ஐ.டி வேலையும், தொழிற்சங்க உரிமையும் – ஒரு உரையாடல்

தோ ஒரு முதலாளியின் லாபத்துக்காக 8 வழிச்சாலை போடவேண்டும் என்று அடாவடியாக பல்லாயிரக்கணக்கான விவசாயகளின் நிலங்களை திடீரென்று பிடுங்கி வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்குவதை போல ஐ.டி நிறுவனங்களிலும் அவர்களின் லாபத்தை அதிகரிக்கவும், தலைமை அதிகாரிகளின் சம்பளத்தை கொட்டிக்கொடுக்கவும் ஊழியர்களின் வேலை திடீரென்று பறிக்கப்படுகிறது.

சமீபத்தில் டெக் மஹேந்திரா நிறுவனத்தில் நடந்த பல்லாயிர கணக்கான ஊழியர்களை கட்டாய வேலை நீக்கம் செய்ததை கண்டித்தும் அது எவ்வாறு விவசாய மக்களோடு ஒத்துப்போகிறது என்று விளக்கியும், ஐ.டி ஊழியர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக எழுதப்பட்ட பிரசுரத்தை ஐ.டி ஊழியர்களிடம் விநியோகம் செய்தோம்.

மாலை 5 மணி இருக்கும். ஐ.டி ஊழியர்கள் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு வேகவேகமாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள். “ஐ.டி யூனியனில் இருந்து வந்திருக்கிறோம் இந்த பிரசுரத்தை வாங்கி படியுங்கள்” என்று ஒவ்வொருவரிடமும் சொல்லி பிரசுர விநியோகம் செய்தோம்.

அதிலும் ID card மாட்டிக்கொண்டு வரும் ஊழியர்களிடம் கண்டிப்பாக இந்த பிரசுரத்தை விநியோகம் செய்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து பலரிடம் தோற்றுப் போனாலும் எந்தவித தளர்வும் இன்றி தொடர்ச்சியாக விநியோகம் செய்தோம். திடீரென்று மழை வர ஆரம்பித்துவிட்டது ஓரமாக சென்று நின்று கொண்டிருந்தோம் அப்போது விநியோகம் செய்த பிரசுரத்தை ஆர்வமாக ஐ.டி ஊழியர் படித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

கேள்வி 1 :

“பிரசுரம் படித்தீர்களா எப்படி இருக்கிறது உங்களுடைய கருத்து”
“இன்னும் நிறைய படித்தால்தான் புரியும், சங்க இணைய முகவரியில் படிக்கிறேன் அதன் பிறகு என்னுடைய கருத்தை சொல்கிறேன்”

“இந்த பிரசுரத்தை படித்ததும் என்ன தோன்றுகிறது?”
“யூனியன் இருப்பது பாதுகாப்பாகத்தான் தோன்றுகிறது, எல்லோருக்குமே இது பயனுள்ளதாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லணும்னா சீனியர் ஊழியர்களுக்கு பயனுள்ளதாகத்தான் இருக்கும். பொருளாதார மற்றும் குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்கிறவர்களுக்கு பாதுகாப்பாகத்தான் இருக்கும். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாததால் சங்க இணையத்தை பார்த்தாதான் தெரியும்.”

“இன்றைய ஆரம்ப கட்ட ஊழியர்கள் நாளைய சீனியர் ஆவார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள், சீனியர் ஆனபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சுயநலமாக யோசித்தால் நிறுவனமும் ஊழியர்களை சுயலாபத்துக்கு வெளியேற்றுவதை தடுக்க முடியாது” என்று சொன்னோம்.

“இந்த பிரசுரம் கேள்வி பதில் வடிவத்தில் இருக்கு” என்றார்.

“ஆமாம் நண்பரே, ஐ.டி ஊழியர்கள் பல்வேறு கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்லும் வகையிலும் அதை புரிந்துகொண்டு சங்கத்தில் இணைவதற்காகவே எழுதப்பட்டது” என்றோம்

கேள்வி 2 :

“உங்களுக்கு இதை படித்து உங்களுக்குள் இருக்கும் கேள்விக்கு பதில் கிடைத்ததா?”

“கட்டாய வேலை நீக்கம் பற்றித்தான் எல்லோருக்கும்போல எனக்கும் பதில் கிடைத்தது போல இருக்கிறது. ஆனால் ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் தான் நன்றாக படிக்க வேண்டும் தன்னுடைய வேலைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிட கூடாது என்றுதான் நினைக்கிறார்கள்.

“பெரும்பான்மை மக்கள் அப்படிதான் நினைப்பார்கள்.தன்கூட வேலை பார்க்கும் நபரை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள் எனும்போது நம்மையும் ஒருநாள் வேலையை விட்டு வெளியே அனுப்புவார்கள் என்ற பயம் வரவேண்டும். அந்த பயத்தை கருதி சங்கத்தில் சேர்வது.”

கேள்வி 3 :

“அரசியலையும் இணைத்து கொண்டு சென்றுள்ளீர்கள் பாராளுமன்றத்தையும் கேள்வி கேட்டுள்ளீர்கள்.” என்று கேள்வி எழுப்பினார்.

“பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் உதாரணமாக வெரிசான், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களில் சமீப காலத்தில் கொத்துக்கொத்தாக ஊழியர்களை கட்டாய வேலை நீக்கம் செய்தாலும் அரசு கேள்வி கேட்காமல் இருக்கிறது. சட்டத்தை மதிக்காமல் நிறுவனம் நடந்துகொள்வதை அமைச்சர்கள் எதிர்த்து பேசுவதில்லை. அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. சட்டத்த்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றவேண்டியது அரசின் கடமையல்லவா, அதை அவர்கள் செய்யாதபோது அவர்களை கேள்விகேட்காமல் விட்டுவிடுவது எந்தவிதத்தில் நியாயம். ஊழியர்களின் பிரச்சனைகளை சரிசெய்வதற்காக நேர்மையாக போராடும் சங்கம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்”.

கேள்வி 4 :

“ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் பொருந்தாது என்று சொல்கிறார்களே?”

“2015-க்கு முன்னாடி வரைக்கும் ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பிறகு பு.ஜெ.தொ.மு தொடுத்த வழக்கில் தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. எனவே ஐ.டி ஊழியர்கள் நிறுவனத்தின் லாபத்தில், நிறுவனத்தின் முடிவுகளை மாற்றுவதில் எந்தவித அதிகாரமும் இல்லாமல் உழைப்புக்கு ஊதியம் வாங்குவதால் அவர்களும் தொழிலாளர்களே என்று பதில் சொல்லியிருப்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.

ஐ.டி ஊழியர்களுக்கும் சங்கம் வைக்கும் உரிமை உள்ளது என்று பிரச்சாரம் செய்து பு.ஜெ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வெற்றிகரமாக ஊழியர்களின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய போராடி வருகிறது. நிறுவனங்கள் எப்போதும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை விட அவர்களின் லாபம்தான் முக்கியம் என்பதால் தொழிலாளர் நலச் சட்டங்கள் ஐ.டி ஊழியர்களுக்கு பொருந்தாது என்று நிறுவனம் சொல்வதில் எந்தவித வியப்புமில்லை. தொழிலாளர்களாய் நாம் ஒன்று சேர்ந்து நமது வேலை பாதுகாப்பை சங்கம் மூலமாக உறுதி செய்வதை தவிர வேறேதும் கற்பனையாகவே நினைக்க முடியும். ஒருவேளை அவ்வாறு தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது என்று வாதிட்டால் சட்டங்களை மீறும் நிறுவனமாக கருதப்படும் தவிர நியாயமான விதிமுறையாக ஏற்றுக்கொள்ள போவதில்லை.”

கேள்வி 4 :

“பணி நியமனத்துக்கான கடிதத்தில் விதிமுறைகளின் படி எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு அனுப்புவோம், சங்கத்தில் சேரக்கூடாது என்று இருக்கும் பணி நியமனத்துக்கான கடிதத்தில் கையெழுத்து போட்டிருக்கும்போது என்ன செய்வது?”

“சங்கத்தில் சேர்வதும் அதில் பங்காற்றுவதும் அடிப்படை உரிமை, அதை எந்த நிறுவனமும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்பதே உண்மை. அதைத்தான் நமது சட்டங்கள் சர்வதேச சட்டங்கள் சொல்கின்றன, ஆனால் அந்த சட்டங்களையெல்லாம் மீறிய விதிமுறைகளை நிறுவனம் பணி நியமன கடிதத்தில் பதிவு செய்து ஊழியர்களிடம் கையொப்பம் வாங்கியிருக்கும் பட்சத்தில் அந்த ஒப்பந்தம் செல்லாது என்பதே உண்மை. இந்த பிரச்சனையை சந்திக்கும் ஊழியர்கள் சங்கத்தில் இனைந்து வழக்கு தொடுக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் அராஜகமான ஒப்பந்தங்களை கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதே உண்மை.”

“உங்க கூட பேசினது ரொம்ப சந்தோஷம் என்னுடைய நண்பர்களிடம் இதைப்பற்றி விசாரிக்கிறேன் , சங்க இணையதளத்தையும் படித்து பார்த்து கருத்துக்களை கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார். மழையும் கொஞ்சகொஞ்சமாக நின்றுவிட்டது, ஐ.டி ஊழியர்களும் அன்றைய வேலையை விட்டு வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள்

மீண்டும் சங்க பிரசுரத்தை விநியோகம் செய்ய ஆரம்பித்தோம்.

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-and-union-rights-a-dialogue/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சங்கத்தை வலுப்படுத்துவோம், ஒப்பந்த ஊழியர்களை ஆதரிப்போம், விவசாயிகளுக்கு துணை நிற்போம் – ஐ.டி சங்கக் கூட்டம்

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு அறைக்கூட்டம்நா ள் : சனிக்கிழமை ஜூலை 15, 2017 நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை...

ஐ.பி.எல்-ம் தமிழகத்தின் காவிரி உரிமையும் – என்ன தொடர்பு?

இழவு வீட்டில் ஐ.பி.எல் கொண்டாடுவது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டை இழவு வீடாக்கி விட்டு அந்தப் பணத்தையும் மூலதனமாக போட்டு நடத்தப்படும் சூதாட்ட ஐ.பி.எல்-ஐ எதிர்க்க வேண்டும் என்பதுதான்...

Close