ஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி?

புதிய தொழிலாளி, ஏப்ரல் 2017 இதழில் வெளியான கட்டுரை. மார்ச் இதழில் வெளியான இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை இங்கு படிக்கலாம்.

நவீன தொழில்நுட்பம்: வளர்ச்சியா, வதையா? – 2

ந்திய ஐ.டி நிறுவனங்களிடமிருந்து சேவைகளை வாங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் தொடர்ந்து செலவுக் குறைப்பை வலியுறுத்துவது, ஒவ்வொரு ஆண்டும் கட்டணங்கள் குறைந்து கொண்டே போக வேண்டும் என்று பேரம் பேசுவது, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு தமது வாடிக்கையை மாற்றிக் கொள்ளப் போவதாக அச்சுறுத்துவது என ஐ.டி நிறுவனங்களையும், ஊழியர்களையும் கடும் அழுத்தத்தில் வைத்திருக்கின்றன.

பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு பல்வேறு சட்டப் போராட்டங்கள் மூலம், “தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் ஐ.டி துறைக்கும் பொருந்தும் ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கங்களில் இணையலாம்” என்று தமிழ்நாடு அரசை வெளிப்படையாக அறிவிக்க வைத்தது (கோப்புப் படம்)

ஆரம்பத்தில் அமெரிக்காவில், அமெரிக்கச் சூழலுக்கு ஏற்ப, அமெரிக்க வாழ்நிலைக்கு தேவையான சம்பளத்தில் ஒரு சிறுபகுதியை கொடுத்து இந்தியாவில் வேலையை செய்து வாங்கும் போது அது இந்தியாவில், இந்தியச் சூழலுக்கு ஏற்ப, இந்திய வாழ்நிலைக்குத் தேவையான சராசரி சம்பளத்தை விட கணிசமான அளவு அதிகமாக இருந்தது. இந்தக் கணக்கின்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் சேவைகள், இந்திய இளைஞர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக சம்பளத்தில் வேலை, இரண்டுக்கும் நடுவில் ஐ.டி சேவை நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் என்ற அடிப்படையில் ஐ.டி துறை வளர்ந்து சென்றது.

ஒப்பீட்டளவில் அதிக சம்பளம், பிற துறைகளை விட உயர் தரத்திலான பணியிடம், வெளிநாடு போகும் வாய்ப்புகள் போன்ற கவர்ச்சிகளை பயன்படுத்தி ஊழியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஐ.டி நிறுவன நிர்வாகங்கள் ஆரம்பம் முதலே பின்பற்றி வந்தன. பிற துறைகளில் இருப்பது போல ஒரே பதவியில் ஒரே மாதிரியான பணி புரியும் அனைவருக்குமான ஊதிய நிர்ணயம் என்பதை மாற்றி ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக சம்பள விகிதத்தை நிர்ணயிப்பது என்ற நடைமுறையை அமல்படுத்தின; அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும் தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கு பொருந்தாது என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து, அதன் மூலம் ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கமாக இணைவதை தடுத்து நிறுத்தின; ஆனால், ஐ.டி நிறுவன முதலாளிகள் நாஸ்காம் என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பாக சேர்ந்து கொண்டனர். பல்வேறு முறைகளில் ஊழியர்களை தமது விருப்பப்படி சேர்க்கவும், வேலை வாங்கவும், துரத்தவும் முடியும்படியான சூழலை ஏற்படுத்திக் கொண்டனர்.

இவ்வாறு ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாத சூழலை உருவாக்கி விட்ட ஐ.டி நிறுவனங்கள் தொழில் நுட்ப மாற்றங்கள் நிகழும் போது தமது நலனுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகாலத்தில் ஐ.டி நிறுவனங்களுக்காக உழைத்து பல லட்சம் கோடி மதிப்பிலான துறையாக மாற்றிய ஊழியர்களின் நலனையும், கருத்துக்களையும் துச்சமாக மதித்து மாற்றங்களை எதிர்கொள்கின்றன அந்நிறுவனங்கள். ஒவ்வொரு காலாண்டு நிதி அறிக்கையிலும், ஆண்டு நிதி அறிக்கையிலும் லாப அதிகரிப்பை காட்டி பங்குச் சந்தை முதலீட்டாளர்களை திருப்திப் படுத்த வேண்டும் என்பதை முதன்மையாக வைத்து செயல்படுகின்றன. “ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதற்கு நிறுவனங்கள் போதுமான அளவு முதலீடு செய்யவில்லை. அவர்கள் முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருமானத்தை உறுதி செய்வதில்தான் கவனமாக இருந்தார்கள்” என்று சொல்கிறார் கேப் ஜெமினியின் சீனிவாஸ் கந்தூலா.

பிற துறைகளில் இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு எப்படி எதிர் கொள்ளப்படுகிறது? போக்குவரத்துத் துறையிலும், வங்கித் துறையிலும், கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் பணியாற்றும் அனைவரின் நலனையும் பிரதிநிதித்துவப்படுத்தவும், பாதுகாக்கவும் தொழிற்சங்க அமைப்புகள் வைத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. எந்த ஒரு மாற்றத்தையும் தொழிற்சங்கத்துடன் விவாதித்து திட்டமிட வேண்டும் என்று அந்தத் துறை நிறுவனங்களுக்கு கடமை உள்ளது. அதிலிருந்து தவறும் நிறுவனங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் ஊழியர்களை திரட்டி போராடும் என்ற அச்சம் உள்ளது.

ஆனால், ஐ.டி நிறுவனங்களோ தட்டிக் கேட்பதற்கு யாருமின்றி, ஊழியர்களை பலி கொடுத்து முதலீட்டுக்கு லாபத்தை உறுதி செய்கின்றன. தொடர்ந்து குறைந்து வரும் வணிக வாய்ப்புகள், லாப வீதம் வீழ்ச்சி இவற்றுக்கு மத்தியில் இன்ஃபோசிஸ் (ரூ 12,000 கோடி மதிப்பிலான பங்குகள்) சி.டி.எஸ் (ரூ 22,000 மதிப்பில் பங்குகள் வாங்கும் திட்டம்), டி.சி.எஸ் (ரூ 16,000 கோடி செலவில் 5.6 கோடி பங்குகளை வாங்க திட்டம்) நிறுவனங்கள் தம் கைவசம் குவிந்திருக்கும் பெரும் நிதியை பயன்படுத்தி பங்குகளை சந்தையில் வாங்குவதன் மூலம் அவற்றின் விலையை உயர்த்தி முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க முனைந்திருக்கின்றன. மறுபக்கத்தில் பல நூறு அல்லது சில ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து கழற்றி விட்டு செலவைக் குறைத்து காலாண்டு நிதிஅறிக்கைகளில் லாப வீதத்தை பராமரிக்க முனைகின்றன.

இவ்வாறு பணியிலிருந்து போகும் படி கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள் பணி தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிவையும் முறையாக பதிவு செய்து ஒப்படைத்து விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகின்றனர்; நிறுவனத்துக்கு எதிராக வெளியில் கருத்து வெளியிடக் கூடாது என்று தடை விதிக்கப்படுகின்றனர்; இவற்றில் அல்லது வேறு வகையில் ஏதாவது பிரச்சனை செய்தால் பிரிந்து செல்லும் நடைமுறைகளில் சிக்கல் ஏற்படும் என்றும் சேர வேண்டிய பணம் முழுமையாக கிடைக்காது என்றும் அடுத்த வேலை தேடுவதில் கருப்புப் புள்ளி விழுந்து விடும் என்று பயமுறுத்தப்படுகின்றனர், ஐ.டி ஊழியர்கள்.

உதாரணமாக, அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்து நிறுவனத்தின் செலவுக் குறைப்புக்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட 40 வயதான அமெரிக்கர் ஒருவர் வேலையை விட்டு விலகுவதற்கு முந்தைய 3 மாத கால அனுபவத்தைப் பற்றி சொல்வது ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களின் அனுபவத்தோடு ஒத்துப் போகிறது. “முதல் 30 நாட்கள் நான் செய்த வேலைகளை அனைத்தையும் எனது இடத்தில் அமர்த்தப்படவிருக்கும் ஊழியர்கள் உள்வாங்கிக் கொண்டார்கள். அடுத்த 30 நாட்களுக்கு அவர்கள் என்னுடன் பக்கத்தில் உட்கார்ந்து வேலை பார்த்தார்கள். கடைசி 30 நாட்களில் அவர்கள் எனது வேலையை முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். எனது வேலையை அவர்கள் சரிவர செய்கிறார்கள் என்பதை நான் உறுதி செய்தால்தான் எனக்கு வேலை நீக்க ஊக்கத் தொகை கிடைக்கும் என்பது நிறுவனத்தின் நிபந்தனை”.

ஆனால், இவை அனைத்துமே சட்ட ஆதாரம் இல்லாத வெற்று பயமுறுத்தல்களே. இந்தியாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தொழிற்சங்கமாக திரளும் உரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்குகிறது. மிக அதிக சம்பளம் பெறும் வங்கி மேலாளர்கள் கூட தமக்கென சங்கம் வைத்திருக்கின்றனர். தொழிற்சங்கத்தின் மூலம் நிர்வாகத்துடன் கூட்டு பேரம் பேசுவது, பணியிட பிரச்சனைகள் தொடர்பாக முறையீடு செய்வது, முறையற்ற வேலை நீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு முதலான அனைத்து உரிமைகளும் பிற துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களைப் போலவே ஐ.டி ஊழியர்களுக்கும் உள்ளன.

குறிப்பாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னியின் ஐ.டி ஊழியர் பிரிவு இது தொடர்பாக பல்வேறு சட்ட போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. “தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் ஐ.டி துறைக்கு பொருந்தும், ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கங்களில் இணையலாம்” என்று தமிழ்நாடு அரசை வெளிப்படையாக அறிவிக்க வைத்தது; ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் வேலை என்று சி.டி.எஸ் நிறுவனத்தை ஏற்றுக் கொள்ள வைத்தது; டி.சி.எஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அப்ரைசல் அநீதி, பயிற்சி வேலை வாய்ப்பு மோசடி செய்யப்பட்ட ஒரு டி.சி.எஸ் ஊழியர் ஆகிய பிரச்சனைகளில் தொடர்ந்து போராடி வருவது என்று ஐ.டி ஊழியர்களின் உரிமைகளும், நலன்களும் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து ஐ.டி ஊழியர்களும் சங்கமாக திரள்வதன் மூலம் பிற துறை ஊழியர்களைப் போல தமது உரிமைகளையும், நலன்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதனை அனைத்து ஊழியர்களும் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவில் இணைவதன் மூலமே சாதிக்க முடியும்.

– குமார்

புதிய தொழிலாளி, ஏப்ரல் 2017 இதழில் வெளியான கட்டுரை. மார்ச் இதழில் வெளியான இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை இங்கு படிக்கலாம்.

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-professionals-are-not-disposable-commodities-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை...

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு – விவாதக் கூட்டம்

நெடுவாசல் போராட்டம் குறித்து ஐ.டி ஊழியர்களின் கருத்துக்கள், விவாதம் ஐ.டி தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஐ.டி துறையை தாக்கிக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றி

Close