ஐ.டி துறை நண்பர்களே – ஆட்குறைப்புக்கு எதிராக போர்முரசு கொட்டுவோம்!

ன்பார்ந்த ஐ.டி/ஐ.டி.சேவைத் துறை நண்பர்களே

கடந்த சில மாதங்களாக நம்மீது தொடுக்கப்பட்டு வரும் ஆட்குறைப்பு/கட்டாய பதவிவிலகல் தாக்குதல் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. காக்னிசன்ட் 10,000-க்கும் அதிகமான ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது என்றும் விப்ரோ 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்து அமல்படுத்தி வருகிறது என்றும் இன்னும் டெக் மகிந்த்ரா, கேப் ஜெமினி, இன்ஃபோசிஸ், எச்.சி.எல், டி.எக்ஸ்.சி என்றும் ஆட்குறைப்பு செய்திகள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த 7 முன்னணி நிறுவனங்களில் மட்டும் மொத்தம் 56,000 ஊழியர்கள் வேலை இழக்கப் போவதாக லைவ்மின்ட் பத்திரிகை மதிப்பீடு வெளியிட்டுள்ளது.

வேலை இழந்த ஊழியர்கள் அடுத்து என்ன செய்வது என்று தவிக்கின்றனர். இன்னும் வேலையில் இருக்கும் ஊழியர்களோ நாம் எப்பொழுது வேலையை விட்டு விரட்டப்படுவோமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அதாவது, இந்தத் துறையில் பணிபுரியும் யாருக்கும் வேலை பாதுகாப்பு இல்லை, வேலைச் சுமை அதிகரிப்பை எதிர்கொள்ளும் வழியும் இல்லை என்பது உண்மை.

இந்நிலையில் கார்ப்பரேட்டுகள் தமது லாப வீதத்தை அதிகரிக்க ஆட்டமேஷன், வேலைச்சுமையை அதிகரிப்பது, அனுபவம் மிக்க ஊழியர்களை விலக்கி விட்டு குறைந்த சம்பளத்தில் ஆள் எடுத்தல் என்று அடுத்தடுத்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றன.

இந்த வகையில் ஐ.டி/ஐ.டிசேவைத் துறை கார்ப்பரேட்டுகளுக்கும் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகள், ஓட்டுக்கு நோட்டு, பொய் பிரச்சாரம், மக்களை தந்திரமாக பிரித்து ஓட்டு சேகரிப்பது என ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்த பிறகு மக்களை புறக்கணித்து நாயினும் கீழாக நடத்துகின்றனர், அரசியல்வாதிகள். கார்ப்பரேட்டுகளோ வேலையில் இருக்கும் வரை ‘டீம்-ஸ்பிரிட்’, ‘ஆன்-சைட்’, ‘இது உங்க கம்பெனி போல’, ‘நல்லா உழைச்சா நல்ல எதிர்காலம்’, ‘அப்ரைசல் ரேட்டிங்’, என்றெல்லாம் பேசி வேலை வாங்குகின்றனர்; அலுவலக அரசியல் செய்கின்றனர். நமது உழைப்பை பயன்படுத்தி லாபத்தை குவிக்கின்றனர். தேவை தீர்ந்ததும் ‘non-performer’ என்று முத்திரை குத்தி அவமானப்படுத்தி தூக்கி எறிகின்றனர்.

இத்தகைய கீழ்த்தரமானவர்களின் அடக்குமுறைக்கு நாம் அடிபணியப் போகிறோமா அல்லது எதிர்த்து போராடப் போகிறோமா என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி.

எப்படி எதிர்த்து போராடுவது? பல பில்லியன் டாலர் வருமானம் பார்க்கும், பல பில்லியன் டாலர் லாபம் ஈட்டும், சி.ஈ.ஓ முதல் கீழ்நிலை எச்.ஆர் வரை வலுவான நிறுவன அமைப்பு, அதற்கான விரிவான விதிமுறைகள் என செயல்படும் காக்னிசன்ட் அல்லது விப்ரோ அல்லது டி.சி.எஸ்-ஐ அடுத்த மாத சம்பளத்தை நம்பி குடும்பப் பொறுப்புகளை தாங்கும் நாம் தனித்தனியாக எதிர் கொள்ள முடியுமா? அத்தகைய நிறுவனத்தின் சார்பாக நம்மை அழைத்து மிரட்டும், நமது பாதுகாப்பின்மையை பயன்படுத்தி துன்புறுத்தும் எச்.ஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்? தமக்கென்று நாஸ்காம் என்ற அமைப்பை உருவாக்கி வைத்து ஊழியர்களை மிரட்டி நெருக்கும் நிறுவனங்களை எப்படி கையாள முடியும்?

அதற்குத் தேவையானது ஐ.டி ஊழியர்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.டி ஊழியர்கள் அனைவரையும் அணிதிரட்டிய தொழிற்சங்கம். தொழிற்சங்கம் என்பது பணியிடத்தில் ஊழியர்களின் உரிமைகளை உறுதி செய்யும் அமைப்பு. ஊழியர்களின் பிரதிநிதியாக எச்.ஆர்-ஐ எதிர்கொள்வதற்கான அமைப்பு. அப்படிப்பட்ட அமைப்பாக அணிதிரள்வதுதான் எச்.ஆர் அநாகரிகங்களை ஒழித்துக் கட்டி ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான ஒரே வழி.

போக்குவரத்துத் தொழிலாளர்களும், வங்கி ஊழியர்களும், ஆலைத் தொழிலாளர்களும் இத்தகைய சங்கமாக திரண்டுதான் தமது பணிப் பாதுகாப்பையும், பணியிட உரிமைகளையும் உறுதி செய்து கொள்கின்றனர். அவர்களது உழைப்பில்தான் பேருந்துகள் ஓடுகின்றன, வங்கிகள் இயங்குகின்றன, உற்பத்தி நடக்கிறது. அது போல தகவல் தொழில்நுட்ப உலகை இயக்கும் ஐ.டி ஊழியர்களான நாமும் சங்கமாக திரள்வதுதான் சரியான தீர்வு. தொழிற்சங்க உரிமை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உலகெங்கும் போராடி வென்றெடுத்த வரலாற்று உரிமை; நமது அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை; தொழிலாளர் சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட ரீதியான உரிமை.

ஆனால், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை விலையில் நிலம், மின்சாரம், வரி தள்ளுபடி என்று வாரி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் சட்ட விரோதமாக ஆட்குறைப்பு செய்து ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தும், வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டும் ஐ.டி நிறுவனங்களின் நடத்தையை கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கின்றன.

தொழிற்சங்க உரிமையை பயன்படுத்தி சக ஊழியர்களுடன் ஒற்றுமையாக ஒரு அமைப்பாக திரளும் போதுதான் நாடு முழுவதும் இந்த கார்ப்பரேட்டு லாப வேட்டையினால் அழியும் வாழ்வாதாரங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும், கார்ப்பரேட்டுகளுக்கு வால்பிடிக்கும் அரசுக் கட்டமைப்புக்கும் எதிராகவும் போராடி வரும் மாணவர்களுடனும், மீனவர்களுடனும், விவசாயிகளுடனும், தொழிலாளர்களுடனும் நாம் கைகோர்க்க முடியும். கார்ப்பரேட் ஆதிக்கத்துக்கு எதிரான புதிய சுதந்திரப் போராட்டத்தை கட்டியமைக்க முடியும்.

அத்தகைய தொழிற்சங்கமாக அணிதிரளவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் உறுதி கொள்வோம். நமக்கு பாதிப்பு இல்லை அதனால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று நினைக்க முடியுமா? இன்றைக்கு துரத்தப்படும் ஊழியர்களின் பணிச்சுமையை யார் இனிமேல் தாங்குவது? பணியில் உள்ளவர்கள்தானே தாங்கவேண்டும். ஏற்கனவே 12 மணி நேரம் பணியாற்றும் நாம் இந்த வேலைபறிப்புகளுக்குப் பிறகு எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கும்? நாளை நிறுவனத்தின் பார்வை நம் மீது விழும்போது நமக்கும் இதே நிலைமைதான். இன்றைக்கு சக ஊழியரின் வாழ்க்கை பறிபோகும்போது நாம் துணை நிற்காமல் வேறு யார் நிற்பார்கள்.

ஐ.டி துறை ஆட்குறைப்பு/கட்டாய பணிவிலகல்களை கண்டித்தும் தொழிற்சங்கமாக அணிதிரள்வதற்கு அறைகூவியும்

ஆர்ப்பாட்டம்

நாள் : மே 18-ம் தேதி வியாழக்கிழமை
இடம் : சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில்
நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை

மத்திய மாநில அரசுகளே!

  • காக்னிசன்ட், விப்ரோ மற்றும் பிற ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்து!
  • ஐ.டி நிறுவனங்களில் கட்டாய பணிவிலகல்கள் மூலம் ஆட்குறைப்பு பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடு!

விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, கேப்ஜெமினி நிறுவனங்களே!

  • பல்வேறு பெயர்களில் மோசடியாக செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்து!
  • கட்டாய பணிவிலகல் கடிதம் வாங்கப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்!
  • அப்ரைசல் என்ற மோசடி பணிமதிப்பீட்டு முறையை ரத்து செய்!

ஐ.டி/ஐ.டி சேவை துறை ஊழியர்களே!

  • சட்ட விரோத, நியாயமற்ற, தொழில்முறையற்ற ஆட்குறைப்புக்கு எதிராக அணிதிரள்வோம்!
  • அப்ரைசல் முறையை ஒழித்துக் கட்டி தொழிற்சங்கம் மூலம் ஜனநாயகமான, ஆரோக்கியமான பணியிட சூழலை உருவாக்குவோம்!

உழைக்கும் மக்களே!

  • மறுகாலனியாக்க தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஐ.டி துறை ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்போம்!
  • கார்ப்பரேட்டுகளுக்கும் கார்ப்பரேட் அரசுக்கும் எதிராக மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்கு அணி திரள்வோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-friends-take-up-cudgels-against-forced-resignations-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் : உரிமைக்கான போராட்டம்

இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. "நாங்கள் எந்தவொரு மருத்துவத் திட்டத்தின்கீழும் வருவதில்லை" என்ற அவர் "மொத்த தபால் ஊழியர்களின் எண்ணிக்கையில்...

சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1

மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் மட்டும் போடுவார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் யாரெல்லாம் மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுகிறார்களோ அவர்களிடமே...

Close