- டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராக
- மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்
- ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்
- ஆள் குறைப்பு அறமாகாது – ஜூனியர் விகடன்!
- ஆட்குறைப்புக்கு எதிராக தொழில்தாவா தயாரிப்பு – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு
- “ஆட்குறைப்பு இல்லை, திறமை குறைவுதான்” – நாஸ்காம், “அரசு தலையிட வேண்டும்” – பு.ஜ.தொ.மு : விவாதம்
- புகார் கொடுத்த சி.டி.எஸ் ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கவும் – தொழிலாளர் துறை
ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியிருக்கும் ஐ.டி துறை ஆட்குறைப்புகள் பற்றிய கட்டுரை
சில முக்கிய பகுதிகள்
நேற்று வரை தூண், இன்று தூக்கி எறியப்படுதல்
“இப்போது, `டாப் 10’ ஐ.டி நிறுவனங்கள் அனைத்தும் ஆள்குறைப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதையும் முறைப்படி செய்யாமல், `லே ஆஃப்’ என்ற பெயரில் செய்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவரும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களாகப் பார்த்து தூக்குகிறார்கள். இதுதான் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.”
‘‘கடந்த மாதம் வரை, `நிறுவனத்தின் தூண்’ எனக் கொண்டாடப்பட்டவர்கள், சிறந்த ஊழியருக்கான விருது பெற்றவர்களை, `உங்கள் பணித்திறன் சரியில்லை’ எனக் கூறி, ராஜினாமா கடிதம் கேட்கிறார்கள். அப்படி செய்ய மறுக்கும் ஊழியர்களை, `பிளாக் லிஸ்ட் செய்து எதிர்காலத்தைக் கெடுத்துவிடுவோம்’ என மிரட்டுகிறார்கள்.
“நாஸ்காம் அறிக்கைப்படி, 10 லட்சம் பொறியாளர்களையும் சேர்த்து, சுமார் 62 லட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் ஐ.டி துறையில் பணிபுரியும் தகுதியோடு உருவாகி வருகிறார்கள். ஆனால், கடந்த ஐந்து வருடங்களில் ஐ.டி துறையில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள், வெறும் 11 லட்சம்தான். லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கவில்லை. 10 பேர் தேவைப்படும் நேர்காணல்களுக்கு 100 பேர் குவிகிறார்கள். இதனை நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.”
“10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் கொடுப்பதற்குப் பதிலாக, அவரை அனுப்பிவிட்டு 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆறு பேரைப் பணியமர்த்த நினைக்கிறார்கள். அதற்காகத்தான், இப்போது ஹையர் கிரேடில் இருக்கும் ஊழியர்களைத் தேர்வுசெய்து வெளியேற்றுகிறார்கள்.”
முதலீட்டாளர்களின் கரங்களில் ஐ.டி நிறுவனங்கள்
“தவிர, ஐ.டி நிறுவனங்கள் இப்போது முதலீட்டாளர்களின் கரங்களுக்குச் சென்றுவிட்டன. அவர்களுக்கு லாபத்தைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் இல்லை. காக்னிசென்ட் நிறுவனத்தின் ஐந்து சதவிகிதப் பங்குகளை அமெரிக்க நிதி முதலீட்டு நிறுவனமான `எலியட்’ (Elliot), 1.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது. வாங்கிய உடனே, காக்னிசென்ட் நிறுவனத்தின் இயல்பான மார்ஜின் 18.5 சதவிகிதத்தை 21 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்று நிர்பந்தித்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் அந்த நிறுவனம் ஆள்குறைப்பில் இறங்கியிருக்கிறது.”
லே ஆஃப் செய்ய முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?
`லே ஆஃப்’ என்ற பெயரில் ஓர் ஊழியரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப முடியுமா? “நிச்சயமாக முடியாது” என்கிறார் வழக்கறிஞர் பர்வீன்பானு. “லே ஆஃப் என்பது, ஒரு தற்காலிக ஏற்பாடு. போதிய அளவுக்கு வேலை இல்லை என்ற சூழலில் ஊழியரை ஒரு வருடத்தில் 45 நாள்களுக்கு மட்டும் `லே ஆஃப்’ செய்யலாம். அந்தக் காலகட்டத்தில் அந்த ஊழியர், அலுவலகத்துக்கு வர வேண்டும். 50 சதவிகிதச் சம்பளமும், 50 சதவிகித அலவன்ஸும் அவருக்கு வழங்க வேண்டும். 45 நாள்களுக்குள் திரும்பவும் பணி வழங்க வேண்டும். `உற்பத்தி குறைந்துவிட்டது. இவ்வளவு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாது’ என்று நிறுவனம், `ரெட்ரென்ச்மென்ட்’ என்ற அடிப்படையில் ஆள்குறைப்பு செய்யலாம். ஆனால், இஷ்டத்துக்கு எல்லோரையும் நீக்க முடியாது. கடைசியாக நிறுவனத்தில் இணைந்தவர்கள் யாரோ, அவர்களிலிருந்துதான் ஆள்குறைப்பைத் தொடங்க வேண்டும். அதற்கும் அரசிடம் முறைப்படி தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.
டெர்மினேஷன் செய்ய முடியுமா?
ஒருவேளை கட்டாயப்படுத்தி டிஸ்மிஸ் செய்து ஊழியர்களை வெளியேற்றினால், அதற்கும் வழிமுறை இருக்கிறது. ஊழியருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் தரவேண்டும். அதற்கு, ஊழியர் தரும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில், சார்ஜ் ஷீட் போட்டு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்காகவும் வேலையைவிட்டு அனுப்ப முடியாது.
உழைப்பை மதியுங்கள்
பத்து ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, ஒரு உயர்ந்த நிலைக்குச் செல்வதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அபரிமிதமானது. குடும்ப நிலை, குழந்தைகளின் எதிர்காலம் என ஒருவரைச் சுற்றி பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இரவு, பகல் பாராமல் உழைத்துத் தேய்ந்தவர்களைத் திடீரென `வேலையைவிட்டு வெளியேறு’ எனச் சொல்வது எந்தவிதத்திலும் அறமாகாது. அரசு இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.