- ஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – பாகம் II
என் பெயர் சியாம் சுந்தர். நான் இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களுள் ஒன்றில் பணிபுரிகிறேன். நான் ஐ.டி துறையில் 21 ஆண்டுகளாகவும், தற்போது பணிபுரியும்நிறுவனத்தில் 17 ஆண்டுகளாகவும் வேலை செய்துவருகிறேன். எனக்கு USA, UK, Switzerland, United Arab Emirates, Malaysia and South Africa போன்ற நாடுகளில் வேலை செய்த அனுபவமும் உள்ளது.
நான் சென்ற வருடம் NDLF IT Employees wing இல் சேர்ந்தேன். ஐ.டி நிறுவனங்களில், ஐ.டி ஊழியர்கள் ஆட்குறைப்புக்கு (Lay-off) உள்ளாக்கப்படுவதையும், அதை சட்டபூர்வமாக எதிர்கொள்வது பற்றியும், “ ஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா ” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். இந்த தொடர் கட்டுரை ஆங்கிலம் மற்றும் தமிழில் நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பின்பு அது மின் நூல் ஆகவும், அச்சு புத்தக வடிவிலும் வெளி வந்துள்ளது.
முதல் பாகத்தில், ஐ.டி ஊழியர்கள் எவ்வாறு நுண் திறமை (soft skills) மூலமும், அடிப்படை சட்டத்திட்டங்களின் விழிப்புணர்வு மூலமும் லே-ஆஃப் இலிருந்து தற்காத்துக் கொள்வது என்று எழுதி இருந்தேன். தொடக்கத்தில் முழுமையான சட்டரீதியான உரிமைகளைப் பற்றியும், சட்ட நுணுக்கங்களை பற்றியும் பேச சற்று தயக்கம் இருந்தது.
கடந்த ஒரு வருடத்தில், லே-ஆப்-னால் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் திடீர் வேலை இழப்பை எப்படி எதிர்கொண்டனர்?
படித்த இளைஞர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு, மற்ற துறைகளைக் காட்டிலும் அதிகமான சம்பளம், வெளிநாட்டு வாய்ப்பு, வசதியான வாழ்க்கை தரம் போன்றவை இந்த துறையின் கவர்ச்சியான அம்சங்கள். அதனால், பிறவி குருடரைகாட்டிலும் இடையில் பார்வை இழந்தவர் அதிக பாதிப்புக்கு உள்ளாவது போல, நல்ல சம்பளம் வசதியான வாழ்க்கை என்று வாழ ஆரம்பித்த பிறகு வேலை இழப்பு என்ற ஒன்று ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம்.
துர்கா பிரசாத் என்பவரின் தற்கொலை பற்றி எனது தொடர் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற தற்கொலைகள் IT துறையில் பெருகிக் கொண்டே வருவது துரதிஷ்டவசமானது. சமீபத்தில் நிகழ்ந்த, கண்ட கிருஷ்ணா சைதன்யா என்பவரின் மறைவு என்னை மிகவும் பாதித்தது.
தற்கொலை செய்தியை பார்த்த உடனேயே பலரும் பலவிதமான வாதங்களை தற்கொலை முயற்சிக்கு எதிராக வைக்கிறார்கள். அது கோழைத்தனமான முடிவு என்றுசொல்லி தற்கொலை செய்து கொண்ட பாதிக்கப்பட்டவரை திட்டி தீர்த்துவிடுகிறார்கள். நன்கு படித்து, நல்ல வருமானம் ஈட்டும் பணியில் உள்ள ஐ.டி ஊழியர்கள், வேலைஇழப்பு (lay-off) என்ற ஒன்றால் தற்கொலை முடிவுக்கு தூண்டப்படுவது மிகவும் தவறான ஒன்றுதான். நிறுவனங்கள் லே-ஆப் முடிவை எடுக்கும் முன்னர் ஒரு தனி மனிதர் வேலை இழப்பால் எதிர்நோக்கும் இன்னல்களையும் அச்சுறுத்தல்களையும் யோசித்து பார்க்க வேண்டும். லே-ஆப், கட்டாய பணிநீக்கம் போன்றவைகளுக்கு நிறுவனம் மட்டுமே காரணமல்ல என்றாலும் சட்டரீதியான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விளைவுகளை பெருமளவு குறைக்கலாம்.
ஐ.டி ஊழியர்களின் தரப்பில் பார்த்தால், தொழிலாளர் சட்டம் மற்றும் உரிமைகளின் புரிதலின்மையும், விழிப்புணர்வு இன்மையுமே தவறான முடிவுகளுக்கு காரணமாக உள்ளது. படித்து முடித்தவுடன் ஐ.டி கம்பெனியில் வேலை, நல்ல சம்பளம் போன்ற வசதிகளே சட்டரீதியான அறிவோ, விழிப்புணர்வோ இல்லாமல் போவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதுவே நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் லே-ஆப் நடத்துவதற்கு ஏதுவாக உள்ளது.
வங்கி, கல்வி, ரயில்வே மற்றும் இதர துறைகளில் இது போன்ற கட்டாய பணிநீக்க நடவடிக்கைகள் நடப்பதாக நாம் பார்ப்பதில்லை. காரணம், பெரும்பாலும் எல்லாத் துறைகளிலும் யூனியன்/தொழிற்சங்கம் உள்ளது. யூனியன் முதலாளிக்கும் ஊழியர்களுக்குமான உறவை வலுப்படுத்தி, குறைநிறைகளை சுட்டிக்காட்டி நிறுவனம் தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட உதவுகிறது. அதுபோல், ஐ.டி துறையிலும் யூனியன்-ஐ நோக்கிய நகர்வே ஊழியர்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பை அளிக்க முடியும்.
ஊழியர்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே இது நடைமுறையில் சாத்தியமாகும். நான் என் தொடரின் அடுத்த பாகத்தை எழுத இதுவே காரணம். 20 ஆண்டுகாலம் இந்தத் துறையில் சம்பாதித்துவிட்டு இன்று ஒட்டுமொத்த துறையையும் குறைகூற விரும்பவில்லை. நிறுவனங்கள் ஊழியர்களை கட்டாய இராஜினாமாவிற்கு உட்படுத்தத்தாமல், பணி விலகல் தொடர்பான விதிமுறைகளையும் வழிமுறைகளையும் ஒழுங்குபடுத்தி, ஊழியர்களுக்கு பாதிப்பின்றி, சுமூகமான சூழ்நிலையை உருவாக்கவே வலியுறுத்துகிறேன்.
ஊழியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு காரணங்களால்தான் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் :
1) ஊழியர்களை நிர்பந்தித்து இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கவைப்பது.
2) ஒரே மாதிரியான செயல் திறன் உள்ளவர்கள் தேவைக்கு அதிகம் இருப்பதாக கூறி பணி நீக்கக் கடிதம் அளிப்பது
3) கம்பெனியின் விதிமீறல் என்று கூறி பணிநீக்கக் கடிதம் அளிப்பது.
பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் முதல் கூறிய வழியில்தான் பணிநீக்கத்தை அமல்படுத்துகிறார்கள். ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து சில காரணங்களால் இராஜினாமா செய்வதுண்டு.
1) அதிகமான சம்பளத்துடன் வேறு நிறுவனத்துக்கு செல்வது
2) உயர்கல்வி, திருமணம், இதர சொந்த காரணங்களுக்காக செல்வது
3) விருப்ப ஓய்வு
இது போன்று ஊழியர்கள் தன் சொந்த காரணங்களுக்காக இராஜினாமா செய்வது Voluntary Attrition எனப்படும். பொதுவாக இராஜினாமா செய்தால், பணி நியமன கடிதத்தில் (Offer letter) சொல்லியிருப்பது போல், பணி நிரந்தரம் பெற்ற ஊழியர்கள் (confirmed employees) 2 மாதம் முன் அறிவிப்பும் (notice period),உறுதிப்படுத்தப்படாத ஊழியர்கள் (non-confirmed employees) 1 மாதம் அறிவிப்பும் கொடுத்து வேலை செய்ய வேண்டும்.
நிறுவனங்கள் தங்கள் இலாபத்திற்காக ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டாலும், வெளியுலகிற்கு Voluntary attrition என்று காண்பிக்க, ஊழியர்களை கட்டாய இராஜினாமா செய்யவே நிர்பந்திக்கிறது. இது போன்று ஆட்குறைப்பை, Voluntary attrition வெளி உலகுக்கு காட்டுவதற்கு சில காரணங்கள் உண்டு.
1) சட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க
2) தொழிலா ர் துறையில் அனுமதி வாங்கவேண்டிய அவசியமின்மை
3) இந்திய தொழிலாளர் சட்டங்களை பின்பற்ற விருப்பமின்மை
மேற்கூறிய காரணங்களாலேயே, எச்.ஆர் மூலம் ஊழியர்களை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கிறார்கள். இராஜினாமா செய்தால்,
அ. 2-3 மாதங்களுக்கான சம்பளத்தை உடனடியாக தருவது,
ஆ. முறையான பணி விடுப்பு கடிதம் மற்றும் பணி அனுபவ கடிதம் தருவோம் என்று ‘தாராள’ சலுகை காட்டுவது
இ. இன்னொரு நிறுவனத்தில் இன்னொரு வேலை தேடிக்கொள்ள உதவுவது என்பது வரை
பல இனிப்பூட்டும் போலி சலுகைகளை பேசி தானே ராஜினாமா செய்யும்படி தூண்டுகிறார்கள்.
1.பணி விடுப்பு கடிதம் கொடுக்க மாட்டோம்.
2. நாஸ்காம் இல் பிளாக் லிஸ்ட் (block list) செய்திடுவோம்; இதனால் வேறு எந்த ஐ.டி நிறுவனத்திலும் வேலை கிடைக்காது.
3. பணி நீக்கம் செய்து 2 மாத முன் அறிவிப்பு காலத்துக்கான சம்பளம் வழங்கப்படமாட்டாது.
4. வருங்கால வைப்பு நிதி (Providant Fund) மற்றும் பணிக்கொடை(Gratuity) வழங்க மாட்டோம்.
5. கம்பெனி க்கு பணி நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் மற்றும் புதிய கொள்கைப் படி (new policy) பணி நீக்கம் செய்ய அதிகாரம் உண்டு.
6. சட்டப்படி போனால், நீங்கள் தோற்று போவீர்கள்; எந்த விதமான சலுகையும் கிடைக்காது.
மேற்கூறிய ஏதாவது ஒரு காரணம் கூறி ஊழியர்களை அச்சுறுத்தி இராஜினாமா செய்ய வைக்கிறார்கள். இவற்றில் சிக்காமல், சட்டரீதியான பாதுகாப்பு பெற சட்ட வழிமுறைகளை அறிந்திருப்பது அவசியம். அவற்றை முன்னர் எழுதி வெளிவந்த “ஐ.டி ஊழியர் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா ” புத்தகத்தை படித்து தெளிவு பெறலாம்.
மேலும் தெளிவு பெற, தானாக பணியிலிருந்து விலகுவதற்கும் (Voluntary attrition), பணி நீக்கம் செய்யப்படுவதற்கும் (Involuntary exit) (பணி நீக்கம், ஆட்குறைப்பு, லே-ஆஃப்) உள வித்தியாசங்களை பாருங்கள்.:
Sno | Voluntary Attrition | Involuntary Exit (Termination etc) |
1 | ஊழியர்கள் தாங்களாகவே சொந்த காரணங்களுக்காக இராஜினாமா செய்வது. | நிறுவனம் பணி நீக்கம் செய்வது |
2 | ஊழியர்களுக்கு notice period கான சம்பளம் இல்லை. | Notice period கான சம்பளம் உண்டு. |
3 | ஊழியர்களுக்கு முறையான Relieving Letter அளிப்பது | பணி நீக்க கடிதம் அளிப்பது; ஒரே மாதிரியான செயல் திறன் உள்ளவர்கள் தேவைக்கு அதிகம் இருப்பதாக குறிப்பிடப்படும். |
4 | இரண்டு மாதம் வேலை செய்ய வேண்டும். சில இடங்களில் தங்களது லீவு நாட்கள் பொறுத்து 2 மாதத்தை குறைப்பார்கள். | ஒரே நாளில் கம்பெனியை விட்டு வெளியேற சொல்வது. |
5 | Provident Fund, Gratuity கொடுக்கப்படும் | Provident Fund, Gratuity கொடுக்கப்படும் |
6 | Labor Department -இன் அனுமதி பெற தேவையில்லை | abor Department -இன் அனுமதி அவசியம். |
இது உங்களுக்கு ஓரளவு தெளிவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். இதில் சொல்லப்பட்டதை தவிர்த்து வேறு எந்த வழியிலாவது, பணி நீக்கம் செய்வது தெரிந்தால், தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
– சியாம் சுந்தர், தலைவர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு
மொழிபெயர்ப்பு : பூங்கொடி