ஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

புதிய தொழிலாளி, மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை

நவீன தொழில்நுட்பம் : வளர்ச்சியா, வதையா?

தொழில்நுட்ப மாற்றங்கள் நடக்காத துறைகள் இல்லை. சாதாரண சாலைப் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால் கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வோல்வோ குளிரூட்டப்பட்ட பேருந்து, சொகுசு பேருந்து என்று புதிய வகை பேருந்துகள் வந்திருக்கின்றன. வங்கிகளில் ‘பாஸ்புக் நான்கு வங்கி ஊழியர்கள் கைமாறி கடைசியில் காசாளரிடமிருந்து பணத்தை பெற வேண்டும்’ என்ற நிலைமை மாறி, தானியங்கி எந்திரங்களில் மனிதத் தலையீடு இல்லாமல் 24 மணி நேரமும் பணம் எடுத்துக் கொள்ள முடிகிறது.
இதே போல மருத்துவத் துறையிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் பெரும் பாய்ச்சல்களை கண்டுள்ளன. சட்டத் துறையை எடுத்துக் கொண்டால் புதிய சட்டங்கள், சட்ட திருத்தங்கள், தினம் தோறும் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் வெளியாகும் தீர்ப்புகள் என பயன்படுத்தப்படும் ஆதாரங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. அனைத்துத் துறைகளுக்கும் மாணவர்களை பயிற்றுவிக்கும், ஆய்வுகளை செய்யும் கல்வித் துறையை எடுத்துக் கொண்டால் இந்த மாற்றங்கள் அனைத்தும் பாடத் திட்டங்களிலும் ஆய்வுத் திட்டங்களிலும் கணக்கில் எடுத்துக் கொள்ளபட வேண்டியிருக்கிறது.

இது போலவே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையிலும் பல தொழில்நுட்ப மாற்றங்கள் நடந்திருக்கின்றன. நேரப் பகிர்வு முறையில் பலர் பணியாற்றிய மெயின்ஃப்ரேம் தொழில்நுட்பம், அதைத் தொடர்ந்த தனிகணினிகளை இணைத்த நெட்வொர்க்கிங் தொழில்நுட்பம், அதை விரிவுபடுத்தி கணினி வலைப்பின்னல்களின் வலைப்பின்னலாக இணையம் என மாறி வந்திருக்கிறது. கணினிகளின் பயன்பாடு வெறும் உரைகளும், எண்களும் என்ற வடிவிலான தகவல் பரிமாற்றம், பின்னர் படங்கள், வீடியோக்கள் என்று செறிவடைந்திருக்கிறது. மொத்தையான மேசைக் கணினியில் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் இப்போது கையடக்க ஸ்மார்ட் தொலைபேசிகளில் பயன்படுத்துப்படும்படியாக மாறியிருக்கின்றன. இன்னும் கணினி நிரல் மொழிகள், மென்பொருள் உருவாக்க முறை, தரவுத்தள (டேட்டா பேஸ்) நுட்பங்கள் என ஒவ்வொன்றிலும் வேகமான மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு துறையில் நிகழும் இது போன்ற மாற்றங்களை அதில் பணிபுரியும் தனிநபர்களும், குழுக்களும், நிறுவனங்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள்?

போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை, சட்டத் துறை, கல்வித் துறை என்ற ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்களை உள்வாங்கும் போது ஏற்கனவே அந்தத் துறையில் பட்டம் பெற்று, பயிற்சி பெற்று, பல ஆண்டுகளாக பணி புரியும் ஊழியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு வருவதில்லை. மருத்துவர்கள் தொடர்ந்து புதிய மாற்றங்களை கற்றுக் கொண்டு தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்கிறார்கள். புதிய ரக பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஓட்டுனர்கள் தனிச்சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு அதில் அமர்த்தப்படுகிறார்கள். ஆசிரியர்கள் பாடத் திட்டத்தில் ஏற்படும் புதுப்பித்தல்களை கற்றுக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தமது தகுதியை நிலைநாட்டிக் கொள்ள வழி செய்யப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தத் துறைகளில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மாற்றங்களை அமல்படுத்துவது பற்றி திட்டமிடும் போது ஊழியர்களை இணைத்தே திட்டமிடுகின்றன. புதிய தொழில் நுட்பத்தை காரணம் காட்டி பல ஆண்டுகள் வேலை செய்த அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்து விட்டு குறைந்த சம்பளத்தில் புதிய, குறைந்த வயது இளைஞர்களை எடுத்து அவர்களை பயிற்றுவித்து பயன்படுத்துகின்ற உத்தியை வேறுவிதமாக நடைமுறைப்படுத்துகின்றனர். அனுபவசாலிகள் கணிசமானோரை தக்க வைத்துக் கொண்டு, குறைந்த சம்பளத்தில் அதிக எண்ணிக்கை இளம் தொழிலாளர்களை வைத்துக் கொள்வதுதான் அந்த உத்தி.

ஆனால், ஐ.டி துறையில் இந்த நடைமுறை கணிசமாக மாறுபடுகிறது. ஐ.டி துறையிலும் நிறுவனங்கள் பெருத்த பொருள் செலவில் பயிற்றுவிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளன. உதாரணமாக, இன்ஃபோசிஸ் ஒரே நேரத்தில் 14,000 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான பயிற்சி மையத்தை மைசூரில் அமைத்துள்ளது. இப்போது, டி.சி.எஸ் அதை விட பெரிய அளவில் உலகிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் பயிற்சி மையம் என்று சொல்லப்படும்படியாக 15,000 ஊழியர்களை ஒரே நேரத்தில் பயிற்றுவிக்கும் படியான வசதியை திருவனந்தபுரத்தில் உருவாக்கி வருகிறது. இது போக, எல்லா ஐ.டி நிறுவனங்களும் ஊழியர்கள் தமது தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சித் திட்டங்களையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இவ்வளவு இருந்தும், ஒவ்வொரு முறை மாற்றங்கள் நிகழும் போதும் ஐ.டி துறை முதலாளிகள் வட்டங்களிலும் வணிக பத்திரிகைகளிலும் ‘எத்தனை ஊழியர்களை வேலை இழப்பார்கள், எந்த நிறுவனம் எத்தனை ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறது?’ என்பதை மையமாக வைத்தே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இப்போது கடந்த 2 ஆண்டுகளாக ‘ஆட்டமேஷன், கிளவுட் தொழில்நுட்பம், பிக் டேட்டா, டேட்டா மைனிங், டேட்டா சைன்ஸ் என்று புதிய தொழில்நுட்பங்கள் வருவதால் இந்தியாவின் 37 லட்சம் ஐ.டி ஊழியர்களில் பலர் வேலையிழக்க நேரிடும்’ என்று தகவல்கள் கசிய விடப்படுகின்றன. குறிப்பாக, பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் படைத்த ஊழியர்களின் வேலைக்கு அச்சுறுத்தல் என்று பேசப்படுகிறது. “இந்திய ஐ.டி ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராக இல்லை” என்று காரணம் சொல்லப்படுகிறது.

உதாரணமாக, “65% இந்திய ஐ.டி ஊழியர்களை புதிய தொழில்நுட்பங்களில் பயிற்றுவிக்க முடியாது.” என்றும் 39 லட்சம் ஐ.டி “ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் தர பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் என்பது அதற்குக் காரணம்” என்றும் கேப்ஜெமினி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் சீனிவாஸ் கந்தூலா கூறியிருக்கிறார். சில பொறியியல் பட்டதாரிகளில் 80% பேர் ஐ.டி துறையில் வேலை செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்று ஒரு ஆய்வு வெளியிடப்படுகிறது.

வேறு எந்தத் துறை பற்றியும் இது போன்ற விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் போய் விட்டதால் 40 வயதுக்கு மேற்பட்ட மருத்துவர்கள் அனைவரும் பணிஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவத் துறையில் பேசப்படுவதில்லை. வயதான, நீண்ட அனுபவம் படைத்த மருத்துவர்கள் மதித்து போற்றப்படுகின்றனர். வங்கித் துறையில் முறையான கல்வித் தகுதி குறைவான ஊழியர்கள் கூட புதிய கணினி தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு தம்மை மாற்றிக் கொண்டு ஓய்வு பெறும் வயது வரை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது போலவே ஆசிரியர்களும், ஆராய்ச்சி துறையினரும், கணக்கியல் நிபுணர்களும் தொடர்ந்து தம்மை புதுப்பித்துக் கொண்டு செயல்பாட்டில் இருக்கின்றனர்.

ஐ.டி துறையில் மட்டும் ஏன் இந்த வேறுபாடு? ஐ.டி துறையில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை, நிறுவனத்தை விட்டு வெளியேறிய/வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று அறிவித்துக் கொண்டிருப்பது ஏன்? ஏதோ பெருநகரங்களில் காற்று மாசுபடுதலை அளக்கும் நுண்துகள்களின் வீதத்தை அளந்து தினமும் தகவல் வெளியிடுவது போல இந்த புள்ளிவிபரங்களில் வணிக பத்திரிகைகள் கவனம் செலுத்துவது ஏன்?

உதாரணமாக, 2016-ம் ஆண்டில் 9,000 ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பியதாகவும் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 5,700 ஊழியர்களை மட்டும் (கடந்த ஆண்டு எண்ணிக்கை 17,000-ல் 3-ல் ஒரு பங்கு) வேலைக்கு எடுத்திருப்பதாகவும் இன்ஃபோசிஸ் பதிவு செய்திருக்கிறது.

இதற்குக் காரணம் இந்திய ஐ.டி சேவை வழங்கும் நிறுவனங்களின் அடிப்படை அணுகுமுறையிலேயே உள்ளது. பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்தே அவை செயல்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் அந்நிறுவனங்கள் தத்தமது நாடுகளிலிருந்து சேவை வழங்குவதற்கான செலவை குறைக்கும் முகமாக இந்தியாவுக்கு அனுப்பி செய்து வாங்குவது என்ற அடிப்படையில் இந்திய ஐ.டி துறை வளர்ந்திருக்கிறது. அத்தகைய மரபணுவோடு பிறந்த இந்திய ஐ.டி துறை அதன் விளைவுகளை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதெல்லாம் தொழில்துறையில் சகஜம்தானே என்கிற கேள்வி எழலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் ஏனைய துறைகளில் காணப்படும் உறவுகளிலிருந்து மாறுபட்டது சேவைத் துறை உறவு. இந்த உறவு குறித்தும், அதன் விபரீதம் குறித்தும் அடுத்த இதழில் பார்க்கலாம்.

(தொடரும்)

புதிய தொழிலாளி, மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை

கட்டுரையின் 2-வது பகுதி (ஏப்ரல் 2017 புதிய தொழிலாளி இதழில் வெளியானது) – ஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி?

படங்கள் இணையத்திலிருந்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-professionals-are-not-disposable-commodities-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?

ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை...

அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி!

நவீன தொழில்நுட்பமே அமேசானின் பிரமாண்டமான வெற்றிக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இது மேல் பார்வைக்கு சரிதான் என்றுகூட நமக்குத் தோன்றும். நம் கண்களுக்கு அமேசானின் மொபைல் ஆப்...

Close