கப்பட்டதையும் விவரித்தார். இந்தக் கருவிகள் அனைத்தும் முதன்மையாக கார்ப்பரேட் லாபத்தை பெருக்குவதற்கான விளம்பரத் துறையிலும், பொதுமக்கள் மீதான அரசுகளின் கண்காணிப்புக்காகவுமே பயன்படுத்தப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டினார்.

அதைத் தொடர்ந்து, ஓப்பன் சோர்ஸ் தொடர்பாக சங்க உறுப்பினர் குமார் ஆற்றிய உரையில், “கணினி மென்பொருள் உலகில் ஓப்பன் சோர்ஸ் என்று அழைக்கப்படும் மென்பொருட்கள் அவை உருவாக்கப்பட்ட நோக்கங்கள் தோற்கடிக்கப்பட்டு கார்ப்பரேட் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் துறையில் அறிவை பகிர்ந்து கொள்ளும், வளர்த்துச் செல்லும் ஏற்றுக் கொண்ட பொதுவான சமூக அடிப்படையிலான முறையை உடைத்து, மென் பொருள் துறையில் பில் கேட்ஸ் போன்ற முதலாளிகள் பல பில்லியன்கள் லாபத்தை குவிப்பதற்காக 1970-களின் இறுதியில் குளோஸ்ட் சோர்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முறையை எதிர்த்து ரிச்சர் ஸ்டால்மேன் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் மூலம் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கும், பயன்படுத்துபவர்களுக்கும் மூல நிரலை படிப்பது, தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது, பிறருடன் பகிர்ந்து கொள்வது போன்ற உரிமைகளை உறுதி செய்யும் வகையில் மென்பொருட்களை உருவாக்கி வெளியிடும் பாரம்பரியத்தை தொடர்வதற்கு வழிவகுத்தார். அதைத் தொடர்ந்து லினக்ஸ், ஃபயர்ஃபாக்ஸ் உட்பட பல நூறு கட்டற்ற மென்பொருட்கள் பல ஆயிரம் மென்பொருள் நிரலாளர்களால் உருவாக்கப்பட்டாலும், அவை இறுதியில் கரையான் புற்றெடுக்க பாம்பு குடிபுகுவது போல ஐ.பி.எம் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் நலனுக்கு பயன்படுவதாகவே முடிந்துள்ளது. இதற்கு மத்தியில் சீனா, இந்தியா, தென் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் பல மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள் இந்த ஓப்பன் சோர்ஸ் மென்பொருளை பயன்படுத்துகின்றன” என்று விளக்கப்பட்டது.

தொழில்நுட்ப உரைகளைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,

“இந்தியாவில் இன்று 90% தொழிலாளர்கள் அமைப்பாக்கப்படாமல் உள்ளனர். இந்தச் சூழலில் 37 லட்சம் ஊழியர்களைக் கொண்ட ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கமாக திரள்வதன் அவசியத்தை உணர்ந்தது முக்கியத்துவம் வாய்ந்ததது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு டி.சி.எஸ் நிறுவனம் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ததைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் எழுந்த இந்த உணர்வின் அடிப்படையில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொடங்கப்பட்டது.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி நிறுவனங்களுக்கும் பொருந்துமா என்று கேட்டு பு.ஜ.தொ.மு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், இது தொடர்பாக முடிவு எடுக்கும்படி நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அரசு முடிவெடுக்காமல் இழுத்தடித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பு.ஜ.தொ.மு-வின் விடாப்பிடியான முயற்சிகளுக்குப் பிறகு இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்த பிறகு தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கு பொருந்தும் என்று அறிவித்திருக்ககிறது தமிழ்நாடு அரசு.

இந்தத் தொழிலாளர் சட்டங்களின் பின்னணி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

18, 19-ம் நூற்றாண்டுகளிலேயே ஐரோப்பாவில் தொழிற்சங்க இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை விட, அவர்களை வேலையிலிருந்து நீக்கி ரிசர்வ் பட்டாளங்களை உருவாக்குவதிலேயே முதலாளி வர்க்கம் லாபம் தேடுகிறது என்பது பேராசான் மார்க்சின் கூற்று. 18 மணி நேரம், 19 மணி நேரம் வேலை என்ற கடுமையான சுரண்டலை எதிர்த்த போராட்டங்களைத் தொடர்ந்து 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்பதை தொழிலாளி வர்க்கம் தனது போராட்ட முழக்கமாக எடுத்துக் கொண்டது. அதன் அடிப்படையில் நடந்த கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து பல நாடுகளில் வேலை நேரத்தை வரையறுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இ8-hours-workந்தக் கட்டத்திலிருந்தே தொழிற்சங்க இயக்கத்தில் இரண்டு முக்கியமான போக்குகள் ஆரம்பித்து தொடர்ந்து வருகின்றன. ‘8 மணி நேர வேலை அதற்கான ஊதியம் என்பதோடு தொழிற்சங்க நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள வேண்டும். எஞ்சிய நேரத்தில் என்ன செய்வது என்பது தொழிலாளர்களின் சொந்த விஷயம்’ என்ற தொழிற்சங்கவாத போக்கு ஒரு புறம். 8 மணி நேரம் ஓய்வு என்ற பகுதியில் தொழிலாளி வர்க்கத்தை பாதிக்கும் சமூக விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், அவற்றை எதிர்த்து போராடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்ற போக்கு மறுபுறம்.

உதாரணமாக, தற்போது தமிழக அரசு பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவுக்கு எழுதிய கடிதத்தில் ‘ஐ.டி துறைக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்துமா என்ற கேள்விக்கே இடமில்லை. அவை எப்போதுமே அமலில்தான் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. உண்மைதான். அப்படியானால், 2014-ம் ஆண்டு இறுதியில் டி.சி.எஸ் நிறுவனம் சட்டங்களுக்கு விரோதமாக 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்த போது அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், அதுதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கை. இத்தகைய கொள்கைகள் தொழிலாளர்களை நேரடியாக பாதிக்கின்றன. இது போல கல்வி தனியார் மயமாக்கும் முடிவு தொழிலாளர் வர்க்கத்தை பாதிக்கிறது. போராடி பெறும் சம்பள உயர்வு சட்டைப் பையிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டு முதலாளிகளின் பைக்கு மாற்றப்பட்டு விடுகிறது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராடாமல் தொழிலாளர் தமது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள முடியாது.

8-hours-workஆசியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் 1918-ல் பின்னி மில்லில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற பெயரில் தொடங்கப்பட்டது ஆகும். முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராணுவத்துக்குத் தேவையான துணியை உற்பத்தி செய்வதற்காக தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்பட்டனர். தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட போதுமான நேரம் கொடுக்காமல் வேலை வாங்கப்பட்டனர். அதை எதிர்த்து கேட்டால் ராஜ துரோகம் என்று அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அதை எதிர்த்து தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடினர். 1921-ல் இந்தியாவிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் சென்னையில் நடத்தப்பட்டது. இவற்றைத் தொடர்ந்துதான் 1926-ல் தொழிற்சங்க சட்டம் காலனிய ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டது. இவ்வாறு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை என்பது காலனி ஆட்சியின் போதே இந்தியத் தொழிலாளர்கள் போராடி பெற்றுக் கொண்ட ஒன்றாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது தொழிலாளர் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. தமக்கான உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று மான்செஸ்டர், லங்காஷயர் தொழிலதிபர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இதை முறைப்படுத்த வைத்தனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடைமுறைகளை வகுப்பதற்காக 1947 மார்ச் மாதம் தொழில்தகராறு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த காலனிய சட்டங்களின் தொடர்ச்சியாகவே 1950-ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவில் அமைப்பாக திரளும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, உயிர் வாழும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட மத்திய சட்டங்களும், நூற்றுக்கணக்கான மாநில சட்டங்களும் தொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பாக இயற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டங்கள் எல்லாம் தொழிலாளர் போராட்டங்களை தவிர்ப்பதற்கான சேஃப்டி வால்வ் ஆகவே கொண்டு வரப்பட்டன. தொழிலாளர்கள் பிரஷர் குக்கரில் வெந்து கொண்டிருக்கும் போது நிலைமை தாங்க முடியாமல் போகும் போது அவர்கள் மீதான அழுத்தத்தை சிறிதளவு குறைப்பதற்கான வழியாகவே இந்த சட்டங்கள் ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டன. இவற்றை அந்த அளவில் மட்டும் நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். நமது வாழ்க்கையை தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து போராடுவதற்கான ஒரு கருவியாக இந்த சட்டங்கள் வழங்கும் உரிமைகளை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாகவே உரிமைகளை தக்க வைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் நிரந்தர விடுதலையை சாதிக்க முடியும்.

ஐ.டி துறையில் ஆட்டோமேஷன் வருகிறது, 2020-க்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது ஐ.டி துறையில் மட்டுமின்றி வாகன உற்பத்தித் துறையிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரிய நாட்டு நிறுவனமான ஹூண்டாய் அந்த நாட்டு மேலாளர்களை தனது சப்ளையர் நிறுவனங்களுக்கு அனுப்பி தானியங்கி எந்திரங்களை நிறுவுகிறது. வேலை இழக்கப் போகும் தொழிலாளர்களைக் கொண்டே அந்த எந்திரங்களை நிறுவும் வேலையை செய்விக்கிறது.

பொதுவாக சூழ்நிலை பாதிக்கப்படும் போது ஒரு பிரமிடின் மேல்பகுதிதான் முதலில் விழும், ஆனால் இங்கு மட்டும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் மேல்தட்டு மேலாளர்கள் பாதிக்கப்படாமல், பிரமிடின் அடித்தளத்தில் உள்ள ஊழியர்கள் பலி கொடுக்கப்படுகின்றனர். புதிய தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் வந்தால் ஏன் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்? ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து புதிய வேலையில் ஏன் ஈடுபடுத்த முடியாது?

ஆனால், லாபத்தையே குறிக்கோளாக செயல்படும் கார்ப்பரேட் நிர்வாகம், 80,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு பயிற்சி அளித்து ஊதியத்தை உயர்த்தி புதிய பணியில் அமர்த்துவதை விட அவரை தூக்கி எறிந்து விட்டு 20,000 சம்பளத்தில் 5 புதிய இளம் பட்டதாரிகளை எடுத்து வேலை வாங்குவதுதான் லாபகரமானது என்று கணக்கு போடுகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி லாபவேட்டையை நோக்கமாகக் கொண்டவர்கள் கையில் இருக்கும் போது இப்படித்தான் நடைபெறும். இதன்படி ஒரு ஊழியர் வயதாகும் போது அவரை தேவையற்றவராக கருதுவது நடைமுறையாகி இருக்கிறது.

ஐ.டி துறையில் உள்ள பலர் 40 வயதை நெருங்கும் போது பலவிதமான மனநல பிரச்சனைகளுக்கு உள்ளாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் மனநல மருத்துவர்களை நாடுபவர்களில் 10-க்கு 7 பேர் ஐ.டி துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். பிரச்சனைகளை தனியாக எதிர் கொள்ள நேரிடுவது, அதை நினைத்து மனதை வருத்திக் கொள்வது இதற்குக் காரணமாக உள்ளது. அமைப்பாக திரண்டு யூனியனின் பின்புலம் இருக்கும் போது எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ளலாம் என்ற தைரியத்தை கொடுக்கிறது.

ஒரு தொழிற்சாலையில் வேலை நிறுத்தம் என்றால் அந்தத் தொழிற்சாலைக்கு மட்டும்தான் பாதிப்பு. ஆனால், ஐ.டி ஊழியர்கள் அமைப்பாக திரண்டால், அவர்களது பலம் உலகத்தையே ஆட்டுவிப்பதாக இருக்கும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 முதல் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் நலனில் முழுமையான உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவதால் அவர்களது நலன்களை நிலைநாட்டுவதில் உறுதியுடன் நிற்கிறது. ஐ.டி ஊழியர்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பாக தொழிலாளர் துறையில் வழக்கு தொடரவும், நீதிமன்றத்தில் தடையாணை வாங்கவும் தொழிற்சங்கம் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம்.

அப்ரைசல் முறை, வேலை நேரத்தை முறைப்படுத்துவது முதலான உரிமைகளை நிலைநாட்டுவதற்கு சட்டரீதியாகவும், அமைப்புரீதியாகவும் போராடுவதற்கு பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு செயலாற்றி வருகிறது. ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் அமைப்பாக திரட்டி வலுப்படுத்துவதை நோக்கி பணியாற்றி வருகிறது.

கூட்டத்தில், பல ஐ.டி ஊழியர்கள் முதல்முறையாக கலந்து கொண்டனர். பிக் டேட்டா தொழில்நுட்ப உரைகளு, யூனியன் அமைப்பது பற்றிய தோழர் விஜயகுமாரின் விரிவான உரையும் பல புதிய விஷயங்களை தெரிவிப்பதாக அமைந்தன என்று கருத்து தெரிவித்தனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-wing-hall-meeting-ta/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
காக்னிசன்ட் (CTS) கட்டாயப் பணி நீக்கத்தைத் தடுப்போம்

நண்பர்களே, நமது சக ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து சங்கமாக திரண்டு குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும்...

இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்

தகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook (கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67) படங்களைப்...

Close